Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 14

 தினமும் கொஞ்சம் தேசிகன் - 14


ஸ்வாமி தேசிகனின் வாழி திருநாமத்தின்(1) கடைசி வரியான  ’செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே’ என்பதைப் படிக்கும்போது, வழக்கமான வாக்கியமாகத் தோன்றும். 

அதில்  ‘தூப்புல் திருவேங்கடவன் வாழியே’  என்பதை ஸ்வாமி தேசிகனின் இயற்பெயர் திருவேங்கடவன், தூப்புல் அவர் ஊர்,  அதனால் தூப்புல் திருவேங்கடவன் என்றும், திருவேங்கடவனுடைய ( மணியின் ) அவதாரம்  ஸ்வாமி தேசிகன் என்றும் கூறலாம். இங்கே எதற்கு ’செந்தமிழ்’ என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்று கொஞ்சம் ஆராயலாம். 

ஸ்வாமி தேசிகன் ’செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்’ என்று வடமொழி வேதாந்தங்களை ஆழ்வார் அருளிச்செயல்களைக்  கொண்டு தெளிவு பெற்றேன் என்று கூறியதை, பல உபன்யாசங்களிலும், புத்தகங்களிலும் எல்லோரும் பயன்படுத்தும் மேற்கோள். 

இதே கருத்துடைய இன்னொரு இடம் இராமானுச நூற்றந்தாதியில் வருகிறது. அமுதனார் திருப்பாணாழ்வாரைக் குறிப்பிடும் இடத்தில் ‘சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழ் பாண்பெருமாள்’ என்கிறார். 

பிள்ளை அந்தாதி தனியனில் 

சீரார் தூப்புல் பிள்ளை அந்தாதி என்று செழுந்தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தான்
ஏரார் மறைபொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீரா கிய வரதாரியன் பாதம் துணை நமக்கே  

இந்த உலகம் உய்ய, வேதங்களின் சாரார்த்தம் முழுவதும் ஆய்ந்தெடுத்து, செழும் தமிழால் பிள்ளை அந்தாதி என்ற பிரபந்தத்தைத் தேசிகரின் இரண்டு திருவடிகளுக்குக் கீழ் நேர்மையாக(நேராக)  மொழிந்த நாயினாசார்யாருடைய திருவடி நமக்குத் துணை என்பது இதன் விளக்கம்.

ஸ்வாமி தேசிகன் தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் என்று மூன்று மொழிகளில் அருளியுள்ளார். நவமணி மாலை கடைசி பாசுரத்தில் மனதைக் கவர்கின்ற பிராகிருத மொழி என்றும் எல்லா மொழிகளுக்கும் மூலமாக இருக்கும் வடமொழி என்று கூறிய தேசிகன்  ‘செழுந்தமிழ்மும் மணிக்கோவை செறியச் சேர்த்து’ என்று செந்தமிழ் என்று கூறுகிறார்.

உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அதுவே செம்மை.  ’செஞ்சொல்’ ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ என்ற வார்த்தைகளில் இருக்கும் செம்மையின் பொருள் இது தான். ’செந்தமிழ்’ என்று படிக்கும் இடத்தில் இந்தப் பொருளை நினைவு வைத்துக்கொண்டு படியுங்கள். 

திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில் “செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும், வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். 

இன்னொரு இடத்தில் திராவிட வேதம், சமஸ்கிருத வேதம்  இரண்டிலும் சிறந்து விளங்கின அந்தணர்களை ‘செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் ’ என்கிறார்.  ( ஆழ்வார்கள் பல இடங்களில் செந்தமிழ் என்ற சொல்லை உபயோகித்துள்ளார்கள் ) 

முதல் ஆழ்வார்களை ’செந்தமிழ் பாடுவார்’  என்று அழைப்பர். ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் வாழ்ந்த வீதியை ‘’செந்தமிழ் பாடுவார் வீதி’ என்றே அழைத்திருக்கிறார்கள்.

இராமானுச நூற்றந்தாதியில் ’மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே’ என்று  நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை ‘செந்தமிழ் ஆரணமே’ என்று குறிப்பிட்டு, இவ்வுலகில் யாவரும் அறிந்துகொள்ளும்படி  செய்தார் இராமானுசன் என்கிறார் அமுதனார். 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல 

என்ற திருக்குறளில் அன்பு கலந்து வஞ்சம் அல்லாத சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். அதில் ஈரம் கலந்த செம்பொருள் இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

ஆழ்வார்கள் அருளிச்செயல், ஸ்வாமி தேசிகனின் அருளிச் செயல்கள் ஈரம் கலந்து இருப்பதால் தேசிகனுடன் செந்தமிழும் கூடவே வருகிறது. 

ஸ்வாமி தேசிகன் ’சந்தமிகு தமிழ் மறையோன்’ என்று  தன்னை அறிமுகப்படுத்திகொள்கிறார்(2)

தேசிகனின் வாழி திருநாமத்தின் கடைசியில்  ’செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே !’ என்று இதனால் தான் வருகிறது. 

- சுஜாதா தேசிகன்

-----

(1) இந்த வாழி திருநாமத்தை அருளியவர் ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி (2) பிரபந்த சரம் கடைசி பாசுரத்தின் வரிகள் : 

செந்தமிழால் அருள் செய்த வகை தொகையும்
சிந்தாமல் உலகங்கள் வாழ வென்று
சந்த மிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும்
வேதாந்த குரு மொழிந்த பிரபந்த சாரம்


Comments

  1. மிக அருமை... ஸ்ரீ: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:

    ReplyDelete
  2. எத்தனை நெக்குருக வைக்கும்
    தெரியாத விபரங்கள்!!! சேகரித்து வைத்து வழங்கியதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது தேசிகன்!

    ReplyDelete

Post a Comment