Skip to main content

16. இராமானுசன் அடிப் பூமன்னவே - வாய்க்கால்

 16.  இராமானுசன் அடிப் பூமன்னவே - வாய்க்கால் 


திருக்கண்ணமங்கை ஆண்டான் ’பொலிக பொலிக’  என்ற பாசுரத்தின் அர்த்தத்தைப் பற்றிக் கேட்டவுடன், நாதமுனிகள் கண்களை மூடிக்கொண்டு யோகத்தில் சற்று நேரம் இருந்தார். 

அவரின் பதில்களுக்காக  திருக்கண்ணமங்கை ஆண்டான், புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன் மற்றும் ஈஸ்வர முனிகள் காத்துக்கொண்டு இருந்தார்கள். 

நாதமுனிகள் கண்களை மெதுவாகத் திறந்து அவர்களை அருகில் அழைத்து, "கலியை விரட்டி வையம் வாழ,  ஜகதாச்சார்யர் ஒருவர் தோன்றப் போகிறார்" என்று சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும் கூறிய நாதமுனிகள், ஆழ்வார் தமக்கு பிரசாதித்த பவிஷ்யதாசார்ய விக்கிரகம்  தன்னிடம் உள்ளது என்பதை மட்டும் கூறாமல், ரகசியமாக வைத்துக்கொண்டார். 



”அப்படியா?” என்ற ஆச்சரியத்துடன் இவர் முழுமுதற் பொருளோ என்னுபடி மனமுருகிக் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் நாதமுனிகளின் திருவடியைப் பற்றி “ஒப்பற்ற ஞானியே! குருகூர் சடகோபனை சாக்ஷாத்தாக தரிசித்த தங்களைத் தரிசித்து ,  முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் உங்கள் சம்பந்தம் கிடைத்தது” என்று அவர் திருவடியில் விழுந்தார்கள். 

நாதமுனிகளின் புதல்வர் ஈசுவர முனி ”தந்தையே உங்கள் அனுமதியுடன் உமக்குக் காட்சி அளித்து அரும்பெரும் பாசுரங்களையும் அதன் சீரிய அர்த்தங்களையும் உம் மூலம் எமக்கும் இந்த உலகத்துக்கும் அளித்த ஆழ்வார் பற்றி சில வார்த்தைகள் கூறலாமா ?” என்று கேட்டார். 

“ஈஸ்வரமுனியே ! கேட்க ஆவலாக இருக்கிறேன் என்றார் நாதமுனிகள் ஈஸ்வர முனிகள் கைகூப்பி, கண்களை மூடிக்கொண்டு 

திருவழுதி நாடு என்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து (1)

என்று கூற நாதமுனிகள் மகிழ்ச்சி பூரிப்புடன், “மிக அருமை! திருவழுதி நாடு என்றும் அழகிய திருக்குருகூர் என்றும், நீராடுவதற்கு இனியதாயுள்ள அழகிய தாமிரபரணி என்றும், அரிய வேதங்களை அந்தாதித்தொடையால் திருவாய்மொழியாக அருளிச்செய்த ஆழ்வாருடைய இரண்டு திருவடிகளையே எப்பொழுதும் தெளிவுடனே நினைக்கக் கடவாய் மனமே’ என்ற மிக அருமையாகக் கூறினாய். இதை ஓலையில் எழுதி ஆழ்வார் பாசுரங்களுக்கு முன் தனியனாக சேர்த்திவிடு” என்று கூறிவிட்டு “அப்பனே ! உனக்கு ஒரு மைந்தன் பிறப்பான். அவனுக்குச் ‘யமுனை துறைவன்’  என்று கோதை வடமதுரை மைந்தனை அன்புடன் அழைத்த அந்தப் பெயரை அவனுக்கு பெயரிடுவாயாக” என்று கூறினார். 

இதைக் கேட்ட திருக்கண்ணமங்கை நாதமுனிகளை வணங்கி.  ”நாச்சியார் திருமொழிக்கு அடியேன் ஒரு தனியனை மனதில் வைத்திருக்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் கூறுகிறேன்” என்றார்.  “ஆண்டான் தமிழை கேட்க ஆசையாக இருக்கிறேன்!” என்று நாதமுனிகள் கூற ஆண்டான் 

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு 

கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே(2)

என்றார். 

நாதமுனிகள் மகிழ்ந்து “பாண்டிய அரசன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான். பக்தியின் சொலவாக்கினால் மல்லிநாடு என்ற ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆண்ட மடமயில் கோதை. கோதைக்கு ஆண்டாள் என்ற பெயரும் மிகப் பொருத்தமாக இருக்கிறது! கண்ணனுக்கு ஒத்தவளாகவும், பெரியாழ்வார் பெற்றெடுத்த விளக்காகத் திகழ்கிறாள். 

கண்ணனின் சங்கை நோக்கி பெருமாளின் சிவந்த வாயின் சுவையை விசாரித்து, தான் சூட்டிக்களைந்த பூமாலையைத் திருவரங்கனுக்கு சமர்ப்பித்த மேன்மை யாருக்கு வரும் ? பெரியாழ்வாருடைய நந்தவனத்துச் சோலைக் கிளியான ஆண்டாள் நாச்சியார் தூய்மையும் இனிமையும் பொருந்திய திருவடிகளே நமக்குப் புகலிடம் என்ற அழகான இந்தத் தனியான்களையும் ஓலைப்படுத்தி நாச்சியார் திருமொழிக்கு முன் சேர்த்துவிடு”  என்று கூறிய நாதமுனிகள்  ஆண்டானைப் பார்த்து “ஆண்டான்!  திருக்கண்ணமங்கை கோயிலில் மகிழ மரம் ஒன்று இருக்கிறது அல்லவா ?” என்றார் . 

“ஆம் இருக்கிறது!” என்று வியப்புடம் கூறினார் ஆண்டான். 

“நம்மாழ்வாருக்கு உகந்த மகிழமரத்து நிழலில், ஆண்டாள் நாச்சியார் ‘தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்’  என்று கூறுவது போல அங்கே பகவானே உபாயமாக வேறு பயனும் கருதாமல்,  திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலனுக்குத் துளசி புஷ்பக் கைங்கரியம் செய்துகொண்டு இருப்பாயாக” என்றார். 

நாதமுனிகள் குருகூர் காவலப்பனை நோக்கி “ஆண்டான் பெரியாழ்வாரின் குலவிளக்கைப் போற்றினார். உன் மனதில் என்ன இருக்கிறது ?” என்று கேட்க, குருகைக்காவலப்பன் நாதமுனிகளை வணங்கி “நெஞ்சத்தில் அன்பும் ஆர்வமும் கொண்டு விளக்கேற்றி ‘திருக்கண்டேன் எனத் தரிசனம் செய்த பேயாழ்வார் பற்றி விண்ணப்பம் செய்ய உங்கள் அனுமதி வேண்டும்” என்று வேண்டி நின்றார். 

நாதமுனிகள் “ஆவலுடன் இருக்கிறேன்!” என்று கூற காவலப்பன் 

சீராரும் மாடத் திருக்கோவல் ஊர் அதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு -ஓராத்
’திருக்கண்டேன்’ என்று உரைத்த சீரான் சூழலே
உரைக் கண்டாய் நெஞ்சே!  உகந்து (3)

என்றார். 

நாதமுனிகள் “ஆகா! ஆழகு பொருந்திய மாடங்களையுடைய திருக்கோவலூர் இடைகழியில் கார்காலத்துக்கரிய மேகம் போன்ற பெருமாளைச் சேவிப்பதற்காக நெஞ்சாகிய உட்கண்ணாலே அனுபவித்து திருக்கண்டேன் என்ற சீர்மை பொருந்திய பேயாழ்வாரின் திருவடிகளை மகிழ்ந்து பேசிய உன் தனியனை மூன்றாம் திருவந்தாதி தொடக்கத்தில் சேர்த்துவிடு” என்றார். 

காவலப்பன் அவரை வணங்கி நின்ற போது நாதமுனிகள் “மிகவும் பிரகாசமான யோக சாஸ்திரத்தை என் பேரனான யமுனைத் துறைவனுக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும்”  என்று கூறிய அச்சமயம் வானம் அவருடைய தனியனுக்கு ஏற்றார் போலக்  கார்காலத்துக் கருமை நிற மேகமாகச் சூழ்ந்து இருட்டியது. பலத்த மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட அந்தச் சமயத்தில் தூரத்தில் சோழ மன்னன் தன் அரசிகளுடன் சிரித்துப்பேசியபடி மழை வருவதற்கு முன் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வேகமாகக் குதிரையில் சென்று கொண்டு இருந்தான். 

நாதமுனிகள் திடீர் என்று எழுந்துகொண்டு சோழ அரசனைத் துரத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தார். அவர் ஓடிய அதே வேகத்தில் மழை பலமாகப் பெய்யத் தொடங்கியது. 

இச்செயலைப் பார்த்துத் திடுக்கிட்ட சிஷ்யர்கள் வேகமாக பின் சென்றார்கள். பலமான காற்றுடன் இடியும், மின்னலும் கூடிய பலத்த மழையில் நாதமுனிகள் மறைந்தார். 

புண்டரீகாக்ஷரும், ஈஸ்வரமுனிகளும் ஓட அவர்களின் பின்  ஆண்டானும் காவலப்பனும் செய்வதறியாமல் ஓடினார்கள். சுற்றும் முற்றும் தேடிக் கொண்டு சென்ற போது அதிர்ச்சியான அந்தக் காட்சியைக் கண்டார்கள். 

நாதமுனிகள் அங்கே மயங்கிக் கிடந்தார். 

சிஷ்யர்கள் “ஐயோ! அரிய வேதங்களுக்கெல்லாம் தலைவனே! எதற்காக இங்கே மன்னனை பின் தொடர்ந்து வந்தீர்?” என்று நாதமுனிகளை உட்கார வைத்து ஈஸ்வர முனிகள் கேட்டார். 

நாதமுனிகள் மெதுவாகக் கண்களைத் திறந்து பேசத் தொடங்கினார் “இருட்டிய மேகம் கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்த நீலமேக வண்ணனாகிய கண்ணனின் கருனையாகத் தெரிய, சோழ மன்னன் தன் அரசிகளுடன் சென்றது கண்ணன் கோபியர்களுடன் சென்றார் என்றல்லவா நினைத்திருந்தேன்” என்றார் 

காவலப்பன் “ஆசாரியரே! சடகோபர் எப்படி ஆறுமாத காலம் பிரேமையில் ஆழ்ந்திருந்தாரோ அதே நிலையில் உங்களையும் காண்கிறோம்” என்றார். 

ஆண்டான் ” ‘திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’ நம்மாழ்வார் பாசுரத்தில் தாயின் நிலையிலிருந்து தன் மகள் நிலையைப் பாடியது போல அழகிய மன்னர்களைப் பார்த்தாலும் உங்களுக்கு கண்ணனைப் பார்ப்பது போல இருந்திருக்கிறது!” என்றார் 

புண்டரீகாக்ஷர் “என்ன காரியம் செய்தீர். உங்களைப் பிரிந்து நாங்கள் துடிதுடித்துவிட்டோம்! மழை நின்றுவிட்டது வாருங்கள் சதுர்வேத மங்கலம் திரும்பலாம்” என்று எல்லோரும் நடக்க ஆரம்பித்த போது, நாதமுனிகள் “எல்லோரிடமும் பாசுரங்களுக்குத் தனியனைக் கேட்டேன். புண்டரீகாக்ஷரே உம் மனதில் என்ன இருக்கிறது? ” என்றார். 

புண்டரீகாக்ஷர் நாதமுனிகளை வணங்கி பாடத் தொடங்கினார்

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடுயே தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ
வேங்டவற்கு என்னை விதி” யென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு (4)

என்றார். 

நாதமுனிகள் “அன்பனே அற்புதம்!  பூமாலையைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் அரங்கனுக்கு   ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு பாடுபவர்கள் எல்லோருக்கும் அருளவல்ல ஆண்டாளின் புகழைச் சொல்லு! என்ற இந்த அருமையான தனியன்களை ஓலைப்படுத்தி திருப்பாவைக்கு முன் சேர்த்துவிடு” என்று கூறிவிட்டு “புண்டரீகாக்ஷரே உன் விருப்பம் யாது  ?” என்றார் 



புண்டரீகாக்ஷர் “இதோ இங்கே எங்கும் பசுமை நிறைந்த செந்நெல் பயிர்கள் வளர்ந்து செழிப்பாக இருக்கிறது. இதற்குக் காரணம் வீராநாராயணபுரம் ஏரியில் இருக்கும் நீர்.  ஆனால்  ஒரே  இடத்தில் தேங்கியிருந்தால் அதைச் சுற்றி இருக்கும் பயிர்களுக்குத் தான் பயன்படும். ஆனால் அதே நீர் அகலமான வாய்க்கால்கள் வழியாகப் பொங்கி வழிந்து செல்லும் இடமெல்லாம் பயிர்களை உய்விக்கச் செய்து, பாலை நிலங்களையும் செழிப்பு மிக்க பூமியாக மாற்றுகிறது. தண்ணீர் இல்லாத நிலங்களைப் போல், பக்தி இல்லாமல் இந்தப் பூவுலகமே பாலை நிலங்களாக நாசமடைந்து எங்கும் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு பிணங்களாகக் காட்சி அளிக்கிறார்கள். நம்மாழ்வார் என்ற கருனை மழையினால், நாதமுனிகள் என்ற  பெரிய ஏரியில் ஆழ்வார்களின் பாசுரங்கள் அமுதமாகத் தேங்கியிருக்கிறது. அந்த அமுதத்தை,  அடியேன் ஒருவன் மட்டும் அனுபவித்துக்கொண்டு இருப்பது சரியாகுமா ? நீங்கள் எங்களுக்கு அருளிய உயர்ந்த ஆழ்வார் பாசுரங்களின் அனுபவத்தை,  ஆண்டாள் நாச்சியார் போல மற்றவர்களை எழுப்பி, எல்லோரையும் உய்யும்படி, தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால்  போல எல்லோருக்கும் உபதேசிக்க அடியேனை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று நாதமுனிகளின் திருவடிகளில் விழுந்தார். 

இதைக் கேட்ட நாதமுனிகள் அவரை வாரியணைத்து “ புண்டரீகாக்ஷரே ! நீர் உலகையும், உலகை உடையவனான எம்பெருமானையும், அவனைப் போற்றும் அருளிச் செயல்களையும், அவற்றைப் பெற்ற அடியேனையும் உய்யக்கொண்டீர்!  எல்லாவற்றையும் பொன்னாக மாற்றவல்ல ரசகுளிகை போல் ஆழ்வார் பாசுரங்களால் எதைத் தொட்டாலும் பக்தியாக மாறும். அரும்பாடுபட்டுப் பெற்ற அவற்றை உலகம் எங்கும் எதிர் பொங்கி மீதளிப்ப பரவச் செய்து உம்மால் எல்லோருடைய துன்பமும் நீங்கி உய்விக்கப்போகிறார்கள்.  ’உய்யக்கொண்டார்’ என்று நீர் பிரசித்தி பெற்று விளங்கப்போகிறீர். நீரே என் பேரனான யமுனைத் துறைவனுக்கும் இந்த நல்நெறியை  உபதேசிக்க வேண்டும்” என்றார்.  

உய்யக்கொண்டார் நாதமுனிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கி,  எல்லோரும் நடக்கத் தொடங்கினார்கள். 

வயல்களுக்கு நடுவில் வாய்கால்களும், தூரத்தில் வானவிலும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கோபுரம் தெரிந்தது. 


நாலாயிரத்தைக் காட்டிக்கொடுத்து, அதை நாதமுனிகளின் மூலம் பெற்றுக்கொடுத்து, அதை வளர்க்க ஒப்பற்ற கருணையின் வடிவமான உய்யக்கொண்டாரைக் காட்டிக்கொடுத்த காட்டுமன்னாரைச் சேவிக்க மழையில் முழுக்க நனைந்தவர்களாகக் கோயிலுக்குள் சென்ற போது, அங்கே செந்தாமரைக் கண்களுடன் காட்டுமன்னார் பக்தியில் நனையக் காத்துக்கொண்டு இருந்தார். 

பயணம் தொடரும்... 
- சுஜாதா தேசிகன்
7-11-2020
முகப்பு படம் நன்றி யதிராஜன் 
கோட்டோவியம் : ஓவியர் மஹா தேவன், நன்றி கல்கி தீபாவளி மலர் 

--------------------------------------------------------------------------

(1), (2), (3) (4) - முறையே அவர்கள் இயற்றிய தனியன்கள். 


Comments

  1. 🌟👍🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. ஒப்பற்ற அரிதான விஷயங்கள். மிக அருமை

    ReplyDelete
  3. 🙏🙏 உய்யக்கொண்டார் எனும் புண்டரீகாக்ஷரை நாதமுனிகள் ஆசீர்வதித்தது அற்புதமாய் இருக்கிறது. இன்று உங்களைப்போன்றோர் மூலம் வைணவம் உயிற்புடன் இருப்பதும் உய்யக்கொண்டானின் திருப்பணியே! தாசன்.

    ReplyDelete
  4. Nice narration Desikan Narayanan Swamy. The second Taniyan (not in vogue) was not written by Thirukkannamangaiyaandaan Swamy. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
    Replies
    1. அடியேன். ‘அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி' என்ற தனியன் திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளியது. அடுத்த தனியன் ’கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்' சில புத்தகங்களில் வானமாமலை ஜீயர் என்று இருக்கிறது சில புத்தகங்களில் ஆண்டான் என்று இருக்கிறது. இதைப் பற்றி கீழே ஒரு சிறு குறிப்பு போடுகிறேன். நன்றி தாஸன்

      Delete
    2. கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
      சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்
      மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
      சோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே

      idhu vanamamalai jeeyar swami aruliyadhu enbadhu dhan vazhakkam. Indha thaniyan andha praandhiyangalil mattume sevikavum padugiradhu

      Delete

Post a Comment