Skip to main content

15. இராமானுசன் அடிப் பூமன்னவே - பெரியமுதலியார்

15. இராமானுசன் அடிப் பூமன்னவே - பெரியமுதலியார்

திருவரங்கத்திலிருந்து  வடக்கே இரண்டு காத தூரத்தில் வெள்ளைநிறப் பாறைகளால் ஆன சிறுகுன்றின் மீது ஓர் அழகிய கோயில் ஒன்று இருந்தது. அக்கோயிலில்  கிழக்கு நோக்கி  புண்டரீகாக்ஷப் பெருமாள் பக்தர்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டு இருக்கும் இத்தலம் திருவெள்ளறை என்று  பெயர்பெற்றது. ஆதிகாலத்தில் ஏற்பட்ட இத்தளத்தை ஆதி திருவெள்ளறை என்றும் அழைப்பார்கள்.

நிலமகள், திருமகள், கதிரவன், சந்திரன், ஆதிசேஷன் முதலியோர் தங்கள் தெய்வ வடிவைத் துறந்து மனித வடிவில் பெருமானுக்குப் பணிவிடைகள் செய்வதை இன்றும் அங்கே காணலாம். 

முன்பு ஒரு காலத்தில் தெற்கு தேசம் முழுவதும் காடுகளாக இருந்தது. இஷ்வாகு வம்சத்தில் இராமனுக்கு முன்னால் வாழ்ந்து, புறாவுக்காக உடலைத் தியாகம் செய்யத் துணிந்தவனாகப் பிரசித்திபெற்ற சிபிசக்கரவர்த்தி இந்த இடத்துக்கு வந்த போது பெருமாள் மீது ஈர்க்கப்பட்டு, தொண்டு புரிய வேண்டும் என்று நினைத்தான். 

கங்கை யமுனை நதிகளின் மத்தியப் பகுதியிலிருந்து மூவாயிரத்து எழுநூறு பூர்வசிக வைணவ பிராமணக் குடும்பங்களை இப்பெருமாளுக்கு தொண்டு செய்வதற்காக  திருவெள்ளறைக்கு அழைத்து வந்து குடிபுகச் செய்தான். சோழதேசத்திற்கு ஆதிகாலத்தில் வந்த இக்குலத்தவர்களை ’சோழியர்கள்’ என்று அழைத்தார்கள்.  


மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய மூவரும் பூர்வ சிகை பிராமணர்கள். இத்தகைய பூர்வசிக வைணவ  நல்லார்கள்  திருவெள்ளறையில் பெருமாளுக்குத் தொண்டு புரிந்துவந்தார்கள். அக்குலத்தில் மற்ற பலன்களை விரும்பாமல் திருவெள்ளறை எம்பெருமானுக்குத் தொண்டு புரிந்து வந்த தம்பதிகளுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 

அக்குழந்தை திருமேனியும், திருக்கண்களையும் கண்டு அப்புண்டரீகாக்ஷப் பெருமாளே இக்குழந்தையாக அவதரித்தான் போலும் என்று அறுதியிட்டு அக்குழந்தைக்கு ’புண்டரீகாக்ஷன்’ என்று பெயரிட்டார்கள். 

பெற்றோரைப் போலவே பெருமாளிடம் தன் மனத்தைக் கொடுத்து தொண்டு புரிந்து வந்த அக்காலத்தில் காட்டுமன்னார்குடி என்னும் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகளின் பிரபாவத்தைக் கேள்விப்பட்டு, இவரே நமக்குத் தகுந்த ஆசாரியன் என்று அவரின்  திருவடி தொழுது, ஆழ்வார்களின் பாசுரங்களையும் அதன் உட்பொருளையும் உபதேசம் பெறத் திருவரங்கம் வழியாக காட்டுமன்னார் நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார் புண்டரீகாக்ஷன்.


பாண்டியத் தேசத்தில் நம் நேயர்களுக்கு ஏற்கனவே தெரிந்த திருக்குருகூரில் ஒரு பாகவதர்  குருகைப்பிரானாகிய நம்மாழ்வாரை எப்பொழுதும்  தன் மனத்தில் தியானித்துக்கொண்டு கோயிலிலேயே வாசம் செய்து வந்தார். கோயில் காப்பான் போல் இருந்ததால் அவரை ஊர் மக்கள் ’குருகைக் காவலப்பன்’ என்று அழைத்தார்கள். நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் யோக ரகசியத்தை அறிந்து நம்மாழ்வார் போல யோகத்தில் பெருமாளை அனுபவிப்பதைக் கேள்வியுற்று, வாழ்நாள் முழுவதும்  எம்பெருமானைத் தியானிக்க எண்ணி,  நாதமுனிகளின் திருவடி தொழுது,  அந்த ரகசியத்தை அறிந்துகொள்ள வீரநாராயணபுரம் நோக்கிப் புறப்பட்டார். 



திருக்கண்ணமங்கை என்ற திவ்ய தேசம், சோழதேசத்தில் திருக்குடந்தை அருகே இருக்கிறது. அங்கே பக்தவத்சலப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் மிகப்பெரிய உருவத்தோடு காட்சிகொடுக்கிறார். இந்த பெருமாளைச் சுற்றி தவம் புரிந்த முனிவர்கள் தேனிகளாக வலம் வந்து ஆராதிக்கின்றனர். இன்றும் தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. 

இந்த திவ்ய தேசத்தில் நாதமுனிகளின் சகோதரி புதல்வரான லக்ஷ்மிநாதாச்சாரியார்(1) என்பவர்  செல்வத்தில் குறைவு இல்லாமல் அந்தக் கிராமத்தை ஆண்டு வந்த காரணத்தால் ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ என்ற பெயர் பெற்றார். தந்தையால் உபநயனம் செய்விக்கப்பெற்று பிரம்மசர்ய விரதத்திலிருந்து சகல வேதங்களையும் பயின்றார். பிரகலாதனைப் போன்று பக்தியுடன் திருநாமங்களைத் தியானித்துக்கொண்டு ஞான, பக்தி, வைராக்கியம் முதலிய நற்குணங்களுக்குப் பிறப்பிடமாக விளங்கினார். நாதமுனிகளை தம் ஆசாரியராக அவரிடம் ஆழ்வார் பாசுரங்களைக் கற்கக் குடந்தை வழியாக காட்டுமன்னார்குடி நோக்கிப் புறப்பட்டார். 

புண்டரீகாக்ஷன் திருவெள்ளறையிலிருந்து திருவரங்கம் வந்தடைந்து, காவிரியில் நீராடிவிட்டு, திருவரங்க பெருமாளை வணங்கிய போது தன்னைவிட இளமையான ஒருவர் மெய்மறந்து பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருப்பதைக் கண்டார். 

 தீர்த்த பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு, அவரை வணங்கி “மெய்மறந்து அரங்கனை வணங்கும் தாங்கள் எந்த திவ்ய தேசத்திலிருந்து வருகிறீர்கள் ? ” என்று கேட்டார் புண்டரீகாக்ஷன். 

“வந்தனங்கள்! பாண்டிய தேசத்தில் இருக்கும் திருகுருகூர் கோயிலில் இருக்கும் புளியமரம் என் பூர்வீகம். அக்கோயிலிலேயே வாசம் செய்வதால் என்னை எல்லோரும் ‘குருகை காவலப்பன்’ என்று அழைத்து என் இயற்பெயரே எனக்கு மறந்துவிட்டது!” என்றார் சிரித்துக்கொண்டே 

அவர் கூறியதை ஆச்சரியத்துடன் கேட்டு “ஆழ்வார் வாசம் செய்யும் இடத்திலேயே இருப்பதற்கு என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்றார் புண்டரீகாக்ஷன். 

 “நெற்றியில் தரிக்கும் ஊர்த்வபுண்டரம்() மேல்நோக்கி செல்லுவது போல, சிகை உயரநோக்கி செல்லும் உயர்ந்த குலத்தில் பிறந்த தங்களின்  முகத்தில் ஞான ஒளி காவிரியிலிருந்து பொங்கி வழிந்து ஓடுவதைப் போலக் காண்கிறேன். திருவரங்கம் உங்கள் பூர்வீகமோ  ?” என்று கேட்டார். 

“திருவரங்கம் சமீபத்தில் இருக்கும் ஆதி திருவெள்ளறை தான் எங்கள் திவ்ய தேசம். அங்கே தான் எங்கள் குலத்தவர்கள் புண்டரீகாக்ஷனுக்கு நித்தியக் கைங்கரியம் செய்து வருகிறார்கள். அந்த பெருமாளின் திருநாமம் தான் அடியேனுக்கும். திருவரங்கனை வணங்கிவிட்டு குடந்தை வழியாக வீரநாராயணபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். மறைந்து போன ஆழ்வார்களின் பாசுரங்களை மீட்டெடுத்த  நாதமுனிகள் என்ற உத்தமோத்தமரை ஆசாரியனாக கொண்டு அவரிடம் பாசுரங்களைக் கற்க அரங்கன் அருள் வேண்டி இங்கே வந்தேன்” என்றார். 

”ஐயனே! அடியேனும் நாதமுனிகள் என்ற தத்துவஞானியைத் தேடிக்கொண்டு தான் சென்றுகொண்டிருக்கிறேன். அரங்கன் திருவுள்ளம் உங்களைப் போன்ற பாகவதரின் திருவடி தொழும் பேறு பெற்றேன். உங்களின் நிழலாக உங்களை பின் தொடர்ந்து வருகிறேன்” என்றார். 

”திருவரங்கன் நம் நடைப் பயணம் சோர்வு இல்லாமல், அரங்கனின் குணங்களைப் பேசிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது அவன் திருவுள்ளம் போலும்!” என்று இருவரும் குடந்தை நோக்கிப் புறப்பட்டார்கள். திருக்குடந்தையில் இன்னொரு ஆச்சரியம் அவர்களுக்கு காத்துக்கொண்டு இருந்தது. 

இருவரும் ஆராவமுதன் சந்நிதியில் பெருமாளைச் சேவிக்கும் போது அந்த அர்ச்சகர் “திராவிட ஸ்ருதி தர்சகாய நம” என்று திருக்குடந்தை ஆராவமுதனை “திராவிட வேதம் காட்டிய பெருமாள்!” என்று நாமாவளியில் போற்றினார். அப்போது “நாங்கள் அந்தத் திராவிட வேதத்தைத் தேடிக்கொடுத்த நாதமுனிகளைத் தான் தேடிச் செல்கிறோம்!” என்று இருவரும் ஆராவமுதனை மெய்மறந்து வணங்கினார்கள். 

அப்போது அவர்கள் பின்புறத்தில் ஒரு குரல் கேட்டது 

“நினைக்க முடியாத பெருமையுடையவர்களே! குணவான்களே. புண்ணியத்தின் கொழுந்தைப் போன்று பூமியில் தோன்றிய ஒப்பற்ற நாதமுனிகளை நாடி தான் அடியேனும் செல்கிறேன். அவர் என் தாய்மாமன்” 

அந்த குரல் நமக்கு ஏற்கனவே அறிமுகமான திருக்கண்ணமங்கை ஆண்டானுடையது!.


ஒருவரையொருவர் குசலம் விசாரித்து அளவளாவிக்கொண்டு மூவரும் காவிரி செல்லும் வழியில்  சில நாள் நடந்து வீரநாராயணபுரம் என்ற காட்டுமன்னார்குடியை அடைந்த போது அந்த அதிர்ச்சியான காட்சியைக் கண்டார்கள். 

நாதமுனிகளின் இல்லத்திலிருந்து சோழ மன்னன் நாதமுனிகளை வணங்கிவிட்டு வெளியே வந்து தன் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் திரும்பத் தயாரானான்.  தன் பெரிய சவாரிக் குதிரையில் ஏறத் தயாரானபோது குதிரைசாரி() அங்கில்லை. மன்னன் குதிரைச்சவாரிக்குத் தயாரான நிலையில் நாதமுனிகள் தன் தோளைக் கொடுத்து மன்னனை ஏற்றிவிட்டார். திரும்பி பார்த்த மன்னன் அதிர்ச்சியில் கீழே குதித்து 

“ஐயா! தாங்கள் இந்தக் காரியம் செய்யலாமா ? உங்கள் தோள் மீது என் கால்கள் பட்டு என் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதே!” என்று மிகவும் வருந்தி நாதமுனிகளை வணங்கி நின்றான். 

”அப்பா ! நீ சோழ மன்னனா ? உன்னைப் பார்க்கும் போது சக்கரவர்த்தி திருமகன் என்று நினைத்து குதிரை சாரியான சுமந்திரன் என்ற எண்ணத்தில் தோள் கொடுத்தேன்!” என்றார் 

”நாதமுனிகளே ! சற்று முன் தாங்கள் கூறிய குலசேகர ஆழ்வார் வைபவத்தில் இராமாயணம் கதை கேட்டு அதில் மூழ்கி இராமனுக்கு உதவி செய்ய தன் படையை அனுப்ப உத்திரவிட்ட ஆழ்வாரைப் போல நீங்கள் திகழ்கிறீர்கள். உங்கள் ஆசிகள் எமக்கு வேண்டும்” என்று கீழே விழுந்து வணங்கிவிட்டு குதிரையில் புறப்பட்டான்.  

இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்த புண்டரீகாக்ஷரும் மற்றவர்களும் நாதமுனிகளின் பாதங்களில் விழுந்து ”உங்களை நெஞ்சால் வாரிப் பருக வந்திருக்கிறோம்.  எங்களைச் சிஷ்யர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள். 

நாதமுனிகள்  மிக மகிழ்ந்து அவர்களை ஏற்று,  அவர்களுக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்து சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டார். 

ஆசாரியரான நாதமுனிகளிடம் புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன், திருக்கண்ணமங்கை ஆண்டான் மற்றும் நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வரமுனிகளுக்கு மந்திரம், மந்தரார்த்தம், ஆழ்வார்களின் அருளிச்செயல்கள், அதன் உட்பொருள்கள் முதலியவற்றை உபதேசமாகப் பெற்றுவந்தனர். 

ஒரு நாள் நாதமுனியைச் சந்திக்க ஒருவர் வந்தார். வந்தவர் நாதமுனிகளை வணங்கி “ஐயா வங்கீபுரத்தாச்சியின் குமாரத்தியான அரவிந்தபாவையை உங்கள் அனுமதியுடன் அழைத்துவரும்படி என்னை அனுப்பிவைத்தார்” என்றார். 

நாதமுனிகளும் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு தமது சிஷ்யரான புண்டரீகாக்ஷருடன் தமது தேவியாரான அரவிந்தபாவையை தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 

புண்டரீகாக்ஷரும் அரவிந்தபாவையை ஆச்சியின் இல்லத்தில் விட்டுவிட்டுத் திரும்ப வீரநாராயணப்புரம் செல்ல அனுமதி கேட்டார். 

ஆச்சி “தீர்த்தமும் பிரசாதமும் அருந்திவிட்டு போகலாமே ?”  என்று கூற, ”உங்கள் நியமனப்படிச் செய்கிறேன்” என்றார் புண்டரீகாக்ஷர். 

ஆச்சியின் இல்லத்தில் சில குறும்பர்கள் 

“இவருக்கு இல்லத்தினுள் போஜனமிடுவது உசிதமில்லை” என்றும் “இவருக்கிட்ட அன்னத்தின் மிகுதியை நாம் புஜிப்பது கூடாது” என்றனர். 

ஆச்சியும் அவர்களின் தவறான பேச்சைக் கேட்டு புண்டரீகாக்ஷரை வெளி முற்றத்தில் உட்காரவைத்து முதல் நாள் தண்ணீரில் சேர்த்துவைத்த அன்னத்தை அவருக்குக் கொடுத்தார்கள். 

புண்டரீகாக்ஷர் மிகவும் உகப்புடன் அந்த அன்னத்தை அருந்தி, அவர்களிடம் அனுமதி பெற்று வீரநாராயணப்புரம் வந்து நாதமுனிகளின் திருவடிகளை வணங்கி நின்றார். 

நாதமுனிகள் புண்டரீகாக்ஷரின் முகமலர்ச்சியைக் கண்டு “புண்டரீகாக்ஷரே உமது பெயருக்கு ஏற்றார் போல உமது கண்களில் தெரியும் சந்தோஷத்துக்குக் காரணமென்ன ? சென்றவிடத்தில் நன்கு விசாரித்தார்களா  ? மரியாதையுடன் உபசரித்தார்களா ? ” என்று வினவினார். 

”ஆச்சியின் இல்லத்தின்  முற்றத்தில் தண்ணீரில் சேர்த்த நல்லதோர் சோற்றை நான் மிக்க சந்தோஷத்துடன் உட்கொண்டேன். புண்ணியத்தின் தவப்பயனைப் பெற்றேன். போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே!  பாகவதர்கள் உண்டு மீதமிருந்த அன்னத்தை உண்பது பாவநமானது. நமக்கு நற்கதியடையச் செய்யும் என்று நீங்கள் அடியேனுக்கு உபதேசித்தீர். அங்கே அதைப் பெற்றேன்” என்று புண்டரீகாக்ஷர் பதிலளித்தார். 

இதைக் கேட்ட நாதமுனிகள் மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீருடன் அவரை கட்டித் தழுவிக்கொண்டார். ( இவ்விஷயங்களை வங்கீபுர்த்தாச்சி கேட்டு மிகவும் வருந்தினார். இல்லத்திலுள்ளவர்களை நொந்துகொண்டு, நாதமுனிகளிடமும் புண்டரீகாக்ஷரிடமும் சென்று அபராதத்தைப் பொறுத்தருளும்படி வேண்டினார்). 

ஆழ்வார் பாசுரங்களை திவ்யதேச வரிசையில்  உபதேசித்துக்கொண்டு இருந்த ஒரு நாள் ’பொலிக பொலிக’ என்ற ஆழ்வார் பாசுரம் வந்த போது திருக்கண்ணமங்கை ஆண்டான் ”இதன் அர்த்தம் என்னது ?” என்று வினவினார்.

பயணம் தொடரும்... 
- சுஜாதா தேசிகன்
02-11-2020
ஓவியங்கள் நன்றி : ஜெ.பி 

----------------------------------------------------------------------

பெரியமுதலியார் -  நாதமுனிகள்(பெரிய தலைவர்)

(1) லக்ஷ்மிநாதாச்சாரியார் - சில புத்தகங்களில் இது போல இருக்கிறது. 

Comments

  1. அருமையான வார்த்தைகளில் பதிவின் உட்கருத்துகள் மனதை மென்மையாக்குகின்றன. சோழ அரசனுக்கு தோள் கொடுத்த நாதமுனிகளும், வாங்கீபுரத்தாச்சி முற்றத்தில் இட்ட பழையதை உண்டு , அழகாக சொல்லிய புண்டரீகாக்ஷரும் கண்முன் வருகிறார்கள்! 🙏🙏 அடியேன்.

    ReplyDelete
  2. என் இளவல் -

    வழக்கம் போல அருமை.
    சோழ மன்னன் குதிரையின் மேல் ஏற, தன் தோளைக்கொடுத்த நாதமுனிகள் அதற்கு அளித்த விளக்கத்தை படித்து கண்கள் கசிந்துவிட்டன.
    திரு சுஜாதா தேசிகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
    🙏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment