Skip to main content

அத்திப் பழமும் ஆதாம் ஏவாளும்

வீட்டுப்பக்கம் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. நடைப்பயிற்சியின் போது அதிலிருந்து விழும் பழங்களை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே கருப்பாக சின்ன பூச்சிகள் இருக்கும். பறித்து உடைத்தாலும் இருக்கும். அத்திப்பழம் பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் படித்த போது விடை கிடைத்தது.

'அத்தி பூத்தாற்போல்' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் அத்தி மரத்தில் எப்போதும் காய்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். சென்னை தி.நகர் பாலாஜி பவன் பின் புறம் இதே போல ஒரு அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறேன். முன்பு நாட்டு மருந்துக்கடையில் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்த அத்திப்பழம் இப்போது எல்லா கடைகளிலும் ஆஞ்சநேயர் வடைமாலை மாதிரி பதப்படுத்தப்பட்ட 'அஞ்சீர்' என்று கிடைக்கிறது (அஞ்சீர் என்றால் 'தேன் அத்தி' என்று பொருள்.).

எழுநூறுக்கும் மேற்பட்ட அத்தி மரங்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்டு பிஞ்சு போல இருக்கும். மேற்பகுதியில் சின்ன துவாரத்தைக் காணலாம்.

இனச் சேர்க்கைக்குப் பிறகு ஆண் குளவிகள் இறந்துவிடுகிறது, மகரந்தத்தை சுமந்து வரும் பெண் குளவிகள் அந்த சின்ன துவாரத்தின் உள்ளே நுழைகிறது. மகரந்தச் சேர்க்கை நிகழும் போது அவைகள் உள்ளே முட்டைகளை இட்டுவிட்டு இறந்துவிடுகிறது. முட்டைகளிலிருந்து புழுக்கள் தோன்றி பிறகு அவை குளவிகளாகத் தோன்றுகிறது. இவை வளரும் போது அத்தி விதையை உண்டு வளர்கின்றன. அத்திப் பழம், ஆலம் பழங்களை அடுத்த முறை உடைத்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சிகள் இருப்பதே இதனால் தான். அடுத்த ஒற்றுமை இதன் இலைகளைப் பறித்தால் பால் சொட்டுவது.

இந்த குளவிகளுக்குப் பிறக்கும் வீடும் சமாதியும் இந்த அத்திப் பழம் தான். குளவிகள் இல்லை என்றால் அத்தி மரம் இல்லை; அத்தி மரம் இல்லை என்றால் குளவிகள் இல்லை. இயற்கை!

ஆதாம் பாவம் செய்த பிறகு தாங்கள் நிர்வாணமாக இருப்பதை அறிந்து அத்தி இலைகளை உடையாக்கினார்கள் என்று பைபிள் சொல்லுகிறது. பல பழைய ஓவியங்களில் ஆதாம் ஏவாளை நிர்வாணமாக வரைந்த ஓவியர்கள் அத்தி இலைகளை அதன் மீது வரைந்து நிர்வாணத்தை மறைத்து 'U' சர்டிபிக்கேட் வாங்கினார்கள். ஆதாம் ஏவாள் உடுத்திய அத்தி இலைகள் நிச்சயம் ஓரிரு நாட்களில் காய்ந்துவிழுந்திருக்கும் ஆனால் ஓவியர்கள் வரைந்த அத்தி இலைகள் இன்னும் காயாமல் இருக்கிறது!. உலகின் முதல் மரம் அத்தி மரம் தான் என்று 'பிரிட்டானிகா' என்சைக்ளோபீடியா சொல்வது இதனால் கூட இருக்கலாம்.

-(0)-

பிரைஸ் டே எழுதிய ஃபோர் ஓ கிளாக் ( Four O' Clock by Price Day ) என்ற சிறுகதையை படித்த போது சுஜாதா எழுதிய தேவன் வருகை கதை ஞாபகத்துக்கு வந்தது. சஸ்பென்ஸ் கதை வகையைச் சார்ந்த விஞ்ஞான சிறுகதை. என்ன செய்யப் போகிறார் என்பதை விட எப்பொழுது செய்ய போகிறார் என்பது தான் பிரச்சனை.

இந்த வாரம் பிரைஸ் டே எழுதிய கதையை தமிழ்ப்படுத்தியிருக்கேன். நிச்சயம் மூலக் கதையை கூகிளில் தேடி படித்துப்பாருங்கள்.

நான்கு மணி

டேபிள் மீது இருந்த டிஜிட்டல் கடிகாரம் 3:47 என்றது. சரியாக 4 மணிக்கு அது நிகழப்போகிறது.

"நிறைய யோசித்தாகிவிட்டது, வேற வழி இல்லை"என்றார் கடிகாரத்திலிருந்து கண்ணை எடுக்காமல். "பல முறை விவாதித்து விட்டோம் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார் தீர்மானமாக.

தலைக்கு மேலே இருந்த கூட்டிலிருந்து எட்டிப்பார்த்த கிளி "கடலை" என்றது. அதன் கண்களிலும் கால்களிலும் முதுமை தெரிந்தது.

கடிகாரத்திலிருந்து கண்ணை எடுக்காமல், மேஜை மீது இருந்த கிண்ணத்திலிருந்து ஒரு வேர்க்கடலையை எடுத்து கையை உயர்த்திய போது கிளி அதைக் கவ்விக்கொண்டது. காலுக்கு அடியில் வைத்து மூக்கால் உடைத்துச் சாப்பிட்ட போது அதன் சத்தம் ஜன்னலுக்கு வெளியே வண்டிகளின் ஹார்ன் சத்தம், ஸ்கூல் விட்ட குழந்தைகள் போடும் கூச்சல், பிளேன் போகும் சத்தத்துடன் கலந்து கேட்டது.

கடிகாரம் 3:49 என்றது.

"உண்மை தான்... விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள்... எதுவும் இருக்கக் கூடாது... வெளியாளாக எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்"

3:50க்கு பதட்டம் அவர் முகத்தில் தெரிந்தது.

"இன்னும் பத்து நிமிஷத்தில் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் உலகத்தில் உள்ள எல்லா கெட்டவர்களையும் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் உயரத்தில் பாதியாகிவிடுவார்கள்!"

பிக்பாக்கெட் அடிப்பவர்கள், திருடர்கள், கொலை செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள், கடத்தல்காரர்கள், பெண்களை கிண்டல் செய்தவர்கள், சிகரெட் குடித்தவர்கள், வாய்தா வாங்கியவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள்.... நல்லவர்கள் போல சினிமாவில் ஹீரோவாக நடித்தவர்கள்... எல்லோரும் ... விதி ஒன்று தான்... விதிகளை மீறியவர்கள்.. அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்"

கிளி "கடலை" என்று கேட்டு ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

"உனக்கு பிடிக்கவில்லை என்று எனக்கு தெரியும். வேறு வழி இல்லை. இரவு பகல் என்று நிறைய யோசித்துப் பார்த்துவிட்டேன். கெட்டவர்களை அடையாளம் காட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்"

"போன வாரம் செய்தித்தாளில் நடந்த விபத்தை படங்களுடன் போட்டிருந்ததைப் பார்த்தபோது அதை தடுக்க வண்டிகளின் சக்கரங்களை சதுரமாக மாத்தலாமா என்று கூட யோசித்ததுண்டு"

"யார் கெட்டவர்கள் என்று எப்படி தீர்மானித்தேன் என்று கேட்கலாம். ஒரே விதி தான். கெட்டவர்களின் செயலைப் பார்த்து ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தவர்கள் கூடக் கெட்டவர்கள் தான் என்பது என் விதி"

"முதலில் அவர்கள் நெற்றியில் ஊதா நிறத்தில் ஒரு குறி போடலாம் என்று தான் நினைத்தேன் பிறகு இன்றைய டாட்டூ கலாசாரத்தில் அதையே ஃபேஷனாக கருதக்கூடும் என்று விட்டுவிட்டேன். இனம் இனத்தோட சேரும். கெட்டவர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து உலகை மேலும் அழிப்பார்கள்"

"உயரத்தைக் கொண்டு எதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்த உடன். பெரிதாக்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவே அவர்களுக்கு மேலும் பலத்தைக் கொடுக்கும். வன்முறை அதிகமாக ஆகும். எனக்கு வன்முறை பிடிக்காது. உயரத்தை பாதியாக்கினால் ? பல விஷயங்களை அவர்கள் செய்ய முடியாது. பஸ் படிக்கட்டில் கூட ஏற முடியாது. சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது கண்டுபிடிப்பார்கள். இதற்கும் ஏதாவது கண்டுபிடிப்பார்கள். ஆனால் அதற்கு கொஞ்சம் நாளாகும். தங்களுடைய சட்டை கால் வரை வரும். காற்சட்டை கழண்டு விழும். எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கும்" என்று புன்னகைத்தார்.

மணி சரியாக 3:55 என்று காட்டியது. "கடலை" என்றது கிளி.

கண்ணைக் கடிகாரத்திலிருந்து எடுக்காமல், கடலை ஒன்றை பொறுக்கிக் கொடுத்தார்.

"நீதிமன்றத்தில் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. விசாரணை நடக்கும் போது குற்றவாளியா என்று தீர்மானிக்கும் முன் சரியாக நான்கு மணிக்கு குற்றவாளி என்றால் குள்ளமாகிவிடுவான். ஏன் நீதிபதி கூட குள்ளமாக வாய்ப்பு இருக்கிறது.

3:56 படபடப்பு அதிகமாகியது.

"டாஸ்மாக், A படம் பார்க்கும் கூட்டம், ஏன் கோயிலில் கூட பலர் குள்ளமாகப் போகிறார்கள்"

"கடலை". கொடுத்தார்.

"எவ்வளவு இடங்கள்... எவ்வளவு இடங்கள்! இது நடக்கும் போது உன்னுடன் இருக்கிறேன்"

3:57.. 58 ஆனது.

"முதலில் இந்த நிகழ்வை செய்தித்தாள்கள், டிவி சேனல் எதுவும் நம்பமாட்டார்கள். அவர்கள் அலுவலகத்திலேயே பலர் குள்ளமாவார்கள். பிறகு அவர்களுக்கே கொஞ்ச கொஞ்சமாகப் புரிய ஆரம்பிக்கும். கெட்டவர்களை அடையாளம் காண்பார்கள். என்னுடைய வடிவமைப்பு அவர்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்"

3:59

"செய்தித்தாளுக்கு இது அருமையான கவர் ஸ்டோரி. டிவி சேனல் பற்றி கேட்கவே வேண்டாம். யார் செய்தார்கள் என்று எனக்கும் கடலை சாப்பிடும் உனக்கும் மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியப் போவதில்லை... "

3க்கும் 59க்கும் நடுவில் இரண்டு : புள்ளிகள் கண் சிமிட்டிக்கொண்டு இருக்க.... இன்னும் சில நொடிகளில் அது நிகழப்போகிறது.

4:00 என்று கடிகாரம் காண்பித்த போது அந்த கணத்துக்குக் காத்துக்கொண்டு இருந்தவர் கண்களை மூடிக்கொண்டு மெதுவாக "இப்பொழுது" என்றார்.

ஜன்னல் பக்கம் சென்று எட்டிப்பார்த்திருந்தால் அது நடந்ததா இல்லையா என்று தெரிந்திருக்கும். அவர் போகவில்லை. அவர் போகத் தேவை இல்லை. அவருக்குத் தெரியும்.

மீண்டும் "கடலை" என்றது கிளி

கடலையுடன் கையை உயர்த்திய போது முழங்கை சரியாக ஒன்றரை அடி சின்னதாக இருந்தது.

-(0)-

ஞாநி எழுதிய நகர்வலம் 8 - சட்னி உணர்த்தும் மாற்றம் என்ற கட்டுரையைப் படித்த போது எனக்கு அதில் பல விஷயங்கள் வியப்பளிக்கவில்லை. சென்னை, திருச்சி போன்ற ஊர்களுக்குச் சென்றால் சந்திக்க வேண்டிய பட்டியலில் சொந்தம், நண்பர்கள் மற்றும் சில ஹோட்டல்களும் அடங்கும்.

சென்னையில் இரண்டு ஹோட்டல்கள் பிடித்தவை. ஒன்று கோடம்பாக்கம் ஃபை லைட்ஸ் பக்கம் இருக்கும் சின்ன நாயர் ஹோட்டல். பட்டர் பேப்பர் மீது இட்லி, வடை தோசை என்று எதைச் சாப்பிட்டாலும் 20 ரூபாய்க்கு மேல் போகாது. இடம் சுமாராகத் தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது "சார் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று ஒருவர் பேச்சு கொடுத்தார். சொன்னேன். எங்கே வேலை செய்கிறீர்கள் என்ற பதிலுக்குப் பின். அவர் முகம் மலர்ந்து "சார் நான் இன்ஃபோசிஸ்சில் இருக்கேன்" என்று பையில் இருந்த ஐடி கார்டை எடுத்துக் காண்பித்தார். ஐடி கார்டை போட்டுக்கொண்டு அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது, எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பார்கள்" என்றார்.

அடுத்த ஹோட்டல் 'திருநெல்வேலி சைவா மெஸ்' என்று சூரியா மருத்துவமனை பக்கம் இருக்கும். ஹோட்டல் எல்லாம் மூன்று டேபிள் போட்ட சின்ன இடம். டேபிள் பக்கமே பைக் நிறுத்தியிருப்பார்கள். சினிமாக்காரர்களுக்குப் பரிச்சயமான இடம். "எண்ணை தோசை" அங்கே ஸ்பெஷல். நான் போன சமயம் தோசைக்குத் தொட்டுக்கொள்ள கீழே உள்ளவை கிடைத்தது. "சார் _____ டைரக்டர் பையனுக்குக் கல்யாணம் _____ நடிகர் போகலை.. அவர் தான் இவரை அறிமுகமே செய்தார்". "நாளைக்கு எவ்வளவு ஜிம் பாய்ஸ் வேணும் ? ராஜபாட்டை படத்துக்கு நான் தான் ஏற்பாடு செய்தேன்...விக்ரம் பைக்கில் போகணும் என்றார். நான் தான் ஹெல்மெட் வாங்கிக் கொடுத்தேன்...." "அந்தப் படமா... சரியாப் போகாது....முதல் நாள் கூட்டம் வரும்.30 ரூபாய் சீடியில கூடப் போட லாயக்கு இல்லை.... " ஹோட்டல் நடத்துபவர். "மணி சார் வந்தால் இங்கிருந்து தான் அடை அவியல் பார்சல் போகும்" என்றார்.

( கூடு இதழுக்கு எழுதியது )

Comments

  1. மொழிபெயர்த்த கதை அருமை. ஒருவாறு யூகிக்க முடிந்தது - அவர் குள்ளமாவாரென.

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. 4 மணி - கதாசிரியர் பெயரை நீங்கள் சொல்லவில்லையானால், சுஜாதா என்றே ஊகித்திருப்பேன்!
    // சஸ்பென்ஸ் கதை வகையைச் சார்ந்த விஞ்ஞான சிறுகதை. என்ன செய்யப் போகிறார் என்பதை விட எப்பொழுது செய்ய போகிறார் என்பது தான் பிரச்சனை// சரியாகச் சொன்னீர்கள்! - ஜெ.

    ReplyDelete

Post a Comment