Skip to main content

நம்பி இருந்த வீடு


பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது.  திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.



காலை சில ஆரஞ்சு பழங்களை கையில் எடுத்துக்கொண்டு திருச்சி- புதுக்கோட்டை- திருப்பத்தூர்- திருகோட்டியூர் பயணத்தை ஆரம்பித்தேன். எச்சிலை கையில் தொட்டு டிக்கெட் கிழிப்பதெல்லாம் மாறி, கையில் சின்ன க்ரெடிட் கார்ட் பிரிண்டிங் இயந்திரம் மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டு நடத்துனர் டிக்கெட் கொடுப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நல்ல மழைக்குப் பிறகு சில நாள்கள் கழித்து என் பயணம் இருந்ததால், புதுக்கோட்டை போகும் வழியெல்லாம் செம்மண் கலந்த நீர் அப்படியே தேங்கிக் கிடந்தது. சாலையோரங்களில் இருக்கும் ஆல மர விழுதுகளில் எல்லாம் ஏதோ தொங்கவிட்டிருக்கிறார்கள். (அது என்ன?), பல இடங்களில் மக்கள் ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசுகிறார்கள். போகும் வழியில் ஒரு இடத்தில் "நீரேந்து நிலையம்" என்று பம்பு செட் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். 50கிமீ தூரப் பயணம்; ஒன்றரை மணி நேரம்; புதுக்கோட்டை வந்தடைந்தேன். பேருந்து நிலையத்தைச் சுற்றியும் மக்கள் சிறுநீர் கழித்துக்கொண்டு, சுகாதாரமாக இருக்க வெள்ளை பிளிச்சீங் பவுடர் போட்டு... 'நெடி'ய பயணம் என்று நினைத்துக்கொண்டேன்.

புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும்போது இரண்டு பக்கமும் முட்செடிகள் காடு மாதிரி முளைத்திருக்கிறது. வேலிகாத்தான் என்று ஊர் மக்கள் இதைச் சொன்னாலும், சீமைக் கருவேலம் என்பது இதன் பெயர். விளைநிலங்களையும், மற்ற செடிகளையும் நாசப்படுத்தும் இந்தச் செடி எங்கும் இருப்பதாலோ என்னவோ, சுற்றி பசுமையைக் காணமுடியவில்லை. இந்தச் செடி சில நூறு ஆண்டுகளுக்கு முன்தான் இந்தியா வந்ததாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இராமானுஜர் வாழ்ந்த காலத்தில் நிச்சயம் இந்த செடி இருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

வெள்ளை அடித்த செங்கலை நிற்க வைத்து சில இடங்களில் ஏதோ திடீர் 'நகர்' அமைத்து அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் விளம்பரம் வர ஆரம்பித்திருக்கிறது. முட்செடி விறகுகளை தலையில் சுமந்துக்கொண்டு பெண்மணிகள் தம்மனா விளம்பரங்களை கடந்து செல்லுகிறார்கள்.

பேருந்தில் 'Boom TV' என்ற டிவியில் பாட்டும் விளம்பரமும் வருகிறது. டிவியில் 'ஓட்டக்கார மாரிமுத்து' எல்லா பக்கமும் ஒலிக்க திருக்கோட்டியூர் வந்து சேர்ந்தேன்.
(திருக்கு+ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் இந்த ஊருக்குப் பெயர். மூன்று பஸ் பிடித்து, 100 கிமீ தூரம்; இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப்பின் உச்சி வேளையில் வந்துசேர்ந்தபோது கோயில் இன்னும் திறந்திருந்தார்கள். அதிர்ஷ்டம்.
நான் பஸ்ஸில் வந்த இந்த இடத்துக்கு இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து நடந்தே பதினெட்டு முறை வந்திருக்கிறார். ஏன் பதினெட்டுமுறை என்பதைத் தெரிந்துக்கொள்ள அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒரு பகுதியை உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது.
இராமானுஜர் துறவு மேற்க்கொண்டபின், ஆளவந்தார் மறைவிற்குப்பின், ஸ்ரீரங்கத்து மடம் சரியான தலைவரின்றி இருந்தது. பெரிய நம்பி திருவரங்கப் பெருமாளரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி இராமானுஜரை அழைத்து வர வேண்டினார்.

ஸ்ரீரங்கத்துக்கு வந்த பின் இராமானுஜர் பெரிய நம்பியையே தம் ஆசாரியராக ஏற்று, ஆளவந்தாரின் பிரிவினால் ஏற்பட்ட மனவருத்தத்தை மெதுவாக மறந்தார். (இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்கு முன்பே இறைவனடி சேர்ந்தார் என்பது வரலாறு). ஒரு சமயம் பெரிய நம்பி இராமானுஜரிடம் திருக்கோட்டியூர் நம்பி பற்றியும் அவரின் அருமை பெருமைகளையும் சொல்லி அவரிடம் 'எட்டெழுத்து மந்திரத்தைப் பொருளுடன் உபதேசம் பெற வேண்டும்' என்று பணித்தார். (ஸ்ரீ ஆளவந்தாரிடமிருந்து ரகஸ்யாத்ரயங்களின் உட்பொருள்களையெல்லாம் மிக ஆழமாகக் கற்று, அவற்றைப் பரம இரகசியமாக வைத்துள்ளார் திருக்கோட்டியூர் நம்பி என்றும் சொல்லுவர்.)
பெரிய நம்பியின் உபதேசத்தின்படி ஸ்ரீஇராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியைக் காணப் புறப்பட்டார். இராமானுஜர் நம்பியைப் பார்பதற்குமுன் நாம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்.
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து இன்றைக்கு 1024 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப்பின் பிறந்தவர். இராமானுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமானுஜரைக் காணவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், "நான் கோயிலுக்குச் சென்று வருகிறேன்" என்று வீட்டில் சொல்லிவிட்டு திருவரங்கத்தில் இராமானுஜரை சந்திக்கச் சென்றுவிடுவாராம்.

ஸ்ரீஇராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று அங்கே இருக்கும் கோயிலான சௌம்ய நாராயணப் பெருமாளைச் சேவித்துவிட்டு, நம்பியின் திருமாளிகை (வீடு) எங்கே என்று விசாரித்து அதனை நோக்கித் தண்டனிட்டுக் கொண்டே சென்று நம்பிகளிடம் தனக்கு உபதேசம் வேண்டி நிற்க, நம்பியோ "இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

இராமானுஜர் மிகுந்த வருத்ததுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அடுத்த முறையும் இதே மாதிரி இராமானுஜர் திருப்பி அனுப்பபட்டார். இப்படி பதினேழு முறை அவர் திருக்கோட்டியூருக்கு நடந்தார்; அத்தனை முறையும் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். கடைசியாக பதினெட்டாவது முறை திருக்கோட்டியூர் நம்பி இராமானுஜருக்கு "இந்த ரகசியம் ஒராண் வழியாக வந்துள்ளது, தற்போது எனக்கு கிட்டியுள்ளது, இந்த ரகசியம் தெரிந்தவன் வைகுந்தம் செல்வான். நான் இப்போது உனக்கு உபதேசிக்கிறேன். நீ யாருக்கும் உபதேசிக்க கூடாது மீறினால் நரகம் புகுவாய்!" என்ற சத்தியம் வாங்கிக்கொண்டு இராமானுஜருக்கு உபதேசித்தார் என்கிறது குருபரம்பரைக் குறிப்பு.

ஆசாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோஷ்டியூர் கோவிலின் போபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி, "நீங்கள் இந்த உலகத்துத் துயரங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபட்டு மோட்சம் பெற விரும்பினால், நான் கூறும் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து மூன்று முறை உச்சரியுங்கள்!" என்று "ஓம் நமோ நாராயணாய" என்று கூட்டதை பார்த்து மூன்று முறை சொல்ல, கூட்டமும் மொத்தமாக அந்த மந்திரத்தை உச்சரித்தது.

இராமானுஜர் செய்ததை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த கோபம் கொண்டவராக "உனக்கு நரகம் கிட்டும் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்க இராமானுஜர், "ஆசாரியன் வாக்கை மீறினால் நரகம் கிட்டும் என்பதை அறிவேன்; நான் ஒருவன் நரகம் போனாலும், மற்றவர்களுக்கு உங்களுடைய உபதேசத்தால் மோட்சம் கிடைக்குமே" என்று பதில் கூற இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கம் நமக்கு வரவில்லையே என்று எண்ணி "எம்பெருமானாரே!" என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி (எம்பெருமானாரே- எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.)

'வைணவ தரிசனம்' என்று அழைக்கபட்ட விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இனிமேல் 'எம்பெருமானார் தரிசனம்' என்று அழைக்கப்படும் என்றார். இன்றும் ஸ்ரீஇராமானுஜ சித்தாந்தம் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைக்கிறார்கள். இராமானுஜருக்கு 'எம்பெருமானார்' என்ற பெயர் வர இதுவே காரணம்.

இராமானுஜரை சிலர் விஷம் கலந்த உணவை பிஷையாகக் கொடுத்து கொலை செய்ய முயல, அதிலிருந்து இராமானுஜர் தப்பினார் என்ற குறிப்பு அவர் வாழ்க்கை வரலாற்றில் வருகிறது. இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டு ஸ்ரீரங்கத்துக்கு வந்த சமயம், நல்ல கொளுத்தும் வெய்யில். சுட்டெரிக்கும் காவிரி மணலில் நடந்துவரும்போது ஸ்ரீஇராமானுஜர் நம்பி வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவரை வரவேற்க அங்கே செல்கிறார். நம்பியைப் பார்த்தவுடன் அந்த வெய்யிலையும் பாராது மணலில் விழுந்து சேவிக்கிறார். (ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சேவிக்கும்போது, "போதும் எழுந்துரு" என்று சொல்லும் வரை எழுந்திருக்க கூடாது).

நம்பி இராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லாமலிருக்க, கூட வந்தவர்கள் என்ன செய்வது என்று தர்மசங்கடத்தில் இருக்க, கிடம்பியாச்சான் நம்பியைப் பார்த்து, "இதென்ன? ஒரு பூமாலையை வெய்யிலிலே போடுவீர்களா? நீங்கள் அவரைக் கொலை செய்யப் பார்க்கிறீர்கள்" என்று கோபமாக தாமே இராமானுஜரை எழுப்ப, நம்பி சந்தோஷமாக, "இராமானுஜரின் மேல் பிரேமை வைத்துள்ள ஒருவரைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இனிமேல் நீங்கள்தான் இராமானுஜருக்கு தளிகை (உணவு) செய்துதர வேண்டும்" என்று பணித்தார்.

இராமானுஜர் மீது நம்பிக்கு இருந்த பாசம் இது.

ஸ்ரீஇராமானுஜர் கோபுரம் மீது ஏறி நின்று உபதேசம் செய்த இடத்தை, இன்றும் கோயிலுக்குள், மிகக் குறுகிய பாதை வழியாக கோபுரத்தின் மேல்தளம் சென்று நாமும் தரிசிக்கலாம்.

கண்ணும் சுழன்று பிளையோடு ஈளை வந்து ஏங்கினால்,
பண் இன் மொழியார் பைய நடமின் எண்ணாத முன்" 
(பெரிய திருமொழி) 

என்று திருமங்கையாழ்வார் சொல்லுவதைப் போல நமக்கு உடல் தளர்ந்து போகுமுன் இந்த மாதிரி இடங்களுக்குச் சென்று பார்த்துவிட வேண்டும்.

இந்தக் கோயில் 108 வைணவ தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலம்.
மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானத்தைக் காணலாம். முதல் தளத்தில் பெருமாள் திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்ட காட்சியைக் காணலாம். இரண்டாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் மூன்றாவது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாளைக் காணலாம். இந்தத் தளத்திலிருந்துகொண்டுதான் ஸ்ரீஇராமானுஜர் கூட்டத்தைக் கூட்டி திருமந்திரத்தை எல்லோருக்கும் சொன்னர் என்று கூறுவர். இதை நினைவுப்படுத்தும் வண்ணம், கோபுரத்தில் ஸ்ரீஇராமானுஜருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுவற்றில் பழைய காலத்து அழகான ஓவியங்களை பார்க்கலாம். ( பார்க்க படங்கள் )

ஜன்னல் தெரிகிறது... 
மேற்கூறிய சம்பவங்களை தங்குதடையின்றி பழனியப்பன் என்பவர் எல்லோருக்கும் அங்கே இன்றும் எடுத்துச் சொல்லுகிறார். அவரிடம் திருக்கோட்டியூர் நம்பி வீடு எங்கே என்று கேட்டதற்கு கீழே அங்கே ஒரு ஜன்னல் தெரிகிறது பாருங்க அதுதான் என்றார். நிறைய ஜன்னல் தெரிந்தது.

கீழே இறங்கி நம்பிகள் வீட்டைத் தேடிப்போனேன். தெருவில் குடுமி வைத்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் "திருக்கோஷ்டியூர் திருமாளிகை எங்கே?" என்று கேட்டேன்.

"மஞ்சப்புடவை காயப் போட்டிருக்கற வீடு" என்றார் பேட்ஸ்மென்.

 பழைய காலத்து காரை வீட்டைப் பார்க்க முடிந்தது. வீட்டுக்குமுன் சிறிது நேரம் நின்றேன். 1000 வருடங்களுக்குமுன் இராமானுஜர் வந்த அதே இடம். வீட்டுக்கு மேல் "திருக்கோஷ்டியூர் நம்பிகள் கல்திருமாளிகை" என்று எழுதியிருந்தது. மேலே நாமத்துக்கு மேல் சுவற்றில் உதய மரம் ஒன்று முளைத்திருந்தது. யாருக்கோ கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டர் வீட்டின் சுவற்றில் ஒட்டி பாதி கிழிந்து போயிருக்க இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் உள்ளே சென்று பார்த்துவிடலாம் என்று கதவைத் தட்டினேன்.

நம்பி இருந்த வீடு !
உள்ளே சன் டிவியில் ஏதோ படம் ஓடிக்கொண்டு இருக்க, ஒரு அம்மையார் வெளியே வந்து "யார்?" என்று விசாரித்தார்.

"நான் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டைப் பார்க்க வந்தேன்" என்றேன்.

டிவியை ஊமையாக்கிவிட்டு உள்ளே அழைத்துக்கொண்டுபோய், "பாருங்க " என்றார். பழைய காலத்து வீடு; உள்ளே மண்டபம் போல் இருந்தது. உத்திரத்தம் கல்லினால் ஆனது. வீட்டில் காலெண்டர் ஒன்று LICயின் பெருமைகளைப் பேசியது.

எங்க வீட்டுக்காரர் பெயர் நாராயணன், என் பெயர் செண்பகம். நாங்கள் நம்பியின் வம்சா வழியினர் என்றார். வீட்டில் இருந்த ஒரு பழைய படத்தைக் காண்பித்து இது ரொம்ப பழசு பரம்பரை பரம்பரையாக வந்திருக்கிறது என்றார். ( அவர்கள் அனுமதியோடு ஒரு படம் எடுத்துக்கொண்டேன் )

வீட்டின் உள்ளே
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, சன் டிவிக்கு மீண்டும் உயிர் வந்தது.

பிகு: கோயிலுக்கு வெளியில் செருப்பை விட்டுவிட்டு திரும்பிவந்து அதற்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கோயிலை தங்க கவசம் போட்டு மூட 60 கோடியில் நிதி திரட்டுவதாக போர்ட் போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சின்ன பகுதியை நம்பியின் திருமாளிகையை செப்பனிடப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மேலும் சில படங்கள் 


குறுகிய பாதை -  கோபுரத்தின் மீது இருந்து கீழே - 60 கோடி விமானம் ! -  காசு வாங்க மறுத்த கடை, கோயில் குளம், கோயில் உட்புற தோற்றம்.. 



பட குறிப்புக்கள்:
ராமானுஜர் கோட்டோவியங்கள் நன்றி:  சித்திர இராமானுஜர் புத்தகம். 
ராமானுஜர் வண்ண ஓவியம் - கோபுலு, தற்போது உள்ள கோயிலுடன் PhotoShop உதவியுடன் இணைத்திருக்கிறேன். 
திருக்கோட்டியூர் நம்பி திருமாளிகை, கோயில், கோபுரம் படங்கள் டிசம்பர் 27, 2009 அன்று எடுத்தவை


சொல்வனம் இதழ் 62ல் வந்தது.. 

Comments

  1. http://divyadesamyatra.blogspot.com/2011/03/tirukoshtiyur-divya-desam.html

    ReplyDelete
  2. திருக்கோட்டியூர் நம்பி இராமானுசரை 17 முறை வெறுமனே அனுப்பவில்லை !!

    ஓருரு முறையும் "இதை தெரிந்து கொண்டு பின் வாரும் .." என சொல்லி பணித்தார். இந்த 17 என்ன என்பதை
    ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் "18 ரஹச்யங்கள் " மூலம் அறியலாம்.

    !! Google transliterate couldn't get OOruru & rahasyangal better than this !!! Your post is beatiful!!

    ReplyDelete
    Replies
    1. சிலர் அது மாதிரி சொல்லுகிறார்கள், சிலர் வேறு மாதிரி சொல்லுகிறார்கள் (உத: கிருஷ்ணப் பிரேமி ). எனக்கு எது சரி என்று பட்டதோ அதை எழுதியிருக்கிறேன்.

      Delete
  3. கார்த்திகேயன்January 16, 2012 at 1:34 AM

    பகிர்வுக்கு நன்றி. அழ்வார்கள் & திவ்ய தேசங்கள் பற்றிய தங்கள் பகிர்வுகளை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் போன சில ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்கள் பற்றி சில பதிவுகள் எழுதியுள்ளேன். பாருங்கள்.

      Delete
  4. ஆல மரத்தின் விழுதுகளில் கட்டியிருப்பது மாடு க்ன்று போடும் பொழுது வரும் இளங்கொடி
    எனப்படும் பசுவின் கருப்பைக்குள் உள்ள ஒரு உறுப்பு.அதை நாய்கள் தின்று விடாமல் இருக்க
    ஓலைக்கொட்டானில் வைத்து கட்டி ஆல மர விழுதுகளில் கட்டுவார்கள்.

    ReplyDelete
  5. ஆல மர விழுதுகளில் கட்டியிருப்பது பசு மாடு கன்று போடும் போது பசுவின் கருப்பைகுள்
    இருந்து வரும் இளங்கொடி எனப்படும் ஒரு உறுப்பு.அதை நாய் திண்று விடமல் இருக்க ஓலை
    பெட்டியில் வைது கட்டி ஆல மர் விழுதில் கட்டுவார்கள்.

    ReplyDelete
  6. நானும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை ஏன் ஆல மரத்தின் விழுதில் கட்டுகிறார்கள் ?

    ReplyDelete
  7. திருவரங்கத்து அமுதனார் ... வீட்டை பார்த்த பதிவு போலவே இந்த பதிவும் அழகாக உள்ளது
    மிக்க நன்றி :))

    and sathish kumar your http://divyadesamyatra.blogspot.com very superb:)
    thanks :)

    Regards
    Rajesh

    ReplyDelete
  8. உங்களை சுஜாதா ரசிகராக, அவராலேயே பெருமையுடன் அங்கீகரிக்கப்பட்ட ரசிகராக, மற்ற பதிவுகள் மூலம் அறிந்திருக்கிறேன். இந்த மாதிரி திவ்யக்‌ஷேத்ரங்களின் பெருமைகளையும் எழுதுபவர் இன்று தான் தெரிந்துகொண்டேன். எனக்கும் இந்த விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் வர இத்தனை வருஷங்களாயிற்று. திருமெய்யம் பற்றிய பதிவையும், திருக்கோட்டியூர் பற்றிய பதிவையும் இன்று படித்து உருகினேன். ரொம்பவும் அனுபவித்து, ஆழமாக எழுதியதற்கு நன்றி. 2 வருஷம் முன் திருக்கோட்டியூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருமெய்யம் பற்றித் தெரியாததால் அங்கு போகாதது வருத்தமாயிருக்கிறது. உங்கள் மற்ற, பழைய பதிவுகளை படிக்கும் ஆவலுடன் இருக்கிறேன். - ஜெகன்னாதன்

    ReplyDelete
  9. Dear Jagannathan,
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மற்ற பயணக் கட்டுரைகளை படித்துவிட்டு சொல்லுங்கள். திருவரங்கத்து அமுதனார் பற்றிய பதிவையும் படித்துவிடுங்கள். ந்னறி

    ReplyDelete
  10. இரமேஷ் இராமமூர்த்திMay 5, 2017 at 7:53 PM

    நீங்கள் கூறியது போல எண்ணிக்கை அடிப்படையில் அதிக திவ்யதேசம் சென்றுள்ளேன் ஆனால் எவ்வாறு அனுபவித்து செய்ய வேண்டும் என்பதை உங்கள் எழுத்து உணர்த்துகிறது ஆக மீண்டும் ஆரம்பம் முதல் துவங்கினால் வல்லது என கருதுகிறேன்

    ReplyDelete

Post a Comment