4. தமிழ்க்கோயில்
திருவரங்கத்திலிருந்து குடந்தையை நோக்கிக் காவேரி ஓடும் வழியே புறப்பட்டார் நாதமுனிகள். குழந்தையுடன் துணைக்கு வரும் தாய் போல காவிரி காட்சி அளித்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த இடங்களில், நீரின் சலசலப்பு நாதமுனிகளைச் 'சீக்கிரம், சீக்கிரம்' என்று கூறுவது போல இருந்தது.
ஒருபுறம் காவிரியும், மறுபுறம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக இருந்தன. பசும் பயிர் வயல்களும், கரும்பு, வாழைத் தோட்டங்களும், தென்னை மரங்களும் மாறி மாறி வந்தன. நடுவே வாய்க்கால்களும், ஓடைகளும், அதைச் சுற்றிப் பல வண்ணப் பூக்களும் மனதைக் கொள்ளையடித்தன. குளங்களில் செந்தாமரையும், அல்லிப்பூவும் மலர்ந்திருந்தன. அவற்றின் இலைகள் தண்ணீரைக் கவசம் போல மூடியிருந்தன. வயல்களில் கூட்டம் கூட்டமாக நீண்ட கழுத்தையுடைய வெண்ணிறக் கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. குளங்களில் செங்கால் நாரைகள் முனிவர்களைப் போல் தியானத்தில் இருந்தன. மரப் பொந்துகளில் கிளிகள் எட்டிப்பார்த்தன. ஆண் தூக்கணாங்குருவிகள் அழகாக நெய்த கூட்டைப் பெண் குருவிகள் நோட்டமிட, ஆண் குருவியோ தான் கட்டிய கூடு பெண் குருவியைக் கவரவேண்டுமே என்ற கவலை கலந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. தென்னை மரத்தில் அணில்கள் வேகமாக ஏறி, இங்கேயும் அங்கேயும் தாவின. மாடுகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்க, அவற்றின் கழுத்தில் கட்டிய மணியோசையுடன் வண்டுகளின் ரீங்காரமும் சேர்ந்து இசைக்க, இது இந்திரலோகமோ என்று நினைக்கத் தோன்றியது.
இந்த இயற்கைக் காட்சிகளை எல்லாம் நாதமுனிகள் பார்த்துக்கொண்டு சென்றார்; ஆனால் ரசிக்கவில்லை. ரசித்திருந்தால் அவரது நடை மெதுவாக அல்லவா இருந்திருக்கும்! நாதமுனிகளின் அகம் ஆராவமுதத்தில் கரைந்திருந்தது. அவர் நடக்கும்போது பாடிப் பாடி கண்ணீர் மல்கி, “பெருமாளே!” என்று உள்ளம் கதறி, ஒரு தலைவி தன் தலைவனைப் பார்க்காமல் வாடுவது போல, ‘குருகூர் சடகோபனின் பாசுரங்கள் எப்போது தனக்கு கிடைக்கும்?’ என்று ஏங்கியபடி நடந்தார்.
வழிநெடுகிலும் உயர வளர்ந்த செந்நெற்கதிர்கள், கதிரின் கனத்தாலே குதிரை முகம் போலத் தலை வணங்கி, தென்றலில் ஆனந்தமாக அசைந்துகொண்டிருந்தன. திருக்குடந்தை சார்ங்கபாணிக்கு அமுதுபடிக்குப் பயன்படுவதால் இவை ஆனந்தக் கூத்தாடுகின்றன என்று எண்ணியவாறே, நாதமுனிகள் ஓட்டமும் நடையுமாக ஒரு குதிரையைப் போல ‘எங்கும் கோயில் எங்கும் கழனி’ என்று புகழ்வாய்ந்த திருக்குடந்தைக்கு, நகரின் நடுவே அமைந்திருக்கும் ஆராவமுதன் சந்நிதிக்கு வந்தடைந்தார்.
இந்தக் கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊரைப் பற்றித் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
முன்பு ஒரு சமயம், பிரளயக் காலத்தில், பிரம்மா புண்ணியத் தலங்களின் மண்ணைக் கொண்டுவந்து, அமுதத்துடன் பிசைந்து ஒரு குடத்தைச் செய்தார். அக்குடத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்குக் காரணமான ஒரு விதையை இட்டு, நான்கு வேதங்களையும் காப்பாகச் சுற்றிக் கட்டி மேருமலையின் உச்சியில் வைத்தார்.
பிரளய வெள்ளத்தில் மிதந்துவந்த அக்குடம், குடந்தையில் தங்கியது. வெள்ளம் வடிந்ததும், குடத்தின் மூக்கு வழியாக அமுதம் வெளியே பரவியது. அக்குடத்தின் மூக்கு வழியாக அமுதம் பெருகிவிட்ட இடமானதால், இவ்வூருக்குக் குடமூக்கு என்ற பெயரும் வந்தது.
குடந்தையில் தங்கினாலும், அதை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும், அல்லது தங்க நினைத்தாலும்கூட மோட்சம் நிச்சயம் என்பார்கள் பெரியோர்கள். குடந்தையில் தாய் தந்தையரைத் தவிர எல்லாம் கிடைக்கும் என்பார்கள். இத்தகைய பெருமைகளைக் கொண்ட அந்தத் திருக்குடந்தையில், நம்பிக்கையுடன் கோயிலுக்குள் கொடிமரத்துக்கு முன் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தார் நாதமுனிகள்.
மூலவர் ஸ்ரீ ஆராவமுதன், ஸ்ரீ சார்ங்கராஜா, ஸ்ரீ சார்ங்கபாணி என்ற திருநாமங்களுடன் கோமளவல்லித் தாயாரும் காட்சி அளிக்க, உற்சவர் நான்கு திருக்கைகளுடன், சக்கரம், சங்கு, கதை, சார்ங்கம் என்ற வில்லுடன் உடைவாள் என ஐந்து திவ்வியாயுதங்களை ஏந்தி, அபயம் அளிக்கும் திருக்கை முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தை அனுபவித்த நாதமுனிகள்,
தேனோ ? பைம்பொன் சுடரோ? திகட்டாத திண்ணமுதோ ? இன்பப் பாவின் இன்சுவையோ? என்று காணக் கிடைக்காத அந்த அமுது வடியும் திருமேனியைச் சேவித்து, அவன் முன்னே ‘ஆராவமுதே’ என்ற பதிகத்தை, உளமுருக இசையுடன் சேவித்தார். அப்போது, பெருமாளின் கருவறைக்கு எதிரில் உள்ள திருமாமணி மண்டபத்தில் இருக்கும் பன்னிரண்டு தூண்களும் பன்னிரண்டு ஆழ்வார்களைப் போல அதைக் கேட்டுக்கொண்டிருந்தன. அந்த இடம் வைகுந்தத்தில் இருக்கும் வைதிக விமானம் போல, மற்றொரு பூலோக வைகுண்டமாக உருப்பெற்றது. கிழக்கே திருமுக மண்டலம் கொண்ட பெருமாள், பாம்பணைமேல் உத்தான சயனத்தில் யோகத்தில் பள்ளிகொண்டிருப்பது போல இருந்த நிலை மாறி, திருமழிசை ஆழ்வாருக்காக எழுந்தருளியது போல, இவருக்கும் எழுந்தருளலாமோ என்று யோசித்தார்.
குருகூர் சடகோபனின் யாழின் இசைக்குச் சமமான அந்தப் பாசுரங்கள், நாதமுனியின் இசையில் மேலும் ஜீவன் பெற்று ஒலித்தன. மதுரமான தமிழில் அமைந்த அப் பாடல்களில், பாலும் தேனும் கலந்த சுவை போல வேதத்தின் சாரமும் இசையும் கலந்தாற் போலத் தித்தித்தது. இத்தகைய பாடல்களில் மயங்காதவர் யாராவது இருக்க முடியுமா?
நாதமுனிகள் இசையோடு பாடியபோது, பெருமாளின் பகவத் ஸ்வரூபம், ரூபம், குணங்கள், ஐஸ்வரியம் ஆகியவை அன்று அங்கே கூடியிருந்த பக்தர்களுக்கு ஒரு கண்ணாடியில் காட்டுவது போலத் தெளிவாகப் பிரதிபலித்தன. அந்த அனுபவத்தால் அவர்கள் உள்ளம் உருகி, கண்ணீர் வெள்ளமெனப் பெருகியது.
கூடியிருந்த பக்தர்கள் மட்டும் அல்லாமல், ஆராவமுதனுக்கும் அன்று ஏதோ ஒரு புதிய வெற்றி கிடைத்ததுபோலத் தோள்கள் பூரித்து, புளகாங்கிதமானது. நாதமுனிகள் அவரிடம் ‘எழுந்திருந்து பேசு’ என்று கூறியிருந்தால், உடனே எழுந்து பேச ஆரம்பித்திருப்பார். ’ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணிற்கினியது கண்டேன்’ என்று நாதமுனிகள் மனமுருக அமுதனை நோக்கினார்.
உழுதுபாலைப்[1] போன்ற சடகோபனின் பாடலைக் கேட்ட அர்ச்சகர், நாதமுனிகளுக்குத் தீர்த்தம், பிரசாதம் முதலியவற்றை உகப்புடன் அளித்தார்.
நாதமுனிகள் பணிவுடன் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு, “‘ஓராயிரத்து இப்பத்து’ என்று இந்தப் பாசுரங்களில் காணப்படுவது எந்தச் சதகத்தில் உள்ளது என்று தெரியவில்லை. ஆராய்ந்து இந்த ஆயிரம் பாசுரங்களையும் கற்கவே இங்கு வந்தேன். சார்ங்கபாணியான ஆராவமுதனைப் பற்றிய இந்தப் பெரிய பதிகத்தைத் தெரிந்தவர்கள் இங்கே இருக்கிறார்களா? இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டுகிறேன்” என்றார்.
அர்ச்சகரோ, “எங்களுக்கும் இப்பத்துப் பாசுரங்களே பாடம். குருகூர் சடகோபன் என்று வருவதால், நீங்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூர் புண்ணிய ஸ்தலத்தில் தேடிப் பார்க்கலாம்” என்று சொல்ல நினைத்தார். ஆனால், அன்று அவர் திருவாக்கில், ’திருக்குருகூர் புண்ணிய ஸ்தலத்தில் பெறுவீராக!’ என்று ஆராவமுதன் அர்ச்சகர் மூலமாகத் திருவாய் மலர்ந்து அருள, அந்தச் சொல் அந்தத் திருமாமணி மண்டபத்தின் வார்த்தையாக[2] எதிரொலித்தது.
தமக்கு மீண்டும் ஆராவமுதாழ்வார் என்ற திருப்பெயரும், பிற்காலத்தில் ‘திராவிட ச்ருதி தர்ஸகாய நம:’[3] என்று அர்ச்சனையில் ஒரு திருநாமம் அமையப்போகிறதென்றால், அமுதன் அவரை விடுவாரா ?
ஆராவமுதனை உள்ளம் உருகச் சேவித்து, “இப்பொழுதே புறப்படுகிறேன்!” என்று கிளம்பினார் நாதமுனிகள்.
“ஸ்வாமி, மழை வரும் போலிருக்கிறது. இன்று குடந்தையில் அடியேன் அகத்தில் தங்கி, அமுது செய்துவிட்டு, நாளை காலைப் புறப்படலாமே?” என்றார் அர்ச்சகர்.
அதற்கு நாதமுனிகள், “நீங்கள் கேட்டதே ஈரக்கையால் தடவியது போல[4] இருக்கிறது. இருந்தாலும், தாகத்தோடு இருப்பவன் தண்ணீரைத் தேடி அலைவது போல உடனே செல்ல வேண்டும்” என்று குருகூர் நோக்கிக் காலடி எடுத்து வைத்தார்.
அவர் உறுதியைக் கண்டு வியந்த அர்ச்சகர், பிரசாதங்களைக் கட்டிக்கொடுத்தார். நாதமுனிகள் மனதில் ஆராவமுதப் பாசுரமும், கையில் அவனது பிரசாதங்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அமுதத்துடன் பிசைந்து குடமாகச் செய்து, அதில் படைப்புக்குக் காரணமான ஒரு விதையை இட்டு, அந்தக் குடத்தைப் பற்றிய கதையைச் சற்று முன் பார்த்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தக் குடந்தை என்ற குடத்தில் ஆராவமுதப் பாசுர விதைகளால் பிறந்த இன் தமிழ் ஆழ்வார் அருளிச்செயல்கள் மீண்டும் உயிர்பெறச் செய்த சார்ங்கபாணி கோயிலைத் 'தமிழ் கோயில்' என்று கூறுவதில் தவறில்லையே! சார்ங்கபாணியுடனான உறவு ஒரு குடநீரோடு போகும் உறவன்று[5] அல்லவா?
நாதமுனிகள் பிரயாணத்தை ஆரம்பித்தவுடன், ‘விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள்’ என்று ஆகாசம் எங்கும் நீல நிறமாக மாறிக் கண்ணனை நினைவுபடுத்தி, முனிகள் மீது மழையாகப் பொழிந்தது. மின்னல் ஆழி போல மின்னியது. இடியோசை வலம்புரி போல அதிர்ந்தது. சார்ங்கபாணியின் சார்ங்க வில்லிலிருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போல், மழை இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகப் பொழிந்தது. இது, குருகூர் சடகோபன் அருளவிருக்கும் பாசுரங்கள் உலகத்துக்குத் தண்ணீர்ப்பந்தலாக இருக்கப்போகின்றன என்பதை உணர்த்தியது.
லோகசார்ங்க மாமுனிவர் வடக்கிலிருந்து ’ஆராவமுதன்’ என்ற ஒரு சொல்லால் ஈர்க்கப்பட்டு தென் தேசம் வந்ததுபோல, நாதமுனிகள் லோகம் உய்விக்க சார்ங்கபாணியின் துணையுடன் குருகூர் நோக்கிச் சென்றதால், இவரையும் நாம் லோகசார்ங்க முனி என்று அழைக்கலாம் அல்லவா?
நாதமுனிகள் மட்டும் அல்ல, அவருக்கு முன் வேறு ஒருவரும் இப்படி இருளில் குருகூர் நோக்கிச் சென்றுள்ளார். நமக்கு மிகப் பரிச்சயமான மதுரகவிகள் தான் அவர். மழையில் குருகூர் செல்லும் நாதமுனிகளுடன் நாமும் பயணித்தபடியே, மதுரகவிகளின் வைபவத்தை அனுபவிக்கலாம்.
-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
________________
[1] உழுதுபாலை - சுவையான பால்.
[2] மணி மண்டபத்தின் வார்த்தையாக - அரசவையில் கூறப்படும் வார்த்தை. நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பொருள்.
[3] திராவிட ச்ருதி தர்ஸகாய நம: - சார்ங்கபாணி கோயிலில் அர்ச்சனையின் போது சொல்லப்படும் வாசகம்.
[4] ஈரக்கையால் தடவியது போல - ஸ்ரீராமர் அயோத்திய மக்களை தன் ஈரக்கையால் தடவியது போல ஆட்சி செய்தார் என்ற பிரயோகம்
[5] ஒரு குடநீரோடு போகும் உறவன்று - கோபியர்கள் கண்ணனைப் பார்த்து நமக்கும் உமக்கும் உள்ள உறவு எத்தகையது என்று கூறும் சொல்.
Comments
Post a Comment