Skip to main content

கையெழுத்தே தலைஎழுத்து

கோடை விடுமுறையில் தமிழ் ஆசிரியர் எங்களில் சிலரை கூப்பிட்டு ஊமத்தங்காயை எடுத்து வரச் சொல்லி, கரியோடு அதை அரைத்து கரும் பலகையில் தேய்த்து புதுசாக பாலிஷ் போடச் சொல்லுவார். வீட்டுக்கு பக்கத்தில் முளைத்திருக்கும் இந்த செடியை 'விஷச் செடி' என்று பாட்டி எச்சரித்திருக்கிறாள்.

இதன் காய் முள்ளம்பன்றி போல இருப்பதால் ஆங்கிலத்தில் இதன் பெயர் Thorn apple. பூர்வீகம் கிழக்கு இந்தியா என்கிறார்கள். சிலர் அமெரிக்கா என்கிறார்கள். உன்மத்தம் என்றால் வடமொழியில் சித்தபிரமை என்று அர்த்தம் அதுவே நாளடைவில் ஊமத்தம் என்றாகியிருக்கிறது.

பழைய காலத்தில் 'நான் கடவுள்' மாதிரி ஆட்கள் இதை உட்கொண்டு 'ஒரு மாதிரி' இருந்தார்கள் என்று தெரிகிறது.

Johann jakob von tschudi தன் பயணக் குறிப்பில் இந்தியாவில் ஒருவர் இதை உட்கொண்டதை இவ்வாறு எழுதியிருக்கார்.

"ஒருவர் சாப்பிடுவதை பார்த்தேன். சாப்பிட்ட உடனே பூமியை வெறுத்துப்பார்த்துக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் வாய்க் கோணி, மூக்கு விரிந்து கால் மணி நேரத்தில் கண்கள் சுற்ற ஆரம்பித்தது, வாயில் நுரை தள்ளி உடம்பு தூக்கி போடஆரம்பித்தது. அதே ஆள் மாலை தன்னுடன் இருந்தவர்களுக்கு ஆவிகளுடன் பேசி குறி சொல்லிக்கொண்டு இருந்தார்" என்று விவரித்துள்ளார்.

சிலர் கடவுளுடன் பேசுவதற்கு இந்த காயை உபயோகப்படுத்தினார்கள் சிலர் சூனியக்காரர்கள், பிசாசுடன் பேசுவதற்கு இந்த காயினால் செய்த பானத்தை உபயோகப்படுத்தினார்கள்.

நல்லெண்ணையுடன் இதை சேர்த்து காயத்துக்கு மருந்தாகவும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். திருடர்கள் இதை உணவிலும், பானத்திலும் கலந்து பலரை மயங்கடித்து கொள்ளை அடிக்க உபயோகித்துள்ளார்கள். அந்த காலத்து பிஸ்கெட் திருடர்கள். மனைவிமார்கள் தங்கள் கணவனுக்கு இதை கொடுத்து மயக்கி ஆசை தீர டாச்சர் கொடுத்திருக்கிறார்கள். ---------------------------------------------------------------------------------------------------------- ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய "And Thereby Hangs A Tale" என்ற புத்தகத்தில் நான்குபக்கம் கொண்ட "Blind Date" என்ற கதை சுவாரஸ்யமானது. கொஞ்சம் சுருக்கி மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.

மல்லிகை வாசனையில் முதல் தடயம் இருந்தது. ஒரு பெண்.

அவள் அடுத்த மேஜையில் வந்து உட்கார்ந்த போது நான் என் வழக்கமான மேஜையில் தனியாக உட்கார்ந்து கொண்டி இருந்தேன். நாற்காலி இழுக்கும் சத்தம் கேட்கவில்லை; யாரும் அவளுடன் பேசவில்லை. அவளும் தனியாக தான் வந்திருக்கிறாள்.

காபியை உறிஞ்சினேன். என்னால் உருஞ்சிய கப்பை சாஸரில் சரியாக வைக்க முடியும். நீங்கள் அடுத்த மேஜையில் உட்கார்ந்திருந்தால், நான் ஒரு குருடன் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எவ்வளவு நேரம் உங்களை ஏமாற்ற முடிகிறது என்பது தான் என்னுடைய சவால். குருடன் என்று தெரிந்தவுடன்... தள்ளிப் போய்விடுவார்கள்; சிலர் கிசுகிசுப்பார்கள்; சிலர் கவனமாக இருப்பார்கள்; ஒரு சிலர் தர்மசங்கடத்தில் பேச மாட்டார்கள். ஆமாம், இவை எல்லாவற்றையும் என்னால் உணர முடியும்.

அவளுடன் யாராவது வந்து சேர்ந்துகொள்ளுவார்கள் என்று காத்திருந்தேன். அவள் பேச்சை கேட்டால் அவளைப் பற்றி மேலும் யூகிக்கலாம். பேச்சினால் சிலவற்றை சுலபமாக யூகிக்கலாம்...அடுத்த முறை தொலைப்பேசியில் பேசும் போது மறுமுனையில் கவனியுங்கள் நான் சொல்லுவது புரியும்.

"என்ன சாப்பிடுகிறீர்கள் மேடம்? " என்று கேட்டுக்கொண்டே வந்தான் சார்லி. அந்த ஹோட்டல் வெயிட்டர். அவனுடைய பாஷையிலிரிந்து அவன் உள்ளூர் ஆசாமி என்பதை சுலபமாககண்டுபிடித்துவிடலாம். உயரமான ஆள். எப்படி எனக்கு தெரியும் ? என்னை வழிநடத்தி செல்லும் போது அவன் குரல் சில அங்குலங்கள் மேலேயிருந்து வரும். தற்செயலாக அவன் மிது மோதும் போது உடல் வலிமையை உணர்கிறேன். முப்பது வயது இருக்கலாம். சார்லி சமீபத்தில் அவனது காதலியை பிரிந்துவிட்டான். கேள்வி கேட்டு சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். மற்றவை அவர்களே முன்வந்து சொல்லுவார்கள்.

அடுத்த சவால் இந்த பெண் பற்றி எவ்வளவு யூகிக்க முடிகிறது என்பது தான். என்னை குருடன் என்று கண்டுபிடுக்கும் முன் யூகிக்க வேண்டும். எவ்வளவு சரியாக யூகித்தேன் என்று அவர்கள் போன பின் சார்லியிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுவேன். வழக்கமாக பத்துக்கு ஏழு சரியாக இருக்கும்.

"எனக்கு லெமன் டீ" என்றாள் மெதுவாக. "வேற ஏதாவது ..?" "இல்லை.. நன்றி"

முப்பது...முப்பத்தி ஐந்து வயது இருக்கலாம். பணிவானவள் இவளை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் அவளிடம் பேச வேண்டும்.

அவள் பக்கம் திரும்பி "என்ன டைம் ?" என்று கேட்டேன். நான் கேட்பதற்கும் எதிரே உள்ள தேவாலய கடிகாரம் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் சிரித்தாள், ஆனால் மணியோசை நிற்கும் வரை பதில் சொல்லவில்லை. "அந்த கடிகாரத்தை நம்பமுடியும் என்றால் பத்து மணி" என்றாள் அதே மென்மையான சிரிப்புடன். கடிகாரம் உள்ள திசையை பார்த்து "அந்த கடிகாரம் வழக்கமாக சில நிமிடங்கள் வேகமாக ஓடும்" என்றேன்

[ இப்படியாக இவர்கள் பேச்சு நீள்கிறது.... ]

அவள் தேநீர் உருஞ்சும் போது. இன்று பத்துக்கு எவ்வளவு யூகங்கள் சரியாக இருக்கும் என்று எண்ணினேன். நிச்சயம் கலை ஆர்வம் உள்ளவள். லண்டனில் வசிக்கலாம்..

கடைசியாக தேநீரை உருஞ்சும் சத்தம் கேட்டது. சத்தத்தை வைத்து அதைக் கூட எனக்கு கண்டுபிடிக்க முடியும்.

சார்லி வந்தவுடன் பில் கேட்டாள். அவள் பணம் கொடுத்தவுடன் சார்லி "நன்றி" என்றான் உணர்ச்சியுடன். நல்ல டிப்ஸ் கிடைத்திருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

"குட்பை" என்று அவளது குரல் என்னை நோக்கி வந்தது "உங்களுடன் பேசியது மகிழ்ச்சி" என்றாள். நான் எழுந்து நின்று வழியனுப்பினேன்

"நன்றி" என்னை கடந்து சென்ற பிறகு. சார்லியிடம் "இனிய மனிதர்" என்று என்னை பற்றி சொல்லுவது என் காதில் விழிந்தது. எனக்கு நன்றாக காது கேட்கும் என்று அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சார்லி வருவதற்காக காத்திருந்தேன். "வேறு ஏதாவது வேண்டுமா ?" என்று கேட்டதில் கிண்டல் இருந்தது. "நிச்சயமாக" என் பக்கம் உட்கார்ந்திருந்த அவளை பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள வேண்டும். தொடக்கமாக "அவள் உயரமா ? குட்டையா ? சிகப்பா கருப்பா ? ஒல்லியா ? அழகா ? அவள் .....?

சார்லி சிரிக்க ஆரம்பித்தான்.

"இதில் என்ன வேடிக்கை ?" என்றேன் கொஞ்சம் கோபமாக.

"உங்களைப் பற்றி அவளும் இதே கேள்விகளை தான் என்னிடம் கேட்டாள்"

சிறுகதையை படமாக எடுக்கும் போது அதில் உள்ள சஸ்பென்ஸையும் அப்படியே காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். பல எழுத்தாளர்களுடைய கதைகளை சினிமாவில் சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணம். இதே சிறுகதையை youtubeல் இங்கே http://www.youtube.com/watch?v=k-fy253VO5E பார்த்தேன். தவறுகளை நீங்களே வரிசை படுத்தலாம்.

குறும் படம் எடுக்கும் 'குறும்பட ஆர்வலர்கள்' இதை முயற்சி செய்து பார்க்கலாம். அட்வைஸ் செய்ய நான் ரெடி.

---------------------------------------------------------------------------------------------------------- ஒருவரின் கையெழுத்தை வைத்து எவ்வளவு யூகிக்கலாம் ? கையெழுத்தைக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை கணித்துத் தருகிறோம் என்று பணக்காரத்தனமான நோட்டிஸ் ஒன்றை நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் காம்பிளக்ஸில் ஓட்டியிருந்தார்கள்.

கையெழுத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் ஒருவரின் குணாதியசங்களை கண்டுபிடிக்கலாம் என்று இன்றும் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். கணினி வந்த பிறகு கையெழுத்து என்பது கடன் அட்டை தேய்த்தவுடன் அந்த இயந்திரம் துப்பும் சின்ன சீட்டில் கையெழுத்து போடுவதில் நின்றுவிடுகிறது.

சாவியில் சுஜாதாவின் கேள்வி பதில் ஒன்று:

கேள்வி: உங்களுடைய கதைகளில் வருவது போல் என்னுடைய handwritingகை வைத்து என்னுடைய Characterஐ உங்களால் கூற முடியுமா ? (ஜெயா கோயம்புத்தூர்)

பதில்: இடப்பக்கம் சாய்ந்த கையெழுத்து: பெண்மை. வலப்பக்கம் மேல் நோக்கி போகும் போக்கு ஆர்வம். இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள இடைவெளி செலவாளி. ஒற்றெழுத்தின் மேல் ஆணி அடித்த புள்ளிகள்: கூர்மை, கவனம். ( சாவி 22-3-1981)

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கையெழுத்து ஆய்வு(Graphology) பற்றிய படிப்பை பாடமாகவே படிக்கலாம். எழுதும் போது நம்முடைய ஈகோவிற்கும், நமது உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் நமது கையெழுத்து மாறுகிறது என்று சொல்லுகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் 'ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங்'(Running Hand Writing) சொல்லிக்கொடுக்கும் போது ஒரே மாதிரி கற்றுக்கொடுத்தாலும், எல்லோருக்கும் கையெழுத்து தனித்துவமாக அமைந்துவிடுவது தான் ஆச்சரியம்.

ஆண் கையெழுத்து, பெண் கையெழுத்து எது என்று என்னால் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். தமிழ் வகுப்பில் என் நண்பன் "ஆங்கிலத்தில் இருப்பது போல ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங் ஏன் தமிழில் இல்லை?" என்று ஆசிரியரிடம் கேட்ட கேள்விக்கு தான் இன்று வரை பதில் இல்லை!.

( கூடு இதழுக்கு எழுதியது, நன்றி )

Comments

  1. Super as usual.

    ReplyDelete
  2. ஹாஹா. என்னோட அம்மா நான் எழுதும் போது கர்சிவ்ல தான் எழுதணும்னு ரொம்ப படுத்துவாங்க. ஏன்னு எனக்கு புரிஞ்சதே இல்லை! இப்போ அது நினைவு வந்து விட்டது.

    [நான் கையெழுத்து எப்படியாவது வேணும்னு இப்பல்லாம் தினப்படி வேலைகளை பேப்பர்லே கையாலே எழுதறதுன்னு என்னன்னவோ யோசிச்சு யோசித்து செய்யறேன்.. காலம் அப்படி!]

    Ok, enough spam from me for today I guess. :)

    ReplyDelete

Post a Comment