Skip to main content

பீட்சாவும், கலோரியும்..

காரில் ஊர் விட்டு ஊர் போகும் போது வழியெங்கும் ராட்சதக் கற்றாழை செடிகள் வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கற்றாழைச் செடிகளில் பல வகைகள் உள்ளது; சில வருடங்களுக்கு முன்பு சுஹாசினி 'அலோ விரா' பானம் ஒன்றை விளம்பரம் செய்தார். அந்தக் கற்றாழைக்குப் பெயர் சோற்றுக் கற்றாழை. இன்று நாம் பார்க்கும் பல வெளிநாட்டு பொருட்களில் இந்தக் கற்றாழையை உபயோகப்படுத்துகிறார்கள். (கூல் டிரிங்க்ஸ், சோப்பு, ஜெல், ஷாம்பு, எண்ணை). இதன் பயன்கள் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டது. அடுத்து உள்நாட்டு விக்கோ விளம்பரங்களில் மட்டுமே காண்பிக்கப்பட்ட மஞ்சள், வேப்ப இலை போன்றவை தற்போது கார்னியரால் உபயோகப்படுத்தபடுகிறது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

திருச்சி உழவர் சந்தையில் பெரிய கற்றாழை ச் செடியை இருபது ரூபாய்க்கு திருஷ்டிக்கு விற்கிறார்கள். நான் ஒன்று வாங்கி வந்து எங்கள் வீட்டு பால்கனியில் தொட்டியில் வளர வைத்தேன். போன வாரம் அதிலிருந்து பூ குருத்து ஒன்று கிளம்பி இப்போது என்னைவிட உசரமாக வளர்ந்துள்ளது. கற்றாழைக்கு அதிகத் தண்ணீர் வேண்டாம். அதற்கு வேண்டிய தண்ணீரை அதன் இலைகளிலேயே சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. அதிக தண்ணீர் ஊற்றினால் அழுகிப் போய்விடும். சில வீடுகளில் திருஷ்டிக்கு வாசல் நிலைப்படியில் தொங்க விடுவார்கள், மண்ணிலாமல் வளரும். எங்கள் வீட்டு பக்கம் இருக்கும் ஐடிபிஎல் சாலைகளின் நடுவில் கற்றாழை நிறைய வளர்ந்திருக்கும். போன மாதம் அதன் பூ குருத்தை படம் பிடித்தேன். எவ்வளவு தூரம் வளர்துள்ளது என்று பாருங்கள்(படம்). ஸ்கூல் படிக்கும் போது இந்தச் செடிகளைப் பார்த்து பாம்புச் செடிகள் என்று பயப்படுவேன்.

போன வாரம் குடும்பத்துடன் கூர்க் சென்றிருந்தேன். அங்கே இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். காலை தூங்கி எழுந்த போது லேசான தூறல். மகனுடன் காட்டுப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். 'தொட்டா சிணுங்கி' போன்ற செடிகளை அவனுக்கு காண்பித்தேன். அங்கே ஒரு செடியின் இலைகள் பெரிதாக குடை போல இருந்தது. என் மகனை அதன் கீழே நிற்க வைத்து கேமராவில் ஜூம் செய்து குளோசப்பில் படம் எடுக்கும் போது அந்தப் பெரிய இலைகளின் மீது அதே நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டுக்கொண்டு இருந்ததை கேமரா வழியாக பார்த்துப் பதறினேன். சத்தம் போடாமல் அவனை என் பக்கம் இழுத்து பாம்பைக் காண்பித்தேன்.(படம்)அவன் கேட்ட கேள்வி "தொட்டுப்பார்க்கலாமா?"

சில நாள்கள் முன் பிட்சா படம் பார்த்தேன். அதற்கு அடுத்த நாள் காலை நாளிதழ் ஒன்றில் இந்த மாதிரி திகில், திரில்லர், பேய் படங்கள் பார்த்தால் கலோரிகள் குறையும் என்று போட்டிருந்தார்கள். 1980ல் வந்த 'The Shining' என்ற படம் பார்த்தால் சரசரி 184 காலரிகள் குறையும் என்று போட்டிருந்தார்கள். உடலில் அன்றாடம் ஓடியாடி வேலை செய்வதற்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் ) தேவையான அளவைவிட தேவைக்கு அதிகமாக உணவு உண்பதால் மிச்சம் உள்ள கலோரிகள் கொழுப்பாகச் சேர்ந்துவிடுகிறது. இது தினமும் கொஞ்ச கொஞ்சமாகச் சேர்ந்து அடுத்தமுறை உங்க சொந்தங்களின் திருமண கூட்டத்தில் உங்களைப் பார்த்து "முன்னைக்கு இப்ப பூசினமாதிரி இருக்க" என்று நலம் விசாரித்தால் கூடிய சீக்கிரம் இந்த கமெண்ட் "என்ன பூசணி மாதிரி இருக்க" என்று மாறுவதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

நடைப்பயிற்சி செய்யும் போது தற்போது என் கைபேசியில் endomondo என்ற மென்பொருள் ஒன்றை நிறுவியிருக்கேன். இது நீங்கள் எங்கே போகிறீர்கள், எந்த வேகத்தில் போகிறீர்கள், எவ்வளவு கலேரிகள் எரிக்கப்படுள்ளது போன்ற விவரங்களை சொல்லுகிறது. ( http://endomondo.com என்ற இடத்தில் கிடைக்கும் ) [கலோரி என்பது ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் சூடாக்கத் தேவைப்படும் உஷ்ணசக்தி].

சரி திகில் படம் பார்த்தால் நம்முடைய நாடி நரம்பு எல்லாம் ஓவராக வேலை செய்கிறது, அதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, அதிக அட்ரீனலின் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இதனால் பசி குறைந்து, Basal Metabolic Rate (சும்மா படுக்கையில் நாள் முழுவது படுத்துக்கொண்டே எவ்வளவு கலோரி எரிப்பது?) அதிகமாகி நிறைய கலோரிகள் எரிக்கப்படுகிறது. சில எழுத்தாளர்கள் எழுதும் எழுத்தைப் படித்தாலே சில சமயம் இது நிகழ்வதுண்டு!

சில வருஷங்களுக்கு முன் வாங்கிய "Best Loved Indian Stories" என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ரஸ்கின் பாண்ட் எழுதிய "The Night Train at Deoli" என்ற சிறுகதை நல்ல வாசிப்பு அனுபவம். ரஸ்கின் பாண்ட் எழுத்து எனக்குப் பள்ளி நாட்களில் ஆங்கில பாடம் மூலம் பரிட்சயம். இந்தக் கதை பள்ளியில் இருந்திருந்தால் அனுபவித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

கதையை சுமாராக மொழிபெயர்த்திருக்கிறேன்.

- * -
நான் கல்லூரி படிக்கும் போது, கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குப் போவேன். மே மாதம் போய்விட்டு ஜூன் தான் திரும்புவேன். பயணத்தின் போது, காலை ஐந்து மணிக்கு முப்பது மைல் தொலைவில் இருக்கும் டியோலி ஸ்டேஷன் வரும். பிரகாசம் கம்மியாக சில விளக்குகள், மங்கலான காலை வெளிச்சத்தில் இரண்டு பக்கமும் காடு தான் தெரியும். டியோலி ஸ்டேஷன் பெருமை அடித்துக்கொள்ள ஒன்றும் இல்லை. ஒரே பிளாட்பாரம் அதற்கு ஒரே ஸ்டேஷன் மாஸ்டர்; ஒரே வெயிட்டிங் ரூம்; ஒரு டீ ஸ்டால்; ஒரு பழக்கடை மற்றும் சில தெரு நாய்கள்.

இந்த ரயில் நிலையத்தில் ரயில் பத்து நிமிடம் நிற்கும். எதற்கு இந்த ஸ்டேஷனில் நிற்கிறது என்று பல முறை வியந்திருக்கிறேன். யாரும் இறங்க மாட்டார்கள், ஏற மாட்டார்கள். போர்ட்டர்கள் கூட கிடையாது, ஆனால் ரயில் முழுசாக பத்து நிமிஷம் நிற்கும். மணி அடித்து, கார்ட் விசில் ஊதிய பிறகு டியோலி ஸ்டேஷன் மறைந்து போகும்.

ஒவ்வொரு முறையும் இந்த ஸ்டேஷனை கடந்து போகும் போது, இந்த ஊரில் என்ன இருக்கும் என்று வியப்பேன். யாருமே பார்க்க விரும்பாத இந்த ஊரை நினைக்க சில சமயம் பாவமாகக் கூட இருக்கும். இந்த ஸ்டேஷனை கடந்து இந்த ஊரில் என்ன இருக்கும் ? ஒரு முறை இந்த ஊரில் இறங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

பதினெட்டு வயதில் ஒரு முறை என் பாட்டி ஊருக்கு பயணம் செய்த போது வழக்கம் போல ரயில் டியோலி ரயில் நிலையத்தில் நின்றது. ஒரு பெண் கூடை விற்றுக்கொண்டு இருந்தார். நல்ல குளிரில் ஷால் போர்த்திக்கொண்டு இருந்தார். காலில் செருப்பு இல்லை. நடையில் அழகும் அவளிடம் இளமையும் இருந்தது.

என் ஜன்னல் பக்கம் வந்து நின்றாள். நான் அவளை அதிகம் பார்ப்பதைக் கவனித்துவிட்டாள், ஆனால் பார்க்காத மாதிரி பாசாங்கு செய்தாள். அவள் வெளுப்பாக, கூந்தல் கருப்பாக...கண்களில் மட்டும் பதட்டமாக இருந்தது. அந்த கண்கள் என்னைப் பார்த்தது. நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் நகர்ந்தாள். என்னையும் அறியாமல் நானும் இருக்கையை விட்டு எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கி அவள் போகும் திசையை பார்த்துக்கொண்டு டீ ஸ்டால் பக்கம் போனேன்.

டீ ஸ்டால் பின் பக்கமாக வந்த அவள்
"கூடை வேண்டுமா?..நல்ல பிரம்பால் செய்த கூடை"
"வேண்டாம்"
கொஞ்ச நேரம் இருவரும் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தோம்.
"நிஜமாகவே கூடை வேண்டாமா?" என்றாள்.
"சரி ஒரு கூடை குடு" என்று மேலே இருந்த கூடையை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்கும் போது அவளின் விரல்களை நான் தொட்டேன்.
அவள் ஏதோ பேச முற்பட்ட போது கார்ட் விசில் ஊத அவள் ஏதோ சொன்னாள். மணி ஓசையிலும், எஞ்சின் இறைச்சலும் அதை அழித்தது. நான் ஓடி போய் ரயில் பெட்டியில் ஏறினேன்.
அவள் என்னையே பார்த்து புன்னகைத்துக்கொண்டு இருந்தாள்; பிறகு மறைந்தாள். அதற்கு பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை. என் நினைவில் அவள் முகமும் சிரிப்பும் மட்டுமே இருந்தது.

பாட்டி வீட்டுக்குப் போன பிறகு மற்ற விஷயங்கள் இருந்ததால் அவளை மறந்தேன். ஊருக்கு திரும்ப வரும் போது அவள் திரும்ப நினைவுக்கு வந்தாள். டியோலி ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டு இருந்தாள். ரயிலை விட்டு குதித்து அவளைப் பார்த்துக் கை அசைத்தேன். புன்னகைத்தாள். சந்தோஷமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு பழைய நண்பர்கள் சந்திப்பு மாதிரி இருந்தது.

அவள் கூடை விற்கப் போகவில்லை, டீ ஸ்டால் பக்கம் வந்தாள். எனக்கு ஒரு நொடி அவளை அபகரித்துக்கொண்டு என்னுடன் அழைத்துக்கொண்டு போக வேண்டும் போல இருந்தது. ரயில் கிளம்பும் போது அவளை விட்டு போக எனக்கு மனசு வரவில்லை. அவளிடம் இருந்த கூடைகளை வாங்கி கீழே வைத்து அவள் கைகளைப் பற்றினேன்.
"நான் டெல்லிக்கு போகணும்"
தலையாட்டினாள். கார்ட் சமயம் தெரியாமல் விசில் ஊதினார். அவர் மீது கோபமும் எரிச்சலும் வந்தது.
"நிச்சயம் திரும்ப வருவேன்...நீ இங்கே இருப்பாயா ?"
திரும்பவும் தலையாட்டினாள்.

ரயில் திரும்ப அவளை விட்டுச் சென்றது.

இந்த முறை அவளை மறக்கவில்லை. பயணத்தின் போதும், அதற்குப் பிறகும் நினைவில் இருந்தாள்.
கல்லூரி அரை ஆண்டு லீவுக்கு பாட்டி வீட்டுக்கு சீக்கிரமாகவே கிளம்பினேன். இந்த முறை எனக்கு ஆர்வமும், பதட்டமுமாக இருந்தது. அவளைப் பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் ஒன்றும் தெரியவில்லை.

ரயில் டியோலியை வந்தடைந்த போது, பிளாட்பாரத்தில் யாரும் இல்லை. அவளைக் காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது. ஏதோ செய்ய வேண்டும் என்று தோன்றியது. நேராக ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஓடிப் போய் "கூடை விற்கும் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?" என்றேன்.
"தெரியாது...சீக்கிரம் ரயிலில் ஏறுங்க கிளம்பப் போகிறது"
பிளாட்பாரத்தில் மேலும் கீழுமாக ஓடினேன். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு மாங்கா மரமும் காடும் தான் கண்ணுக்கு தெரிந்தது. ரயில் கிளம்ப நான் அதனுள் குதித்து ஏறினேன். ரயில் காட்டுப்பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது.

இரண்டு முறை சந்தித்த அந்தப் பெண் எங்கே போயிருப்பாள். அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவளைப் பார்த்த போது எனக்குள் மென்மையாக உணர்ந்தேன்.

ஊரில் இரண்டு வாரம் தான் இருந்தேன் என்று பாட்டிக்கு என் மீது கோபம். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரயிலில் புறப்பட்டேன். இந்த முறை ஸ்டேஷன் மாஸ்டரிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். டியோலில் ஸ்டேஷனில் மாஸ்டர் புதிதாக இருந்தார்.
டீ ஸ்டால் வைத்திருப்பவரிடம் கேட்ட போது
"நினைவு இருக்கிறது ஆனால் அவள் இப்போது வருவதில்லை"
"ஏன் ? என்ன ஆச்சு?"
"எனக்கு எப்படி தெரியும் ? அவள் என்ன எனக்கு உறவா?"

திரும்பவும் ரயிலை நோக்கி ஓடினேன். டியோலி பிளாட்பாரம் என்னை விட்டு விலகியது. ஒரு முறை என் பயணத்தின் போது இங்கே இறங்கி ஒரு நாள் தங்க வேண்டும், இந்த பெண்ணைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

திரும்பவும் கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு சென்ற போது டியோலி ஸ்டேஷனில் அவளைக் காணவில்லை. சினிமா கதையாக இருந்தால் அங்கே இறங்கி அவள் எங்கே போனாள் என்று கண்டுபிடித்துவிட்டு ரயில் ஏறியிருப்பேன். என்னால் அப்படி செய்ய முடியவில்லை. பயமாக இருக்கலாம். அவள் என்ன ஆனாள் என்று அறிந்து கொள்ளும் பயம். கல்யாணம் செய்துக்கொண்டிருப்பாளோ ? ஜூரம் வந்திருக்குமோ ?

இந்த ஸ்டேஷனைக் கடந்து இந்த ஊரில் என்ன இருக்கும் ? ஒரு முறை இந்த ஊரில் இறங்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பல முறை டியோலி ஸ்டேஷன் வழியாகப் பயணம் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட கீழே இறங்கியதில்லை.

- * -

எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த மாதிரி காதல் வந்திருக்கும். இன்றும் நான் எழுதிய கல்யாணி என்ற கதையை "இது உங்க உண்மைக் கதை தானே ?" என்று போன வாரம் கூட என் மனைவி கேட்டாள். வாழ்க்கையே ஒரு பயணம் தானே!

நீங்கள் மூச்சு இழுத்து விடும் போது அதில் பல அணுக்கள் இருக்கிறது. அடுத்த முறை டாக்டர் "மூச்சை நல்லா இழுத்து விடுங்க" என்று சொல்லும் போது ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இழுக்கும் மூச்சு காற்றில் ஹிட்லர், நேரு போன்றவர்களின் நுரையீரலுக்கு சென்று வந்த மூலக்கூறு இருக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு 25 முறை மூச்சு விடுகிறோம். ஒருவர் 60 வயது வாழ்ந்தால் கிட்டதட்ட 2.1 * 10^31 மூலக்கூறை சுவாசத்தால் விட்டிருப்பார். நம் காற்று மண்டலத்தில் உங்க எதிர் வீட்டுத் தாத்தா அல்லது நேரு மாமா மூச்சு விட்ட மூலக்கூறு 5*10^12 பாகம் இருக்கலாம். அப்படியென்றால் நாம் அவருடைய மூலக்கூற்றை திரும்ப சுவாசிப்பதற்கு நிறைய சாத்தியகூறு இருக்கிறது!

இந்த வாரம் கூடு இதழுக்கு எழுதியது. 

Comments

  1. ரஸ்கின் பாண்ட் - மொழிபெயர்ப்பு பிரமாதம்....

    சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. :) I think, the entire EPIP area was forest-estate land and thats why we see lot of different plants and trees in and around ITPL; have you been in JFWTC (GE)? they have done good landscaping.

    Venkatesh

    ReplyDelete
  3. //நீங்கள் இழுக்கும் மூச்சு காற்றில் ஹிட்லர், நேரு போன்றவர்களின் நுரையீரலுக்கு சென்று வந்த மூலக்கூறு இருக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது.//

    Now I know why I suffer from Asthma.

    ReplyDelete
  4. நல்ல மொழிப்பெயர்ப்பு...

    வாழ்க்கை ஒரு பயணம் தான்...

    நல்லதொரு படைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  5. Very nice article, The photo of the agave plant which u have published is "yanai katrazhai" and the one which has bloomed in ur house with orange flowers is aloevera, as u may be aware. This plant, yanaikatrazhai, is very peculiar, it has a tall bloom, which lasts for a few months even and after the bloom, the plant dies. The roots would have already given rise to new ones,. The peculiar similarity which exists between vaazhai and agave., Giving way for the coming generation.I think plants teach us so many things, we are yet to understand them. Ur sons courage and interest is amazing. You have beautifully translated Ruskin's story., pl do try some more.,

    ReplyDelete
  6. //இன்றும் நான் எழுதிய கல்யாணி என்ற கதையை "இது உங்க உண்மைக் கதை தானே ?" என்று போன வாரம் கூட என் மனைவி கேட்டாள்.// இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு :)

    ReplyDelete

Post a Comment