Skip to main content

तमिल

நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்பிற்குப் போகும் போது தான், அந்தச் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கோடை விடுமுறையில் ஹைதராபாத்தில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம் சீக்கிரமே திறப்பதால் முன்னதாகவே நான் என் அப்பாவுடன் திருச்சிக்கு அழுதுக்கொண்டே வந்தேன். (என் அம்மா மருத்துவமனையில் இருந்ததால் உடன் வரமுடியாத சூழ்நிலை). புத்தகம் வாங்கும் போது இரண்டாம் மொழியாக என்ன வேண்டும் என்று ஓர் ஆப்ஷன் இருந்தது. என் அப்பா மத்திய அரசில் வேலை செய்ததால் விண்ணப்பப் படிவத்தில் ஹிந்தி என்பதை டிக் செய்தார். (அடிக்கடி மாற்றல் ஆவதால் சுலபமாக இருக்கும் என்பதால்).


இரண்டு மாதம் கழித்து, என் அம்மா திரும்பி வந்த போது எப்படிப் படிக்கிறேன், என்னென்ன புத்தகம் என்று பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது...

"எங்கே உன் தமிழ் புத்தகம்?" என்றார். நான் (வழக்கம்போல்) திரு திரு என்று முழித்தேன்.

சாயந்திரம் என் அப்பா வந்தவுடன், "ஏன் தமிழ் பாடமாக எடுக்கவில்லை? நாளைக்கு பிள்ளை எப்படி ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் படிப்பான் என்று கோபப்பட்டார்.

அப்பா, "தமிழை வீட்டில் சொல்லிக் கொடுத்தால் போதும்!" என்றார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் காலை அம்மா பள்ளிக்கு வந்து, பள்ளி முதல்வரிடம் என் இரண்டாம் மொழியை ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என்றார். முதல்வர், மூன்று மாதம் ஆகிவிட்டது, இனி மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டார். என் அம்மா விடுவதாக இல்லை. தமிழுக்கு மாற்றாவிட்டால் ரயில் முன் படுக்கப் போவதாக மிரட்ட, கடைசியில் முதல்வர் பணிந்தார்.

அன்றே நான் தமிழ் வகுப்புக்கு மாற்றப்பட்டேன். 'ஏக், தோ, தீன்' என்று படித்துக் கொண்டிருந்த நான் 'அ- அம்மா, ஆ-ஆடு, இ-இலை' என்று படிக்க ஆரம்பித்து, தேமா, புளிமா எல்லாம் பரிட்சையில் சாய்ஸில் விட்டு விட்டு, இன்று இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு நான் தமிழில் நிறைய மார்க் வாங்கவில்லை. பிளஸ்-டூ வில் தமிழில் 40 மார்க் எடுக்கும் போது, சர்வ சாதாரணமாக ஹிந்தியில் மற்றவர்கள் 80,90 என்று எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது காலேஜிலும் தொடர்ந்தது.

என் அம்மா செய்தது சரியா? தவறா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

நான் பெங்களூரில் உள்ளவர்களைப் பார்க்கிறேன். இங்கு பெரும்பாலானோருக்கு கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி தெரிந்திருக்கிறது. பக்கத்து வீட்டில் தமிழர்கள் இருப்பதால் தமிழும் பேசுகிறார்கள். (சென்னையில் நிறைய பேருக்கு ஹிந்தி தெரியுமா என்பது சந்தேகமே.) தமிழ்நாடு எல்லையைத் தாண்டினால் ஹிந்தி கட்டாயம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்- தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்க, வழி கேட்க, அறிவிப்புப் பலகைகள் படிக்க என்று. நம் நாட்டின் பொதுவான மொழியாக ஹிந்தி என்றாகிவிட்டது. அப்படியிருக்க எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. ஹிந்தி தெரியாதது ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது தான் நிதர்சனம். எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொல்லிக்கொள்வது பெருமை கிடையாது. என் அலுவலகத்தில் இருப்பவர்கள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தவர்கள். அவர்களை ஒன்றாக இணைப்பது ஹிந்தி தான். நான் மட்டும் தான் 'The odd man out'.

நான் தற்போது, என் மகள் படிக்கும் ஹிந்தி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் பிடிவாதமாக தமிழுடன், ஹிந்தியையும் சொல்லிக் கொடுங்கள்.

"எனக்கு ஹிந்தி தெரியாது, ஏன் நான் முன்னேறவில்லையா ?" என்று பலர் கேட்கலாம். அவர்கள் சன் அரட்டை அரங்கம் போகலாம்.

( தலைப்பு:  தமிழ் என்று ஹிந்தியில் )

Comments