Skip to main content

த்வய போகம்


த்வய போகம்

படத்தில் உள்ள பெரிய பெருமாளை சேவித்துவிட்டு கீழே உள்ள ஸ்லோகத்தை ஒரு முறை படித்துவிடுங்கள்.

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: ||

பல தடவை கேட்ட ஸ்லோகத்தின் பொருள் :

image

ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம்

வைகுண்டத்தில் ஓடுகிற விரஜை தான் ஸ்ரீரங்கத்தில் காவிரி ;
ஸ்ரீரங்க விமானமே வைகுந்தம் ;
(அதில் இருக்கும்) வாசுதேவனே அரங்கன்.
விமானத்தின் பெயர் ப்ரணவாகாரம் ( விமானத்தில் உள்ள நான்கு கலசங்கள் வேதத்தின் பொருளான ப்ரணவத்தை குறிக்கிறது )
சயனத்தில் அரங்கனே ப்ரணவத்தால் விவரிக்கப்படும் பரம்பொருள் - ப்ரணவமே அரங்கன் !

பெரிய பெருமாள் ப்ரணவம் என்றால் அவன் திருவடிகள் த்வயம் !

எப்படி என்று பார்க்கலாம். த்வயம் என்பது இரண்டு வரி:

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம :

”லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுடைய சந்தோஷமே என் சந்தோஷம் என்ற கைங்கர்யத்தை பிராத்திக்கிறேன்”

அதாவது “”பெரியபிராட்டியை கணமும்பிரியாத நாராயணனின் திருவடிகளில், கைங்கரியம் செய்வதற்காக சரண் அடைகிறேன்” என்பதாகும்.

நியூட்டனின் விதி போல் நாம் த்வய அர்த்ததை இப்படி படித்திருக்கிறோம். தப்பில்லை. இதன் அர்த்தம் நமக்கு நன்கு புரிய வேண்டும் என்றால் நாம் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனை பக்கத்தில் அழைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்வாமி தேசிகன் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு ’முனிவாகன போகம்’ என்ற ஆச்சரியமான உரையை அருளியிருக்கிறார். ‘முனிவாகன போகம்’ என்ற பெயரை ஏன் வைத்தார் என்று முதலில் யோசிக்கலாம்.

அமலனாதிபிரானுக்கு இரண்டு தனியன்கள் இருக்கிறது .

image

முனியேறித் தனிபுகுந்து...

பெரியநம்பிகள் அருளிய ‘‘ஆபாதசூட மநுபூய’ என்று தொடங்கும் தனியனில் “முநிவாஹநம்’ என்ற வார்த்தை வருகிறது. லோக சாரங்க மஹாமுநியை வாஹநமாக கொண்ட திருப்பாணாழ்வாரை மனசாலே துதிக்க வேண்டும் என்கிறார்.

அடுத்து திருமலைநம்பிகள் அருளிச்செய்த தனியனில் ‘முனியேறித் தனிபுகுந்து’ என்று இதிலேயும் லோகஸாரங்க முனிவரைத் தனது வாகனமாகக் கொண்டு என்ற அர்த்தத்தில் வருகிறது. அடுத்த ‘தனிபுகுந்து’ என்ற வார்த்தை மிக முக்கியம்

தனிபுகுந்து - பெரிய பெருமாளுடைய அனுபவம் என்னும் உயர்ந்த ’போகம்’ பெற்றார் ஆழ்வார் என்கிறார்கள் பூர்வாசாரியார்கள்.

image

தூப்புல் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ( படம் நன்றி: வினோத் )

இப்போது ’போகம்’ என்ற வார்த்தையைக் கொஞ்சம் ஆராயலாம்.

போகம் என்பதற்கு சரியான தமிழ், ஆங்கில வார்த்தை கிடையாது - Pleasure, happiness; இன்பம் என்று வார்த்தைகள் இரண்டு அடி தள்ளியே நிற்கிறது. வயதாக வயதாக நம் மோகத்துக்கு ஏற்றார் போல் போகம் மாறுகிறது.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆசை தாய்ப்பால் குடிப்பது. அந்தக் குழந்தை வளர வளர பொம்மை, பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், கிரிக்கெட், டீன் ஏஜ் மோகங்கள், வேலை, பணம், கார், ஸ்கூட்டர், கல்யாணம், வீடு, குழந்தைகள், வெளிநாடு … என்று மோகத்தால் விரிந்து, பரந்து… நம் தொந்தி மாதிரி பெருகி பிறகு உற்சாகம் இழந்து, கடைசியில் பைபாஸ், வெண்ட்டிலேட்டர் இல்லாமல் இந்த உலகை விட்டுச் சென்றாலே இன்பம் என்று நினைக்கும் போது ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றால் துணைக்கு ஒரு ஆள் தேவைப்படும்.

நம்மாழ்வார்

“நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்

என்கிறார்.

பெருமாளுக்கு நெஞ்சுருகி உடல் நையாமல், உடல் தடித்து வயிறு பருப்பவர்களை என்ன செய்ய முடியும் என்று கவலைப்படுகிறார்.

இப்படி. நாம் சுக ‘போக’ மாக இருக்க எதையாவது செய்துகொண்டே இருக்கிறோம். எதைச் செய்தாலும் ஏதாவது பலன் இருக்கிறதா என்று எண்ணுகிறோம். இது மனித இயல்பு.

மேற்கூறிய விஷயங்களைப் பார்த்தால் போகத்தை புலன்களால் அடையும் இன்பம் என்று சுலபமாகச் சொல்லலாம் ( நல்ல நறுமணம் தரும் சந்தனம், நறுநெய்யுடன் கூடிய அக்கார அடிசல்; பட்டாடைகள்… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் )

இந்த இன்பப் பட்டியலில் ஸ்ரீரங்கத்தை தவிர நிரந்திர இன்பம் என்று எதுவும் இல்லை என்பதை வாசகர்கள் உணரலாம். திருப்பாணாழ்வாருக்கு கிடைத்த போகம் அதுவே. மீண்டும் த்வயத்துக்கு போகலாம்.

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம :

இதில் இரண்டு முறை நாராயணன் என்ற வார்த்தை வருகிறது.

முதல் வாக்கியத்தில் ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரப்த்யே - என்று நாராயணனை சரணாகதி செய் என்கிறது.

சரி சரணாகதி செய்தால் என்ன கிடைக்கும் ? என்று நமக்குள் எழும் இயல்பான கேள்விக்கு இரண்டாம் வாக்கியம்
”ஸ்ரீமதே நாராயணாய நம ” என்று நமக்குக் கிடைப்பது - ”அவனுடைய சந்தோஷமே நம் சந்தோஷம்” என்ற கைங்கரியம்.

வெல்லம் என்று சொன்னால் நாக்கு இனிக்குமா ? அது போல் தான் இந்த வாக்கியமும். இதைப் போகியமான விஷயமாக எப்படி நிரூபிக்க முடியும் ? அந்த அனுபவம் என்ன ?

அமலனாதிபிரானில் ஆழ்வார் ”திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே” என்பதற்கு ஸ்வாமி தேசிகன் மிக அழகான அர்த்ததை சொல்லுகிறார்:

இந்த வரியை நாம் இரண்டாகப் பிரிக்கலாம்

திருப்பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே

image

இரண்டுக்கும் என்ன வித்தியசம் என்று கண்டுபிடுத்திருப்பீர்கள். இரண்டாவது வரியில் ‘கமல’ என்ற வார்த்தை கூடுதலாக வருகிறது. கமல என்ற வார்த்தை போக்யத்தை குறிக்கும். அவன் பாதம் போக்யமானது.

இந்த இரண்டு வாக்கியங்களையும் சுபலமாக த்வயத்துடன் ஒப்பிடலாம்.

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே = திருப்பாதம்
ஸ்ரீமதே நாராயணாய நம = திருக்கமல பாதம்

இதன் அர்த்தம் முழுமையாக விளங்கச் சின்ன உதாரணம் ஒன்றை பார்க்கலாம். ஏதோ ஊருக்குச் சென்று திரும்பி வரும் பிள்ளைக்கு விதவிதமான சாப்பாடு செய்து தான் சாப்பிடாமல் காத்துக்கொண்டு இருக்கிறாள் அந்த அம்மா.

”ஃபிளைட் லேட் …” என்று உள்ளே நுழையும் பிள்ளையிடம்
“உனக்கு பசிக்கும் முதல்ல சாப்பிடு” என்கிறாள் அம்மா.
“நீ?” என்று சொல்லி முடிப்பதற்குள்
“நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி…” என்று சொல்லிவிட்டு பரிமாறத் துவங்குகிறாள். .
“பாயசம் நல்லா இருக்கு... ” என்றவுடன்
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ”.. என்று அதன் மீது கொஞ்சம் நெய்யை விட்டு பிள்ளை சாப்பிடுவதை ஆர்வமாகப் பார்க்கிறாள்.

எந்தப் பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் அம்மா நமக்குச் சாப்படு போடுகிறாள். மேலே உள்ள சம்பாஷணை முழுவதையும் கவனித்தால் “உன் சந்தோஷமே என் சந்தோஷம்” என்பதில் அடக்கிவிடலாம். .

இது தான் த்வயத்தின் இரண்டாவது வரி அர்த்தம். நாம் அம்மாவாகப் பெருமாளுக்கு பிடித்ததை செய்து உன் சந்தோஷம் என் சந்தோஷம் என்ற அனுகாரம் வர வேண்டும் !

அம்மாவாகப் பெரியாழ்வார் கண்ணனுக்கு என்னென்ன செய்தார் ?

செண்பக மல்லிகையோடு
செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்று இவை சூட்ட வா

என்று அலங்காரம் செய்து சந்தோஷப்பட்டு

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல் நம்பி

என்று கண்ணுக்குப் பிடித்த உணவை ’கலந்து’ ஊட்டுகிறார்.

த்வயத்தின் இரண்டாவது வாக்கியம் ‘உன் சந்தோஷமே என் சந்தோஷம்’ இது தான்.

திருப்பாணாழ்வாருக்கு இந்த அனுபவம் எப்படி கிடைத்தது ?

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில்

“உன் அடியார்க்கு- ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!” என்று அரங்கனை எழுப்பிவிட பெரிய பெருமாள் எழுந்துகொண்டு

திருப்பாணாழ்வாருக்கு

‘அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்' என்று பெரிய பெருமாளின் “பாதம் வந்து” ஆழ்வாருக்கு போக்கியத்தை கொடுத்தது.

பெரிய பெருமாளின் திருப்பாதங்களை கவனித்தால்,

திருப்பாதம் - பெரிய பெருமாளின் இடது திருப்பாதம் - சரணாகதி பாதம்.

திருக்கமல பாதம் - பெரிய பெருமாளின் வலது திருப்பாதம். நன்றாகக் கவனித்தால் ’இதை எடுத்துக்கோ’ என்று பரம போக்கியமான பாதத்தைக் கொஞ்சம் வளைத்து வேற காண்பிக்கிறார்.

பெரிய பெருமாளின் திருவடிகள் த்வயம் என்று புரிந்திருக்கும்.

இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் “சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழப் பாண்பெருமாள்” என்கிறார்.

image

திருப்பாணாழ்வார் - உரையூர்

ஆளவவந்தார் தம்முடைய அந்திம காலத்தில் ‘தஞ்சமாக இருப்பதற்கு ஒரு வார்த்தை பிரசாதிக்க வேண்டும்’ என்று திருக்கோட்டியூர் நம்பி கேட்க அதற்கு ஆளவந்தார் ‘பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்திருக்கும் திருப்பாணாழ்வாரை சேவித்துக்கொண்டிருங்கோள்’ என்றார்.

ஸ்ரீபராசர பட்டர் தனது ரங்கராஜ ஸ்தவத்தில் “கண்டு வாழும்” என்று அரங்கனை காண்பது மட்டுமே தனது வாழ்க்கை என்று உள்ள ஆழ்வார் திருப்பாணாழ்வார் என்கிறார்.

ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்வாமி தேசிகன் ”ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை சேவிப்பவர்கள் யாராக இருந்தாலும் மறுபிறவி எடுக்கக் கூடாது என்ற எண்ணம் மறைந்து மீண்டும் பிறவி எடுத்து அரங்கனின் திருவடிகளைச் சேவித்தபடி இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும் என்கிறார்”

ஸ்வாமி தேசிகனுக்கு பல திருநாமங்கள் இருந்தாலும், தன் கடைசி காலத்தில் தன்னை ‘பாதுகா சேவகன்’ என்று அழைப்பதையே அவர் விரும்பினார்.

த்வயத்தை ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு இப்படி எழுதலாம்.

image

திருப்பாணாழ்வார் - உறையூர்

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பனான’ ’நாராயணனே நமக்கே பரைத்தருவான்’ என்று அவனிடத்தில் சரணாகதி செய்த அடியேன், ’ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வேன்’. இன்று மட்டும் இல்லை, ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ எந்த பலனையும் நாடாமல் ‘மற்றைநம் காமங்களை’ ஒழித்து ‘உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று அவனுடைய திருமுக மலர்ச்சியே நம் மகிழ்ச்சி என்று கைங்கரியத்தை பிராத்திப்பேன்.

இங்கே போகம் என்றால் திருபாணாழ்வாருக்கு கிடைத்த போகம் இல்லை, பெரிய பெருமாளுக்கு கிடைத்த போகம் அதனால் ஆழ்வாருக்குக் கிடைத்த போகம் !

image

பாதுகா சேவகன்

மீண்டும் பெரிய பெருமாள் படத்தைப் பாருங்கள். வலது பாதத்தில் ஒரு தாமரை தெரியும். போக்கியமான பாதம்.

அடுத்த முறை பெரிய பெருமாளை சேவிக்கும்போது பிரணவமும், திருவடிகளை சேவிக்கும்போது த்வயத்தையும் அனுசந்தித்தால்’ ‘காட்டவே கண்ட பாதம் கமல’ என்று அவன் ‘‘உவந்த உள்ளத்தனாய்’ உங்களுக்குப் பரம போக்கியமான கைங்கரியத்தை கொடுப்பான். இது நிச்சயம்.

- சுஜாதா தேசிகன்
8.6.2019

Comments