ஸ்ரீமதழகிய சிங்கருடன் ஒரு நாள்
நமக்கு நல்வழி காட்டுபவர்கள், ஞானத்தை அளிப்பவர்களை ஆசாரியர்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஆசாரியர் என்னும் சொல் மிக ஆழமான பொருளைக் குறிக்கும்.
ஆசாரியனுக்கான முதல் தகுதி அரும்பாடுபட்டு அருமறைகளையும், சாஸ்திரங்களையும் கற்று அவற்றின் நுணுக்கங்களில் தெளிவு பெற்று, ‘ஊருக்கு உபதேசம்’ என்று இல்லாமல், தான் அடைந்த ஞானத்தை அனுஷ்டானத்தினால் ஸ்திரப்படுத்தி, . இதைத் தகுதியுடையோருக்கு உபதேசித்து, பலருக்கு ஒளி தரும் கைவிளக்காக இருக்க வேண்டும்.
.நம்மைப் போன்றவர்களை ‘செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளத் இப்படிப் பட்ட ஆசாரியர்களை பெருமாள் தேர்ந்தெடுக்கிறான்.
21.10.91ல் 45ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராக ஸ்நயாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார். 18 வருடம் பாரத தேசம் முழுவதும் ஸ்ரீமாலோலனுடன் சஞ்சாரம் பல கைங்கரியம், மங்களாசாசனம் செய்தார். பிறகு இந்த உயர்ந்த சம்பிரதாயத் தீபத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிந்தனையுடனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபோது அவருக்குத் திருமேனி நோவு சாற்றிக்கொண்டது. ( உடம்பு முடியாமல் போய்விட்டது )
ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு ஸ்வாமியின் திருநாமம் தோன்றியது. யோசிக்க யோசிக்க ஸ்ரீமதழகிய சிங்கருக்கு இது தானாகத் தோன்றியது இல்லை என்று தெரிந்தது. இதை உதிக்க வைத்தது ஸ்ரீமாலோலன் என்று புரிந்துகொண்டார். மறுநாள் அதே ஸ்வாமியே ஸ்ரீமதழகியசிங்கரைத் தெண்டன் ஸமர்பிக்க நேரில் வந்தார். அப்போது ஸ்ரீமாலோலன், ஸ்ரீமதழகிய சிங்கர் அந்த ஸ்வாமி இவர்களுக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அந்த ஸ்வாமி தான் இன்று 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்.
நம் ஸ்ரீமதழகிய சிங்கருடன் ஒரு நாள் குறிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ( ’மாலுகந்த ஆசிரியர்’ புத்தகத்தைத் தழுவி எழுதியது)
சிற்றம் சிற்காலை 3.30-3.45க்குள் ஸ்ரீமதழிகிய சிங்கர் திருப்பள்ளியெழுச்சி கண்டருளி, அனுஷ்டானத்துக்கு எழுந்தருளுவார். தன் திருமேனி எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும் சூரியோதயத்துக்கு முன் ஸ்தானமும் அர்க்யப்ரதானமும் தவறாது!
காலை சரியாக 6.50மணிக்கு ஸ்ரீமதழகியசிங்கர் தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆசிரம வாயிலுக்கு வரும் போது தவில், நாதஸ்வரம், திருச்சின்னம் ஆகியவை ஒலிக்க மாலோலனின் சன்னிதிக்கு எழுந்தருளும் போது கைங்கரியபரர்கள் குடை, சாமரம், தீர்த்த பாத்திரம், வெள்ளித்தடி ஆகியவற்றோடு ‘எச்சரிக்கை எச்சரிக்கை’ என்று சொல்லிக்கொண்டே பின் செல்வர்.
பளிச் சென்று பன்னிரு திருநாமங்களுடன் கையிலேந்திய முக்கோலுடன் பவித்திர மாலைகளுடன் எழுந்தருளும் போது நம் எம்பெருமானாரே எதிரில் வருகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். மடத்தில் பசுவுடன் இருக்கும் கன்றுக்கு ஆசாரியர் தன் திருக்கரத்தால் பழங்களைக் கொடுத்து, ஸ்ரீமாலோலன் சந்நிதிக்கு எழுந்தருளியதும் திரை சேர்க்கப்படும்.
திரை விலகும்வரை ஸ்ரீ மாலோலன் குறித்து ஒரு சிறுகுறிப்பை உங்களுக்கு தருகிறேன்.
ஸ்ரீராமானுஜருக்கு பிறகு பல ஆசாரியர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். அவர்களில் ஸ்ரீ வேந்தாந்த தேசிகனுக்குத் தனி இடம் உண்டு. அவருக்குப் பின் அவர் திருகுமாரர் வரதாச்சார்யார் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கச் சரியான தலைமை அமையவில்லை.
1379ல் கிடாம்பு கேசவாச்சார்யர் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாச்சார்யார் என்பவர் ஸ்ரீ நாராயணன் மீது அளவு கடந்த பக்தியுடன் சாஸ்திரங்கள் நன்று கற்று, விசயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ராஜ சபையில் விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டிப் புகழ்பெற்றார். அவருடைய 20வது வயதில் நரசிம்மர் கனவில் தோன்றி அஹோபிலத்துக்கு வா என்று அழைக்க அங்கே சென்ற போது அவரை நரசிம்மர் ஒரு வயதான யோகியின் தோற்றத்தில் வரவேற்று, வேதங்களுடன் நரசிம்ம மந்திரத்தை அவருக்கு உபதேசித்து அங்கு உள்ள ஸ்ரீராமானுஜர் சன்னதியில் திரிதண்டத்தை வழங்கி சந்நியாசத் தர்மத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ’சடகோப யதி’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். வயதான யோகி தான் நரசிம்மர் என்று உணர்ந்த ஸ்ரீநிவாச்சார், ஸ்ரீ வைஷ்ணவத்தை நிலை நிறுத்த நிர்மாணித்தது தான் அஹோபில மடம்.
ஜீயர் ஆழ்வார் திருநகரிக்கு சென்று சமயம் அங்கே களவாடப்பட்ட நம்மாழ்வாரை மறு ஸ்தாபிதம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. அதனால் நம்மாழ்வார் ‘வண்’ என்ற அடைமொழியையும், மோதிரத்தையும் பரிசாக அளித்தார். அதனால் தான் ’வண் சடகோபன்’ என்று அழைக்கிறோம். இதைப் பார்த்த ஆதிப்பிரான் பூரிப்பில் நம்மாழ்வாரே உமக்குப் பரிசு கொடுக்க நான் கொடுக்காமலிருந்தால் நன்றாக இருக்காது என்று தன்னுடைய பெயரில் உள்ள ‘ஆதி’யை கொடுக்க அது பெயரின் ஆதியில் சேர்ந்து ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர்’ என்று ஆனது. வண் என்றால் புகழ் என்று பொருள். ( இன்றும் ஜீயர்கள் கையெழுத்து போடும் போது ’ஸ்ரீசடகோபஸ்ரீ’ என்று தான் கையெழுத்துப் போடுவார்கள். ஜீயர்களின் பட்டாபிஷேகம் அன்று மட்டும் ஸ்ரீ நம்மாழ்வார் கொடுத்த மோதிரத்தைச் சாத்திக்கொள்வார்கள் என்பது மரபு. அதனால் தான் ஸ்ரீஆதிவன் சடகோபன் விரலில் மோதிரத்தைப் பார்க்கலாம் )
நவ நரசிம்மர்களில் மாலோலன் தான் நித்திய திருவாராதன பெருமாளாக ஜீயர்களுடன் பயணம் செய்யச் செய்கிறார். ஜீயரை அதனால் ’அழகிய சிங்கர்’ என்றும் அழைக்கிறோம். ’ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன்’ என்று அழைக்கப்பெற்ற இந்த முதல் ஜீயரைத் தொடர்ந்து இன்றைக்கு 620 ஆண்டுகளாக எம்பெருமானார் தரிசனத்தை அஹோபில மடத்து ஜீயர்கள் வளர்த்து வருகிறார்கள்.
வாருங்கள் மீண்டும் ஸ்ரீசந்நிதிக்கு செல்லலாம்.
ஆசாரியர் மாலோலனை சேவித்து, மிருதுவான குரலில் 30ஆம் பட்டம் அழகியசிங்கர் அனுக்கிரகித்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுப்ரபாதத்தை அனுஸந்தித்த்து, ஸ்ரீ மாலோலனுக்குப் புஷ்பங்கள் சமர்பித்த பின் பசுமாடும் கன்றும் வந்து நிற்க, திரை நீக்கப்பட்டு மங்கள இசை முழங்க ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீ மாலோலனுக்கு விஸ்வரூப மங்கள ஆரத்தி சமர்ப்பிப்பார், அன்றைய ஆராதன ஸ்வாமி பஞ்சாகத்தைப் படித்ததும், .
ஸ்ரீமதழிகிய சிங்கர் நித்யானுசந்தானத்தைத் தொடங்கியவுடன் விஸ்வரூபத்தில் ஸ்ரீ மாலோலன் அமுது செய்த பால் கூடியிருப்போருக்குக் கொடுக்கப்படும். பிறகு விஸ்தாரமான ஆராதனத்தை மாலுகந்த ஆசாரியர் பக்திப் பரவசத்தோடு செய்வார். இதை அனுபவிப்பதே ஒரு பேறு. .
மாலோனுக்குத் தினமும் 8.30க்குள் தளிகை சமர்ப்பித்துவிட வேண்டும். முன்னாள் ஸ்ஞ்சாரத்தினால் இரவு நேரமாகியிருந்தாலும் இந்த காலக்கிரமம் தப்பாமல் நடைபெற வேண்டும் என்பது ஸ்ரீமதழிகிய சிங்கரின் திருவுள்ளம்.
ஸ்ரீமாலோலன் அமுது செய்ததும் மங்கள ஹாரதியும், கோஷ்டி நித்யநுஸாந்தானம், சாற்றுமுறை சேவித்து முடிக்க, ஸ்ரீமதழிகிய சிங்கருக்கு அருளப்பாடாகி அவருக்கு பெருமாள் தீர்த்த ஸ்ரீசடாரி சாதித்த பின், சிஷ்யர்களுக்குத் தீர்த்தம் வழங்கப்பட்டு, ஸ்ரீசடாரியை ஸ்ரீமதழிகிய சிங்கரே தன் திருக்கரத்தால் அனைவருக்கும் சாதிப்பார். .
காலத்துக்கு ஏற்ப பல இடங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், மடத்தில் இன்றும் விறகடுப்பிலும், கிணற்று நீர் கொண்டு ஆசாரமான முறையில் தளிகைகள் செய்யப்படுகிறது. ஸ்ரீமாலோலன் நிறைய உண்பவன். அதனால் தினமும் வரும் சிஷ்யர்கள் அனைவருக்கும் சுவையுடன் தாராளமாகப் பிரசாதங்கள் கிடைக்கும்.
ஸ்ரீமாலோகனுக்கு ஆராதணம் முடிந்து ’என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொள்ள’ தேடி வரும் சிஷ்யர்களுக்கு சமாச்ரயணமும், பரந்யாசமும் செய்துவைப்பார். சிறுவர்களுக்குச் செய்யும் போது ஸ்ரீமதழகியசிங்கர் மிகவும் பொறுமையாக, அவர்களுக்குப் பயம் ஏற்படா வண்ணமும் செய்ததாகும். பரன்யாஸத்தின் போது அனுக்கிரகிக்கும் உபதேசம் பாமரர்களுக்கும் கூடத் தெளிவாக சம்பிரதாயம் புரியும்படி இருக்கும் .
இதற்குப் பிறகு ஸ்ரீமதழிகிய சிங்கர் சந்நிதியிலிருந்து ஆசிரமத்துக்குத் திருச்சின்னம், மங்கல வாத்தியத்துடன் எழுந்தருளி வந்திருக்கும் சிஷ்யர்களைக் குளிர நோக்கி, குசலம் விசாரித்து, பிறகு மடம் சம்பந்தமான விஷயங்களைப் பார்த்த பின் மாத்யானிக அனுஷ்டானம் முடித்துவிட்டு ஸ்வார்ச்சாராதனம் ( தன்னுடைய சாளகிராம பெருமாளூக்கு ஆராதனம் ) முடித்துக் கொண்டு, தாம் 50 வருடங்களுக்கு மேலாகச் செய்து வரும் ஸ்ரீமத் ராமாயணப் பாராயணத்தில் ப்ரதிதினமும் பத்து ஸ்ர்கங்களுக்குக் குறையாமல் சேவித்துவிடுவார்.
(ஸ்ரீஉடையவரும் மதியம் ஸ்ரீமத்ராமாயணத்தை ஸ்ரீபராசர பட்டரும், ஸ்ரீராமபிள்ளையும் சேவிக்க கண்களை மூடிக்கொண்டு அனுபவிப்பார்)
நம் ஸ்ரீமதழிகிய சிங்கர் இதுவரை ஸ்ரீராமருக்கு 60 முறை பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்! (41ஆம் பட்டம் ஸ்ரீமதழிகிய சிங்கருக்கு நாத்தழும்பெழ நாரணாவென்று அழைத்து என்று ஆழ்வார் கூறுவது போல நூற்றுக்கணக்கான முறைகள் ஸ்ரீமத் ராமாயணப் பாராயணம் செய்ததால் அத்தனை ( 24000 ) ஸ்லோகங்களும் மனப்பாடமாகத் தெரியுமாம். நம் அழகியசிங்கரும் கிட்டத்தட்ட அதே நிலை தான்)
அதன்பின் அளவாகப் பிக்ஷையை ஸ்வீகரித்த பிறகு, ததீயாராதனம் முடிந்து சிஷ்யர்களுக்கு வெற்றிலை பாக்கு கோஷ்டி நடந்து முடிய மதியம் 1.30 ஆகும். ஒரு மணி காலம் அத்யாத்ம கரந்தைகளைப் பரிசீலித்துப் பின் ஸ்ரீ ந்ருஸிம்ஹபிரியாவுக்கு மாத இதழுக்கு அருள் மொழிகளை எழுதி அனுக்கிரகித்து, சந்நிதி கைங்கரியத்தில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்குக் காலக்ஷேபம் சாதிப்பார்.
5 மணிக்கு வெவ்வேறு சுபகாரியங்களுக்குப் பத்திரிக்கை ஸமர்பிக்க வருபவர்களிடம் குசலம் விசாரிப்பார். சிஷ்யர்களும் ஸ்ரீமதழிகிய சிங்கரை தங்கள் பந்துவாகவே நினைத்து அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லித் தீர்வு கோருவர். பொறுமையோடு அனைத்தையும் செவி மடுத்து தீர்வு சொல்ல ஆசாரியர் கூறும் நல்வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் செல்வர்.
மாலை 5.45க்கு ஸ்ரீமதழிகிய சிங்கர் நீராட்டத்துக்கும் சாயம் சந்தியாவந்தனம் எழுந்தருள்வது வழக்கம். பிறகு 7 மணிக்கு ஸ்ரீ மாலோலனுக்கு பானகம் சமர்ப்பிக்கப்படும். பிறகு சிஷ்யர்களுக்குச் சேவை சாதித்துவிட்டு 9 மணியளவில் பலஹாரம் செய்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனித்துவிட்டு ஸ்ரீமதழகிய சிங்கர் சயனத்துக்குச் செல்லும் போது இரவு 10.45 ஆகியிருக்கும்.
”நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” என்று குலசேகர ஆழ்வார் வேண்டுவதைப் போல நமக்கு ஆசாரியனாக அருளிக்கொண்டு உள்ளார் நம் அழகியசிங்கர்
இன்று ஆனி மகம் அடியேன் ஆசாரியன் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரின் 68வது திருநட்சத்திரம்
- சுஜாதா தேசிகன்
23.6.2023
ஆனி மகம், 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரின் 68வது திருநட்சத்திரம்
Thank you. 🙏
ReplyDelete