6. வைத்தமாநிதி திருக்குருகூருக்குள் நாதமுனிகள் நுழைந்தபோது, கதிரவன் மெதுவாக எட்டிப்பார்த்தான். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டன. தாமிரபரணி ஆற்றிலிருந்து வழிந்தோடிய நீர், வழி நெடுகிலும் சிறு வாய்க்கால் போல ஓடிக்கொண்டு இருந்தது. சிறு மீன்கள் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் துள்ளிக்கொண்டு நீர் அழைத்துச் சென்ற பாதையில் காய்ந்த சுள்ளிகளும் இலைகளுடன் சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன. மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தாழ்ந்திருந்தன. அதனால் அவற்றிலிருக்கும் பழங்களைச் சிறுவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிந்தது. வாழை மரங்களும், கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்ந்த நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்து நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன. மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு, அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தன. மின்னிய அக்காட்சியைக் கண்டு நாதமுனிகள் வியந்து பார்த்த அதே சமயம், பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து அமர்ந்தன. அப்போது, வைரத்துளிகள் மொ...