Skip to main content

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…



ஸ்ரீராமரைக்‌ குறித்து சிலர் பேசிய காணொளிகளைப்‌ பார்க்க‌ நேர்ந்தது.

ஒன்று நான்‌ பெரும்‌ மதிப்பு வைத்திருக்கும்‌ திரு. தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ பேச்சு. அவர்‌ ஓர்‌ ஆத்திகர்‌. பொது வாழ்வில்‌ காமராஜர்‌ போல்‌ எளிமையையும்‌, நேர்மையையும்‌ கடைப்பிடிப்பவர்‌. 

ஸ்ரீராமர்‌ சீதையைத்‌ தேடிக்கொண்டு செல்லும்‌ போது சுக்ரீவனைச்‌ சந்தித்து உதவி கேட்கிறார்‌. சுக்ரீவனைச்‌ சந்திக்கும்‌ இடத்தை வால்மீகி எப்படி அமைத்திருக்கிறார்‌? கம்பன் எப்படி கூறியிருக்கிறார் என்பதை விவரிக்கிறார். அவர்‌ கூறியதைச்‌ சுருக்கமாக‌ இங்கே தருகிறேன்‌.

ராமனும்‌ லக்ஷ்மணனும்‌ சுக்ரீவனைத்‌ தேடிக்கொண்டு செல்கையில்‌, அனுமனைச்‌ சந்திக்கிறார்கள்‌. அனுமனைச்‌ சந்தித்த‌ போது லக்ஷ்மணன்‌ நடந்த‌ கதையை எல்லாம்‌ சொல்கிறான்‌. இதைக்‌ கேட்ட‌ அனுமன்‌ ராம லக்ஷ்மணர்களைத்‌ தன்‌ முதுகில் ஏற்றிக்கொண்டு சுக்ரீவன்‌ இருக்கும்‌ இடத்தை அடைகிறார்‌.

இதே காட்சியைக் கம்பன் இதை மாற்றி அமைத்திருக்கிறார்‌. அனுமனுடன் சந்திப்பு நிகழ்ந்த‌ பின்‌, "நீ போய்‌ சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வா" என்று கூற‌, அனுமன்‌ ஓடிச்‌ சென்று சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வருகிறான்‌.

இதற்கு தமிழருவி மணியன்‌ அவர்கள்‌ கூறும்‌ விளக்கம்‌: உயர்ந்தவனை நோக்கித்தான்‌ தாழ்ந்தவன்‌ வர வேண்டுமே தவிர‌, தாழ்ந்தவனை நோக்கி உயர்ந்தவன்‌ செல்ல‌ மாட்டான்‌. 

கம்பன்‌ ராமரை பரம்பொருளாக மிக உயர்வான‌ ஓர் இடத்தில்‌ வைத்திருக்கிறார்‌. ராமர் ஓர்‌ அவதாரப்‌ புருஷர்‌ அதனால் கம்பன் இப்படி எழுதியிருக்கிறான் என்பதே தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ வாதம்‌. தப்பில்லை.

அவதாரப்‌ புருஷர்‌ என்பதில் அவதாரம் என்பதே திருமால்‌ வைகுண்டத்தை விட்டு இப்பூலோகத்துக்கு வருகிறார்‌. தாழ்ந்தவனை நோக்கி உயர்ந்தவன்‌ வருவதையே எல்லா அவதாரங்களும் குறிக்கிறது. இச்செயலை ஆழ்வார்களும்‌, வைணவ உரையாசிரியர்களும்‌ கொண்டாடுகிறார்கள்‌.

இப்போது கம்பராமாயணத்தில்‌ இந்த‌ இடத்தில்‌ என்ன‌ நடந்தது என்று பார்க்கலாம்‌.

ராமர்‌ சுக்ரீவனைக்‌ காண‌ வேண்டுமென்று கூறியவுடன்‌, அனுமனுக்கு அளவிலா உவகை ஏற்பட்டு, துள்ளி குதித்து, மகிழ்ச்சி மிகுதியால்‌ சுக்ரீவனை அழைத்துவர‌ ஓடுகிறான்‌. சுக்ரீவனிடம்‌ ராமருடைய கதையை சொல்லி முடிக்கும்‌ வரை அனுமனின்‌ ஆட்டம்‌ நிற்கவே இல்லை. அனுமனின் இச்செயல், ஸ்ரீராம காரியத்தில்‌ ஈடுபடுவதில்‌ மாருதியின்‌ ஆர்வம்‌, ஸ்ரீராம கைங்கரியம்‌ கிடைத்த‌ பூரிப்பு என்று இதைப்‌ பார்க்க‌ வேண்டுமே தவிர‌, உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ என்று பார்க்கக்‌ கூடாது.

நாலாயிர திவ்யப்‌ பிரபந்தத்தில்‌ ‘தோழன்‌’ என்ற‌ சொல்‌ ஒரே ஓர்‌ இடத்தில்‌ மட்டுமே வருகிறது. எல்லோருக்கும்‌ தெரிந்த‌ நம்‌ திருமங்கை மன்னன்‌ பாசுரம்‌:

ஏழை, ஏதலன்‌ கீழ்மகன்‌ என்னாது
இரங்கி மற்று அவற்கு இன்‌ அருள்‌ சுரந்து
மாழை மான்‌ மட நோக்கி உன்‌ தோழி
உம்பி எம்பி என்று ஒழிந்திலை‌ உகந்து
தோழன்‌ நீ எனக்கு இங்கு ஒழி என்ற‌
சொற்கள்‌ வந்து அடியேன்‌ மனத்து இருந்திட‌
ஆழி வண்ண! நின்‌ அடியிணை அடைந்தேன்‌
அணி பொழில்‌ திருவரங்கத்து அம்மானே!

குகன்‌ தான்‌ அறிவில்லாதவன்‌, கொலைத்‌ தொழில்‌ புரிகின்றவன்‌, நீச ஜாதியில்‌ பிறந்தவன்‌ என்று தன்‌ தாழ்வுகளைச்‌ சொல்ல‌ நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம்‌ என்னாது இரங்கி ஸ்ரீராமர்‌ ‘உகந்து தோழன்‌ நீ எனக்கு’ என்று அவனைப்‌ பேசவிடாமல்‌ செய்வதற்கு முன்பு, சீதைப்‌ பிராட்டி அவனை ‘மாழை மான்‌ மட நோக்கி’ குகனுக்கு அருள்‌ புரிய‌, ஸ்ரீராமர்‌ "என்‌ தம்பி உனக்கும்‌ தம்பி" என்று சொல்லாமல்‌, "உம்பி எம்பி" (உன்‌ தம்பி என்‌ தம்பி) என்று அவன்‌ தகுதிக்குக்‌ கீழே இறங்கிவிட்டார்‌.

இப்படிப்பட்ட‌ ராமர்‌, சுக்ரீவனைத்‌ தன்‌ தோழனாகக்‌ கருதுகிறார்‌. ராமர்‌ சுக்ரீவனை முதலில்‌ பார்க்கும்போது‌ ”என்‌ வார்த்தை சத்தியம்‌, அந்தச்‌ சத்தியத்தின்‌ மீது சத்தியம்‌ செய்கிறேன்‌, நான்‌ உனக்கு நண்பனாக‌ உதவி செய்கிறேன்‌” என்கிறார்‌.

யுத்த காண்டத்தில்‌, சுக்ரீவன்‌ ஸ்ரீராமர்‌ மீது இருந்த‌ பிரேமையினால்‌ ராமரின்‌ உத்தரவு இல்லாமல்‌ ராவணனிடம்‌ சண்டையிட்டு, பிறகு இவனுடன்‌ யுத்தம்‌ செய்வது உசிதமல்லவென்று எண்ணி ஸ்ரீராமர்‌ பக்கம்‌ வந்து நிற்கிறான்‌. அப்போது ராமர்‌ சுக்ரீவனைப்‌ பார்த்து “நண்பா! என்னுடன்‌ ஆலோசிக்காமல்‌ இப்படிப்பட்ட‌ துணிவான‌ காரியத்தை நீ செய்யலாமா? உனக்கு இது துணிவான‌ காரியமாக‌ இருக்கலாம்‌ ஆனால்‌, உனக்கு ஏதாவது‌ ஆகிவிடுமோ என்று கருதிக்‌ கவலைப்பட்டேன்‌” என்று மேலும்‌ ஸ்ரீராமர்‌ சுக்ரீவனைப்‌ பார்த்து இப்படிச்‌ சொல்லுகிறார்‌:

“ராவணனால்‌ உனக்கு ஏதாவது‌ ஆபத்து நேர்ந்தால்‌, ஏன்‌ உன்‌ உடம்பிலிருந்து ஒரு ரோமம்‌ கீழே விழுந்தாலும்‌ சீதையாவது‌, பரதனாவது‌, லக்ஷ்மணனாவது, சத்துருக்கனனாவது என்‌ தேகம்‌ கூட‌ எனக்குத்‌ தேவையில்லை” என்கிறார்‌.

பசு ஒன்று ஏற்கனவே பிறந்த‌ கன்றுகளை விட்டுப்‌ புதிதாகப்‌ பிறந்த‌ கன்றிடத்தில்‌ எப்படி மிகுந்த‌ பிரேமையுடன்‌ இருக்குமோ அது போலக்‌ கொஞ்சக்‌ காலமே தெரிந்த‌ ஒரு குரங்கை (சுக்ரீவனை) விசேஷ நண்பனாகக்‌ கருதி, எக்காலத்திலும்‌ பிரியாத‌ பிராட்டி, தம்பிகள்‌ ஏன்‌ என்‌ உயிரே முக்கியமில்லை என்கிறார்‌ ராமர்‌.

இப்போது சமீபத்தில்‌ ஒரு சினிமா பாடலாசிரியர்‌ ஸ்ரீராமரைக்‌ குறித்து கம்பன்‌ கழகத்தில்‌ பேசிய‌ பேச்சை மறுத்தோ, தாக்கியோ எழுதிவிட்டார்கள்‌.

அன்று முதல்வர்‌ தலைமை ஏற்ற‌ அந்தக்‌ கம்பன்‌ விழா மேடை ஒரு விஷ‌ மேடை. ஒரு சொட்டு நச்சுடன்‌ கலந்த‌ பால்‌ போல‌ நல்ல‌ அறிஞர்கள்‌ சிலர் இருந்தாலும்‌, அந்த‌ விழா மேடை ஒரு நச்சு நாத்திக‌ மேடை. அந்த மேடையில், கம்பன்‌ பொன்விழா அரங்கத்தில்‌ கம்பன்‌, ராமர்‌ இருவருடைய‌ படமும்‌ இல்லை. (மற்ற‌ அரங்கத்தில்‌ அவர்களுடைய‌ படம்‌ இருந்தது!). ஏன்‌ என்பது தமிழ்நாட்டு‌ மக்களுக்கும்‌ தெரியும்‌. இப்படிப்பட்ட‌ ஆபாசமான‌ பேச்சைக்‌ கேட்க‌ நல்ல‌ வேளை அங்கே ராமரும்‌, கம்பனும்‌ இல்லை.

‘வைரமுத்துவும்‌ ராமரும்‌’ என்ற தலைப்பில்‌ எழுத்தாளர்‌ ஒருவர்‌ இந்த‌ சினிமா பாடலாசிரியருக்குக்‌ முட்டுக்கொடுக்கிறார். ‘வைரமுத்துவை தவிர‌ வேறு யாராவது‌ பேசியிருந்தால்‌ இந்த‌ மாதிரி‌ எதிர்ப்பே வந்திருக்காது’ என்பது அவருடைய‌ வாதம்‌. 

பல‌ ஆண்டுகளுக்கு முன்‌ ஒரு இஸ்லாமியக்‌ கூட்டத்தில்‌ ஸ்ரீராமரைப்‌ குறித்து இந்த‌ சி.பா. என்ன‌ பேசினார்‌ என்பதை இங்கே சுட்டிக்காட்ட‌ விரும்புகிறேன்‌.

“ராமர்‌ அவதாரமா, மனிதனா? மனிதன்‌ என்றால்‌ எதற்குக்‌ கோயில்‌? அவதாரம்‌ என்றால்‌ அவர்‌ பிறக்கவே இல்லை, பிறகு எதற்குப்‌ பிறப்பிடம்‌ (அயோத்தி)?” என்ற‌ நாத்திகப்‌ பேச்சு. இவர்‌ எப்படி‌ ராமரைக்‌ குறித்துச்‌ சரியாகப்‌ பேசுவார்‌? மனதில்‌ முழுக்க‌ ராமர்‌ மீது வன்மமும்‌, அழுக்கும்‌ வைத்திருக்கும்‌ ஒருவர்‌ ஸ்ரீராமரைக் குறித்துப் எப்படி நல்ல விதமாக பேசுவார் ?  

இந்த எழுத்தாளர் முன்பு விஷ்ணுவின் செவ்வடியை ஒரு ஒரு குஷ்டரோகியான பிச்சைக்காரனின் கால்களுடன் ஒப்பிட்டு, அதில் நம்மாழ்வாரை கேலிச்சித்திரம் போல் எழுதினார். அப்போது எழுத்தாளர் சுஜாதாவால் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை. 

மேலே சில வக்கிரமான பகுதிகளை எழுத வேண்டி வந்ததால், அதற்கு பிராயச்சித்தமாக துளசிதாசர்‌ இந்த காட்சியை எப்படி‌ கையாண்டிருக்கிறார்‌ என்பதைச்‌ சொல்லி நிறைவு செய்கிறேன்‌.

ஸ்ரீராமர்‌ அனுமனைப்‌ பார்த்து, தன்‌ இரு கைகளாலும்‌ தழுவிக்கொள்கிறார்‌. கண்ணீரால்‌ அனுமனை நனைத்து, ‘வானரனே! நீ சிறிதும்‌ கவலைப்பட‌ வேண்டாம்‌. இளையவனான‌ லக்ஷ்மணனைக்‌ காட்டிலும்‌ உன்னிடம்‌ அதிகமாக‌ நேசம்‌ கொண்டுள்ளேன்‌. என்னை‌ பாகுபாடின்றி எல்லோரையும்‌ பார்ப்பவன்‌ ‘ஸமதர்சி’ என்பார்கள்‌. அது உண்மையன்று. ஏனெனில்‌, என்னையே‌ கதி என்று நம்புபவனையும்‌, என்னையன்றி வேறெவரையும்‌ நாடாதிருப்பவனையும்‌, உலகில்‌ எல்லாப்‌ பொருள்களிலும்‌ நான்‌ வசிப்பதாக‌ நம்பிக்கை கொண்டவனையும்‌ நான்‌ சிறந்த‌ முறையில்‌ நேசிக்கிறேன்‌. இதில்‌ ஐயமில்லை என்று ஆதரவுடன்‌ அனுமானைத்‌ தேற்றுகிறார்‌ ராமர்‌. அனுமன்‌ உவகைக்‌ கொண்டு சுக்ரீவனைக்‌ குறித்துக்‌ கூறுகிறார்‌. பிறகு ராமரின்‌ அனுமதி கிடைத்தவுடன்‌ இரு சகோதர்களையும்‌ முதுகில்‌ ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார்‌.

தொலைவிலிருந்து ராமர்‌ வருவதைக்‌ கண்ட‌ சுக்ரீவன்‌, பூமியில்‌ பிறவிப்‌ பயனைப்‌ பெற்றுவிட்டதாக‌ அவன்‌ மனம்‌ குதூகலித்தது. ‘நான்‌ ஒரு அற்பன்‌! என்னையும்‌ இந்தப்‌ பிரபு மதிப்பாரா?’ என்று ஏங்கிக்கொண்டிருந்த‌ சுக்ரீவனை ராமர்‌ இரு கைகளாலும்‌ அவனை‌ அணைத்துக்‌ கொண்டார்‌. ராமன்‌ தழுவியவுடன்‌ சுக்ரீவன்‌ மெய்மறந்து‌ போனான்‌.

ஒரு குரங்கிற்கு மதிக்க தெரிந்த ராமரை, தமிழ்நாட்டில் கம்பன் கழகத்துக்கு தெரியவில்லை என்பது தான் வியப்பே! (கழகம் என்ற சொல் கூட காரணமாக இருக்கலாம் )

-சுஜாதா தேசிகன்

26.8.2025

Comments