பிள்ளைகளின் திருநட்சத்திரம் ஆவணி ரோகிணி. ஸ்ரீஜெயந்தி. கண்ணன் அவதாரத் திருநாள். கண்ணனைக் குறித்து உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியும், அதனால் இதே நட்சத்திரத்தில் அவதரித்த பிள்ளைகளைப் பற்றி சில விஷயங்களை இன்று பார்க்கலாம். முதல் பிள்ளை - ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்) உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் இடத்தில் 1167ஆம் ஆண்டு அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார். குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தா...