3.லோகசாரங்க மாமுனிவர்
நாதமுனிகளும் யாத்திரிகர்களும் கோயிலை வலமாகச் சுற்றிவந்து வாசலை அடைந்தபோது, அங்கே இரு பக்த சிரேஷ்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அழகில் மயங்கி, இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தனர். அவர்களின் முகச்சாயல் நாதமுனிகளின் வம்சத்தவர் என்பதை உணர்த்தியது. அவ்விருவரும் நாதமுனிகளையும், யாத்திரிகர்களையும் வணங்கினர்.
’இவர்கள் யாராக இருக்கும்?’ என்று பாகவதர்கள் கேட்க நினைக்கும் முன்னரே, நாதமுனிகள், “இவர்கள் இருவரும் என் மருமக்கள், வரதாசாரியார் மற்றும் கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.
“ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்கு இவர்கள் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இவர்கள், [1]காளம், வலம்புரி என முழங்குவார்கள்[2] என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர்.
“உங்கள் நல்வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள்.
அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால், இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் எனப் போற்றப்பட்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இசை வடிவில் முழங்கி, நாதமுனிகளின் வழியில் [3]அரையர்கள் பரம்பரை உருவாகப் போகிறது என்பதை அப்போது யார் தான் அறிந்திருப்பார்கள்?
நாதமுனிகள் வைணவர்களை நோக்கி, “நீங்கள் இவர்களுடன் என் அகம் சென்று சற்று சற்றுச் சிரம பரிகாரம்[4] செய்து கொள்ளுங்கள். கோயில் திருப்பணிகளை முடித்துவிட்டு வருகிறேன். ஆராவமுதை தந்த நீங்கள், இன்று என் குடிசையில் நீங்கள் அமுது செய்ய வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள்!” என்றார்.
“அவ்வாறே செய்கிறோம்” என்று யாத்திரிகர்கள் விடைபெற்று, நாதமுனிகளின் மருமக்களுடன் சென்றனர்.
நாதமுனிகளின் செவியில் ஆராவமுதே ஒலித்துக்கொண்டிருந்தது. 'ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே' என்று மெல்லுரைத்துக் கொண்டு கோயிலினினுள் சென்றார். வீரநாராயணப் பெருமாள் முன் வீழ்ந்து வணங்கி, தன் இடுப்பில் வைத்திருந்த தாளக் கருவியை எடுத்து, இடு சிவப்பு[5] போல நாதமுனிகளின் மனத்தில் ஆழப் பதிந்திருந்த ‘ஆராவமுதே’ என்ற பாசுரங்களை தாள ஒலிக்கேற்ப மீண்டும் இனிய குரலில் பாட, தேவகானமாக காற்றில் மிதந்து செல்ல, உள்ளம் அபிநயத்தில் ஆடியது.
அருந்தமிழில் அருளிச் செய்த அந்த 'குருகூர் சடகோபன்' யாராக இருக்கும் ? எங்கே தேடிக் காண்பது? அந்த ஆயிரத்தையும் உள்ளத்தில் பதியவைத்து முகபாடமாக ஓதுபவர்கள் யாராவது திருவரங்கத்தில் இருப்பார்களா? அல்லது, அமுதக் கவி ஆயிரமும் தாங்கிய ஸ்ரீகோசம்[6] ஏதும் இப்பரந்த பூவுலகில் எங்காவது இருக்குமோ?" என்று எட்டாப்பூ ஏக்கத்துடன் தான் தேடிச் செல்ல அனுமதிக் கேட்டு, வீரநாராயணப் பெருமாளின் திருவடிகளை வணங்கினார்.
நாதமுனிகளின் செவியில் கனிந்த குரலில், ‘விரைந்துச் செல்’ என்று வீரநாராயணப் பெருமாள் அருள, வில்லிலிருந்து கிளம்பிய அம்புபோலப் புறப்பட்டார். அவரது தேடுதல் வேட்கையின் அவசரம் காரணமாக, பாகவதர்களை உபசரித்து விடைபெற்றதை விரிவாகக் கூற இயலவில்லை; வாசகர்கள் இதனைப் பொறுத்தருள்க.
நாதமுனிகள் வடதிருக்காவிரி என்ற கொள்ளிடக் கரை ஓரமாகத் திருவரங்கம் நோக்கி நடக்கலானார். திருக்குடந்தைக்கோ குருகூருக்கோ அல்லவோ அவர் செல்ல வேண்டும்? ஏன் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார்? இவ்வினா உங்கள் மனத்திலும் எழுவது இயல்புதானே?
நமக்குத் தேவையான பொருட்களை தேடி சந்தைக்கு செல்வது போல, வைணவத்தின் அருளிச் செயல்களை தேடி அதன் தலைமைப்பீடமாகவும், சந்தையாகவும் விளங்கிய திருவரங்கத்தை நாடிச் செல்வது இயல்பு தானே? திருவரங்கத்தின் வீதிகளில் புலமைமிக்க தமிழ், சமஸ்கிருதப் பண்டிதர்கள் அரங்கனை ஆராதித்துக்கொண்டு இருந்தனர். மேலும், திருவரங்க பெரிய பிராட்டியாரிடமும், உறையூர் கமலவல்லி நாச்சியாரிடமும் விண்ணப்பித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையும் நாதமுனிகளுக்கு உண்டு.
காவிரியைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாதமுனிகளுக்குக் காதல் ஆதரம் கடலினும் பெருகும். வடக்கே கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி எனப் புண்ணிய நதிகளில் நீராடியிருந்தாலும், காவிரித் தாய் மீது அவருக்குப் பிரேமை அதிகம். அவளது மிருதுவான மணலே மேனி எனவும், இருபக்கமும் படர்ந்துள்ள வயல்களும், மரங்களுமே அவளது ஆடை அலங்காரங்கள் எனவும் காவிரியைக் கண்டோர் களிப்படையாமல் இருக்க முடியுமா? உழவர்கள் மட்டும் அல்லாது சோழ மன்னர்கள் இந்த நதியைத் தங்கள் குலக்கொடிபோலப் போற்றி வளர்த்தார்கள். நீண்ட வறட்சிக் காலங்களிலும்கூட, காவிரித் தாய் யாரையும் கைவிட்டதாகச் சரித்திரம் இல்லை. ஆண்டுதோறும் மழை பெய்து காவிரி பெருக்கெடுத்து ஓடும்போது, மன்னன் முதல் உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடித் திருவிழா எடுத்தார்கள்.
வயல்களில் உழவர்கள் உற்சாகமாக உழைத்துக்கொண்டிருந்தனர்.
பெண்கள்,
[7]உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!
என்று பாடிக்கொண்டு நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் கன்றுகுட்டிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தனர். குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் மரத்தில் விளையாட, ஆங்காங்கே மயில்கள் பறந்துகொண்டு இருந்தது.
நாதமுனிகளுடன் காவிரியும் வேகமாக நடந்து வருவது போல காட்சி அளித்தது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம் மற்றும் தமிழ் பாடல்களில் காவிரியின் சிறப்பு குறித்த பகுதிகளை உள்ளத்தில் நினைத்தவாரே நடந்து சென்றார். 'நடந்தாய் வாழி காவிரி' என்று நாதமுனிகள் நடந்து வந்தபோது, ஆங்காங்கே சமண விகாரங்களும், பௌத்த வைத்யங்களும், மடங்களும் தென்பட்டன. சிற்பிகளும் சைவ, வைணவச் சிலைகளுடன் புதிதாகப் பௌத்தச் சிலைகளைச் செதுக்கத் தொடங்கியிருந்தார்கள். இதுமட்டுமல்லாமல், அவ்வப்போது சில சமண, பௌத்தத் துறவிகள் நாதமுனிகளைக் கடந்து சென்றனர்.
காலம் எப்படி மாறுகிறது! என்று அவர் நினைத்துப் பார்க்கக் காரணம் இருந்தது. வட தேச யாத்திரை சென்று சில ஆண்டுகள் கழித்துத் திரும்பியபோது, சில பாண்டிய மன்னர்கள் பௌத்த மதத்தைத் தழுவியிருந்தார்கள். சில பல்லவ மன்னர்களோ சமண மதத்தில் விருப்பம் கொண்டு அதை ஆதரித்தார்கள். சமீபகாலமாகப் பௌத்தமும், சமண மதங்களும் அடைந்த செல்வாக்கை நாதமுனிகளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நெல் வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் களைபோல அவருக்கு இது தோன்றியது.
ஆராவமுதே என்ற பாசுரத்தில் சரணாகதியும், பக்தி நெறியும் இருப்பதை உணர்ந்த நாதமுனிகள், மாயாவாதமும், சூனியவாதமும் தலைவிரித்து ஆடுவதை இந்தத் தமிழ் பாசுரங்கள் கிடைத்தால் அடக்கிவிடும் என்று நம்பினார். ஒரு சிலரால் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பக்தி யோகத்தைக் காட்டிலும், அனைவரும் பின்பற்றக்கூடிய சரணாகதி நெறியே சிறந்தது. பக்தி யோகத்தில் கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும், குருகூர் சடகோபனின் பாசுரங்களில் உள்ள பெருமாளுடைய குணங்களை அனைவரும் ஈடுபடக்கூடியதோர் எளிய பக்தி நெறியாகக் காட்டிக் கொடுக்க முடியும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது.
அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு, 'கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்று' அவர் கால்கள் ஓட, அவர் மனமோ 'மால் தேடி ஓடும் மனம்' போன்று அதைவிட விரைவாகச் சென்றது. வண்டுகள் எழில் கொஞ்சும்,
[8]ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்குத் துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயிலுக்குள் புகுந்து, ஸ்ரீரங்க நாச்சியார் வீற்றிருக்கும் வாசல் முன் மண்டபத்தில் நின்றார்.
பிற்காலத்தில், கம்பன் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகளின் தலைமையில் இங்கே கம்பராமாயணத்தைத் தாயார் முன் அரங்கேற்றம் செய்ய, அவர் நின்ற அந்த மண்டபமே ’கம்பர் அரங்கேற்ற மண்டபம்’ என்று பெயர் பெறப் போகிறது என்ற அரிய தகவலை வாசகர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துகிறோம்.
ஸ்ரீரங்க நாயகி தாயாரைத் தரிசித்து, பெரிய பெருமாளைத் வணங்கி, நல்லார்கள் வாழும் நளிரரங்கத்து அடியார்களின் திருவடிகளை வணங்கி, பசிக்கு ஒருவன் இல்லம்தோறும் உணவு யாசிப்பது போல, "இங்கே குருகூர்ச் சடகோபனின் பாசுரங்களை அறிந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா? ஏதேனும் ஓலைச்சுவடிகளாவது உள்ளதா?" என்று எல்லா இடங்களிலும் கேட்டவாறு சென்றார்.
திருவரங்கத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடி அலைந்தும், "இல்லை!" என்ற பதிலே கிடைத்தது. இதனால் மனம் வருந்திய நாதமுனிகள், மீண்டும் பெரிய பெருமாளை வணங்கி, தனக்குத் தெரிந்த அந்தப் பத்துப் பாசுரங்களை, தானே ஒரு சங்கீதக் கருவி போல, அழகியமணவாளன் முன் இசைக்க, தேவகான இசை அருவியாக பாய்ந்தது.
பெரிய பெருமாளோ அதைக் கூர்ந்து கேட்க, தன் இடது கையைத் தன் காது அருகில் வைத்துக்கொண்டது, இந்த இசைக்காகத்தானோ எனத் தோன்றியது. நாதமுனியின் ஆரா அமுதே என்ற பாசுரத்தின் இசைக்கு மயங்கிய பெருமாள், உவந்த உள்ளத்தனாய் நாதமுனிகளை அன்புடனே நோக்கினார்.
ஆழ்வார் பாசுரங்களைப் பாடினால் எந்தப் பெருமாளும் மயங்கிவிடுவார்கள். அதிலும் இசை சேர்த்துப் பாடினால் ? கேட்காத வரத்தை எல்லாம் அளித்துவிடுவார். நம் நம்பெருமாளோ, வடநாட்டு இசைக்கே சன்மானமாக நான்கு அடி நடந்து காண்பிக்கும் 'நாதவினோத நம்பி' என்று பெயர் பெற்றவர். இப்போது மீண்டும் கிடைக்கப் போகும் ஆழ்வார்களின் அருளிச் செயல் புதையலால், 'பதின்மர் பாடிய பெருமாள்' என்ற கூடுதல் பெயரும் அவருக்குக் கிடைக்கப் போகிறது. நாதமுனியின் இசையை ரசித்த அழகியமணவாளன் என்ன செய்திருப்பார் என்பதை வாசகர்களாகிய உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
‘ஆராவமுதே' என்பது ஒரு மாயச் சொல். எத்தனை முறை அதைச் சொன்னாலும், பெருமாளைப் போலவே அது தெவிட்டாத ஒரு அமுதச்சொல். அப்படிப்பட்ட அமுதச் சொல்லுக்கு மயங்கி, நாதமுனிகளுக்கு முன்பே வடதேசத்திலிருந்து தென் தேசத்துக்கு ஒரு மாமுனிவர் வந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, திருப்பாணாழ்வாருக்கு முனி வாகனமாக இருந்த லோகசாரங்க மஹா முனிவரேதான். அவருடைய கதையைக் கேட்டுவிட்டு[9], நாதமுனிகளுடன் நம் பயணத்தைத் தொடரலாம்.
வடதேசத்தில் காசியில் லோகசாரங்க முனிவர் வசித்து வந்தபோது, தென் தேசத்திலிருந்து காசிக்கு ஒருவன் யாத்திரையாக வந்தான். முனிவர் அவனை நோக்கி, “அன்பரே! தென் தேசத்தில் ஏதேனும் சிறப்புச் செய்திகள் உண்டோ?” என்று விசாரித்தார். அதற்கு அவன், “திராவிட தேசத்தில் ஓர் அருளிச்செயல் அவதரித்துள்ளது. பல அறிஞர்கள் அதை மிகவும் கொண்டாடுகிறார்கள்” என்றான்.
முனிவர் ஆர்வமாக, “அவ்வாறாயின், அதைப் பற்றி மேலும் கூறு” என்றார். அதற்கு அவன், “எனக்கு அவை தெரியாது; அவற்றுள், ‘ஆராவமுதே’ என்ற ஒரு சொல் மட்டுமே நினைவில் உள்ளது” என்று பதிலளித்தான்.
'ஆராவமுதே' என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் முனிவர் வியப்பில் மூழ்கினார். ’நாராயணன் முதலிய சகஸ்ர நாமங்கள் இருக்கும்போது, அவற்றைக் காட்டிலும் இப்படியும் ஓர் அழகிய திருநாமம் இருக்கிறதா?’ என்று கூறியதோடு நிற்காமல், ”இதற்கு ஏற்ற வடமொழி சொல் என்னவாக இருக்கும் என்று நீண்ட யோசனைக்குப் பின் ‘அபர்யாப்தாம்ருதன்’ என்ற சொல்லைக் கண்டு பிடித்தார். ஆனால் அது சுவையாக இல்லையே! இப்படிப்பட்ட அழகிய தமிழ் சொல் நடமாடுகின்ற தேசத்துக்குச் செல்ல வேண்டும்” என்று உடனே புறப்பட்டுத் தென் தேசத்துக்கு வந்தார்.
அத்தகைய சிறப்புமிக்க 'ஆராவமுதே' என்ற ஒரு சொல்லின் ஈர்ப்பே ஒரு மாமுனிவரை வடதேசத்திலிருந்து வரவழைக்க முடிந்ததென்றால், அந்தப் பாசுரத்தையே முழுமையாகக் கேட்ட நாதமுனிகள், அதைப் பெற திருக்குடந்தைக்குப் புறப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லையே!
-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
________________
[1] காளம் : ஒரு விதமான இசைக் கருவி. எக்காளம் என்றும் கூறுவர்
[2] ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கிரகத்தில்(6)
நாதமுனிகளைத் தொழும் பெருமிதம்
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே
[3] நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் பெற்ற இனிய செல்வமான திவ்யப் பிரபந்தங்களை உலகெங்கும் பரப்ப எண்ணினார். எம்பெருமானின் திருவருள் பெற்று, தம் சீடர்களான கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் ஆகிய இருவருக்கும் அதை இசை வடிவில் கற்றுக்கொடுக்க, குசலவர்களைப் போல பாடவல்ல அவ்விருவரும் தம் ஆசிரியரான நாதமுனிகளிடம் கற்ற, திவ்யப் பிரபந்தங்களின் பொருளைத் தென்னாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி, அதனை அருளிச்செயல் மயமாக ஆக்கினர்.
[4] இளைப்பாறுங்கள்
[5] மருதாணி
[6] ஓலைச்சுவடிகள்
[7] சிலப்பதிகாரப் பாடல் - எளிய பொருள்:
உழவர் ஓதை: காவிரி நீர் பாய்ந்ததும், வயல்களில் உழவர்கள் வேலை செய்யும் ஆரவாரம்.மதகு ஓதை, உடை நீர் ஓதை: நீர்ப்பெருக்குடன் மதகுகளிலிருந்து உடைந்து பாயும் ஆற்றின் ஓசை.விழவர் ஓதை: காவிரி வரவால் ஏற்படும் செழிப்பைக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம்.
மழவர் ஓதை: போரில் வெற்றிபெற்ற வீரர்களின் ஆரவாரம். காவிரி நதி, பல்வேறு ஒலிகளுடன் பாய்ந்து வந்து, சோழ மன்னனின் (வளவன்) வளமாக மாறுகிறது என்று இப்பாடல் கூறுகிறது. இதன் மூலம், காவிரி வெறும் நதியாக இல்லாமல், சோழ தேசத்தின் விவசாயம், கொண்டாட்டம், வீரம் என அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாக இருப்பதை போற்றி, "வாழி, காவேரி!" என்று வாழ்த்துகிறது.
[8] ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கிரகத்தில்(42) திருவரங்கம் குறித்த எளிய தமிழ் பாடல்.

[9] நஞ்சீயர் திருவாய்மொழி ஐதீகம்
Comments
Post a Comment