Skip to main content

குழப்பிக் கொட்டின கூழ்

குழப்பிக் கொட்டின கூழ்




இது ஒரு அரிய சமையல் குறிப்பு. முதலில் இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று பார்த்துவிடலாம்.
சென்னை ஃபில்டர்‌ காபி – தலையில் நுறையுடன், சுண்டி இழுக்கும்‌ நறுமணத்துடன்‌ ஒரு பழைய பாத்திரம்‌ நிறைய‌.

ஹைதராபாத்‌ பிரியாணி – தேவையான‌ அளவு‌, அசைவப்‌ பிரியர்களைக்‌ கவரும்‌ வீரியத்துடன்‌ (ரத்தம் சொட்ட சொட்ட)

மலபார்‌ பரோட்டா – சில‌ மெல்லிய‌ அடுக்குகளாக‌, சில‌ சமயம்‌ பிரிந்து செல்லும்‌ தன்மையுடன்‌

மைசூர்‌ பாக்‌ – இனிப்புச்‌ சுவைக்கு ஏற்றவாறு‌, கனமான‌ கட்டியாக ஒன்று.

வடா பாவ்‌ – ஒரு அசாதாரண‌ தனித்துவமான‌ சுவைக்கு

சமையல்‌ கருவிகள்‌:

பெரிய‌ அகலமான‌ பாத்திரம்‌(கதிரவன் ஸ்டோர்ஸ்). அனைத்தையும்‌ கலக்க‌ ஒரு பெரிய‌ கரண்டி(LCU பிரண்ட்). மின்சார இண்டக்‌ஷன் அடுப்பு. ஒரு தங்க வாட்ச் ( டைம் பார்க்க). ஒரு பெரிய நாற்காலி (சமையல் முடிந்த உடன் உட்கார ).

முழு சமையல் நேரம் - சுமார் 2.50 நிமிடம்.
செய்முறை. ஃபில்டர் காபியை சற்றே பெரிய பழைய பாத்திரத்தில் ஊற்றவும். நம் சமையலுக்கு ஒரு கிளாசிக்‌ துவக்கத்தைக்‌ கொடுத்து, 'ஆஹா' போட‌ வைக்கும்‌. அடுப்பை மிதமான‌ தீயில்‌ வைத்து, சுமார்‌ 30 நிமிடங்கள்‌ கொதிக்க‌ விடவும்‌.

பிறகு மலபார்‌ பரோட்டாவின்‌ மென்மையான‌ அடுக்குகளைப்‌ பிரித்து, கவனமாக‌ தூவவும்‌. இது எதிர்பாராத‌ மென்மையையும்‌, மாறுபட்ட‌ வடிவத்தையும்‌, சில‌ சமயம்‌ சரியாக‌ ஒட்டாமல்‌ குழப்பத்தையும்‌ சேர்க்கும்‌. அடடா, இந்த சுவை எப்படி என்று வியக்கவும்‌ கூடும்‌! இந்த‌ அடுக்குகளைச்‌ சேர்த்தவுடன்‌, அடுப்பின்‌ தீயைக்‌ குறைத்து, 30 நிமிடங்கள்‌ மூடி வைக்கவும்‌.

அடுத்ததாக‌, ஹைதராபாத்‌ பிரியாணியின்‌ வீரியமான‌ சுவையை‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக‌ சேர்க்கவும்‌. (இது கலவைக்கு ஒரு தனித்துவமான‌ மசாலா நிறைந்த‌ திரில்லிங்கான‌ சுவையைக் கொடுக்கும்.) அடுப்பின்‌ தீயை சற்று அதிகரித்து, சுமார்‌ 45 நிமிடங்கள்‌ வேகவிடவும்‌. பிரியாணி சுவை நன்கு கலக்க‌ வேண்டும்‌.

ஃபில்டர் காபி, மலபார் பரோட்டா, ஹைதராபாத் பிரியாணி மூன்றும் சேர்ந்து கொதிக்க, சுமார் 2 மணிநேரம் ஆன பின் அடுப்பை அணைத்துவிட்டு பெரிய கட்டியான மைசூர்‌ பாக்கை எடுத்து உடைத்து இதன்‌ மேல்‌ நெய்‌ வாசனையையும்‌ தூவி, மீதமுள்ள‌ சூட்டிலேயே 15 நிமிடங்கள்‌ அப்படியே விடவும்‌.

சூடு குறைந்த பின் இந்த கலவையை வடையை போல தட்டி, பாவ் (பாம்பே ஸ்டோர்ஸில் கிடைக்கும்) நடுவில் வைத்து சாப்பிடவும்.

இந்த‌ 'குழப்பிக் கொட்டின கூழ்' அனைத்து சுவைகளையும்‌ ஒருங்கிணைத்து ஒரு புதிய‌ விருந்தாக‌ அமைந்ததா, இல்லையா என்பதை அவர் அவர் தைரியமாக சுவைத்தப் பின்னே தெரியும்.

கடைசி எச்சரிக்கை: இது கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

-சுஜாதா தேசிகன்

15.08.2025 

Comments

  1. சுவைக்க (பார்க்க) விருப்பம் இல்லை. படிக்கும்போதே அருவருப்பு தோன்றியது.... :) சினிமாவிற்கான இப்படி ஒரு விமர்சனம் இது வரை படித்ததில்லை....

    ReplyDelete
  2. Wonderful review. A perfect one. This is what I exactly felt after watching Coolie. Hats off to you for the consolidation and humorous narration 😀

    ReplyDelete

Post a Comment