Monday, December 3, 2012

லைப் ஆப் பை & எஸ்.ராஜம்


http://koodu.thamizhstudio.com/images/desikan_20_1_big.jpgசக்கரை வள்ளி கிழங்கு பற்றி முன்பு எழுதியிருந்தேன். சில மாதங்கள் முன் திருச்சியில் வாங்கிய 'பிடி கருணைக் கிழங்கு' இரண்டை எடுத்து பால்கனி தொட்டியில் மண்ணில் புதைத்தேன். சக்கரை வள்ளி கிழங்கு மாதிரி கொடி வளரும் என்று நினைத்தேன் ஆனால் ரொம்ப வித்தியாசமாக ஒரு செடி வளர்ந்தது. அதை விவரிக்க முடியாது அதனால் அதன் படம் இங்கே. கருணைக் கிழங்கு நிறைய விதங்கள் இருக்கிறது. 'பிடி' என்று ஏன் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பிடி கருணைக் கிழங்கு பற்றி இணையத்தில் தேடினால் கிடைப்பது அதை வைத்து எப்படி மசியல் செய்யலாம் என்பது தான்.

Monday, November 26, 2012

பெருங்காயம் - சிறுகதை

குங்குமத்தில் வந்த சிறுகதை.


Tuesday, November 20, 2012

அபார்ட்மெண்ட் எண் ஈ505

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை 'அபார்ட்மெண்ட் எண் ஈ505' ( D என்பது ஈ என்று மாறிவிட்டது )

Monday, November 5, 2012

பீட்சாவும், கலோரியும்..

காரில் ஊர் விட்டு ஊர் போகும் போது வழியெங்கும் ராட்சதக் கற்றாழை செடிகள் வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கற்றாழைச் செடிகளில் பல வகைகள் உள்ளது; சில வருடங்களுக்கு முன்பு சுஹாசினி 'அலோ விரா' பானம் ஒன்றை விளம்பரம் செய்தார். அந்தக் கற்றாழைக்குப் பெயர் சோற்றுக் கற்றாழை. இன்று நாம் பார்க்கும் பல வெளிநாட்டு பொருட்களில் இந்தக் கற்றாழையை உபயோகப்படுத்துகிறார்கள். (கூல் டிரிங்க்ஸ், சோப்பு, ஜெல், ஷாம்பு, எண்ணை). இதன் பயன்கள் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டது. அடுத்து உள்நாட்டு விக்கோ விளம்பரங்களில் மட்டுமே காண்பிக்கப்பட்ட மஞ்சள், வேப்ப இலை போன்றவை தற்போது கார்னியரால் உபயோகப்படுத்தபடுகிறது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

திருச்சி உழவர் சந்தையில் பெரிய கற்றாழை ச் செடியை இருபது ரூபாய்க்கு திருஷ்டிக்கு விற்கிறார்கள். நான் ஒன்று வாங்கி வந்து எங்கள் வீட்டு பால்கனியில் தொட்டியில் வளர வைத்தேன். போன வாரம் அதிலிருந்து பூ குருத்து ஒன்று கிளம்பி இப்போது என்னைவிட உசரமாக வளர்ந்துள்ளது. கற்றாழைக்கு அதிகத் தண்ணீர் வேண்டாம். அதற்கு வேண்டிய தண்ணீரை அதன் இலைகளிலேயே சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. அதிக தண்ணீர் ஊற்றினால் அழுகிப் போய்விடும். சில வீடுகளில் திருஷ்டிக்கு வாசல் நிலைப்படியில் தொங்க விடுவார்கள், மண்ணிலாமல் வளரும். எங்கள் வீட்டு பக்கம் இருக்கும் ஐடிபிஎல் சாலைகளின் நடுவில் கற்றாழை நிறைய வளர்ந்திருக்கும். போன மாதம் அதன் பூ குருத்தை படம் பிடித்தேன். எவ்வளவு தூரம் வளர்துள்ளது என்று பாருங்கள்(படம்). ஸ்கூல் படிக்கும் போது இந்தச் செடிகளைப் பார்த்து பாம்புச் செடிகள் என்று பயப்படுவேன்.

போன வாரம் குடும்பத்துடன் கூர்க் சென்றிருந்தேன். அங்கே இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். காலை தூங்கி எழுந்த போது லேசான தூறல். மகனுடன் காட்டுப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். 'தொட்டா சிணுங்கி' போன்ற செடிகளை அவனுக்கு காண்பித்தேன். அங்கே ஒரு செடியின் இலைகள் பெரிதாக குடை போல இருந்தது. என் மகனை அதன் கீழே நிற்க வைத்து கேமராவில் ஜூம் செய்து குளோசப்பில் படம் எடுக்கும் போது அந்தப் பெரிய இலைகளின் மீது அதே நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டுக்கொண்டு இருந்ததை கேமரா வழியாக பார்த்துப் பதறினேன். சத்தம் போடாமல் அவனை என் பக்கம் இழுத்து பாம்பைக் காண்பித்தேன்.(படம்)அவன் கேட்ட கேள்வி "தொட்டுப்பார்க்கலாமா?"

சில நாள்கள் முன் பிட்சா படம் பார்த்தேன். அதற்கு அடுத்த நாள் காலை நாளிதழ் ஒன்றில் இந்த மாதிரி திகில், திரில்லர், பேய் படங்கள் பார்த்தால் கலோரிகள் குறையும் என்று போட்டிருந்தார்கள். 1980ல் வந்த 'The Shining' என்ற படம் பார்த்தால் சரசரி 184 காலரிகள் குறையும் என்று போட்டிருந்தார்கள். உடலில் அன்றாடம் ஓடியாடி வேலை செய்வதற்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் ) தேவையான அளவைவிட தேவைக்கு அதிகமாக உணவு உண்பதால் மிச்சம் உள்ள கலோரிகள் கொழுப்பாகச் சேர்ந்துவிடுகிறது. இது தினமும் கொஞ்ச கொஞ்சமாகச் சேர்ந்து அடுத்தமுறை உங்க சொந்தங்களின் திருமண கூட்டத்தில் உங்களைப் பார்த்து "முன்னைக்கு இப்ப பூசினமாதிரி இருக்க" என்று நலம் விசாரித்தால் கூடிய சீக்கிரம் இந்த கமெண்ட் "என்ன பூசணி மாதிரி இருக்க" என்று மாறுவதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

நடைப்பயிற்சி செய்யும் போது தற்போது என் கைபேசியில் endomondo என்ற மென்பொருள் ஒன்றை நிறுவியிருக்கேன். இது நீங்கள் எங்கே போகிறீர்கள், எந்த வேகத்தில் போகிறீர்கள், எவ்வளவு கலேரிகள் எரிக்கப்படுள்ளது போன்ற விவரங்களை சொல்லுகிறது. ( http://endomondo.com என்ற இடத்தில் கிடைக்கும் ) [கலோரி என்பது ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் சூடாக்கத் தேவைப்படும் உஷ்ணசக்தி].

சரி திகில் படம் பார்த்தால் நம்முடைய நாடி நரம்பு எல்லாம் ஓவராக வேலை செய்கிறது, அதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, அதிக அட்ரீனலின் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இதனால் பசி குறைந்து, Basal Metabolic Rate (சும்மா படுக்கையில் நாள் முழுவது படுத்துக்கொண்டே எவ்வளவு கலோரி எரிப்பது?) அதிகமாகி நிறைய கலோரிகள் எரிக்கப்படுகிறது. சில எழுத்தாளர்கள் எழுதும் எழுத்தைப் படித்தாலே சில சமயம் இது நிகழ்வதுண்டு!

சில வருஷங்களுக்கு முன் வாங்கிய "Best Loved Indian Stories" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ரஸ்கின் பாண்ட் எழுதிய "The Night Train at Deoli" என்ற சிறுகதை நல்ல வாசிப்பு அனுபவம். ரஸ்கின் பாண்ட் எழுத்து எனக்குப் பள்ளி நாட்களில் ஆங்கில பாடம் மூலம் பரிட்சயம். இந்தக் கதை பள்ளியில் இருந்திருந்தால் அனுபவித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

கதையை சுமாராக மொழிபெயர்த்திருக்கிறேன்.

- * -
நான் கல்லூரி படிக்கும் போது, கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குப் போவேன். மே மாதம் போய்விட்டு ஜூன் தான் திரும்புவேன். பயணத்தின் போது, காலை ஐந்து மணிக்கு முப்பது மைல் தொலைவில் இருக்கும் டியோலி ஸ்டேஷன் வரும். பிரகாசம் கம்மியாக சில விளக்குகள், மங்கலான காலை வெளிச்சத்தில் இரண்டு பக்கமும் காடு தான் தெரியும். டியோலி ஸ்டேஷன் பெருமை அடித்துக்கொள்ள ஒன்றும் இல்லை. ஒரே பிளாட்பாரம் அதற்கு ஒரே ஸ்டேஷன் மாஸ்டர்; ஒரே வெயிட்டிங் ரூம்; ஒரு டீ ஸ்டால்; ஒரு பழக்கடை மற்றும் சில தெரு நாய்கள்.

இந்த ரயில் நிலையத்தில் ரயில் பத்து நிமிடம் நிற்கும். எதற்கு இந்த ஸ்டேஷனில் நிற்கிறது என்று பல முறை வியந்திருக்கிறேன். யாரும் இறங்க மாட்டார்கள், ஏற மாட்டார்கள். போர்ட்டர்கள் கூட கிடையாது, ஆனால் ரயில் முழுசாக பத்து நிமிஷம் நிற்கும். மணி அடித்து, கார்ட் விசில் ஊதிய பிறகு டியோலி ஸ்டேஷன் மறைந்து போகும்.

ஒவ்வொரு முறையும் இந்த ஸ்டேஷனை கடந்து போகும் போது, இந்த ஊரில் என்ன இருக்கும் என்று வியப்பேன். யாருமே பார்க்க விரும்பாத இந்த ஊரை நினைக்க சில சமயம் பாவமாகக் கூட இருக்கும். இந்த ஸ்டேஷனை கடந்து இந்த ஊரில் என்ன இருக்கும் ? ஒரு முறை இந்த ஊரில் இறங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

பதினெட்டு வயதில் ஒரு முறை என் பாட்டி ஊருக்கு பயணம் செய்த போது வழக்கம் போல ரயில் டியோலி ரயில் நிலையத்தில் நின்றது. ஒரு பெண் கூடை விற்றுக்கொண்டு இருந்தார். நல்ல குளிரில் ஷால் போர்த்திக்கொண்டு இருந்தார். காலில் செருப்பு இல்லை. நடையில் அழகும் அவளிடம் இளமையும் இருந்தது.

என் ஜன்னல் பக்கம் வந்து நின்றாள். நான் அவளை அதிகம் பார்ப்பதைக் கவனித்துவிட்டாள், ஆனால் பார்க்காத மாதிரி பாசாங்கு செய்தாள். அவள் வெளுப்பாக, கூந்தல் கருப்பாக...கண்களில் மட்டும் பதட்டமாக இருந்தது. அந்த கண்கள் என்னைப் பார்த்தது. நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் நகர்ந்தாள். என்னையும் அறியாமல் நானும் இருக்கையை விட்டு எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி அவள் போகும் திசையை பார்த்துக்கொண்டு டீ ஸ்டால் பக்கம் போனேன்.

டீ ஸ்டால் பின் பக்கமாக வந்த அவள்
"கூடை வேண்டுமா?..நல்ல பிரம்பால் செய்த கூடை"
"வேண்டாம்"
கொஞ்ச நேரம் இருவரும் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தோம்.
"நிஜமாகவே கூடை வேண்டாமா?" என்றாள்.
"சரி ஒரு கூடை குடு" என்று மேலே இருந்த கூடையை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்கும் போது அவளின் விரல்களை நான் தொட்டேன்.
அவள் ஏதோ பேச முற்பட்ட போது கார்ட் விசில் ஊத அவள் ஏதோ சொன்னாள். மணி ஓசையிலும், எஞ்சின் இறைச்சலும் அதை அழித்தது. நான் ஓடி போய் ரயில் பெட்டியில் ஏறினேன்.
அவள் என்னையே பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தாள்; பிறகு மறைந்தாள். அதற்கு பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை. என் நினைவில் அவள் முகமும் சிரிப்பும் மட்டுமே இருந்தது.

பாட்டி வீட்டுக்குப் போன பிறகு மற்ற விஷயங்கள் இருந்ததால் அவளை மறந்தேன். ஊருக்கு திரும்ப வரும் போது அவள் திரும்ப நினைவுக்கு வந்தாள். டியோலி ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டு இருந்தாள். ரயிலை விட்டு குதித்து அவளைப் பார்த்துக் கை அசைத்தேன். புன்னகைத்தாள். சந்தோஷமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு பழைய நண்பர்கள் சந்திப்பு மாதிரி இருந்தது.

அவள் கூடை விற்கப் போகவில்லை, டீ ஸ்டால் பக்கம் வந்தாள். எனக்கு ஒரு நொடி அவளை அபகரித்துக்கொண்டு என்னுடன் அழைத்துக்கொண்டு போக வேண்டும் போல இருந்தது. ரயில் கிளம்பும் போது அவளை விட்டு போக எனக்கு மனசு வரவில்லை. அவளிடம் இருந்த கூடைகளை வாங்கி கீழே வைத்து அவள் கைகளைப் பற்றினேன்.
"நான் டெல்லிக்கு போகணும்"
தலையாட்டினாள். கார்ட் சமயம் தெரியாமல் விசில் ஊதினார். அவர் மீது கோபமும் எரிச்சலும் வந்தது.
"நிச்சயம் திரும்ப வருவேன்...நீ இங்கே இருப்பாயா ?"
திரும்பவும் தலையாட்டினாள்.

ரயில் திரும்ப அவளை விட்டுச் சென்றது.

இந்த முறை அவளை மறக்கவில்லை. பயணத்தின் போதும், அதற்குப் பிறகும் நினைவில் இருந்தாள்.
கல்லூரி அரை ஆண்டு லீவுக்கு பாட்டி வீட்டுக்கு சீக்கிரமாகவே கிளம்பினேன். இந்த முறை எனக்கு ஆர்வமும், பதட்டமுமாக இருந்தது. அவளைப் பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் ஒன்றும் தெரியவில்லை.

ரயில் டியோலியை வந்தடைந்த போது, பிளாட்பாரத்தில் யாரும் இல்லை. அவளைக் காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது. ஏதோ செய்ய வேண்டும் என்று தோன்றியது. நேராக ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஓடிப் போய் "கூடை விற்கும் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?" என்றேன்.
"தெரியாது...சீக்கிரம் ரயிலில் ஏறுங்க கிளம்பப் போகிறது"
பிளாட்பாரத்தில் மேலும் கீழுமாக ஓடினேன். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு மாங்கா மரமும் காடும் தான் கண்ணுக்கு தெரிந்தது. ரயில் கிளம்ப நான் அதனுள் குதித்து ஏறினேன். ரயில் காட்டுப்பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது.

இரண்டு முறை சந்தித்த அந்தப் பெண் எங்கே போயிருப்பாள். அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவளைப் பார்த்த போது எனக்குள் மென்மையாக உணர்ந்தேன்.

ஊரில் இரண்டு வாரம் தான் இருந்தேன் என்று பாட்டிக்கு என் மீது கோபம். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரயிலில் புறப்பட்டேன். இந்த முறை ஸ்டேஷன் மாஸ்டரிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். டியோலில் ஸ்டேஷனில் மாஸ்டர் புதிதாக இருந்தார்.
டீ ஸ்டால் வைத்திருப்பவரிடம் கேட்ட போது
"நினைவு இருக்கிறது ஆனால் அவள் இப்போது வருவதில்லை"
"ஏன் ? என்ன ஆச்சு?"
"எனக்கு எப்படி தெரியும் ? அவள் என்ன எனக்கு உறவா?"

திரும்பவும் ரயிலை நோக்கி ஓடினேன். டியோலி பிளாட்பாரம் என்னை விட்டு விலகியது. ஒரு முறை என் பயணத்தின் போது இங்கே இறங்கி ஒரு நாள் தங்க வேண்டும், இந்த பெண்ணைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

திரும்பவும் கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு சென்ற போது டியோலி ஸ்டேஷனில் அவளைக் காணவில்லை. சினிமா கதையாக இருந்தால் அங்கே இறங்கி அவள் எங்கே போனாள் என்று கண்டுபிடித்துவிட்டு ரயில் ஏறியிருப்பேன். என்னால் அப்படி செய்ய முடியவில்லை. பயமாக இருக்கலாம். அவள் என்ன ஆனாள் என்று அறிந்து கொள்ளும் பயம். கல்யாணம் செய்துக்கொண்டிருப்பாளோ ? ஜூரம் வந்திருக்குமோ ?

இந்த ஸ்டேஷனைக் கடந்து இந்த ஊரில் என்ன இருக்கும் ? ஒரு முறை இந்த ஊரில் இறங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பல முறை டியோலி ஸ்டேஷன் வழியாகப் பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட கீழே இறங்கியதில்லை.

- * -

எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த மாதிரி காதல் வந்திருக்கும். இன்றும் நான் எழுதிய கல்யாணி என்ற கதையை "இது உங்க உண்மைக் கதை தானே ?" என்று போன வாரம் கூட என் மனைவி கேட்டாள். வாழ்க்கையே ஒரு பயணம் தானே!

நீங்கள் மூச்சு இழுத்து விடும் போது அதில் பல அணுக்கள் இருக்கிறது. அடுத்த முறை டாக்டர் "மூச்சை நல்லா இழுத்து விடுங்க" என்று சொல்லும் போது ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இழுக்கும் மூச்சு காற்றில் ஹிட்லர், நேரு போன்றவர்களின் நுரையீரலுக்கு சென்று வந்த மூலக்கூறு இருக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு 25 முறை மூச்சு விடுகிறோம். ஒருவர் 60 வயது வாழ்ந்தால் கிட்டதட்ட 2.1 * 10^31 மூலக்கூறை சுவாசத்தால் விட்டிருப்பார். நம் காற்று மண்டலத்தில் உங்க எதிர் வீட்டுத் தாத்தா அல்லது நேரு மாமா மூச்சு விட்ட மூலக்கூறு 5*10^12 பாகம் இருக்கலாம். அப்படியென்றால் நாம் அவருடைய மூலக்கூற்றை திரும்ப சுவாசிப்பதற்கு நிறைய சாத்தியகூறு இருக்கிறது!

இந்த வாரம் கூடு இதழுக்கு எழுதியது. 

Saturday, October 27, 2012

போராளி - சிறுகதை

குமுதத்தில் வந்த சிறுகதை இங்கே படிக்கலாம் 

Thursday, September 20, 2012

வெளியே இருப்பவர்கள்


இன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த போது நண்பர் ஒருவர் ஜெயமோகன் எழுதியிருக்கும் 'உள்ளே இருப்பவர்கள்' என்ற பதிவை எனக்கு அனுப்பியிருந்தார். படித்தேன்.

ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது விஷ்ணுபுரம் பற்றி பேச்சு வந்தது. (புத்தகத்தை ஜெயமோகனுக்கு திரும்பி அனுப்பிய சமயம் என்று நினைக்கிறேன்). அவரேதான் ஆரம்பித்தார். ஆனால் அவர் சொன்ன விஷயமும் ஜெயமோகன் குறிப்பிடும் சில விஷயங்களும் மிகுந்த முரண்பாடாக உள்ளன. அதைப் பற்றி நான் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. சுஜாதா என்ன சொன்னார் என்றும் நான் சொல்லப்போவதில்லை.

ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போல சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதை கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்று பொருள் என்றாராம்.

இந்த நிகழ்ச்சி பெருமாள் மீது ஸ்ரீராமானுஜர் வைத்த பிரேமை/பக்தியை காட்ட.

ஸ்ரீவைஷ்ணவனுக்கு பெருமாளை விட, ஆசாரியன் மிக முக்கியம். பாகவத அபசாரம் என்பது பெரிய - மிகப்பெரிய பாவம். நம்மாழ்வார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவர். ஆசார்ய குருபரம்பரை வரிசையில், பெருமாள், பிராட்டி, விஷ்வக்ஸேனருக்குப் பின் பூலோக ஆசார்யர்களில் முதலிடத்தில் இருப்பவர். ஸ்ரீவைஷ்ணவத்துக்கே இவர்தான் ஃபவுண்டேஷன். சுஜாதாவின் மன உளைச்சலுக்குக் காரணமில்லாமல் இல்லை.

வெளியே இருப்பவர்களுக்கு அது புரியப்போவதில்லை.

- * - * -


சுஜாதா 90களில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் "இந்தியா நூறு வருஷத்துக்கு முன்" என்கிற மறுபதிப்பு புத்ததகம் இருக்கிறது. டபிள்யூ உர்விக் ( W.Urwick ) என்னும் பாதிரியார் எழுதியது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருச்சி, சிதம்பரம், மாகாபலிபுரம் போன்ற இடங்களில் நூறு வருஷத்துக்கு முந்தைய தோற்றத்தின் வர்ணனை கிடைக்கிறது. சில அரிய வுட்கட் போன்ற படங்களும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீரங்கம் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் சேஷராயர் கோயிலுன் ஆயிரங்கால் மண்டபத்தையும் வர்ணித்துவிட்டு வேல்ஸ் இளவரசர் 1875-இல் இந்தியா விஜயத்தின் போது இங்கு வந்திருந்து கோபுரத்தின் மேல் ஏறினதையும் ஐந்நூறு ரூபாய் கோவிலுக்கு அளித்ததையும் சொல்லியிருக்கிறார்.
அதன் பின் வருகிறது ஓர் அதிர்ச்சி. "கோயிலின் பிரம்மாண்டமும் பெருமையும் அதன் பிரகாரங்களின் விஸ்தாரமும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் திறமையும் வருஷக் கணக்கான உழைப்பையும் காட்டும் போது இதற்கு ஏறுமாறாக உள்ளே ஒளியிழந்த இருட்டில் எண்ணெய் வழியும் அச்சம் தரும் பிம்பம் மிக வினோதமாக நம்மை தாக்குகிறது. வெறுக்கத்தக்க மோசமான உருவவழி பாட்டுக்கு உலகிலேயே விஸ்தாரமான ஒருகோயில் அமைப்பு எழுப்ப்ப பட்டுள்ளது.

லண்டனில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் எத்தனை தப்பாக விபரீதமாக நம் முறைகளையும் விக்கிரக வழிபாட்டையும் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு சரியான சாட்சி.

லேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களோ மத இயலாளர்களோ ஒரு பொழுதும் நம் திருத்தலங்களின் வழிமுறைகளை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவது விரயம் எப்படி நம்மால் அவர்கள் 'ஓப்பெரா' சங்கீதத்தை ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ள முடியாதோ அதே போல்.

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாராயணனே கருமுகில் போல் எந்தாய்" என்று திருமங்கையாழ்வார் திருநாங்கூரின் கருவறையின் இருட்டில் பாடியதின் உருக்கத்தை எப்படி பாதிரியார்களுக்கு விளக்க முடியும் ? நம் வழிபாடு வெளிப்புற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது என்பது மத மாற்ற அவசரத்தில் இருந்தவர்களுக்கு புரிந்ததே இல்லை.

Saturday, September 15, 2012

மொட்டை கோபுரம்......எட்டாம் பிரகாரம் ‘அடையவளைந்தான்’ என்று அழைக்கப்படுகிறது. சமிஸ்கிரததில் சர்வெஷ்டானம் என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Maze என்று சொல் கிட்டேவருகிறது. இங்கே இருக்கும் நான்கு கோபுரங்களும் முடிவு பெறாமல் இருக்கிறது( தெற்கு கோபுரம் 1987 ஆம் ஆண்டு ராஜ கோபுரம் ஆனது ). பெரியவர்களுக்கு இவை ராய கோபுரம். சின்னவர்களுக்கு இவை ‘மொட்டை கோபுரம்’.

சின்ன வயசில் கோயிலுக்கு போகும் போது இந்த தெற்கு வாசல் மொட்டை கோபுரத்தை வியந்து பார்த்துள்ளேன். "எப்படி கட்டியிருக்கிறார்கள் பாருடா!" என்று அப்பா ஒவ்வொரு முறையும் ஸ்ரீரங்கம் போகும் போது காண்பிப்பார். 130 X 100 அடியில் மொட்டையாக இருந்தாலும் கம்பீரமாக இருக்கும். இதில் உள்ள கதவு சட்டம் 43 அடியில் ஒரே கல்லினானது. மேல் கூறையில் இருக்கும் குறுக்கு சட்டம் 23-4-4 அளவில் மேலே எப்படி எடுத்துக்கொண்டு போனார்கள் என்று வியக்கலாம். சின்ன வயசில் இதற்கு மேல் கோபுரம் கட்டியிருந்தால் அது மேகத்தை தொட்டிருக்கும் என்று கற்பனை செய்துள்ளேன்.

இந்த மொட்டை கோபுரங்கள் நாயக்கர் மன்னர்கள் கடைசியாக கட்ட ஆரம்பித்து பின்பு பிரஞ்சு, பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலால் கட்டுமான பணி பாதியில் 1736-1759 ஆண்டுகளில் நின்று இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

தேவதைகள் ஒரு நாள் ராத்திரியில் ஸ்ரீரங்கத்தை கட்ட ஆரம்பித்து கடைசியாக ராயகோபுரம் கட்டும் போது விடிந்துவிட்டதால் அவர்கள் சென்று விட்டார்கள் என்று சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். இன்றும் அந்த கதையை நம்பவே எனக்கு ஆசையாக இருக்கிறது.

தெற்கு ராயகோபுரம் 1979 வரையில் மொட்டையாக இருந்தது. பிறகு 1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் அதை ராஜகோபுரமாக்கினார். இன்றும் பலர் அதை கட்டியிருக்க கூடாது என்று சொல்லுவதை பார்க்கலாம். பதின்மூன்று நிலைகளை கொண்ட இந்த ராஜகோபுரம் கட்டியபின் ஸ்ரீரங்கத்துக்கு கூட்டம் வர தொடங்கியது. வானத்தை தொடும் என்று என் கற்பனை முடிவுக்கு வந்தது. 85 வயதில் கோபுரத்தை கட்ட தொடங்கி, தன் 92 வது வயதில் இதை கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது. இன்றும் ஸ்ரீரங்கம் செல்லும் போது அந்த அடி பாகம் தான் தான் என்னை பரவசப்படுத்தும். அதன் கீழே நடக்கும் போது இந்த 'ஐபோன்' காலத்திலும் வியக்க வைக்கிறது. இப்போது எழுப்பட்ட ராஜகோபுரம் முந்தைய மொட்டை கோபுரத்தை சிறியதாக்கி ஸ்ரீரங்கத்துக்கு வரும் கூட்டத்தை பெரியதாக்கியுள்ளது.

இந்த நாலு மூலையிலும் Pilaster என்னும் ஒரு பக்க தூண்களின் மேல் கும்பம் மாதிரி அழகிய வேலைப்பாடுகளை பார்க்கலாம். இதை கும்பபஞ்சரம் என்று சொல்லுவார்கள்.

பழைய படத்தில் இந்த கோபுரத்துக்கு முன்பு நாயக்கர்கள் கட்டிய சின்ன மண்டபம் மாதிரி ஒன்று இருக்கும், இன்று இந்த மண்டபம் பெட்டிக்கடையாக மாற்றபட்டு தினத்தந்தியும் மாலைமுரசும், வாழைப்பழ கொத்தும், பெப்ஸியும், கோக்கும்
தொங்கவிடப்படுள்ளது. கோயிலுக்கு முன்பு காந்தி சிலை என்று எல்லாம் இந்த நூற்றாண்டின் சாதனைகள்.

எட்டாம் பிரகாரத்தில் இன்னும் மூன்று மொட்டை கோபுரங்கள் இருக்கிறது. இதன் வடிவமைப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் தூண்கள் ஒருவிதமான சுருள் வடிவமாக செதுக்கியிருப்பதைக் காணலாம். நான் இந்த வடிவத்தை மேல்கோட்டை, மாமல்லபுரத்தில் பார்த்திருக்கிறேன்.

இந்த விதமான கோபுரம் எழுப்பட்டதா அல்லது அரசர்கள் தங்கள் வெற்றியை பறைசாற்றுவதற்காக எழுப்பபட்ட நினைவு சின்னங்களா என்று தெரியவில்லை. தற்போது இவை சாணித்தட்டுவதற்கும், “இங்கே கம்ப்யூட்டர் முறையில் நியூமராலஜி பார்க்கப்படும்’ என்று விளம்பரப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. சிலர் சிமிண்டை கொண்டு தங்கள் வீட்டுக்கு ஒரு பக்க தூண்களாகவும் சுவர்களாகவும், சிலர் அதை உபயோகப்படுத்தியுள்ளார்கள். நம் நாட்டு heritage !

இன்று ஃபேஸ் புக்கில் இந்த படத்தை பார்த்த போது சில வருஷங்கள் முன் ஸ்ரீரங்கம் பற்றி எழுதி வைத்திருந்தது நினைவு வந்தது. அதிலிருந்து ஒரு பகுதி.

Monday, August 13, 2012

என்னைக் கவர்ந்த சுஜாதாவின் சிறுகதை


சில வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. முதற்பதிப்பு ஏப்ரல் 1981, விலை ரூ4/=, 80 பக்கங்கள்!

வலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை.

Wednesday, July 25, 2012

அத்திப் பழமும் ஆதாம் ஏவாளும்

வீட்டுப்பக்கம் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. நடைப்பயிற்சியின் போது அதிலிருந்து விழும் பழங்களை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே கருப்பாக சின்ன பூச்சிகள் இருக்கும். பறித்து உடைத்தாலும் இருக்கும். அத்திப்பழம் பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் படித்த போது விடை கிடைத்தது.

'அத்தி பூத்தாற்போல்' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் அத்தி மரத்தில் எப்போதும் காய்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். சென்னை தி.நகர் பாலாஜி பவன் பின் புறம் இதே போல ஒரு அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறேன். முன்பு நாட்டு மருந்துக்கடையில் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்த அத்திப்பழம் இப்போது எல்லா கடைகளிலும் ஆஞ்சநேயர் வடைமாலை மாதிரி பதப்படுத்தப்பட்ட 'அஞ்சீர்' என்று கிடைக்கிறது (அஞ்சீர் என்றால் 'தேன் அத்தி' என்று பொருள்.).

எழுநூறுக்கும் மேற்பட்ட அத்தி மரங்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்டு பிஞ்சு போல இருக்கும். மேற்பகுதியில் சின்ன துவாரத்தைக் காணலாம்.

இனச் சேர்க்கைக்குப் பிறகு ஆண் குளவிகள் இறந்துவிடுகிறது, மகரந்தத்தை சுமந்து வரும் பெண் குளவிகள் அந்த சின்ன துவாரத்தின் உள்ளே நுழைகிறது. மகரந்தச் சேர்க்கை நிகழும் போது அவைகள் உள்ளே முட்டைகளை இட்டுவிட்டு இறந்துவிடுகிறது. முட்டைகளிலிருந்து புழுக்கள் தோன்றி பிறகு அவை குளவிகளாகத் தோன்றுகிறது. இவை வளரும் போது அத்தி விதையை உண்டு வளர்கின்றன. அத்திப் பழம், ஆலம் பழங்களை அடுத்த முறை உடைத்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சிகள் இருப்பதே இதனால் தான். அடுத்த ஒற்றுமை இதன் இலைகளைப் பறித்தால் பால் சொட்டுவது.

இந்த குளவிகளுக்குப் பிறக்கும் வீடும் சமாதியும் இந்த அத்திப் பழம் தான். குளவிகள் இல்லை என்றால் அத்தி மரம் இல்லை; அத்தி மரம் இல்லை என்றால் குளவிகள் இல்லை. இயற்கை!

ஆதாம் பாவம் செய்த பிறகு தாங்கள் நிர்வாணமாக இருப்பதை அறிந்து அத்தி இலைகளை உடையாக்கினார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. பல பழைய ஓவியங்களில் ஆதாம் ஏவாளை நிர்வாணமாக வரைந்த ஓவியர்கள் அத்தி இலைகளை அதன் மீது வரைந்து நிர்வாணத்தை மறைத்து 'U' சர்டிபிக்கேட் வாங்கினார்கள். ஆதாம் ஏவாள் உடுத்திய அத்தி இலைகள் நிச்சயம் ஓரிரு நாட்களில் காய்ந்துவிழுந்திருக்கும் ஆனால் ஓவியர்கள் வரைந்த அத்தி இலைகள் இன்னும் காயாமல் இருக்கிறது!. உலகின் முதல் மரம் அத்தி மரம் தான் என்று 'பிரிட்டானிகா' என்சைக்ளோபீடியா சொல்வது இதனால் கூட இருக்கலாம்.

-(0)-

பிரைஸ் டே எழுதிய ஃபோர் ஓ கிளாக் ( Four O' Clock by Price Day ) என்ற சிறுகதையை படித்த போது சுஜாதா எழுதிய தேவன் வருகை கதை ஞாபகத்துக்கு வந்தது. சஸ்பென்ஸ் கதை வகையைச் சார்ந்த விஞ்ஞான சிறுகதை. என்ன செய்யப் போகிறார் என்பதை விட எப்பொழுது செய்ய போகிறார் என்பது தான் பிரச்சனை.

இந்த வாரம் பிரைஸ் டே எழுதிய கதையை தமிழ்ப்படுத்தியிருக்கேன். நிச்சயம் மூலக் கதையை கூகிளில் தேடி படித்துப்பாருங்கள்.

நான்கு மணி

டேபிள் மீது இருந்த டிஜிட்டல் கடிகாரம் 3:47 என்றது. சரியாக 4 மணிக்கு அது நிகழப்போகிறது.

"நிறைய யோசித்தாகிவிட்டது, வேற வழி இல்லை"என்றார் கடிகாரத்திலிருந்து கண்ணை எடுக்காமல்.
"பல முறை விவாதித்து விட்டோம் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார் தீர்மானமாக.

தலைக்கு மேலே இருந்த கூட்டிலிருந்து எட்டிப்பார்த்த கிளி "கடலை" என்றது. அதன் கண்களிலும் கால்களிலும் முதுமை தெரிந்தது.

கடிகாரத்திலிருந்து கண்ணை எடுக்காமல், மேஜை மீது இருந்த கிண்ணத்திலிருந்து ஒரு வேர்க்கடலையை எடுத்து கையை உயர்த்திய போது கிளி அதைக் கவ்விக்கொண்டது. காலுக்கு அடியில் வைத்து மூக்கால் உடைத்துச் சாப்பிட்ட போது அதன் சத்தம் ஜன்னலுக்கு வெளியே வண்டிகளின் ஹார்ன் சத்தம், ஸ்கூல் விட்ட குழந்தைகள் போடும் கூச்சல், பிளேன் போகும் சத்தத்துடன் கலந்து கேட்டது.

கடிகாரம் 3:49 என்றது.

"உண்மை தான்... விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள்... எதுவும் இருக்கக் கூடாது... வெளியாளாக எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்"

3:50க்கு பதட்டம் அவர் முகத்தில் தெரிந்தது.

"இன்னும் பத்து நிமிஷத்தில் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் உலகத்தில் உள்ள எல்லா கெட்டவர்களையும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் உயரத்தில் பாதியாகிவிடுவார்கள்!"

பிக்பாக்கெட் அடிப்பவர்கள், திருடர்கள், கொலை செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள், கடத்தல்காரர்கள், பெண்களை கிண்டல் செய்தவர்கள், சிகரெட் குடித்தவர்கள், வாய்தா வாங்கியவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள்.... நல்லவர்கள் போல சினிமாவில் ஹீரோவாக நடித்தவர்கள்... எல்லோரும் ... விதி ஒன்று தான்... விதிகளை மீறியவர்கள்.. அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்"

கிளி "கடலை" என்று கேட்டு ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

"உனக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு தெரியும். வேறு வழி இல்லை. இரவு பகல் என்று நிறைய யோசித்துப் பார்த்துவிட்டேன். கெட்டவர்களை அடையாளம் காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்"

"போன வாரம் செய்தித்தாளில் நடந்த விபத்தை படங்களுடன் போட்டிருந்ததைப் பார்த்தபோது அதை தடுக்க வண்டிகளின் சக்கரங்களை சதுரமாக மாத்தலாமா என்று கூட யோசித்ததுண்டு"

"யார் கெட்டவர்கள் என்று எப்படி தீர்மானித்தேன் என்று கேட்கலாம். ஒரே விதி தான். கெட்டவர்களின் செயலைப் பார்த்து ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தவர்கள் கூடக் கெட்டவர்கள் தான் என்பது என் விதி"

"முதலில் அவர்கள் நெற்றியில் ஊதா நிறத்தில் ஒரு குறி போடலாம் என்று தான் நினைத்தேன் பிறகு இன்றைய டாட்டூ கலாசாரத்தில் அதையே ஃபேஷனாக கருதக்கூடும் என்று விட்டுவிட்டேன். இனம் இனத்தோட சேரும். கெட்டவர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து உலகை மேலும் அழிப்பார்கள்"

"உயரத்தைக் கொண்டு எதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்த உடன். பெரிதாக்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவே அவர்களுக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். வன்முறை அதிகமாக ஆகும். எனக்கு வன்முறை பிடிக்காது. உயரத்தை பாதியாக்கினால் ? பல விஷயங்களை அவர்கள் செய்ய முடியாது. பஸ் படிக்கட்டில் கூட ஏற முடியாது. சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது கண்டுபிடிப்பார்கள். இதற்கும் ஏதாவது கண்டுபிடிப்பார்கள். ஆனால் அதற்கு கொஞ்சம் நாளாகும். தங்களுடைய சட்டை கால் வரை வரும். காற்சட்டை கழண்டு விழும். எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கும்" என்று புன்னகைத்தார்.

மணி சரியாக 3:55 என்று காட்டியது. "கடலை" என்றது கிளி.

கண்ணைக் கடிகாரத்திலிருந்து எடுக்காமல், கடலை ஒன்றை பொறுக்கிக் கொடுத்தார்.

"நீதிமன்றத்தில் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. விசாரணை நடக்கும் போது குற்றவாளியா என்று தீர்மானிக்கும் முன் சரியாக நான்கு மணிக்கு குற்றவாளி என்றால் குள்ளமாகிவிடுவான். ஏன் நீதிபதி கூட குள்ளமாக வாய்ப்பு இருக்கிறது.

3:56 படபடப்பு அதிகமாகியது.

"டாஸ்மாக், A படம் பார்க்கும் கூட்டம், ஏன் கோயிலில் கூட பலர் குள்ளமாகப் போகிறார்கள்"

"கடலை". கொடுத்தார்.

"எவ்வளவு இடங்கள்... எவ்வளவு இடங்கள்! இது நடக்கும் போது உன்னுடன் இருக்கிறேன்"

3:57.. 58 ஆனது.

"முதலில் இந்த நிகழ்வை செய்தித்தாள்கள், டிவி சேனல் எதுவும் நம்பமாட்டார்கள். அவர்கள் அலுவலகத்திலேயே பலர் குள்ளமாவார்கள். பிறகு அவர்களுக்கே கொஞ்ச கொஞ்சமாகப் புரிய ஆரம்பிக்கும். கெட்டவர்களை அடையாளம் காண்பார்கள். என்னுடைய வடிவமைப்பு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்"

3:59

"செய்தித்தாளுக்கு இது அருமையான கவர் ஸ்டோரி. டிவி சேனல் பற்றி கேட்கவே வேண்டாம். யார் செய்தார்கள் என்று எனக்கும் கடலை சாப்பிடும் உனக்கும் மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியப் போவதில்லை... "

3க்கும் 59க்கும் நடுவில் இரண்டு : புள்ளிகள் கண் சிமிட்டிக்கொண்டு இருக்க.... இன்னும் சில நொடிகளில் அது நிகழப்போகிறது.

4:00 என்று கடிகாரம் காண்பித்த போது அந்த கணத்துக்குக் காத்துக்கொண்டு இருந்தவர் கண்களை மூடிக்கொண்டு
மெதுவாக "இப்பொழுது" என்றார்.

ஜன்னல் பக்கம் சென்று எட்டிப்பார்த்திருந்தால் அது நடந்ததா இல்லையா என்று தெரிந்திருக்கும். அவர் போகவில்லை. அவர் போகத் தேவை இல்லை. அவருக்குத் தெரியும்.

மீண்டும் "கடலை" என்றது கிளி

கடலையுடன் கையை உயர்த்திய போது முழங்கை சரியாக ஒன்றரை அடி சின்னதாக இருந்தது.

-(0)-

ஞாநி எழுதிய நகர்வலம் 8 - சட்னி உணர்த்தும் மாற்றம் என்ற கட்டுரையைப் படித்த போது எனக்கு அதில் பல விஷயங்கள் வியப்பளிக்கவில்லை. சென்னை, திருச்சி போன்ற ஊர்களுக்குச் சென்றால் சந்திக்க வேண்டிய பட்டியலில் சொந்தம், நண்பர்கள் மற்றும் சில ஹோட்டல்களும் அடங்கும்.

சென்னையில் இரண்டு ஹோட்டல்கள் பிடித்தவை.

ஒன்று கோடம்பாக்கம் ஃபை லைட்ஸ் பக்கம் இருக்கும் சின்ன நாயர் ஹோட்டல். பட்டர் பேப்பர் மீது இட்லி, வடை தோசை என்று எதைச் சாப்பிட்டாலும் 20 ரூபாய்க்கு மேல் போகாது. இடம் சுமாராகத் தான் இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது "சார் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று ஒருவர் பேச்சு கொடுத்தார். சொன்னேன்.

எங்கே வேலை செய்கிறீர்கள் என்ற பதிலுக்குப் பின்.

அவர் முகம் மலர்ந்து "சார் நான் இன்ஃபோசிஸ்சில் இருக்கேன்" என்று பையில் இருந்த ஐடி கார்டை எடுத்துக் காண்பித்தார். ஐடி கார்டை போட்டுக்கொண்டு அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது, எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பார்கள்" என்றார்.

அடுத்த ஹோட்டல் 'திருநெல்வேலி சைவா மெஸ்' என்று சூரியா மருத்துவமனை பக்கம் இருக்கும். ஹோட்டல் எல்லாம் மூன்று டேபிள் போட்ட சின்ன இடம். டேபிள் பக்கமே பைக் நிறுத்தியிருப்பார்கள். சினிமாக்காரர்களுக்குப் பரிச்சயமான இடம். "எண்ணை தோசை" அங்கே ஸ்பெஷல்.
நான் போன சமயம் தோசைக்குத் தொட்டுக்கொள்ள கீழே உள்ளவை கிடைத்தது.
"சார் _____ டைரக்டர் பையனுக்குக் கல்யாணம் _____ நடிகர் போகலை.. அவர் தான் இவரை அறிமுகமே செய்தார்".

"நாளைக்கு எவ்வளவு ஜிம் பாய்ஸ் வேணும் ? ராஜபாட்டை படத்துக்கு நான் தான் ஏற்பாடு செய்தேன்...விக்ரம் பைக்கில் போகணும் என்றார். நான் தான் ஹெல்மெட் வாங்கிக் கொடுத்தேன்...."
"அந்தப் படமா... சரியாப் போகாது....முதல் நாள் கூட்டம் வரும்.30 ரூபாய் சீடியில கூடப் போட லாயக்கு இல்லை.... "

ஹோட்டல் நடத்துபவர். "மணி சார் வந்தால் இங்கிருந்து தான் அடை அவியல் பார்சல் போகும்" என்றார்.

( கூடு இதழுக்கு எழுதியது )

Thursday, July 5, 2012

கையெழுத்தே தலைஎழுத்து


கோடை விடுமுறையில் தமிழ் ஆசிரியர் எங்களில் சிலரை கூப்பிட்டு ஊமத்தங்காயை எடுத்து வரச் சொல்லி, கரியோடு அதை அரைத்து கரும் பலகையில் தேய்த்து புதுசாக பாலிஷ் போடச் சொல்லுவார். வீட்டுக்கு பக்கத்தில் முளைத்திருக்கும் இந்த செடியை 'விஷச் செடி' என்று பாட்டி எச்சரித்திருக்கிறாள்.

இதன் காய் முள்ளம்பன்றி போல இருப்பதால் ஆங்கிலத்தில் இதன் பெயர் Thorn apple. பூர்வீகம் கிழக்கு இந்தியா என்கிறார்கள். சிலர் அமெரிக்கா என்கிறார்கள். உன்மத்தம் என்றால் வடமொழியில் சித்தபிரமை என்று அர்த்தம் அதுவே நாளடைவில் ஊமத்தம் என்றாகியிருக்கிறது.

பழைய காலத்தில் 'நான் கடவுள்' மாதிரி ஆட்கள் இதை உட்கொண்டு 'ஒரு மாதிரி' இருந்தார்கள் என்று தெரிகிறது.

Johann jakob von tschudi தன் பயணக் குறிப்பில் இந்தியாவில் ஒருவர் இதை உட்கொண்டதை இவ்வாறு எழுதியிருக்கார்.

"ஒருவர் சாப்பிடுவதை பார்த்தேன். சாப்பிட்ட உடனே பூமியை வெறுத்துப்பார்த்துக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் வாய்க் கோணி, மூக்கு விரிந்து கால் மணி நேரத்தில் கண்கள் சுற்ற ஆரம்பித்தது, வாயில் நுரை தள்ளி உடம்பு தூக்கி போடஆரம்பித்தது. அதே ஆள் மாலை தன்னுடன் இருந்தவர்களுக்கு ஆவிகளுடன் பேசி குறி சொல்லிக்கொண்டு இருந்தார்" என்று விவரித்துள்ளார்.

சிலர் கடவுளுடன் பேசுவதற்கு இந்த காயை உபயோகப்படுத்தினார்கள் சிலர் சூனியக்காரர்கள், பிசாசுடன் பேசுவதற்கு இந்த காயினால் செய்த பானத்தை உபயோகப்படுத்தினார்கள்.

நல்லெண்ணையுடன் இதை சேர்த்து காயத்துக்கு மருந்தாகவும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். திருடர்கள் இதை உணவிலும், பானத்திலும் கலந்து பலரை மயங்கடித்து கொள்ளை அடிக்க உபயோகித்துள்ளார்கள். அந்த காலத்து பிஸ்கெட் திருடர்கள். மனைவிமார்கள் தங்கள் கணவனுக்கு இதை கொடுத்து மயக்கி ஆசை தீர டாச்சர் கொடுத்திருக்கிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய "And Thereby Hangs A Tale" என்ற புத்தகத்தில் நான்குபக்கம் கொண்ட "Blind Date" என்ற கதை சுவாரஸ்யமானது. கொஞ்சம் சுருக்கி மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.

மல்லிகை வாசனையில் முதல் தடயம் இருந்தது. ஒரு பெண்.

அவள் அடுத்த மேஜையில் வந்து உட்கார்ந்த போது நான் என் வழக்கமான மேஜையில் தனியாக உட்கார்ந்து கொண்டி இருந்தேன். நாற்காலி இழுக்கும் சத்தம் கேட்கவில்லை; யாரும் அவளுடன் பேசவில்லை. அவளும் தனியாக தான் வந்திருக்கிறாள்.

காபியை உறிஞ்சினேன். என்னால் உருஞ்சிய கப்பை சாஸரில் சரியாக வைக்க முடியும். நீங்கள் அடுத்த மேஜையில் உட்கார்ந்திருந்தால், நான் ஒரு குருடன் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எவ்வளவு நேரம் உங்களை ஏமாற்ற முடிகிறது என்பது தான் என்னுடைய சவால். குருடன் என்று தெரிந்தவுடன்... தள்ளிப் போய்விடுவார்கள்; சிலர் கிசுகிசுப்பார்கள்; சிலர் கவனமாக இருப்பார்கள்; ஒரு சிலர் தர்மசங்கடத்தில் பேச மாட்டார்கள். ஆமாம், இவை எல்லாவற்றையும் என்னால் உணர முடியும்.

அவளுடன் யாராவது வந்து சேர்ந்துகொள்ளுவார்கள் என்று காத்திருந்தேன். அவள் பேச்சை கேட்டால் அவளைப் பற்றி மேலும் யூகிக்கலாம். பேச்சினால் சிலவற்றை சுலபமாக யூகிக்கலாம்...அடுத்த முறை தொலைப்பேசியில் பேசும் போது மறுமுனையில் கவனியுங்கள் நான் சொல்லுவது புரியும்.

"என்ன சாப்பிடுகிறீர்கள் மேடம்? " என்று கேட்டுக்கொண்டே வந்தான் சார்லி. அந்த ஹோட்டல் வெயிட்டர். அவனுடைய பாஷையிலிரிந்து அவன் உள்ளூர் ஆசாமி என்பதை சுலபமாககண்டுபிடித்துவிடலாம். உயரமான ஆள். எப்படி எனக்கு தெரியும் ? என்னை வழிநடத்தி செல்லும் போது அவன் குரல் சில அங்குலங்கள் மேலேயிருந்து வரும். தற்செயலாக அவன் மிது மோதும் போது உடல் வலிமையை உணர்கிறேன். முப்பது வயது இருக்கலாம். சார்லி சமீபத்தில் அவனது காதலியை பிரிந்துவிட்டான். கேள்வி கேட்டு சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். மற்றவை அவர்களே முன்வந்து சொல்லுவார்கள்.

அடுத்த சவால் இந்த பெண் பற்றி எவ்வளவு யூகிக்க முடிகிறது என்பது தான். என்னை குருடன் என்று கண்டுபிடுக்கும் முன் யூகிக்க வேண்டும். எவ்வளவு சரியாக யூகித்தேன் என்று அவர்கள் போன பின் சார்லியிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுவேன். வழக்கமாக பத்துக்கு ஏழு சரியாக இருக்கும்.

"எனக்கு லெமன் டீ" என்றாள் மெதுவாக.
"வேற ஏதாவது ..?"
"இல்லை.. நன்றி"

முப்பது...முப்பத்தி ஐந்து வயது இருக்கலாம். பணிவானவள்
இவளை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் அவளிடம் பேச வேண்டும்.

அவள் பக்கம் திரும்பி "என்ன டைம் ?" என்று கேட்டேன். நான் கேட்பதற்கும் எதிரே உள்ள தேவாலய கடிகாரம் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.
அவள் சிரித்தாள், ஆனால் மணியோசை நிற்கும் வரை பதில் சொல்லவில்லை.
"அந்த கடிகாரத்தை நம்பமுடியும் என்றால் பத்து மணி" என்றாள் அதே மென்மையான சிரிப்புடன்.
கடிகாரம் உள்ள திசையை பார்த்து "அந்த கடிகாரம் வழக்கமாக சில நிமிடங்கள் வேகமாக ஓடும்" என்றேன்

[ இப்படியாக இவர்கள் பேச்சு நீள்கிறது.... ]

அவள் தேநீர் உருஞ்சும் போது. இன்று பத்துக்கு எவ்வளவு யூகங்கள் சரியாக இருக்கும் என்று எண்ணினேன். நிச்சயம் கலை ஆர்வம் உள்ளவள். லண்டனில் வசிக்கலாம்..

கடைசியாக தேநீரை உருஞ்சும் சத்தம் கேட்டது. சத்தத்தை வைத்து அதைக் கூட எனக்கு கண்டுபிடிக்க முடியும்.

சார்லி வந்தவுடன் பில் கேட்டாள். அவள் பணம் கொடுத்தவுடன்
சார்லி "நன்றி" என்றான் உணர்ச்சியுடன். நல்ல டிப்ஸ் கிடைத்திருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

"குட்பை" என்று அவளது குரல் என்னை நோக்கி வந்தது "உங்களுடன் பேசியது மகிழ்ச்சி" என்றாள்.
நான் எழுந்து நின்று வழியனுப்பினேன்

"நன்றி" என்னை கடந்து சென்ற பிறகு. சார்லியிடம் "இனிய மனிதர்" என்று என்னை பற்றி சொல்லுவது என் காதில் விழிந்தது. எனக்கு நன்றாக காது கேட்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சார்லி வருவதற்காக காத்திருந்தேன்.
"வேறு ஏதாவது வேண்டுமா ?" என்று கேட்டதில் கிண்டல் இருந்தது.
"நிச்சயமாக"
என் பக்கம் உட்கார்ந்திருந்த அவளை பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள வேண்டும். தொடக்கமாக "அவள் உயரமா ? குட்டையா ? சிகப்பா கருப்பா ? ஒல்லியா ? அழகா ? அவள் .....?

சார்லி சிரிக்க ஆரம்பித்தான்.

"இதில் என்ன வேடிக்கை ?" என்றேன் கொஞ்சம் கோபமாக.

"உங்களைப் பற்றி அவளும் இதே கேள்விகளை தான் என்னிடம் கேட்டாள்"

சிறுகதையை படமாக எடுக்கும் போது அதில் உள்ள சஸ்பென்ஸையும் அப்படியே காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். பல எழுத்தாளர்களுடைய கதைகளை சினிமாவில் சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணம். இதே சிறுகதையை youtubeல் இங்கே

http://www.youtube.com/watch?v=k-fy253VO5E

பார்த்தேன். தவறுகளை நீங்களே வரிசை படுத்தலாம்.

குறும் படம் எடுக்கும் 'குறும்பட ஆர்வலர்கள்' இதை முயற்சி செய்து பார்க்கலாம். அட்வைஸ் செய்ய நான் ரெடி.

----------------------------------------------------------------------------------------------------------
ஒருவரின் கையெழுத்தை வைத்து எவ்வளவு யூகிக்கலாம் ?
கையெழுத்தைக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை கணித்துத் தருகிறோம் என்று பணக்காரத்தனமான நோட்டிஸ் ஒன்றை நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் காம்பிளக்ஸில் ஓட்டியிருந்தார்கள்.

கையெழுத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் ஒருவரின் குணாதியசங்களை கண்டுபிடிக்கலாம் என்று இன்றும் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். கணினி வந்த பிறகு கையெழுத்து என்பது கடன் அட்டை தேய்த்தவுடன் அந்த இயந்திரம் துப்பும் சின்ன சீட்டில் கையெழுத்து போடுவதில் நின்றுவிடுகிறது.

சாவியில் சுஜாதாவின் கேள்வி பதில் ஒன்று:

கேள்வி: உங்களுடைய கதைகளில் வருவது போல் என்னுடைய handwritingகை வைத்து என்னுடைய Characterஐ உங்களால் கூற முடியுமா ? (ஜெயா கோயம்புத்தூர்)

பதில்: இடப்பக்கம் சாய்ந்த கையெழுத்து: பெண்மை. வலப்பக்கம் மேல் நோக்கி போகும் போக்கு ஆர்வம். இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள இடைவெளி செலவாளி. ஒற்றெழுத்தின் மேல் ஆணி அடித்த புள்ளிகள்: கூர்மை, கவனம்.
( சாவி 22-3-1981)

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கையெழுத்து ஆய்வு(Graphology) பற்றிய படிப்பை பாடமாகவே படிக்கலாம். எழுதும் போது நம்முடைய ஈகோவிற்கும், நமது உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் நமது கையெழுத்து மாறுகிறது என்று சொல்லுகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் 'ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங்'(Running Hand Writing) சொல்லிக்கொடுக்கும் போது ஒரே மாதிரி கற்றுக்கொடுத்தாலும், எல்லோருக்கும் கையெழுத்து தனித்துவமாக அமைந்துவிடுவது தான் ஆச்சரியம்.

ஆண் கையெழுத்து, பெண் கையெழுத்து எது என்று என்னால் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். தமிழ் வகுப்பில் என் நண்பன் "ஆங்கிலத்தில் இருப்பது போல ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங் ஏன் தமிழில் இல்லை?" என்று ஆசிரியரிடம் கேட்ட கேள்விக்கு தான் இன்று வரை பதில் இல்லை!.

( கூடு இதழுக்கு எழுதியது, நன்றி )

Saturday, May 19, 2012

சுஜாதாவின் நேர்காணல்கள்

சுஜாதா நேர்காணல்கள் என்ற புத்தகத்தை கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆவல். சுஜாதாவின் இரண்டு நேர்காணல்கள் மிக முக்கியமானது. ஒன்று
"சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததைப் புரிந்துக்கொள்ள முடிகிறது"
என்று தீராநதியிலும், இன்னொன்று படிகளில் வந்தது. இதை தவிர அவருடைய நேர்காணல்கள் பல பத்திரிக்கையில் வந்திருக்கிறது. சுட்டி விகடனில் கூட வந்திருக்கிறது.

1996-97ல் தமிழ் டாட் நெட் என்ற இணைய குழுமம் பாலா தலமையில் சுறுசுறுப்பாக இயங்கியது. இன்றும் அதில் இருந்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். 1997 மார்ச் மாதம் குழுமம் சார்பாக சுஜாதாவின் பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். குழுமத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், அதை நான் தொகுத்து சுஜாதாவிடம் பதில் பெற வேண்டும். அவ்வளவு தான்.

சுஜாதாவுடன் எனக்கு அப்போது பரிட்சயம் ஏற்பட்ட புதுசு. அவரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், கேட்டுவிடலாம் என்று கேட்டேன். உடனே சரி என்று ஒப்புக்கொண்டு விட்டார். யுனிக்கோட் எழுத்துரு இல்லாத காலம். அதனால் தமிழில் மெயில் அனுப்பிவிட்டு "சார் எழுத்தெல்லாம் தெரிகிறதா?" என்று கேட்க வேண்டும். இந்த பிரச்சனையினால் "கேள்விகளை ஒரு பிரிண்டவுட் எடுத்து தாங்க பதில் எழுதி தருகிறேன்" என்றார்.

கொடுக்க அவர் வீட்டுக்கு சென்ற போது, ,மும்பைக்கோ டெல்லிக்கோ கிளம்பிக்கொண்டு இருந்தார். "பிரிண்டவுட் இருக்கிறதா ? சரி பிளைட்டில் டைம் கிடைக்கும் பதில் எழுதுகிறேன்" என்று பெட்டியில் வைத்துக்கொண்டார்.

ஒரு வாரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது, வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். வாங்கிக்கொண்டேன். "ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்" என்றார். மடித்து வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். "ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்" என்றார் ஆனால் அவர் எழுதியது எதுவுமே புரியவில்லை. என் அப்பாவிடம் கொடுத்து டிகோட் செய்ய சொன்னேன். அவர் சர்வ சாதாரணமாக அதை டிகோட் செய்து தந்தார்.

சுஜாதா கைபட எழுதியதும் என் அப்பா எனக்கு புரியும் படி எழுதிய கொடுத்ததையும் வைத்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் நல்ல வேளை அவைகளை தூக்கி போடவில்லை. ! வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முழு பேட்டியும் இங்கே பதிவு செய்ய பார்க்கிறேன்.

Saturday, March 31, 2012

நம் செயல்களுக்குப் பொறுப்பு யார்? - எஸ்.ராஜகோபாலன்.

சுஜாதாவின் தம்பி திரு.எஸ்.ராஜகோபால் சுஜாதா பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்.

சென்னையில் சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி, ராகேஷ் (32) என்னும் மாணவரை வர்கீஸ் (26) என்னும் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, "கடவுள்தான் என்னைக் கொலை செய்யச் சொன்னார்; ஏன் என்று கடவுளிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று போலீஸிடம் கூறினார்
(தினமலர் 7-12-2011)

நாம் எல்லோரும் இப்படிச் சொல்பவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவிடுவோம். ஆனால் அடிப்படைக் கேள்வியான, 'நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்பா அல்லது எல்லோரையும் இயக்கும் கடவுள் பொறுப்பா?' என்னும் தத்துவ ஞானக் கேள்விக்கு விடை காண்பதில் சிக்கல் உள்ளது.

என் அண்ணன் ரங்கராஜனும் (சுஜாதா) நானும் ஆறு வருடங்களுக்கு முன் பிரம்ம சூத்திரங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும்போது இதுபற்றித் தீவிரமாக சிந்தித்தோம்; படித்தோம்.

பிரம்ம சூத்திரம் (2.1.34) 'பாரபட்சமும் கருணையின்மையும் பிரம்மத்திற்கு இல்லை, நம் முதல் முயற்சியை எதிர்பார்த்து இருப்பதால்' என்று கூறும்-


'வைஷம்யே நைர்குண்யே ந, ஸா பேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி'


எனும் சூத்திரத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, 'நாம் செய்யும் செயல்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு' எனும் திடமான முடிவுக்கு வந்தோம். அந்த இடத்தில் நாங்கள் எழுதியதைக் கீழே தருகிறேன்.


"இது முக்கியமான சூத்திரம். படைப்பு பிரம்மத்தின் விளையாட்டு என்று சொன்னால், அதில் ஏற்றதாழ்வுகள், ஏழை-பணக்காரன், சுக துக்கம் ஏன்? பிரம்மம் நல்ல குணங்களின் இருப்பிடம் என்றால், நம் எல்லாச் செயல்களுக்கும் பிரம்மம் முழுப் பொறுப்பு என்றால், அதற்குப் பாரபட்சமும் கருணையின்மையும் குணங்களாகி விடும். அது தவறு என்கிறது இந்தச் சூத்திரம். இந்தப் பரமாத்மா ஜீவர்களைப் 'படைக்கும்' போது, அவர்களின் பாப புண்யங்களைப் பார்த்து அதற்கேற்ப படைக்கிறது. பிரம்மம் நம் முயற்சியை எதிர்பார்த்தே நம்மைச் செயல்படுத்துகிறது.

முதல் முயற்சி அல்லது பிரதம பிரயத்தனம்- நாம் நல்லதோ தீயதோ செய்ய எடுத்துவைக்கும் முதல் முயற்சியானது நம்மை அந்த முதல் அடியை எடுக்க வைக்கிறது. இதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது (Free Will)." -- (பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்- பக்கம் 85.)


சங்கரர் இந்தச் சூத்திரத்தை விளக்கும்போது பிரம்மத்தை மழையோடு ஒப்பிடுகிறார். "விதையிலிருந்து செடி வெளிவருவதற்குக் காரணம் மழை ஆனாலும் எந்தவிதமான செடி (மா, பலா, வேம்பு..) வெளிவருகிறது என்பதை விதையில் புதைந்திருக்கும் குணங்களே தீர்மானிக்கின்றன; அதற்கு மழை பொறுப்பில்லை" என்கிறார்.

இதே போல கடவுளின் அருள் சிலர்மேல் காரணமின்றி (நிர்ஹேதுகமாக) விழுகிறது என்ற வைணவ நம்பிக்கை பற்றி விவாதித்தோம். என் அண்ணன், இந்த நம்பிக்கை, கடவுளை நம் செயல்களில் (ஆகையால் நம்மேல்) விருப்பு வெறுப்பற்றவராக (உதாசீனராக) ஆக்கிவிடுகிறது என்றார்.

நான் "கடவுளை, காரண காரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, கேட்பாரற்ற சுதந்திரராக வேதங்கள் வர்ணிக்கும்போது, அவருடைய கிருபையையும் நிர்ஹேதுகமாகவே கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்றேன்.

தீவிர சிந்தனைக்குப் பிறகு, "அப்படித்தான் கொள்ளவேண்டும், இல்லாவிடில் முரண்பாடு ஏற்படுகிறது. சர்வ சுதந்திரத்வமும் காரணத்தோடு கிருபை செய்யவேண்டிய கட்டாயமும் oxymoronic status. ஆனால் கடவுள் எதிர்மறைகளின் கூட்டம். கருப்பும் வெளுப்பும் அவரே. ஆகவே அவருடைய அருளின் (கிருமையின்) நிலைப்பாடு, என்றும் விடைகாண முடியாத புதிரானது" என்றார்.

நாங்கள் இதுபற்றி விவாதித்த அந்த நாள்கள் இன்னும் என்னை மகிழ வைக்கின்றன. அவரை அண்ணனாகப் பெற்றது நான் செய்த புண்ணிய பலன்- அதுவும் கடவுளின் நிர்ஹேதுகக் கிருபையே!

ரங்கராஜன், ஒரு 'வகைப்படுத்த' முடியாத எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, விஞ்ஞானம், பொது அறிவு, புதுக்கவிதை, பழங்கவிதை, திரைக்கதை போன்ற எல்லா வடிவத்திலும் ஆர்வமுள்ள எழுத்தாளர். கடவுள், ஆன்மிகம் இவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கஷ்டமான சிந்தனைத் தொடர்களைப் புரிந்துகொண்டு, அன்றாடம் பழகும் தமிழில் எளிமைப்படுத்தி எழுதுவது அவருக்குக் கைவந்த கலை.

ரங்கராஜன் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள், தனது 73-ஆவது வயதில் மறைந்தார். அவர் எழுதியவை மறையாது.

Monday, February 27, 2012

சுஜாதாவிற்கு வந்த ஃபோன் கால்

13.4.2007 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து)

"....There will be a turning point ... கண்ட்ரோலராக இருந்த போது எனக்கு பல்ராம் என்ற ஒருவர் 'ஏம்பா இங்கே உட்கார்ந்து மன்றாடிக்கொண்டு இருக்கே.. இந்த இன்ஞ்னியரிங் சர்விஸ் எக்ஸாம் வந்திருக்கு. அதை ஏன் நீ எழுத கூடாது.. இன்று கூட அந்த விளம்பரம் வந்திருக்கு பார்த்தியா? என்றார். நான் ஹிந்துவில் ஸ்போர்ட்ஸ் தவிர வேற ஒன்றும் பார்க்கறதில்லை என்றேன். விளம்பரம் வந்திருக்கு கடைசி தேதி இன்று தான் என்று நினைக்கிறேன்... நீ இன்ஞ்சினியரிங் படிச்சிருக்கே எதுக்கு டிராஃபிக் கண்டரோல் பண்ணிக்கொண்டு இருக்கே என்றார்.

I was sort of drifting around.. not doing much.. and the job was a little boring... this was just before marriage. it was a casual phone call. அதற்கு அப்பறம் UPSC விளம்பரம் வாங்கிக்கொண்டு இன்ஞ்சினியரிங் சர்விஸிஸ் தேர்வுக்கு அப்ளை செய்தேன். ஆகஸ்ட் 1960 என்று நினைக்கிறேன். அது தான் முதல் எலக்டரானிக்ஸில் இன்ஞ்சியரிங் சர்வீஸ் எக்ஸாம் அதற்கு முன்னாடி இன்ஞ்னியரிங் சர்வீஸ் எக்ஸாம் General தான்.

இந்த(எலக்டரானிக்ஸ்) எக்ஸாம் ஆல் இந்தியா ரேடியோ, சிவில் ஏவியேஷன் போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம். எக்ஸாம் எழுதுவதற்குத் திரும்ப டெக்னிகல் புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். யுனிவர்சிட்டி லைப்பரியில்... பிறகு ஹைதராபாத் டிரான்ஸ்ஃபர் ஆனேன். அங்கே இருக்கும் போது ரிசல்ட் வந்து... ஒரு வருஷம் கழித்து அப்பாயின்மெண்ட் கிடைத்தது - டெக்னிகல் ஆபிஸர் சிவில் ஏவியேஷனில். அங்கே தான் என் Career முழுமையாக மாறிவிட்டது. டெக்னிகல் ஆபிஸராக இருந்ததால் நான் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆனேன். Technology content in my job was much much higher. I had to install navigation equipment. அந்த சமயம்(70'ல்) பாரத் எலக்டரானிக்ஸ் விளம்பரம் வந்தது.. அங்கே போனேன். அங்கேயும் முழுவதும் டெக்னிகல் சமாச்சாரம். Microprocessor... R&D instumention... voting machine.. இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது ஒரு ஃபோன் காலினால்!.

நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். அந்த பல்ராம் என்னை கூப்பிடாமல் இருந்திருந்தால் ... அதுவும் விண்ணபிக்கக் கடைசி நாள் அது... Opportunities in life arrive unwittingly... அதாவது அறிவிக்காமல் வருகிறது.. ஏதோ ஒரு விதத்தில் இதை ஒரு தெய்வாதீனம் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது தான் உங்களுக்கு இது புரிகிறது. அந்த சமயத்தில் புரியாது. சாதாரண நிகழ்வு போல இருக்கும். . இதைப் பற்றி எழுதியிருக்கேனா என்று தெரியவில்லை...... அதை நீங்களே எழுதிவிடுங்கள்.. Opportunity எப்போது வரும் என்று நமக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை....நிறைய பேருடைய வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்திருக்கும்.... உங்க வாழ்க்கையில்... கூட யோசித்து பார்த்தால் ஏதாவது இந்த மாதிரி நடந்திருக்கும்.

போன வருட பதிவு: ஜாகரண்ட பூக்கள்

Sunday, January 1, 2012

நம்பி இருந்த வீடு


பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது.  திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.