பதம் பிரித்த பிரபந்தமும், பெருமாள் பாதம் பிடித்த பி.எஸ்.ஆரும்
உலக புத்தகத் தினம் அன்று எனக்கு ஸ்ரீ பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் தயாரித்த ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத உலகமே அந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டு எனக்கும் கடுகுக்கும் கடிதமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்கள். .
எழுத்தாளர் கடுகு எனக்குச் சுஜாதா ஆசாரியன் திருவடியை அடைந்த பின் தான் அறிமுகம். 2008ல் ஒரு மெயில் அனுப்பியிருந்தார் உங்களை அன்று சுஜாதாவின் வீட்டில் அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை என்று எழுதிக் கூடவே அவருடைய போன் நம்பரையும் கொடுத்திருந்தார்.

அதன் பிறகு அவருடன் பல உரையாடல்கள். மெயில் மூலமாக, நேரில், தொலைப்பேசியில் நிகழ்ந்தது. . முதல் முறை அவரைச் சந்தித்தபோது அவரைச் சேவித்து பதம் பிரித்த புத்தகம் ஒன்று வாங்கிக்கொண்டேன். ஒரு சமயம் என் கதையைப் படித்துவிட்டு “அடுத்த நாள்” என்று எழுதியிருக்கிறீர்கள் அது “மறுநாள்” என்று எழுத வேண்டும் என்று கதையைச் செதுக்கி கொடுத்தார். எப்போது வீட்டுக்குச் சென்றாலும் “பஜ்ஜி இல்லை போண்டா சாப்பிடுகிறீர்களா ?” வேண்டும் என்றால் எனக்கும் கொஞ்சம் கிடைக்கும் என்று ஜோக் அடிப்பார். அவர் அறையில் கல்கி படம் எப்போதும் இருக்கும். அவர் கல்கியைக் கடவுள்போல மதித்தார். நல்ல விஷயங்கள் பல அவர் கல்கியின் பிறந்த நாள் அன்று தொடங்குவார்.
அவருக்கு நிறைய பேஷ் கிடைத்திருக்கிறது. உதாரணத்துக்கு இரண்டு ( அவரே எழுதியது)

ராஜாஜியின் ‘பேஷ்’
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது அவர் தலைமையில் செங்கல்பட்டில் நடந்த மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் நன்றியுரை கூறும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சுருக்கமாகவும் சுவையாகவும் ( நான் பேசி முடிந்தவுடன் ராஜாஜி 'பேஷ்' என வாய் விட்டுப் பாராட்டினார் உடனே நான் என் ஆட்டோகிராப் புத்தகத்தை எடுத்து அவரது கையெழுத்து கேட்டேன். அதற்கு ராஜாஜி. "முடியாது. உனக்குக் கையெழுத்துப் போட்டால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள். ஏற்கெனவே மணி பத்து ஆகிவிட்டது" என்றார் கண்டிப்புடன்
நீங்கள் என் பேச்சைப் பாராட்டி 'பேஷ்' என்று சொன்னீர்கள் அதற்காகவாவது நீங்கள் ஆட்டோகிராப் போட்டுத் தர வேண்டும்” என்றேன் துணிச்சலாக (இளங்கன்று பயமறியாத துணிச்சல்!), உடனே என் ஆட்டோகிராப் நோட்டை ராஜாஜி வாங்கி, கையெழுத்துப் போட்டு நோட்டை என்னிடம் கொடுத்தார். நோட்டைப் பிரித்துப் பார்த்தேன் ஒரு இனிய அதிர்ச்சி! ராஜாஜி வெறுமனே கையெழுத்திட்ட இருக்கவில்லை. 'பேஷ்' என்று எழுதி அதன் கீழே கையெழுத்திட்டிருந்தார்.
இது எனக்கே, எனக்கு மட்டுமே ராஜாஜி தந்த கிடைத்தற்கரிய பாராட்டு. அதை அரிய பொக்கிஷமாகப் போற்றி வருகிறேன் பின்னால் நான் எழுதத் துவங்கியதும் ராஜாஜி பாராட்டிய என் பேச்சுப் பாணியை எழுத்திலும் கடைப்பிடிக்கத் துவங்கினேன்.

கல்கியின் ‘பேஷ்’
சுமார் ஐம்பது வருடங்களுக்குச் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு பண்ணைக்குக் கல்கி அவர்கள் விஜயம் செய்தார். அப்பண்ணையைப் பற்றி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் எழுதிய கட்டுரையை அவரிடம் நேரிடையாகக் கொடுத்தேன். என் எதிரிலேயே படித்துவிட்டு ’பேஷ்’ என்று கூறினார். அந்த ’பேஷ்’, என் ஊனிலும், உயிரிலும் கலந்து இன்னும் ஆட்கொண்டு உந்து சக்தியாக விளங்கி என்னை இயக்கிக் கொண்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன் ‘ஏன் தனியா கஷ்டப்படுகிறீர்கள்’ என்று அவள் மகள் சொல்ல அமெரிக்கா சென்றார். வருடத்துக்கு ஒரு முறை வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேன். உங்களுக்குப் புத்தகங்கள் என்று அள்ளிக் கொடுப்பார்.
பழகுவது, பேசுவது இரண்டும் ஆத்மார்த்தமாக இருக்கும். சில ரகசியங்கள் பரிமாறிக்கொண்டார். அவை ரகசியமாகவே இருக்கும் ஆனால் அந்த ரகசியங்களில் அவருடைய பெருந்தன்மை மிளிர்ந்தது.
அவருக்குப் பேசும் போதே நகைச்சுவை வரும் “மீண்டும் எப்போது இந்தியா வருவீர்கள் உங்கள் முகமே எனக்கு மறந்துவிடும் போல” என்று நகைச்சுவையாக எழுதியிருந்தேன் அதற்கு
“You forgot my face. It is OK. Not my preface, I hope!” என்று எழுதியிருந்தர் ( என் புத்தகத்துக்கு அவர் தான் முன்னுரை (preface ) எழுதினார்).

போன தடவை இந்தியா வந்தபோது “நீங்கள் எழுதும் ஸ்ரீ வைஷ்ணவம் கட்டுரைகளைப் படிக்கிறேன். புத்தகமாகப் போடுங்கள் என்றார். மீண்டும் நீங்கத் தான் முன்னுரை எழுதித் தர வேண்டியிருக்கும் என்றேன்” சில நாட்களில் அமெரிக்கா சென்றவர் “கண்ணில் ஏதோ பிரச்சனை. கம்யூட்டர் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் முன்னுரையைக் கைப்பிரதியாக எழுதியிருக்கிறேன் என்று அதை மெயில் அனுப்பியிருந்தார். அந்த 85 வயது இளைஞர்!.
2008 அவரைச் சந்தித்தபோது நீங்க என்னிடம் பேசுவதை எல்லாம் பிளாக்கில் பதிய வேண்டும் என்றேன். எப்படி என்று கேட்டுத் தெரிந்துகொண்டு ஆரம்பித்தார். 2019ல் பத்து ஆண்டுகள் முடிந்த பின் இப்படி எழுதியிருந்தார்
2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன்.
தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை. காரணம், “தம்பி, நீ எழுது” என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!
....
.....
வலைப்பூ என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும் ‘சபாஷ்’களும் வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. வார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
அனைவருக்கும் நன்றி. முக்கியமாய் எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
இதைப் படித்துவிட்டுக் கடுகு அவர்களுக்குக் கம்யூட்டர் சமாசாரம் எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். அவர் டெக்னிகல் புலி, சிறுத்தை எல்லாம். தனியாக fontographer உபயோகித்து தமிழ் ஃபாண்ட் செய்தார். பேஜ்மேக்கரில் அவரும் அவர் மனைவி கமலாவும் பிரபந்தம் புத்தக லே அவுட் செய்தார்கள். 3-டி படங்கள் எல்லாம் அவரே உருவாக்குவார். அது எப்படி வேலை செய்கிறது என்றும் எனக்கு ஒரு முறை சொல்லித்தந்தார். எனக்குத் தான் அது புரியவில்லை.
பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம்பற்றிச் சமீபத்தில் எழுதியிருந்தேன். அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் மலைக்க வைத்தது. எழுத்தாளர் ஸ்ரீ பி.எஸ்.ரங்கநாதனும் அவர் மனைவியும் சேர்த்துச் செய்த கைங்கரியத்தால் உருவான புத்தகம் அது. எந்தப் பிரதிபலனையும் எதிர்ப்பாக்காமல் செய்த கைங்கரியத்துக்குக் கிடைத்த வெற்றி அது.
அந்தப் பிரபந்தம் புத்தகம் பலரைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேன். நான் நினைத்த சமயம். எழுத்தாளர் பி.எஸ்.ஆர் அவர்களும் அவர் மனைவியும் அமெரிக்காவிலிருந்து அடியேனுக்கு இரண்டு வரி மெயில் அனுப்பிவிட்டு
Dear Sir,
Your face book post was sent several readers and friends.
You are free to print copies under any name you prefer and sell.
More over phone.
PSR
மெயில் படித்து முடிக்கும் முன் தொலைப்பேசியில் கூப்பிட்டிருந்தார்கள். சார் இனிமே அந்தப் புத்தகம் உங்களுடையது. என் பேரைக் கூட நீங்கள் எடுத்துவிடலாம். நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள். இனிமே இந்தப் புத்தகத்தின் முழு பொறுப்பு உங்களுடையது என்றார். அன்று உடையவர் திருநட்சத்திரம்.
அவருடைய பிளாகில் இந்த ஏப்ரல் மாதம் இப்படி எழுதியிருந்தார்
என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
இந்த உடம்பிலும் அவர் எனக்குப் பழைய பேஜ்மேக்கர் திறந்து பல ஆண்டுகளுக்கு முன் அவர் உள்ளிட்ட பல கோப்புகளாக அனுப்பியிருந்தார். இது முதல் செட். அடுத்த செட் விரைவில் என்று அனுப்பியிருந்தார்.
இந்தப் புத்தகம் அச்சடித்த அச்சகத்துக்கும் போன் செய்து “தேசிகன் என்ற ஒருவர் போன் செய்தால் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்யுங்கள்” என்றும் சொல்லிவைத்திருந்தார்.

ஒரு வாரம் கழித்து இது அடுத்த செட். என்று அனுப்பியிருந்தார். எனக்குப் போன் செய்து கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது என்றார். நீங்கள் கஷ்டபடாதீர்கள் நான் அவைகளைச் சரி செய்துகொள்கிறேன் என்றேன். சில நாள் கழித்து அவர் மனைவி இந்தப் பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று கையில் எழுதி அனுப்பியிருந்தார். திவ்ய தம்பதிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் இவர்கள் திவ்ய பிரபந்த தம்பதிகள்.
போன வாரம் அவருக்கு உடம்பு கொஞ்சம் முடியாமல் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அவருக்குப் போன் செய்தேன். “நமஸ்காரம் சார்! இனிமே அவ்வளவு தான் சார். எல்லாம் முடிந்துவிட்டது!” என்றார். மேலே என்ன பேசுவது என்று புரியாமல் விழித்தேன். அப்பவும் பிரபந்தப் புத்தகத்துக்கு எல்லா ஃபைலும் உங்களுக்கு அனுப்பிவிட்டேன் பார்த்தீர்களா ? “என்று தான் பேசினார். தன் உடம்பை பற்றி பேசவில்லை.
சில நாள் கழித்து மீண்டும் எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு அவரிடமிருந்து வந்தது. இந்த முறை அவர் பேசவே சிரமப்பட்டார். ”சார் திருவல்லிக்கேணியில் நீங்க முன்னாடி ஒருவரைச் சந்தித்தீர்கள் என்று சொன்னீர்களே. அவர்களிடம் சென்றால் உங்களுக்கு வேண்டிய உதவியைச் செய்வார்கள்” என்று அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. எனக்கும்.
இன்று காலைத் திருக்கோளூர் பெண் பிள்ளை கதையில் ’இடையாற்றூர் நம்பி’ பற்றி எழுதிக்கொண்டு இருந்தேன். இடையாற்றூர் நம்பி 'மோட்சம்’ பெற்றார் என்று எழுதி முடிக்க அவர் மகள் எனக்கு ஸ்ரீ பி.எஸ்.ஆர் ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று செய்தி அனுப்பியதும் ஒன்றாக நிகழ்ந்தது. ( கதை இங்கே இருக்கிறது )

பெருமாள் ஒரு சிறந்த புரோகிராமர்.
எந்த மொழியில் பிரோக்கிராம் எழுதுகிறார் என்று தெரியாது.
எப்படி இயக்குகிறார் என்றும் தெரியாது.
தெரிவதெல்லாம் அவுட்புட் மட்டுமே!
- சுஜாதா தேசிகன்
03-06-2020
சுஜாதா தேசிகன் என்று எனக்குப் பெயர் வைத்தவருக்கு என் அஞ்சலிகள்

சென்ற முறை இந்தியா வந்தபோது “நாம ஒரு போட்டோ கூட எடுத்துக்கொண்டது கிடையாது” என்று எடுத்துக்கொண்டபோது...
Comments
Post a Comment