5. மதுரகவி
மதுரைச் சங்கத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னே, வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரந்து விரிந்த தமிழ் தேசத்தில், தென்திசையான பாண்டி நாட்டில், அகத்திய குறுமுனிவர் தம்முடைய சீடர்களுடன் ஒரு சங்கம் அமைத்துத் தமிழ்ப் பயிரைப் பொதிய மலையிலே[1] வளர்த்தார். அதனால் இம்மலை அகத்தியமலை என்றும் பெயர் பெற்றது.
ஆனால் இம்மலைக்குச் செல்வது ஆபத்து என்று ஒரு கதை உண்டு[2].. சீதையைத் தேடப் புறப்படும் வானர வீரர்களை நோக்கிச் சுக்ரீவன் வழி விவரிக்கையில், “அகத்திய மலையில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்கிறான். தமிழ் முனிவரும், தமிழ் சங்கமும் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து நிகழப்போகிறது என்று அனைவரும் யோசிக்க, சுக்ரீவன் சொல்கிறான், “பொதிய மலையைத் தூரத்திலிருந்து கண்டதும், ‘என்ன அழகான மலை! அங்கே அகத்திய குறுமுனிவரை வணங்கிவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றும். அதுவே ஆபத்து! அங்கே எப்போதும் தமிழ்ப் பாடல், தமிழிசை, தமிழ்க் கூத்து என முக்கனிகள் போல மூவகைத் தமிழ் விருந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். அத்தகைய விருந்தை விட்டுப் போக யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே சென்றால் சீதையைத் தேடும் ராம காரியம் மறந்துவிடும். அதனால், பொதிய மலையிலிருந்து, தமிழோடு பிறந்த பொன் நிறைந்த நீர் பெருகுகின்ற தாமிரபரணி ஆற்றைக் கடந்து ஒரே ஓட்டமாக ஓடித் தென்கடலை அடையவேண்டும்” என்று சுக்ரீவன் அறிவுரை கூறினான்.
இத்தகைய தென்பாண்டி நாட்டில், பெருநை என்ற தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குருகை என்ற திருக்குருகூர். திருக்குருகூருக்கு மிக அருகில் திருக்கோளூர் என்ற புண்ணியத் தலத்தில், கணநாயகரான குமுதனின் அம்சமாகவும், குளிர்ந்த வானில் பறக்கும் கருடனின் அம்சமாகவும், சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் முன் குடுமி அந்தணர் குலத்தில் அவதரித்தவர் மதுரகவிகள். தென்மொழி, வடமொழி கலைகளையும், வேத வேதாந்தங்களையும் நன்கு கற்று உணர்ந்து, மெய்யுணர்வு பெற்று, விஷ்ணு பக்தி மிஞ்சி, அவ்வன்பினால் மா, பலா, வாழை என்னும் முக்கனி ரசத்தை, தேன், பால், சக்கரையுடன் அமுதம் போன்ற தமிழ்மொழியில் மதுரமான செஞ்சொற்களால் பெருமானுடைய கீர்த்தியை விவரித்துக் கவிகளைப் பாட வல்லவராயிருந்ததனால் அவருக்கு மதுரகவியார் என்ற பெயர் உண்டானது.
விஷ்ணு பக்தியில் சிறந்து, யோக நிஷ்டையிலும் தேர்ந்த அவருக்குத் திருப்தியும், சாந்தியும் ஏற்படவில்லை. அயோத்தி, மதுரா, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்று பாரத தேசம் முழுவதும் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டு அலைந்து திரிந்தார். சந்திக்கும் அறிஞர்களுடனும், பக்தர்களுடனும் பழகினார். எனினும் உள்ளத்துப் பசியை அவை போக்கவில்லை. அவருக்குத் தேவையான உகப்பான விஷயம் எங்கும் கிடைக்கவில்லை. ஜீவனைக் குறித்த சந்தேகங்கள் அவர் ஆழ்மனதில் தேங்கியிருந்தன.
வடமதுரை, துவாரகை முதலான கண்ணன் திருவடி பதிந்த நிலங்களில் பெருமாளை நினைத்து நெஞ்சுருகினார். அயோத்தியில் சக்கரவர்த்தி திருமகனை சேவித்து, அங்கேயே சிலகாலம் தங்கியிருந்தார். எனினும் இதயம் ஆறுதல் பெறவில்லை. அவர் உள்ளம் ஞான வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய ஒரு குருவைத் தேடித் தவித்தது.
ஒரு பின் மாலைப் பொழுதில், ‘எவ்வளவோ காலமாக அலைந்து திரிந்துவிட்டேன்! நான் பிறந்த திருக்கோளூரிலிருந்து நெடுந்தூரம் ராம, கிருஷ்ணாதி அவதார ஸ்தலங்களுக்கே வந்துவிட்டேன். இனி எங்கே போவது? ஒன்றும் புரியவில்லையே’ என்று தம் ஊர் இருக்கும் திசையை நோக்கி, அங்கே குடிகொண்டிருக்கும் வைத்தமாநிதியை ஏக்கத்துடன் நோக்கி ‘அகமும் புறமும் இருளாக இருக்கும் இந்த இருளைப் போக்கி மெய்ஞான ஒளியைக் காட்டுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்.
அப்போது அந்தத் திசையில் சூரியோதயமாகி விட்டது போலத் தோன்றியது. “இதென்ன, அந்தத் திசை முழுவதும் நெருப்புப் பிடித்து எரிகிறதே! காட்டுத் தீயோ?” என்று நினைத்தார். அடுத்த மூன்று இரவும் அந்த ஒளியின் பிரகாசம், எல்லாச் சூரியன்களும் ஒன்றாக ஒளிர்வது போல, வானுற வளர்ந்த திவ்யமான பேரொளியின் ரகசியத்தைக் கண்டறிய வேண்டும் எனத் தோன்றியது. அதைச் செய்யாமல் இந்த இடத்திலேயே இருப்பது புத்திசாலித்தனமாகாது என்று எண்ணி, அந்தச் சோதியையே குறியாகக் கொண்டு, அதிவேகமாய் தென் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நதிகள், மலைகள், அடவிகளை[3] கடக்கப் பகலில் ஓய்வெடுத்து, இரவெல்லாம் அண்டங்களைத் துளைத்துக் கொண்டு, ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சிகளைப் போன்ற அந்தச் சோதியே வழிகாட்ட, இரவில் அதை நோக்கி வழிநடந்தார். இவர் நடக்க நடக்க, அச்சோதி அவரை தெற்கு பக்கம் இழுத்துக்கொண்டு சென்றதை அவர் உணர்ந்தார்.
பாவங்களை எல்லாம் போக்கிப் பரமபதத்தை அளிக்கக்கூடிய திருமலையை அடைந்து, அதில் கருணையாகிய மேகம் போன்ற வேங்கடவனைத் தரிசித்துவிட்டு அங்கே இந்த ஒளியின் ரகசியம் புலப்படும் என்று எண்ணினார். ஆனால் அந்த ஞான மலையில் அவருக்கு விடை கிடைக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டு, திருவரங்கத்தில் காவிரி ஆற்றங்கரையில் சயனித்துக் கொண்டிருக்கக்கூடிய தாமரைக் கண்ணும், சிவந்த வாயும் உள்ள அமுதமயமான புனிதனாகிய அழகிய மணவாளனைக் கண்டு திருவடி தொழுது, இரவில் அந்த ஒளியைத் தேடினார். ஆனால் அங்கேயும் அதற்கு விடை கிடைக்கவில்லை. அந்த ஆனந்த சோதி காவிரித் தீரத்திற்கும் தெற்கே திருமாலிருஞ்சோலையில் தெரிந்தது.
அங்கிருந்து புறப்பட்டு, தேவர்கள் துதிக்கும் திருமாலிருஞ்சோலைக்கு வந்தடைந்தார். அங்கே அழகனை வணங்கி, வேதத்தின் முடிவில் விளங்கும் மேகம் போன்ற கூடலழகப் பெருமாளின் திருவடியைத் தொழுது, பிறகு வடபெருங்கோயிலுடையானை வணங்கினார். ஆனால் அங்கேயும் அவருக்கு விடை கிடைக்கவில்லை. இப்படிப் போகும் வழியெங்கும் பல திவ்ய தேசங்களில் அந்த ஒளியின் மூலத்தைக் கண்டுகொள்ள முயன்றார். வெகுதூரம் ஒளியைத் தேடி வந்துவிட்டோம் ஆனால் அந்த ஒளியோ நம்மை தெற்கு நம் ஊரை நோக்கி இழுக்கிறதே என்று நம்பிக்கை இழக்காமல் பயணத்தைத் தொடர்ந்தார். பாண்டியநாட்டில் உள்ள பதிகளுள் ஒன்றான குருகூரை அடைந்து, தாமிரபரணி தீரத்துக்கு வந்து, அவ்வூரைத் தாண்டிச் சென்றபின் தென் திசையில் தெரிந்த அந்தப் பேரொளி, வடக்கே தெரிந்தது!
“கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!” என்று அதிவேகமாகக் குருகூருக்குள் நுழைந்தார். மாட மாளிகைகள் சூழ்ந்த அந்த ஊருக்குள், ‘பொலிந்து நின்ற பிரான்’ கோயிலுக்கு அருகே சென்றபோது அவ்வொளி தலைக்கு மேல் தெரிந்தது. கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் அவ்வொளி மறைந்தது. வட நாட்டிலிருந்து கண்ட எல்லையற்ற ஞானப் பேரொளி மாயமாக அடங்குவதைக் கண்டு, அவ்விடத்தைப் பிரதட்சிணம் செய்து, விமானத்தை வணங்கி, தனக்குத் தாயாகவும், தந்தையாகவும் விளங்கக்கூடிய பொலிந்து நின்ற பிரானைத் தொழுதார். பின், தான் கண்ட அதிசயத்தை ஆராயும் நோக்கில்,
“இந்த ஊரில், இந்த இடத்தில் ஏதாவது விசேஷமுண்டோ?” என்று ஊர் மக்களை விசாரித்தார். அவர்கள் கோயிலுக்குள் இருக்கும் புளியமரத்தைக் காட்டி, “இங்கே ஒரு குழந்தை, பெற்றெடுத்த தாய் கொடுத்த முலைப்பாலை அருந்தாமல், குழந்தை செய்யும் சேட்டைகளைச் செய்யாமல், ஒரு நாளும் வாய் திறந்து அழவோ, பேசவோ இல்லை. ஒரு முறை கூட மலஜலம் கழிக்கவில்லை. கண் விழிக்காமல் தியானத்தில் இருக்கிறது! உலக வழக்கத்திற்கு மாறாக வளரும் அக்குழந்தையை ‘மாறன்’ என்று அழைக்கிறார்கள். வேதங்கள் கற்ற பெரியோர்கள் எம்பெருமானின் செயல் என்றார்கள். குழந்தையை இப்பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் கொண்டு வந்து விட, அக்குழந்தை திடீரென்று தவழ்ந்து சென்று அங்கே இருக்கும் புளியமரத்தின் பொந்தினுள் புகுந்து, அங்கேயே பேச்சுமூச்சு இல்லாமல் ஞான முத்திரையில் வீற்றிருக்கிறான். உணவேதும் இல்லாமல், கண் விழியாது தியானத்திலேயே பதினாறு ஆண்டுகள் கழிந்துவிட்டன” என்றார்கள்.
மதுரகவிகள் புளியமரத்துக்கு அருகில் சென்றார். அதன் பொந்தில் பாலகன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். கண்கள் மூடியிருந்தாலும் முகம் தான் பார்த்த அந்தச் சோதியைப் போலப் பிரகாசமாகவும், சாந்தமாகவும் காட்சியளித்தது. அந்த மெய்ஞ்ஞானச் குழந்தையின் தோள்களில் சங்கு சக்கர இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்த மதுரகவிகளின் மனதில், ‘இவரே தன் ஆசாரியன்’ என்ற எண்ணம் உண்டாயிற்று. இவரிடமிருந்து புறப்பட்ட ஞான ஒளி எல்லையற்றதாய் எல்லா இடங்களிலும் பரவி மதுரகவிகளின் மனக் கண்ணுக்குள் சூட்சுமமாக வியாபித்துக்கொண்டது.
இந்தச் சோதி இயற்கைக்கு அப்பாற்பட்டு நெடுந்தூரம் தெரிந்ததில் ஆச்சரியமில்லை என்று மதுரகவிகள் எண்ணினார். ‘இந்தப் பாலகன் மனித ரூபம்தானா? அல்லது அபிநவ கிருஷ்ண அவதாரமோ?’ என்ற ஐயம் உண்டாயிற்று. குழந்தை வளர வளர புளியமரமும் வளர்ந்திருப்பதைக் கண்டால், இப்புளியமரம் ஆதிசேஷன் அவதாரமோ? ‘நம்மைப் போல் உணர்ச்சி உண்டா? செவி கேட்குமா?’ என்று எண்ணிய மதுரகவிகள், உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து கீழே விழுமாறு போட்டதும், ‘தடால்’ என்ற பெரிய சப்தம் கேட்டு, உள்ளத்தால் உறங்காத அக்குழந்தை தன் கண்களைத் திறந்து மதுரகவிகளையே நோக்கி மலர விழித்தது!
இந்த அதிசயத்தைக் கண்டு அங்கே கூட்டம் கூடியது.
மதுரகவிகளுக்கு, ‘அடடா! இப்படி ஒரு பக்திக் குறைவான காரியத்தைச் செய்தோமே!’ என்று தோன்றியது. இருந்தாலும், தான் செய்த சோதனை வெற்றி பெற்றது என்று அந்தப் பாலகனின் கண்கள் மலர விழித்தபோது உள்ளம் சிலிர்த்த மதுரகவிகள், பல இடங்களில் திரிந்து தேடிய புதையலைக் கண்ட உவகை அவர் உள்ளத்தில் குடிகொண்டது.
அருள் விழிகளின் முதல் தரிசனம் பெற்ற மதுரகவிகள், அவர் பேச்சைக் கேட்கலாம் என்று கருதி, அவர் மனதில் பல காலமாக சஞ்சரித்துக்கொண்டிருக்கும் விடை தெரியாத வினாவைக் கேட்க நினைத்தார். பஞ்சபூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் ஏற்பட்ட உயிரில்லாத இவ்வுடலில், அணு வடிவான சிறு ஜீவனின் தொடர்பு ஏற்பட்டால் அது எதை அனுபவித்து எங்கே இருக்கும்? என்ற ஐயத்தை, ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று புதிரான சிறு வினாவாகக் கேட்க,
இதற்கு அப்பாலகன், ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று நொடிப் பொழுதில் அதைவிடச் சிறிதாகப் பதிலளித்தார்.
இதைச் செவிமடுத்த மதுரகவிகள், மகிழ்ச்சிப் பெருக்கில், சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று தத்துவங்களின் உபதேசமாக அது விளங்கியது. ‘எம் சடகோபரே!’ என்று விழுந்து வணங்கினார்.
சகல நூல்களையும், சகல கலைகளையும் கற்று, சகலரையும் கேள்விகேட்டுத் திருப்தி பெறாத மதுரகவிகள் ஏவிய கேள்விக் கணையும், அதற்கு அவருக்குக் கிடைத்த விடையின் பொருளையும் வாசகர்களுக்கு விளக்குவது நம் கடமையாகிறது.
‘செத்தது’ என்பது சடப்பொருளான நம் உடலைக் குறிக்கும். ‘சிறியது’ என்பது அணுவை விடச் சிறிய ஆத்மாவைக் குறிக்கும். சடமாகிய சரீரத்தில் ஜீவாத்மா சம்பந்தப்படும்போது அதன் தேக யாத்திரையைத் தொடங்கி அது எதை அனுபவித்து எங்கே இருக்கும்? என்ற மதுரகவியின் கேள்விக்கு விடையாக, அந்தப் பாலகன், அந்த ஆத்மா ஐம்புல வேட்கைகளில் ஈடுபட்டு, நல்வினை தீவினைகளை அனுபவித்து இவ்வுலக மாயப் பிறவிகளிலேயே அமிழ்ந்து கிடக்கும் என்று உணர்த்தினார். இந்த பதிலால் உலகத்தின் இயல்பை அறிந்து கொண்ட மதுரகவிகள், வேறு ஒன்றையும் அறிந்துக்கொண்டார். பஞ்சபூதங்களால் ஆன உடல் இருந்தும், உலக வழக்கத்திற்கு எல்லாம் மாறுபட்டு, உணவும் உடையும் என்று உலகியல் பற்றுகள் இல்லாமல் அந்தப் புளியமரத்துப் பொந்தில் இருந்த பாலகன் எதை உணவாகக் கொண்டு, எதைப் பற்றியுள்ளார்? ஏன் மற்றவர்களைப் போல சுக துக்கங்களில் உழலவில்லை? உடல் இருந்தும் அதைப் பற்றாமல் எதைப் பற்றிக்கொண்டு இந்தப் புளிய மரத்தின் பொந்திலே கிடக்கிறார்? என்ற கேள்விக்கும் விடை கிடைத்தது.
சிறுமாமனிசர் வடிவால் சிறியராய், ஞானத்தால் பெரியவராக விளங்கும் இக்குழந்தையின் ஜீவாத்மா பரம்பொருளான திருமாலின் குணங்களில் ஈடுப்பட்டு, அந்தக் குணங்களையே உணவாகக் கொண்டு, அவன் திருவடிகளையே தஞ்சம் எனக் கொண்டு, அவன் சந்நிதியில் உள்ள புளிய மரப் பொந்திலே கிடக்கின்றது என்பதையும் உணர்ந்தார். உலக வழக்கத்திற்கு மாறாக வளரும் அக்குழந்தைக்கு ‘மாறன்’ என்று பெயர் வைத்தது மிகவும் பொருத்தம் என்று வியந்தார்.
தாயின் கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும் சிசு ‘சடம்’ என்ற உலகக் காற்றையே முதலில் தன் மூக்கினால் நுகர்கிறது. இக்காற்று உடலில் புகுந்ததும், உலகின் அஞ்ஞானத்திற்கும், உடலால் ஏற்படும் சுக துக்கங்களுக்கும் அடிமையாகிறது. ஆனால், மாறனோ, அந்தச் சடம் என்ற காற்றை ‘ஊம்’ என அதட்டி அதை உள்ளே நுழையாதபடி தடுத்து ‘சடகோபனாக’ இருப்பதை அறிந்த மதுரகவிகள் அவருக்குக் காதலுடன் அடிமை செய்வதே என் பயன் என்பதை உணர்ந்துகொண்டார்[4].
ஜீவாத்மாவிற்குப் பரம்பொருளான ஈசுவரனிடம் சிறிது பக்தி ஏற்பட்டால்கூட, அந்த எம்பெருமானிடம் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும் என்ற சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று தத்துவங்களான ‘தத்துவத் திரயம்’ என்ற வைணவ சமயத்தின் சாறு அவருக்குக் கிடைத்தது.
வயது முதிர்ந்த மதுரகவி என்ற அந்தண யோகி, தன்னைவிட மிக இளையவரான வேளாள குலக் குழவியின் திருவடிகளில் அப்படியே விழுந்து, தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சரணாகதி செய்தார். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆசாரிய சரணாகதி அன்று துவங்கியது.
‘அகத்து உறை அழகனே’ என்று கிருஷ்ண பக்தியில் ஆழமாக மூழ்கியிருந்த மாறன் சடகோபன், தமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்த உகப்பில், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று பாடினார். நான்கு வேதங்களின் சாரமாக இந்த நான்கு பிரபந்தங்களின் ஈரத் தமிழ் சொற்களை மதுரகவிகள் செவிமடுத்து, பட்டோலை கொண்டு எழுதினார். உள்ளத்தை உருக்கி, உள்ளொளி பெருக்கும் ஆழ்வாரின் பாசுரங்களைப் பாடிப் பாடி பரவசநிலை பெற்று, ஆழ்வாரைத் தவிர தமக்கு வேறு தெய்வம் இல்லை[5] எனக் கருதி ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று சடகோபனைக் குறித்துப் பாமாலை பாடினார். சடகோபனின் பிரபந்தங்கள் கொண்ட ஓலைகளைத் தம் சிரசில் தாங்கிக்கொண்டு,
வேதம் தமிழ் செய்த விமலர் வந்தார்!
உரிய தெய்வப் புலவர் வந்தார்!
அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்!
ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியர் வந்தார்!
திருகுருகூர் நம்பி வந்தார்!
என்று ஆடிப் பாடி கொண்டாடிய அதே இடத்துக்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நாதமுனிகள் முழுக்க நனைந்து வந்து சேர்ந்த சமயம், ஆதவன் மெதுவாக உதிக்கத் தொடங்கி, பறவைகள் உல்லாசமாய் பாடிக் கொண்டே சூரியனையும், நாதமுனிகளையும் வரவேற்றன. அன்றைய சூரியோதயம் மீண்டும் வைணவத்தின் ஞானயோகமாக அமையப் போகிறது என்று பொலிந்து நின்ற பிரான் காத்துக்கொண்டிருந்தார்.
-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
________________
[1] பொதிகை மலை என்றும் கூறுவர்
[2] கம்ப இராமாயணம் பாடல்
தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர்.
[3] காடுகள்
[4] கண்ணிநுண் சிறுத்தாம்பு -
சடகோபன் என் நம்பிக்கு * ஆட்
புக்க காதல் * அடிமைப் பயன் அன்றே
[5] கண்ணிநுண் சிறுத்தாம்பு -
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
Comments
Post a Comment