Skip to main content

பகுதி 2 - விதை நெல்

 2.விதை நெல்



ஒரு மரத்தின் கிளை காலப்போக்கில் ஒவ்வொன்றாய் உதிர்ந்து போவது போல, ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய அருளிச் செயல்களாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம், அவர்கள் காலத்திற்குப் பின் ஓதுவிப்பார் இன்றி மறையத் தொடங்கின. அவ்வேளையில், பௌத்த, சமண சமயங்கள் பரவித் தழைத்து, மறைபொருளின் உண்மைத் தன்மை திரிக்கப்பட்டு, மாறுபட்ட கொள்கைகள் தலைதூக்கின. அப்போதைய அரசர்களும் தாங்கள் தழுவிய சமயங்களால் மக்களிடையே பல பிரிவினைகள் தோன்றி, அதனால் ஏற்பட்ட பூசல்களால் தெளிவற்ற சூழல் நிலவியது. குடிமக்களும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பண்டைத் தமிழ்ப் பண்பாடாகிய நாராயணனே முழுமுதற் கடவுள் என்னும் நிலை குலைந்து, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் காலவெள்ளத்தில் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமன்றி, ‘வைகுந்தம் புகுவார்’ என்னும் ஆழ்வார் பாசுரங்களை ஓதினால் மேன்மை மிக்க முக்தியடைவர் எனப் பொருள் கொள்வதற்குப் பதிலாக, அவை ‘கொல்லும் பாட்டு’ என்று தவறான முத்திரை குத்தப்பட்டு, அவற்றைத் தாங்கிய ஓலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயினும், ஆங்காங்கே தமிழ்ப்பண்பில் ஊறித் திளைத்த சில பெரியோர்கள், நாராயணனே முழுமுதற் கடவுள் என்னும் வைணவ நெறியை வளர்த்து வந்தனர். அவ்வாறு வளர்த்தவர்களுள் ஒருவர் தான் நாதமுனிகள். நாதமுனிகள் வம்சப் பரம்பரை, ‘சடமர்ஷ்ண’ கோத்திரத்தைச் சார்ந்தது.

‘சடமர்ஷ்ண’ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானத்தைப் பெற்றவர்கள். பிறந்தவுடனேயே தங்களை அழுத்த வந்த ‘சடம்’ என்னும் வாயுவைத் தங்களைச் சூழ்ந்துகொள்ளாதவாறு விரட்டி அடித்தனர். இதனால் இவர்களுக்கு இளமையிலேயே ஆழ்ந்த தத்துவ ஞானம் பெற்று, அவ்வம்சத்தவர்கள் விஷ்ணு பக்தர்களாக விளங்கினர்.  

நாதமுனிகளின் தந்தையான ஈஸ்வரபட்டாழ்வார், இங்கே வீற்றிருக்கும் வீரநாராயணப் பெருமாளுக்குக் காலம் காலமாகத் திருப்பணி செய்து வந்தார். இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது; அதற்கு அடுத்துப் பிறந்தவரே நாதமுனிகள். தந்தையின் திருப்பணியைத் தொடர்ந்த அவர், தம் தந்தையின் நினைவாகத் தன் புத்திரருக்கும் ஈஸ்வர முனிகள் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்து, தந்தையிடம் கற்றுக்கொண்ட விஷ்ணு பக்தியையும், திருப்பணிகளையும் அவருக்கும் கற்றுக்கொடுத்தார். இத்தகைய பெருமைகளோடு இங்கே வாழ்ந்த இவர்களைச் சொட்டைக்குலத்தவர்கள் என்று அழைப்பர்.

சில வேளைகளில், கண்ணுக்குப் புலப்படும் ஒரு சிறிய நிகழ்வு, பெரும் மாற்றங்களை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. அந்நிகழ்வு நிகழும் காலத்தில், அதன் பின்விளைவுகள் எவை என்பதை நம்மால் அறிய இயலாது. மண்ணில் விழும் சிறு விதை, சாதாரண தானியமாகத் தோன்றலாம். ஆனால், தக்கச் சூழல் அமையுமானால், அது முளைத்து, காலப்போக்கில் உயர்ந்து நிற்கும் ஒரு பெரும் ஆலமரமாகப் பல தலைமுறைகளுக்கு நிழலும், உயிர்களுக்கு வாழ்விடத்தையும் வழங்கும். விதைக்கப்பட்டபோது இதன் முழுப் பரப்பையும், எதிர்காலப் பயனையும் எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஏறக்குறைய மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து, ஆழ்வார்களின் அருளிச் செயல்களும் ஒரு விதை போல மீண்டும் உலகுய்ய வெளிப்படவிருக்கும் தருணம் இது. வாருங்கள், நாமும் யாத்திரிகருடன் கோயிலுக்குள் செல்லலாம்.

வீரநாராயண பெருமாள் கோபுரம் சிறியதாக இருந்தாலும் யாத்திரிகர்கள் அதன் அழகை ரசித்து, கொடிமரம் முன் விழுந்து வணங்கினார்கள். அதில் இருந்த சிறுவன் பெருநல்துறைவன்[1] சற்று துடுக்குடன், விரைந்து நடந்தான். கோபுரத்தின் கலசங்கள் காலைக்கதிரவன் ஒளியில் பொன்னாக மின்னியது. இயற்கைச் சீற்றத்தால் ஊரில் பஞ்சம் ஏற்பட்டால், மீண்டும் விவசாயம் செழிக்க விதை நெல் கோபுரக் கலசங்களில் பாதுகாக்கப்பட்டது. இது நம் மூதாதையர்களின் முன்னேற்பாடு.

ஆழ்வார் பாசுரங்கள் மறைந்து பக்தி பஞ்சத்தைப் போக்க வீரநாராயணப் புரத்துக்குப் பத்து விதை நெல்லுடன் இந்த வைணவ யாத்திரிகர்கள் நாதமுனிகளைப் பின் தொடர்ந்தார்கள் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை!

கோயிலைச் சுற்றியிருந்த நந்தவனத்தால் கவரப்பட்ட அவர்கள், “அடடே! என்ன அழகான மலர்கள்! இந்த வெண்ணிற மலர்கள் நந்தியாவட்டை தானே? திருவரங்கத்திலும் இதே போல் ஒரு தோட்டத்தைக் கண்ணுக்கு இனியன கண்டோம், அதற்கு நிகராக நீங்களும் மிக அழகாக அமைத்துள்ளீர்கள்” என்றார் ஒரு யாத்திரிகர்.

நாதமுனிகள் ”ஆம் இந்தப் பூக்கள் நந்தியா வட்டை. இக்கோயிலின் ஸ்தல விருட்சம். இதோ இருக்கிறதே அந்த மண்வெட்டி அதுபோல நானும் ஒரு கருவி! இந்தத் தோட்டத்தை உள்ளே இருக்கும் வீரநாராயண பெருமாள் என் மூலமாக அமைத்துக்கொண்டான். இன்று உங்களைக் காண வேண்டும் என்று அவன் உள்ளத்தில் நினைத்துவிட்டான். உங்களை இங்கே வரவழைத்துள்ளான்! எல்லாம் அவன் நடத்துகிறான்!” என்றார்.

எல்லோரும் சந்நிதிக்கு முன் வந்து நின்றார்கள். ஈஸ்வர முனிகள் புஷ்பக் கூடையைத் தலையில் சுமந்து உள்ளே சென்று மூலஸ்தானத்துக் கதவை மெதுவாகச் சாத்தினார். மாலை, சந்தனம் முதலியன சாத்தி விஸ்வரூபத்துக்கான சாத்துப்படி அலங்காரங்களை உள்ளே செய்ய ஆரம்பித்தார்.

கதவுக்கு வெளியே யாத்திரிகர்களும், நாதமுனிகளும் காத்திருந்தபோது, ஒரு யாத்திரிகர் நாதமுனிகளைப் பார்த்து "உங்களுக்கு இந்த அழகிய வீரநாராயண புரம் தான் பூர்வீகமா?" என்று விசாரித்தார்.

நாதமுனிகள் “ஆம்! நாங்கள் சொட்டை குலத்தவர்கள். எங்கள் பூர்வீகம் இந்த வீரநாராயண புரம் தான். சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப சகிதமாக ராமரும், கண்ணனும் அவதாரங்கள் எடுத்து வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வணங்க வேண்டும் என்று பெருகிய ஆர்வத்தால் வட தேசங்களுக்கு யாத்திரையாகக் கிளம்பினோம்.

மழையினின்று காக்கக் குடை ஏந்தி எழில் கொஞ்சும் கோவர்த்தனப் பர்வதத்தையும், அழகிய கோபியர் கண்ணோடு குலாவிய பிருந்தாவனம் என்று அவன் திருவடிப்பட்ட இடங்களையெல்லாம் கொஞ்சமாவது கண்ணால் கண்டு அந்த மண்ணைத் தலையில் சூடி கை குவித்து வணங்கியபிறகு தேனொழுகும் பூக்களைச் சூழ்ந்த அயோத்தி மாநகர், வடமதுரை, திருவாய்ப்பாடி, வதரியாச்ரமம் (பத்ரி), என்று வடக்கில் உள்ள ஸ்தலங்களை வேதங்கள் ஓதி வணங்கினோம். பிறகு மேற்கு, கிழக்கு திக்கில் உள்ள திவ்ய தேசங்களைத் தரிசித்துவிட்டு யமுனை கரையில் ஸ்ரீகோவர்த்தனபுரம் என்கிற அழகிய கிராமத்தில் சிறிது காலம் தங்கி வீடுதோறும் பிக்ஷையெடுத்து உண்டு வாழ்ந்து, அங்கே எங்களால் முடிந்த சிறு திருப்பணிகளைச் செய்துகொண்டிருந்த சமயம், இதோ உள்ளே இருக்கும் வீரநாராயண பெருமாள் ஒரு நாள் என் சொப்பனத்தில் வந்து “நம்முடைய வீரநாராயணபுரத்துக்கு மீண்டும் வரமாட்டீரா?” என்று கேட்க, அவர் கட்டளையை ஏற்று காசி வழியாகச் சிங்கவேள்குன்றம் பெருமாளை வணங்கி வரும் வழியில் மேலும் பற்பல திவ்ய தேசங்களைக் கண்டு வணங்கி, அழகிய திருமலை திருவேங்கடவனைத் தரிசித்துவிட்டு, காஞ்சியில் பேரருளானானைத் தொழுது, திருவயிந்திபுரத்து தேவநாதனை அனுபவித்துவிட்டு வீரநாராயணன் கோபித்துக்கொள்வதற்குள் வேகமாக இங்கே சில திங்களுக்கு முன்னரே திரும்பி வந்தோம். அதனால், இந்த நன்னாளில் ’அதிதி தேவோ பவ’ என்று உங்களை உபசரிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றோம்” என்று சொல்லி முடிக்க மணியோசையுடன், தீப ஆரத்தியுடன் கதவு திறந்தது. 

ஈஸ்வர முனிகள் கணீர் என்ற உச்சரிப்பில் “மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீவீரநாராயண பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கீழே உற்சவர் ருக்மணி சத்தியபாமா சகிதம் மாடுமெய்க்கும் திருக்கோலத்தில் ஸ்ரீராஜகோபாலன் பசுமாடு கன்றுடன்... “

உள்ளே கர்பகிரஹத்தில் புகைமண்டலத்தில், நறுமணம மலர்கள் தாயார் மார்பில் பட்டு மலர்ந்தது. குளிர்ந்த திருத்துழாய் மாலைகள் மேலும் குளிர்ச்சியைக் கொடுத்தது. நெய் விளக்குகள் வீரநாராயணனை மேலும் பிரகாசிக்கச் செய்தது. புதுச் சந்தனம் தேவர்கள் கொண்டு வந்தது போல நறுமணம் வீசி அந்த இடமே நித்திய சூரிகள் சூழ்ந்திருக்கும் வைகுண்டம் போலக் காட்சி அளித்தது.

யாத்திரிகர்கள் உள்ளம் குளிர அனுபவித்துக்கொண்டிருந்த போது, பாலகனான பெருநல்துறைவன் இனிய குழலிசைப் போல “ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” என்ற பாசுரத்தைத் தன் தேனினும் இனிய குரலில் பாட ஆரம்பித்தான்.

அவனுடைய இன்னிசை கோயில் கல் தூண்களின் மீது பட்டபோது ’அவை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்ற சொலவடைக்கு ஏற்றார் போலக் கரைந்தது. பாடல்கள் தூணில் பட்டு எதிரொளியாக நாதமுனிகளின் காதுகளுக்கு எட்டியபோது ‘ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே.. ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்’ என்று நாதமுனிகளே தித்திப்பாய்த் திகைத்துப் பரவசத்தில் ரோம கால்கள் குத்திட்டு நின்றன. ’தேவதேவபிரான் என்றே நிமிரும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே’ என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் தேவதேவபிரான் என்று கூறி உதடு நெளியக் கண்களில் நீர் நிரம்ப நெகிழ்ந்து உருகினார் நாதமுனிகள்.

அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் சேவித்த ஆராவமுதே என்ற பாசுரங்களை அருகிலிருந்து கேட்ட நாதமுனிகளின் அனுபவத்தை எழுத்தால் வருணிக்க முடியாத என் இயலாமையை வாசகர்கள் பொறுத்தருள்க.

’ஆராவமுதே’ என்று பாடிய அந்தப் பாடல் நாதமுனிகளின் உள்ளத்தில் ஒரு ஞான விளக்காக எரியத் தொடங்கி ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பேயாழ்வார் அனுபவித்ததை நாதமுனிகளும் அனுபவித்தார் என்றால் அது மிகையாகாது. இந்த ‘ஆராவமுத’ விளக்கு ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் மறைந்து போன அந்த இருண்ட காலத்துக்கே ஒளிரும் விளக்காக அமைந்து, ’குரு’ என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்ற பொருளுக்கு ஏற்றார் போல், ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியக் குருபரம்பரையில் நம்மாழ்வாருக்கு அடுத்த இவரே ஆசாரியர் ஆகப் போகிறார் என்று வீரநாராயணப் பெருமாளைத் தவிர, அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.

நாதமுனிகள் வியந்து, ’அச்சோ! நீங்கள் பாடியது என்ன பாசுரம்? யோகத்தாலே பிரயத்தனம் செய்து கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும் இந்தப் பத்துப் பாசுரங்களால் கண்ணனை அனுபவிப்பது இனிதாயிருக்கிறதே!” என்று மகிழ்ந்து நாதமுனிகளின் கண்களிலிருந்து வழிந்த நீர் பாசுரங்களான விதை நெல் மீது விழுந்தபோது திராவிட வேதம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

அந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடிய அந்தப் பாலகனின் பாதங்களில் நாதமுனிகள் அப்படியே விழுந்தார். வைணவ யாத்திரிகர்கள் புரியாமல் விழித்தார்கள். அவர்களுக்குத் தீர்த்த பிரசாதங்களையும், வீரநாராயணனின் ‘உடுத்து களைந்த’ மாலைகளை அவர்களுக்கு அணிவித்து, மீண்டும் ஒரு முறை அவர்களுக்குத் தீப ஆரத்தி காண்பித்து, குழந்தை தாயிடம் இனிப்புப் பண்டத்தை ‘இன்னும் கொஞ்சம் கொடு’ என்று கேட்பது போல ”தேனிடை கரும்பின் சாற்றைப் போன்ற அந்தப் பாசுரங்களை மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும்” என்று அந்தப் பாலகனிடம் வேண்,  அப்பாலகன் சந்தோஷமாக மீண்டும் பாசுரங்களை இனிமையாகப் பாட ஆரம்பித்தான்.

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே! (1)

இதைக் கேட்ட நாதமுனிகள் ‘ஆரா அமுதே’ என்ன லாவண்யமான தமிழ்ப் பெயர். ‘கறந்த பாலுள் நெய்யே போல்’ இந்தப் பாசுரங்களில் உள்ளேயே இசையும் கலந்து வருகிறதே! ‘ஆரா அமுதே' உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம் பெருமாள் என்ற ஆழ்ந்த பொருளை இந்தப் பாசுரம் எளிதாக வெளிப்படுத்துகிறது! ஆரா அமுதனுடைய சுகானுபவத்தில் ஈடுபட்டு என் உடலே அன்பாகிவிட்டது. அந்த அன்பு நீராகி உருகுகிறது! ஞானமும் ஆனந்தமும் கலந்த வடிவமாக இந்தப் பாசுரத்துக்கு ஈடு உண்டோ? இந்த அமுதம் சாரீரத்துக்குச் சாகாவரம் கொடுக்கும் அமுதம் இல்லை, நம் ஆத்மாவுக்கே இது சாகாவரம் கொடுக்கும் திகட்டாத அமுதமாக இருக்கிறதே” என்றார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே(11)

என்று பாடி முடிக்க,  "குழலோசையைக் காட்டிலும் இனிமையான பாசுரங்களை ஏன் முடித்துவிட்டீர்கள்? மேலும் மேலும் இந்தத் திகட்டாத இன்பத்தைப் பருக ஆசையாக உள்ளது தொடர்ந்து பாடுங்கள்" என்று அச்சிறுவன் முன் கைகளைக் குவித்து வணங்கினார். பாகவதர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.

நாதமுனிகள் கடைசியாகப் பாடிய பாட்டில் ’ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதே! அழகிய தமிழில் வேதத்துக்கு இணையான அவ்வாயிரம் பாடல்களும் தங்களுக்குத் தெரியுமா? இப்பாடல்கள் ஏடுகள் ஏதாவது தங்கள் வசம் இருக்கிறதா? அவற்றை எனக்குக் கூறுவீர்களா? இதைத் தாங்கிய ஏடுகள் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்களா?” என்று நாதமுனிகள் வந்த பாகவதர்களின் முகத்தை வாஞ்சையுடன் நோக்கினார்.

“எங்களுக்கு ஆயிரம் பாட்டுக்களுக்குள்ளே இப்பத்துப் பாடல்கள் மட்டுமே தெரியும். என் பாட்டனார் என் தந்தைக்குக் கற்றுக்கொடுத்ததை நான் என் புதல்வனான பெருநல்துறைவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதையே அவன் இன்று வீரநாராயணன் முன் பாடினான். கடல் சூழ்ந்த இந்த உலகத்தவர் எவருக்கும் மற்றவை தெரிய வாய்ப்பு இல்லை!” என்றார். 

நாதமுனிகள் அவர்கள் பாடிய தண் தமிழ் பத்துப் பாசுரங்களில் உள்ள அழகிலும், ஆழமான கருத்திலும் ஈடுபட்டு தன் மனதை நிலை நிறுத்திக் கொண்டு கண்ணன் திருவடிகளைக் காட்டிய கிருஷ்ணக் காம அமுதத்தை அருளிய குருகூர்ச் சடகோபன் யார்? புல்லாங்குழல் இசையைக் காட்டிலும் உயர்ந்த இந்த ஆயிரம் பாசுரம் யாருக்குத் தெரியும்? என்று அப்பாசுரங்களில் பொதிந்துள்ள திருக்குறிப்புக்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். 

‘ஆரா அமுதை’ தேடிச் செல்ல உடனே முடிவு செய்து எதிரே நிற்கும் வீரநாராயணனை நோக்கிய போது,  காட்டிக்கொடுத்த அக்கண்கள் சென்று வா என்றது!


-சுஜாதா தேசிகன்

பயணம் தொடரும்.. 


________________

[1] நம்மாழ்வாரின் பிறபெயர்களின் ஒன்று;

Comments