Skip to main content

குதிகால் சிற்பம்

 குதிகால் சிற்பம்




ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும், சிற்பமும் பல நூற்றாண்டுச் சுவடுகள். எல்லா ஆழ்வார்களும் ஆசாரியர்களும் கொண்டாடிய ஸ்ரீ வைஷ்ணவத் தலைமைச் செயலகம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. அதன் அருகில் நாம் இருக்கிறோம் என்று தினமும் பெருமைப் பட வேண்டும்.

ஒவ்வொரு சிற்பத்தின் வழவழப்பும், பல தாக்குதல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கடந்து வந்தவை. அவை இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பெரிய பெருமாளும், நம் ஆசாரியர்களுமே காரணம்.

ஸ்ரீரங்கம் கார்த்திகை கோபுர வாசல் படியில் பல அடியார்களைக் காலடி பட்டு இருவர் சேவிக்கும் சிற்பம் ஒன்றைப் பதிவிட்டிருந்தேன்.அதற்கு வேதம் படித்த வாத்தியார் இப்படியொரு கருத்தைப் பின்னூட்டமாக எழுதியிருந்தார்.

”கார்த்திகை கோபுர வாசலில் இருப்பதாக ஓர் ஆணும் பெண்ணும் நமஸ்காரம் செய்யும் படம் இடம் பெற்றுள்ளது. இதில் பெண் நமஸ்காரம் செய்யும் முறை தவறாக உள்ளதே! ஒருக்கால், வைஷ்ணவச் சம்பிரதாயம் அதுவா... தயவு செய்து விளக்கவும்”

இதைப் பற்றி எல்லாம் அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அதனால் நகைச்சுவையாக இப்படிப் பதில் சொல்லியிருந்தேன். .

”இன்றைய ஸ்ரீ வைஷ்ணவரின் செல்ஃபியை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பார்த்தால் அடடே ஸ்ரீவைஷ்வர்கள் பேண்ட் சொக்கா கோட் போட்டுக்கொண்டு இருப்பதே சம்பிரதாயமாகத் தெரியும். ஆழ்வார்கள் காலத்தில் முந்திரிப் பருப்பு கிடையாது, ஆனால் இன்று எல்லாக் கோயில் கோயில்களிலும் முந்திரி உபயோகிக்கிறார்கள்.பெண் நமஸ்காரம் செய்வது போலச் சிற்பம் செய்தால், நாம் தடுக்கித் தான் விழ வேண்டியிருக்கும். இல்லை பெண் நமஸ்காரம் செய்வது போலச் சிற்பம் செய்து, நாம் அதன் மீது நடந்து நடந்து தட்டையாகிவிட்டதோ என்னவோ :-) 

வாத்தியார் விடவில்லை.

“ஆஹா... அருமையான விளக்கம்.... உங்களைப் போய் கேட்டேன் பாருங்கள்.. என்னை சொல்லணும். தவறான சிற்பத்திற்கு அருமையான சப்பைக்கட்டு. எங்கள் ஊர் கோயில் சிற்பம் அனுப்புகிறேன். பார்க்கவும். அதில் நீங்கள் சொல்வது போல் தடுக்கி விழுமாறு அமைக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். தவற்றைத் தவறு என்று ஒப்புக் கொள்ளும் மனோபாவம் எல்லோருக்கும் வந்து விடாது. புருஷாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரமும் ஸ்த்ரீகளுக்கு பஞ்சாங்க நமஸ்காரமும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கார்த்திகை கோபுர வாயிலின் சிற்பம் அபத்தத்தின் உச்சம்!

இதை யாரும் கவனித்துச் சொல்லவில்லை என்பது அதை விட அபத்தம்!! ( அவர் ஊர் குரோம்பேட்டை  திவ்ய தேசப் படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்)

ஸ்ரீரங்கம் பற்றி அவர் கூறிய கருத்து என் ரத்த அழுத்ததை கொஞ்சம் எழுப்பியது என்பது உண்மை. 




’குரோம்பேட்டை குமரன் குன்றம்’ திவ்ய தேசம் 1979ல் உருவானது, அதனுடன் ஸ்ரீரங்கத்தை ஒப்பிடுவது மலையும் மடுவும் ஒப்பிடுவது போல. ஸ்ரீரங்கத்தில் 1+1 = 3 என்று ஒரு கல்வெட்டு இருந்தால் கேள்வி கேட்காமல் நம்பும் ஆசாமி நான். அதனால் சிற்பம் தப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. பல கோடி அடியார்களும், நம்பெருமாள் காலடி பட்ட இந்தச் சிற்பம் எப்படித் தப்பாக இருக்கும் ? ஸ்ரீரங்கம் பெருமாள் இருக்கும் கோயிலில் எப்படித் தப்பு வரும் என்று யோசித்தேன். பல வரலாற்று, கட்டிடக்கலை, சிற்ப ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன் அவர்களுக்குத் தெரியவில்லை. நம்பெருமாளே விளக்குவார் என்று விட்டுவிட்டேன். பெருமாள் மீண்டும் அந்தச் சிற்பத்தைப் பார் என்றார். 

நடந்த திருக்கோலம் பெருமாளைப் பார்த்து ஒருவர் பெருமாள் எங்கே நடக்கிறார் அதே இடத்தில் நின்று கொண்டு தானே இருக்கிறார் என்று கூறலாம். ஆழ்வார்கள் ‘நடந்த கால்கள் நொந்தவோ’ என்று பாடியது எப்படி பொய்யாகும் ? தினசரி வரும் செய்தித்தாளில் கடைசியில் வரும் விளையாட்டு பகுதியில் ஓட்டப் பந்தய வீரர் படத்தைக் காண்பித்து யாரைக் கேட்டாலும் அவர் ஓடுகிறார் என்று தானே சொல்லுவார். அதுபோலத் தான் திவ்ய தேச பெருமாளின் நிலைகளும் சிற்பங்களும். அந்தக் காலப் புகைப்படங்கள். 

ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் அந்தச் சிற்பத்தை ஆராய்ந்து நோக்கினால், அது சேவித்துக்கொண்டு இருக்கும் சிற்பம் கிடையாது நின்று கொண்டு தலைக்கு மேல் கைகளைக் கூப்பி கோவிந்தா சிற்பம். குதிகால் என்று ஒரு சமாசாரம் இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள படத்தில் அது மட்டும் தான் தெரியும். ஆனால் ’குரோம்பேட்டை’ திவ்ய தேசத்தில் குறிப்பிட்ட படத்தில் குதிகாலுடன் விரல்களும் தெரியும். படியில் நின்று கொண்டு கோவிந்தா என்று சொல்லும்போது குதிகால் மட்டும் தான் தெரியும். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் சிற்பம் நின்று கொண்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கோவிந்தா சிற்பம்!

ஒரு நாள் முழுவதும் ஸ்ரீரங்கம் பற்றி நினைக்க வைத்த குரோம்பேட்டை வாத்தியாருக்கு அடியேனின் நன்றிகள் !

- சுஜாதா தேசிகன்
31-07-2019

Comments

Post a Comment