Skip to main content

சுஜாதாவின் நேர்காணல்கள்

சுஜாதா நேர்காணல்கள் என்ற புத்தகத்தை கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆவல். சுஜாதாவின் இரண்டு நேர்காணல்கள் மிக முக்கியமானது. ஒன்று
"சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததைப் புரிந்துக்கொள்ள முடிகிறது"
என்று தீராநதியிலும், இன்னொன்று படிகளில் வந்தது. இதை தவிர அவருடைய நேர்காணல்கள் பல பத்திரிக்கையில் வந்திருக்கிறது. சுட்டி விகடனில் கூட வந்திருக்கிறது.

1996-97ல் தமிழ் டாட் நெட் என்ற இணைய குழுமம் பாலா தலமையில் சுறுசுறுப்பாக இயங்கியது. இன்றும் அதில் இருந்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். 1997 மார்ச் மாதம் குழுமம் சார்பாக சுஜாதாவின் பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். குழுமத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், அதை நான் தொகுத்து சுஜாதாவிடம் பதில் பெற வேண்டும். அவ்வளவு தான்.

சுஜாதாவுடன் எனக்கு அப்போது பரிட்சயம் ஏற்பட்ட புதுசு. அவரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், கேட்டுவிடலாம் என்று கேட்டேன். உடனே சரி என்று ஒப்புக்கொண்டு விட்டார். யுனிக்கோட் எழுத்துரு இல்லாத காலம். அதனால் தமிழில் மெயில் அனுப்பிவிட்டு "சார் எழுத்தெல்லாம் தெரிகிறதா?" என்று கேட்க வேண்டும். இந்த பிரச்சனையினால் "கேள்விகளை ஒரு பிரிண்டவுட் எடுத்து தாங்க பதில் எழுதி தருகிறேன்" என்றார்.

கொடுக்க அவர் வீட்டுக்கு சென்ற போது, ,மும்பைக்கோ டெல்லிக்கோ கிளம்பிக்கொண்டு இருந்தார். "பிரிண்டவுட் இருக்கிறதா ? சரி பிளைட்டில் டைம் கிடைக்கும் பதில் எழுதுகிறேன்" என்று பெட்டியில் வைத்துக்கொண்டார்.

ஒரு வாரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது, வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். வாங்கிக்கொண்டேன். "ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்" என்றார். மடித்து வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். "ஏதாவது புரியவில்லை என்றால் கேளுங்கள்" என்றார் ஆனால் அவர் எழுதியது எதுவுமே புரியவில்லை. என் அப்பாவிடம் கொடுத்து டிகோட் செய்ய சொன்னேன். அவர் சர்வ சாதாரணமாக அதை டிகோட் செய்து தந்தார்.

சுஜாதா கைபட எழுதியதும் என் அப்பா எனக்கு புரியும் படி எழுதிய கொடுத்ததையும் வைத்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் நல்ல வேளை அவைகளை தூக்கி போடவில்லை. ! வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முழு பேட்டியும் இங்கே பதிவு செய்ய பார்க்கிறேன்.

Comments

  1. இப்படி கையெழுத்து பிரதியில் பதில் கிடைப்பது அரிது... வாத்தியாரின் முழு பேட்டியையும் சீக்கிரம் போடுங்கள் ப்ளீஸ்...

    ReplyDelete
  2. அன்புள்ள தேசிகன்,

    வணக்கம். நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னாடி 'விளையாட்டா..' எழுத ஆரம்பித்ததிலிருந்து ஒரு பதிவையும் விடாமல் படித்து வருகிரேன், ஆனால் இதுதான் மூன்றாவது கடிதம். பில்லா (அஜித்) வெளியான போது ஃபோனில் பேசி இருக்கிறேன். சோம்பேறித்தனம்தான் காரணம். அற்புதமான பதிவுகள். காத்திருந்து தினமும் வந்து பார்த்து, புதிதாய் ஏதாவது எழுதியிருந்தால் உற்சாகமடைகிறேன்.. நிற்க. இப்பவும் இந்த கட்டுரையில் உள்ளது வாத்தியார் கையெழுத்துதானென்று நினைக்கிறேன்... விஷயம் இதுதான்: இந்த கையெழுத்து எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது.. ஆனால் நான் உங்களைவிட மிகவும் சிறியவன். பயமாய் இருக்கிறது...

    முழு க‌டித‌த்தையும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறேன்.

    உங்களை மாதிரி பிஸியாக இருப்பவர்களை நிறைய‌ எழுதுங்க‌ள் வ‌ற்புறுத்த‌ மாட்டேன்... ஆனால் விடாம‌ல் எழுத‌வும். மிக்க‌ ந‌ன்றி.

    ஆண்டாள் மற்றும் அமுத‌ன் ந‌ல‌மா?

    அன்ப‌ன்,
    திரும‌லைச்சாமி.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திருமலைச்சாமி,
      என் எழுத்தை நீண்டகாலமாக நீங்கள் படிப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் பேசியது எனக்கு நினைவில் இல்லை, மன்னிக்கவும். தினமும் ஏதாவது எழுத ஆசை தான் முடிவதில்லை, ஆனால் வேலை பளு காரணம் இல்லை. நீங்கள் எதற்கு பயப்பட வேண்டும் ? குழந்தைகள் நலம். அன்புடன், தேசிகன்

      Delete
  3. Hi Desikan Im waiting for your post on sujathas interview after a long time im back to your blog . I like your writings especially the ones you write about trees and plants are really interesting

    ReplyDelete

Post a Comment