Skip to main content

ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி

 ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி




 ”மதப் புரட்சி செய்த மகான்” என்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிப் பல புத்தகங்கள் வருகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் புகழ்கிறார்கள். முன்பு எழுதப்பட்ட ரூல்ஸ் & ரெகுலேஷன் எல்லாவற்றையும் ராமானுஜர் மாற்றிப் புரட்சி செய்தார் என்று புத்தகங்களில் வருகிறது.

ஒன்று அல்ல இரண்டு அல்ல பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு  ‘நடையாக நடந்து’  கஷ்டப்பட்டு எட்டு எழுத்து மந்திரமாம் திருமந்திரத்தை நம்பிகளிடம் பெற்று கோபுரத்தின் மீது ஏறி எல்லோரும்  சத்தமாக உபதேசித்தார் என்று புத்தகங்களிலும் மேடைப் பேச்சிலும் பேசுகிறார்கள். இதைப் பலர் சொல்லுவதால் இது தான் உண்மை என்பது போன்ற பிரமை இன்று உண்டாகிவிட்டது.

ராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார். நம்பிகளிடம் உபதேசம் பெற்றார். அதை எல்லோருக்கும் வினியோகித்தார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அவர் ஏன் பதினெட்டு முறை சென்றார், நம்பிகளிடம் என்ன உபதேசம் பெற்றார் எப்படி எல்லோருக்கும் வினியோகித்தார் என்ற விவரம் தான் இந்தக் கட்டுரை. ராமானுஜர் பதினெட்டு முறை நடந்து பெற்ற விஷயத்தை ஆழ்ந்து படிக்க வாசகர்களை அழைக்கிறேன்.

கீழே உள்ள மூன்று விஷயங்களையும் படித்துவிட்டு  ராமானுஜருடன் நாமும் திருக்கோட்டியூருக்கு நடந்து செல்லாலாம்.

ராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார் - உண்மை ஆனால் நம்பி அவரை அலைய விடவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உபதேசம் செய்தார்.

நம்பிகள் திருமந்திர அர்த்தத்தைச் சொல்லவில்லை, அவர் சொன்னது கீதையின் சரம ஸ்லோக அர்த்தம்.

ராமானுஜர் கோபுரம்மீது ஏறி ‘ஓம் நமோ நாராயணா!” என்று எல்லோரையும் சொல்லச் சொன்னார் என்பது தவறு. பூர்வங்கள் அப்படி சொல்லவில்லை.திருக்கோட்டியூர் கோயிலில் இருக்கும் நரசிம்ம சந்நிதியில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உபதேசம் செய்தார் (‘ஓம் நமோ நாராயணா” என்பது மந்திரம் மந்திரம் சொல்லச் சில நிபந்தனைகள் இருக்கிறது அதனால் அதைக் கோபுரம்மீது ஏறி ராமானுஜர் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். திருமங்கை ஆழ்வார் ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்’ என்று மந்திர சப்தம் இல்லாமல் தான் பாசுரம் அமைத்திருக்கிறார்)

 ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம் எழுதிய அறிவுஜீவி. பொதுவாக அறிவுஜீவிகளிடம் ஒரு சாதாரண பாமரன் அணுக முடியாது.  ஆனால் ஸ்ரீ ராமானுஜரை ஒரு சாதாரண பாமரன்  அணுக முடிந்தது. நம்பெருமாளைப் போல  சாதாரண மக்களும் அவருடன் நெருக்கமாகப் பழகினார்கள். இதுபோல இன்று நாம் யாரையும் பார்க்க முடியாது.  அதனால் தான் ஆயிரம் வருடம் முன் வாழ்ந்த ராமானுஜரை இன்றும் நாம் போற்றுகிறோம். பல கோயில் திருவிழாக்களிலும், உற்சவங்களிலும் ‘வாழி எதிராசர்’ என்று ராமானுஜர் குறித்து பஜனை செய்யும் பாகவதக் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.இன்றும் அந்த பாகவத கூட்டத்தினர் உடையவரிடம் நெருக்கமாக இருக்கிறார்கள்.



என்ன புரட்சி செய்தார் ?

ராமானுஜர் காலத்துக்கு முன்பும் ’வைகுண்டம் புகுவது மன்னவர் விதியே’ என்று மோக்ஷத்தை அடைவது  தான் ஸ்ரீ வைஷ்ணவ குறிக்கோளாக இருந்தது. ராமானுஜர் காலத்துக்குப் பிறகு இன்றும் அதே தான்.அப்படி என்றால் ராமானுஜர் செய்த புரட்சி என்ன ?

ராமானுஜர் காலத்துக்கு முன் ஆசாரியனின் உபதேசத்தை பெற வேதத்தில் சொல்லிய பல நெறிமுறைகளும், நிபந்தனைகள் இருந்தது. கீதையில் கண்ணன் அர்ஜுனனுக்குச் சரம ஸ்லோகம் உபதேசம் செய்த பிறகு, இதை மற்றவர்களுக்கு அவர்கள் தகுதி என்ன என்று பார்த்து உபதேசி என்று சொல்லுகிறார். இதையே நம் பூர்வாசாரியர்கள் கடைப்பிடித்தார்கள். ராமானுஜர் அதே வேதத்திலிருந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை வெளியே கொண்டு வந்தார். அது தான் அந்த புரட்சி!




ராமானுஜர் பெரிய திருமலை நம்பிகளிடம் திருமலையில் ஸ்ரீமத் ராமாயணம் காலக்ஷேபம் கேட்டார். அதை நன்கு கேட்டு மனதில் நிறுத்துக்கொண்டார். ( அதைக் கீழே சொல்லியிருக்கிறேன் ). மற்ற ஆசாரியர்களிடமிருந்து ஆழ்வார்களின் அருளிச்செயல்களைக் கேட்டறிந்தார்.

கீதையின் சரம ஸ்லோகத்தின் உட்பொருளைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றுக்கொள்ளத் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் புறப்பட்டார். திருக்கோட்டியூர் ஊர் எல்லைக்குள் நுழைந்தவுடன் எதிரே வந்தவரிடம் “இங்கே திருக்கோட்டியூர் நம்பி திருமாளிகை எங்கே இருக்கிறது ?” என்று கேட்டார் அவரும் வழியைச் சொல்ல, உடனே ராமானுஜர் நின்ற இடத்திலிருந்து சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து சேவித்தார். எழுந்து கொண்டர் தலைப் பட்ட இடத்திலிருந்து மீண்டும் சேவித்தார் இப்படி திருமாளிகை இருக்கும் இடம்வரை சேவித்துக்கொண்டே சென்றார். ( பதினெட்டு முறையும் இப்படியே சென்றார்)

நம்பியின் திருமாளிகை அடைந்தார். நம்பி அவரை அழைத்துச் சென்று என்ன விஷயம் என்று கேட்டார். ராமானுஜர் அடியேனுக்குச் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் போதிக்க வேண்டும் என்றார்.



நம்பி ஒவ்வொரு முறையும் ’பிறகு வாரும்’ என்று சொன்ன 18 வாக்கியங்களைக் கீழே  கொடுத்துள்ளேன். கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டுகிறேன்.

1. சம்சார பீஜம் தொலைந்த  ’பிறகு வாரும்’ என்று சொல்லி அனுப்பினார் நம்பி. (உலக விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வேண்டும்) ராமானுஜரும்  நம்பியிடம் விடைபெற்றுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பிகள் சொன்ன விஷயத்தை மனதில் சிந்தித்தார். உலக வாழ்கையில் பற்று இருந்தால் பெருமாள் மீது எப்படிப் பற்று வரும் ?  தன்னை சுயபரிசோதனை கொண்ட பிறகு இரண்டாம் முறை திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

2. அஹங்காரம், மமகாரம் அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( நான், என்னுடையது என்ற எண்ணம்). ராமானுஜர் திருவரங்கம் திரும்பினார். நம்பி சொன்ன விஷயத்தை அசைபோட்டுக்கொண்டு  அஹங்காரம் பெரிய தடை தான். மீண்டும் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு  திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

3. ஆத்ம ஞானம் பெற்ற ‘பிறகு வாரும்' என்று நம்பிகள் சொல்ல ( உடல் வேறு ஆத்மா வேறு ) ராமானுஜர் அதைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். தேகமே ஆத்மா கிடையாது என்பதைச் சுயபரிசோதனை செய்துகொண்டு  மறுபடியும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

4. தேஹாபிமானம் தொலைந்த ’பிறகு வாரும்' என்றார் நம்பி. (உடல்மீது உள்ள பற்று)  உடையவர் நம்பி சொன்ன வார்த்தையைக் கேட்டுக்கொண்டு திருவரங்கம் திரும்பினார். நம்பி இந்த உடலை வளர்ப்பதை விட்டுவிட்டு ஆத்மாவை வளர்க்க வேண்டும் என்று சொன்னதைச் சிந்தித்தார். சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

5. கைவல்ய மோஹம் தொலைந்த ‘’பிறகு வாரும்'  என்றார் நம்பி. (செல்வம், சொத்து சேர்ப்பதில் ஆசை)  திருவரங்க திரும்பினார் ராமானுஜர். நம்பி சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டார். பெருமாள் தான் நமக்கு நிரந்தர செல்வம். மற்ற செல்வம் பெருமாளை அனுபவிக்கத் தடை என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூருக்கு கிளம்பினார்.

6. விஷயாந்தரப் ஆசை அற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (மற்ற விஷயங்களில் ஆசை)  திருவரங்கம் திரும்பிய உடையவர் பெருமாளைப் பற்றும்போது வேறு பலன்களைக் கேட்காமல் ஆண்டாள் சொல்லுவது போல ’உன்னை அருத்தித்து வந்தோம்’ என்று இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மீண்டும் திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.

7. பகவத் விஷயத்தில் ஆசை பிறந்த  ‘பிறகு வாரும்’  என்றார் நம்பி (பெருமாள் மீது ருசி(ஆவல், ஆசை) வர வேண்டும்  ) திருவரங்கம் வந்தபின் அவன் திவ்ய ரூபம், ஸ்வரூபம், குணம் எல்லாம் நினைத்துப் பூரிப்பு அடைந்தார். உடனே மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

8. ராக த்வேஷங்களை விட்ட ’பிறகு வாரும்’ என்றார் நம்பி (இன்ப - துன்பங்கள், விருப்பு - வெறுப்புகள்). திருவரங்கம் திரும்பியபின் அதை நினைத்துச் சிந்தித்தார். விருப்பு வெறுப்பு, இன்ப துன்பங்கள் எல்லாம் இந்த உலக வாழ்கையில் பற்று இருந்தால் வருவது என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.

9. பார தந்தர்யம் அறிந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாள் விருப்பப்படி இருப்பேன்)  ஆண்டான்(சேஷ) — அடிமை(சேஷி) சம்பந்தம் பற்றிச் சிந்தித்துவிட்டு. நாம் என்றுமே அவருக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டன் தான் என்று  கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

10. ஸ்ரீவைஷ்ணவத்வம் கை வந்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (ஸ்ரீ வைஷ்ணவ பண்புகள்) இதுவரை ஒன்பது முறை சென்றபோது சொன்ன வார்த்தைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை சிந்தித்தார். அதைத் தவிர நித்ய கர்மானுஷ்டானங்களையும் செய்பவன் தான் உண்மையான  ஸ்ரீ வைஷ்ணவன் என்று புரிந்துகொண்டார். திருக்கோட்டியூர் கிளம்பினார்.

11. ஸாத்விக பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி (நல்ல மக்களின் அபிமானம்). திருவரங்கம் வந்த ராமானுஜர் நல்லவர்களின் சம்பந்தம் எப்போதும் நமக்கு முக்கியம் என்று புரிந்துகொண்டார். நல்லார்கள் வாழும் அரங்கத்தில் அதற்குக் குறைவு ஏது ? மீண்டும் திருக்கோட்டியூருக்கு சென்றார்.

12. பாகவத பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி.(எம்பெருமானின் அடியார்களின் அங்கீகாரம்) நல்லவர்கள் சம்பந்தம் மட்டும் இல்லை அதைவிடப் பாகவதர்களின் சம்பந்தம் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார்.

13. பகவத் பரிக்ரஹம் பெற்ற ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. (பெருமாளின் கிருபை) திருவரங்கம் திரும்பிய ராமானுஜர் நம்பி சொன்னதைச் சிந்தித்தார். எப்போதும் பெருமாளின் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். மீண்டும் கிளம்பினார் திருக்கோட்டியூருக்கு.

14. அனன்ய சேஷத்வம் பெற்று ’பிறகு வாரும்’ என்றார் நம்பி.( நான் எம்பெருமான் ஒருவனுக்கே என்ற எண்ணம்)  ராமானுஜர் திருவரங்கம் வந்த பின் நாராயணனே நமக்கே என்ற சிந்தனையுடனும் ’மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்பது போலவும் ’மருத்துவன் பால் மாறாத காதல் கொண்டவன்’ போலவும் 'புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோஷ்டியூர் புறப்பட்டார்.

15. அனன்ய ப்ரயோஜனத்வம் கைக்கூடிய ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( பெருமாளுக்கே நாம் அவனை அடைவதே நம் பலன் என எண்ணம்  ) திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உனக்கேநாம் ஆட்செய்வோம்' என்று எம்பெருமானை அடைவது ஒன்றே தனக்குப் பிரயோஜனம் என்பதைப் போலப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் கிளம்பினார்.

16. அனன்ய போக்யத்வம் கை கூடிய ‘பிறகு வாரும்’ (பெருமாளை  அனுபவிப்பதே ஆனந்தம்) என்றார் நம்பி. திருவரங்கம் வந்த ராமானுஜர் ’உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்று மற்றை நம் காமங்கள் தொலைத்து  ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிப்பதே ஒரே குறிக்கோள் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் திருக்கோட்டியூர் புறப்பட்டார்.

17. ஆசார்ய அனுக்ரஹம் கிடைத்த ‘பிறகு வாரும்’ என்றார் நம்பி. ( ஆசாரியனின் கருணை அவரின் அருள் )  ராமானுஜர் கிளம்ப, நம்பி “அடுத்த முறை வரும் போது தண்ட பவித்திரத்துடன் நீர் மட்டும்  வாரும் கூட யாரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டாம்” என்றார். திருவரங்க வந்த ராமானுஜர் ஆளவந்தாரின் கடாக்ஷத்தை சிந்தித்தார். திருக்கச்சி நம்பி சொன்ன ஆறு வார்த்தைகளைச் சிந்தித்தார். பெரிய நம்பிகள் மதுராங்கத்தில் தமக்கு பஞ்சமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார். நாதமுனிகள் தொடக்கமாக மற்ற ஆசாரியர்கள்  ’நம் பையல்’ என்று அவர்கள் “நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன் என்று உபதேசித்த நல் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். திருக்கோட்டியூருக்கு புறப்பட்டார்.

18. இந்த முறை அவர் திருக்கோட்டியூர் சென்றபோது ‘அதிகாரி புருஷரே வாரும்!” என்று அழைத்தார் நம்பி. உடையவருடன் முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பார்த்தபோது. “இளையாழ்வாரே  தண்ட பவித்திரத்துடன் உம்மை மட்டும் தானே வரச் சொன்னேனே” என்றார். ராமானுஜர் நம்பியை வணங்கி “இதோ இங்கே இருக்கும் முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் அடியேனுக்குத் தண்டமும், பவித்திரமுமாக எப்போதும் பிரியாமல் இருப்பவர்கள்” என்றார். 



நம்பி வரவேற்று கண்ணன் கீதையில் சொன்ன  “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” என்ற  சரம ஸ்லோகத்தின் பொருளை உபதேசித்தார். அர்த்த விசேஷங்களைக் கேட்டுக்கொண்ட ராமானுஜரிடம் திருக்கோட்டியூர் நம்பி ”ராமானுஜரே! உம்மிடம் யாரேனும் அர்த்தம் கேட்டு வந்தால் கீதையில் கண்ணன் சொன்னது போல அடியேன் செய்தது போல நன்கு பரிசோதித்து அவர் அதற்குத் தகுதியானவரா ? என்று பார்த்த பின்னர் அவருக்கு உபதேசிக்க வேண்டும்” என்றார்.

ராமானுஜரும் “அப்படியே செய்கிறேன்!” என்று  விடைபெற்று நேராகத் திருக்கோட்டியூர் ஸ்ரீஸௌம்யநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கே பெருமாளைச் சேவித்து பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு பிரதக்ஷணமாக வரும் போது தெற்காழ்வார் சந்நிதியில் (நரசிம்மர் சந்நிதி) குழுமியிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்தார். ஆண்டாள் தன் தோழிகளை ’நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!” என்று விருப்பம் உள்ளவர்களைக் கூப்பிட்டு, வராதவர்களை எழுப்பிப் பெருமாளை ’கூடி இருந்து குளிர்ந்து’ அனுபவித்தாள் ஆனால் நாம் மட்டும் தனியாக மோக்ஷ்சம் போவது எந்த விதத்தில் நியாயம் ? கையில் கிடைத்த பெருமாள் பிரசாதம் போல் அல்லவா நமக்கு ஆசாரியன் உபதேசம் செய்துள்ளார். கோயிலில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவர் கண்களுக்கு ஆண்டாளின் தோழிகளாக்கச் சம்சார உலகிலிருந்து  கரைசேர வேண்டிய ஆத்மாக்களாகத் தெரிந்தார்கள்.அழைத்து ஒவ்வொருவருக்கும் நம்பிகள் சொன்ன  சரம ஸ்லோகத்தின் உட்பொருளைக் கையில் இருக்கும் பிரசாதத்தைப் பகிர்ந்து அளிப்பது போலக் கொடுக்க ஆரம்பித்தார்.



இப்படி ராமானுஜர் எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் தனக்குக் கிடைத்த உபதேசத்தைத் தானமாகக் கொடுக்கிறார் என்று நம்பிகள் காதுகளுக்கு எட்டியது. கோவிலுக்கு விரைந்தார் நம்பி. ராமானுஜர் அவரை வணங்கினார்.

“ராமானுஜரே! இப்படி எல்லோருக்கும் உபதேசம் செய்வது முறையோ ? நன்று பரிசோதித்த பின்னரே கொடுக்க வேண்டும் என்று ஆசாரியன் வார்த்தையை மீறியவருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா ?” என்று கேட்க அதற்கு ராமானுஜர் “அடியேனுக்கு நரகம் அன்றோ கிடைக்கும்” என்றார். நம்பி “அது தெரிந்துமா இப்படிச் செய்தீர் ?” என்றார் அதற்கு ராமானுஜர் “அடியேன் ஒருவன் நரகம் புகுந்தாலும், இங்கே இருக்கும் மற்ற ஜீவாத்மாக்கள் கரைசேருவார்களே! ஸ்ரீ ராமாயணத்தில் விபீஷண சரணாகதி அளிக்கும் முன் ஸ்ரீராமர் உன்னுடையவன் என்று எந்தப் பிராணி வந்தாலும் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம் (”ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம”) என்கிறார் என்றார் ஸ்ரீராமர்.



திருக்கோட்டியூர் நம்பி ராமரைப் போன்று  ராமானுஜரின் உயர்ந்த உள்ளத்தை வியந்து “வாரும் நம் எம்பெருமானாரே!” என்று ஆரத்தழுவிக்கொண்டார்.

கீதையில் சரம ஸ்லோகத்தை உபதேசித்திவிட்டு கண்ணன் இதை மற்றவர்களுக்கு உபதேசிக்கப் பல தகுதிகளை அடுக்குகிறார். அவர்களுக்கு அந்தத் தகுதிகள் இருந்தால் மட்டுமே உபதேசம் செய்ய வேண்டும் என்கிறார். திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமானுஜருக்கு அந்தத் தகுதிகள் இருக்கிறதா ? என்று பரிசோதித்துவிட்டு அர்த்தத்தைக் கொடுத்தார். பதினெட்டு முறை என்பது பதினெட்டு படிக்கட்டு மாதிரி.

ராமானுஜர் தகுதி இல்லாதவர்க்கு அர்த்தங்களை உபதேசித்தார் என்று இல்லை, ஆனால் ‘ஆசை’ என்ற தகுதி இருந்தால் போதும் என்று தகுதியின் definition னை மாற்றினார். 

வேதாந்த தேசிகன்

அந்தணர் அந்தியர் எல்லையில்
நின்ற அனைத்துலகும்
நொந்த வரேமுதலாக
நுடங்கி அனன்னியராய்
வந்தடை யும்வகை

 என்கிறார்.

பிராமணர்(அந்தணர்) முதல் சண்டாளர்(அந்தியர்) என்ற எந்த எல்லையும் இல்லாமல் சம்சார பந்தத்தில் கவலையும் வருத்தமும் கொண்டவர்களே(நொந்தவரே முதலாக ) சரணாகதிக்கு உரியவர்கள்.வேறு உபாயம் இல்லாமல், துவண்டு (நடங்கி ) வேறு பலன்களையும்,  வேறொரு தெய்வத்தையும் நாடாத யாவரும் ( அனன்னியர் ) இந்தச் சரணாகதியைக் கடைப்பிடிக்கத் தகுதியானவர்கள்

இதையே மணவாள மாமுனிகள்

“ஓராண் வழியாய் உபதேசித்தார்
முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பாருலகில்
 ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள்
கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்”

என்கிறார்.

உலக வாழ்க்கையில் பற்று அற்று பெருமாளிடம் ஆசையே தகுதியாக வைத்துச் சரணாகதி செய்தால் போதும் என்பது தான் ராமானுஜர் செய்த புரட்சி. இதுவே எம்பெருமானார் தரிசனம் என்று நம்பெருமாள் பெயர் வைத்துப் போற்றினார்.

பல வருடங்கள் கழித்து... திருக்கோஷ்டியூர் நம்பிக்கு 105 வயது. அந்திமகாலம். படுத்துக்கொண்டு இருக்கிறார். சிஷ்யர்கள் எல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆசாரியன் ஏதாவது சொல்லுவாரா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சிஷ்யர்களின் ஒருவர் “தேவரீர் திருவுள்ளத்தில் என்ன எண்ணம் ஓடுகிறது ?” என்று கேட்க அதற்குத் திருக்கோஷ்டியூர் நம்பி ”ஒரு பட்சி சக்கரவர்த்தி திருமகன் திருவுள்ளத்தைப் புண்படுத்தியதே! என்று எண்ணம் என்னை வாட்டுகிறது” என்றார்.

ஒரு பட்சி ஸ்ரீராமர் மனதைப் புண்படுத்தியதா ?

விபீஷண சரணாகதிக்கு முன் ஸ்ரீராமர் எல்லோரிடமும் விபீஷணனை ஏற்கலாமா, கூடாதா என்று கேட்கிறார். பிறகு ஒரு தீர்மானத்துக்கு வருகிறார். நல்லவனோ, கெட்டவனோ

”ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது” என்கிறார் கம்பர் அதாவது “அபயதானம் தருவதே என்னுடைய கடமை” என்கிறார் ராமர் கூடவே நான் என்ன புதிதாகச் செய்துவிட்டேன் ? எனக்கு முன்பே ஒரு புறா இந்தப் பெருமை எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டது.

புறாவின் கதை:  ஒரு வேடன் காட்டில் வேட்டையாடும்போது ஒரு பெண் புறாவைப் பிடித்து கூண்டில் அடைத்துவிடுகிறான். அந்தச் சமயம் நல்ல மழை, குளிர், பசி. ஒரு மரத்துக்கு அடியில் ஒதுங்குகிறான். மரத்தின் மீது ஆண் புறா உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. கூண்டிலிருந்த பெண் புறா ஆண் புறாவைப் பார்த்து “நம்ம வீட்டுக்கு அபயம் என்று வந்திருக்கிறான் வேடன். வீட்டுக்கு அபயம் என்று வந்தவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் ...” என்றது.

ஆண் புறா பறந்து சென்று சுள்ளிகளைப் பொறுக்கி கூடவே காட்டுத் தீயையும் கொண்டு வந்து அவன் முன்னே போட்டுத் தீயை மூட்டி வேடனுக்கு குளிரைப்போக்குகிறது. பசிக்கு என்ன செய்ய என்று யோசித்த அந்த ஆண் புறா தீயில் பாய்ந்து வேடனுக்கு உணவானது. இதைக் கம்பர் “வேதத்தின் விழுமிது அன்றோ” அதாவது வேதத்தைவிட மேலான விஷயமல்லவா ? என்கிறார்.

இதைத் தான் திருக்கோட்டியூர் நம்பி தன் அந்திமகாலத்தில் ஸ்ரீராமர் எப்பேர்ப்பட்ட கருணைக் கடல், தன்னை அபயம் என்று வந்தவர்களுக்கு அபயம் கொடுத்தவர் ஆனால் அவருக்கு முதல் முதலில் அந்தப் பெருமை கிடைக்காமல் ஒரு புறாவிற்குக் கிடைத்துவிட்டதே என்று வருந்தி ஆசாரியன் திருவடி அடைந்தார்.

புறாவிற்கு இருந்த குணம் ராமானுஜருக்கு இருந்திருக்கிறது. ஆண் புறா தான் இறந்தாலும் பரவாயில்லை என்ற குணத்தைப் போல்,  நான் ஒருவன் நரகம் சென்றால் பரவாயில்லை என்று நினைத்தார் ராமானுஜர். இதுவே அவர் செய்த புரட்சி!

பங்குனி உத்திர திருநாள் அன்று கத்யதிரயத்தில், சரணாகதி கத்யத்தில் ஸ்ரீராமர் ஸ்ரீமந்ராமாயணத்தில் சொன்ன சரம ஸ்லோகத்தையும், கண்ணன் கீதையில் உபதேசித்த சரம ஸ்லோகம் இரண்டையும்  கூறு சரணாகதி செய்கிறார். 



ராமானுஜர் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு பதினெட்டு முறை நடந்தார். திருக்கோட்டியூர் நம்பிகள் ‘பிறகு வாரும்’ என்று பரீட்சித்துப் பார்த்து அர்த்தங்களைக் கொடுத்தார். இவை பதினெட்டு படிகள் என்று நாம் கொள்ளலாம். இப்போது வாசகர்களை திருக்கோட்டியூரிலிருந்து திருவரங்க பயணத்துக்கு அழைக்கிறேன்.

அதாவது 18லிருந்து - 1 வரை தலை கீழாகப் படித்தால் ரகசியத்தின் அர்த்தம் கிடைக்கும்.

18. சரம ஸ்லோகத்தின் பொருள் கிடைக்க வேண்டும் என்றால் ஆசாரியன் அருள் கிடைக்க வேண்டும்.

17. ஆசாரியன் அருள் கிடைக்க வேண்டும் என்றால் பெருமாளை அனுபவிப்பதே ஆனந்தம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

16. பெருமாளை  அனுபவிப்பதே ஆனந்தம் என்ற எண்ணம் வரப் பெருமாளை நாம் அடைவதே நம் பலன் என்ற எண்ணம் வேண்டும்

15. பெருமாளை நாம் அடைவதே நம் பலன் என்ற எண்ணம் வருவதற்கு நான் எம்பெருமான் ஒருவனுக்கே என்ற எண்ணம் வா வேண்டும்.

14. நான் எம்பெருமான் ஒருவனுக்கே என்ற எண்ணம் வரப் பெருமாளின் கிருபை இருக்க வேண்டும்.

13. பெருமாளின் கிருபை வருவதற்கு எம்பெருமானின் அடியார்களின் அங்கீகாரம் நமக்குத் தேவை

12. எம்பெருமானின் அடியார்களின் அங்கீகாரம் கிடைப்பதற்கு நல்ல மக்களின் அபிமானத்தைப்  பெற வேண்டும்.

11. நல்ல மக்களின் அபிமானத்தைப் பெற அவன் ஸ்ரீ வைஷ்ணவனாக இருக்க வேண்டும்.

10. ஸ்ரீ வைஷ்ணவனாக இருப்பதற்கு நமக்கும் பெருமாளுக்கும் நமக்கும் ஆண்டான் அடிமை (சேஷ சேஷி) சம்பந்தம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

9. பெருமாளுக்கும் நமக்கும் ஆண்டான் அடிமை (சேஷ சேஷி) சம்பந்தம் என்று புரிந்துகொள்ள இன்ப-துன்பங்கள், விருப்பு -வெறுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

8. இன்ப-துன்பங்கள், விருப்பு -வெறுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பெருமாள் மீது ருசி(ஆவல்,ஆசை) வர வேண்டும்.

7. பெருமாள் மீது ருசி(ஆவல்,ஆசை) வர வேண்டும் என்றால் மற்ற விஷயங்களில் ஆசை போக வேண்டும்.

6. மற்ற விஷயங்களில் ஆசை போக வேண்டும் என்றால் செல்வம், சொத்து சேர்ப்பதில் ஆசை இருக்கக் கூடாது.

5. செல்வம், சொத்து சேர்ப்பதில் ஆசை இல்லாமல் இருக்க உடல்மீது உள்ள பற்று நீங்க வேண்டும்.

4. உடல்மீது உள்ள பற்று நீங்க உடல் வேறு ஆத்மா வேறு என்று புரிந்துகொள்ள வேண்டும்

3. உடல் வேறு ஆத்மா வேறு என்று புரிந்துகொள்ள நான், என்னுடையது என்ற எண்ணம் நீங்க வேண்டும்.

2. நான், என்னுடையது என்ற எண்ணம் நீங்க உலக விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வேண்டும்.

1. உலக விஷயங்களில் உள்ள பற்றை விடுவதே முதல் படி.

கட்டுரையின் தலைப்பு - ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி ; 

 ஸ்ரீ ராமானுஜரின் புரட்சி ரகசியம் என்று தலைப்பையும் தலைகீழாகப் படிக்கலாம் !

- சுஜாதா தேசிகன்
 28-04-2020
 ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திர பதிவு

ஓவியம் நன்றி : கேஷவ் 




Comments

  1. Wonderful article.,. Thank You Very much🙏.
    Also, thought of asking you this doubt. Sir, can You pls recommend an authentic history book detailing the events related to The Historic escapade of the Sriranganathaswamy Moola vigraha during the Malik kafoor invasion times till His later return to Srirangam...i've read ஸ்ரீவேணு கோபாலன்'s திருவரங்கன் உலா, which is of course a work of fiction related to the above history.

    ReplyDelete
    Replies
    1. நம்பெருமாள் வனவாசம் என்ற புத்தகம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடாக கிடைக்கிறது. கல் சொல்லும் கதை என்று நான் ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறேன் ( என் பிளாகில் உள்ளது )

      Delete
    2. மதுராவிஜயம் என்ற புத்தகமும் இருக்கிறது.

      Delete
    3. மிக்க நன்றி, ஐயா. Let me try to get these,🙏🙏

      Delete
  2. கடும் தேர்வுகளுக்குப்பிறகு உபதேசம் பெற்ற ராமானுஜர் அடைந்த உயரத்தை அவரது இலவச உபதேசம் பெற்றவர்களில் யாரேனும் அடைந்தனரா ?

    ReplyDelete
    Replies
    1. நம்மாழ்வார் அருளிய திருவந்தாதியை பெரிய திருவந்தாதி என்று கூறுவர். பெருமாள் பெரியவர், அவரை என் மனத்தில் வைத்திருக்கும் நான் அவரை விட பெரியவர் என்று நம்மாழ்வார் கூறுகிறார் அதனால் பெரிய திருவந்தாதி என்று பெயர் பெற்றது.
      அது போல ராமானுஜரின் உபதேசம் பெற்றவர்கள் எல்லோரும் ‘அடியேன் ராமானுஜ தாஸன்’ என்ற பட்டம் பெற்று உயரத்துக்கு சென்றார்கள். பெருமாளை போல ராமானுஜருக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை!

      Delete

Post a Comment