Skip to main content

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்தமிழில் ஆழ்ந்த புலமையைக் கொண்டு புறநானூறு படிப்பது போல ஆழ்வார் பாசுரங்களைப் படித்தால் ஆழ்வார்கள் கூறிய பொருளை அறிந்துகொள்ள முடியாது.
புரிந்து கொள்ள மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும்.
- முதலில் ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கும் போது மன்னிக்கவும், சேவிக்கும் போது அது ஆழ்வார்களின் நாவில் பெருமாள் அமர்ந்து உதிர்த்த ஈரச் சொற்கள் என்று நம்ப வேண்டும்.
- நம் பூர்வர்களின் உரைகள், அதற்கு அவர்கள் கூறும் ஐதீகங்கள்(உதாரணம்) என்ன என்று மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையாக சுவைக்க தொடங்கினால், மைக்ரோ ஃபைபர் துணியில் துடைத்த மூக்குக்கண்ணாடி போல பளிச்சென்று தெரிய ஆரம்பிக்கும்.
- ஸ்வாமி தேசிகன், ஸ்ரீ மணவாள மாமுனிகள் போன்ற ஆசாரியர்கள் அருளிய கிரந்தங்களை வைத்துக்கொண்டால் அக்கார அடிசலுக்கு மேல் நெய் போல மணம் வீசும்.
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு ஒவ்வொரு பாசுரத்துக்கும் அதன் சாரத்தைப் பிடித்து பாசுரங்களின் எளிய உரையை ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகாரசங்கிரகம் கொண்டு படிக்கும் போது தண்டவாளத்தில் போகும் ரயில் போல ஒரே பாதை தப்பாமல் செல்ல முடிந்தது.
ஓர் உதாரணம் நான்காம் பாசுரத்தில் மதுரகவிகள்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே
இதில் வேதம் ஓதுகின்ற நல்ல அந்தணர்கள் கூட என்னை புன்மையாக கருதுவர் என்று நைச்சிய பாவத்தில் பாடியுள்ளார் மதுரகவிகள்.
உடனே மதுரகவி வாழ்ந்த காலத்தில் அந்தணர்கள் மதுரகவிகளை ஒதுக்கிவிட்டார்கள் என்று காரணம் கற்பித்து, அந்தக் காலத்தில் இப்படித் தான் என்று ஆழ்வாரே கூறிவிட்டார் என்று சரடு விட்டு கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் சமுதாயம் என்று கட்டுரையை எழுதக் கூடாது.
'நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்' என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நன்மையை மிகுதியாக உடைய வேதம் ஓதும் அந்தணர்கள் என்று பொருள். அந்தணர்கள் என்றாலே அவர்கள் மிகுந்த நல்லவர்கள் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்.
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளைக் கடமையாக மேற்கொண்டு நடந்துகொள்பவர்களே அந்தணர்கள்.
தங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையைச் செய்பவர்கள் தான் இந்த 'நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்' என்று நம் பூர்வர்கள் சில உதாரணங்களைத் தந்துள்ளார்கள்.
- கூரத்தாழ்வான் தமது கண்களை இழப்பதற்குக் காரணமாக இருந்த நாலூரானுக்கும் நற்பேறு வேண்டும் என்று தேவப்பெருமாளிடம் வேண்டிக்கொண்டார்
- இராமானுசர் மேலை நாட்டுக்குச் சென்று கூரத்தாழ்வான் கண் போனதற்குக் காரணமாக கிருமிகண்ட சோழன் மடிந்த போது, கூரத்தாழ்வானின் தேவிகளான ஆண்டாள் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடாமலே மரணம் அடைந்தானே என்று வருந்தினாள்.
- சீதை தன்னை அசோகவனத்தில் துன்புறுத்திய அரக்கிகளை அனுமானிடமிருந்து காத்தாள்.
இப்படித் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய விரும்புகிறவர்களே ’நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்’.
இவர்களைப் போன்ற்வர்கள் கூட என்னை கைவிட்டார்கள், ஆனால் ஆழ்வார் என்னைக் கைவிடவில்லை என்று தன்னை தாழ்த்தி ஆழ்வாரை உயர்த்தி சொல்லுகிறார் மதுரகவிகள். அதனால் தான் இவர் ’நம்ம’ ஆழ்வார் !
இன்று வைகாசி விசாகம், நம்மாழ்வார் திருநட்சத்திரம்.
- சுஜாதா தேசிகன்
2.6.2023
படம்: எங்கள் இல்லத்தில் இன்று நம்பெருமாளுடன் நம்மாழ்வார் சேவை.

Comments

  1. வில்லூரில் நம்மாழ்வார் கோஷ்டிக்கு நடுவில் உம் சேவை

    ReplyDelete

Post a Comment