ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மழைக்கென்றே ஒரு தனி பாடலை ஆண்டாள் தந்துள்ளார். மழை எப்படி பெய்கிறது என்று இயற்கையான விளக்கத்தையும் அதை திருமாலின் கரிய உடல், சங்கு, சக்கரம் இவைகளோடு ஒப்பிடவும் செய்கிறார். இன்று இடி, மின்னல் கூடிய மழையை அனுபவிக்கலாம்.
மழை
குலசேகர ஆழ்வார் மழையைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர்
எனைப்பல் ருள்ளவிவ் வூரில்,உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை
அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதலெய்திக்
கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன்
வாசுதே வாஉன் வரவுபார்த்தே
(பெருமாள் திருமொழி, 698, 6.1 )
வாசுதேவா மணம் மிகுந்த பூக்களைச் சூடிய இடைப் பெண்கள் பலர் வாழும் இந்த ஊரில், நான் உன் மார்பைத் தழுவ ஆசைப்படவில்லை என்றாலும், நீ பொய்வார்த்தை கூறி என்னை ஏமாற்றுகிறாயே. மழை பெய்தது போலப் பனி கொட்டுகிற காலத்தில் குளிரில் அகப்பட்டு நடுங்கியவாறு மணல் மேடு உள்ள யமுனை ஆற்றங்கரையில் உன் வரவை எதிர் பார்த்துப் பொழுது விடியும் வரை இரவெல்லாம் காத்துக்கொண்டிருந்தேனே என்கிறார்.
திருமங்கையாழ்வார் "மழைபோ லொளிவண்ணா!" என்கிறார் இந்தப் பாட்டில்
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.
சாம வேதிய னே.நெடு மாலே,
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
(பெரிய திருமொழி, 1609, 7.7.2 )
மெல்லியவிரல்கள் பத்துடன், அழகிய வளையல்கள் அணிந்த தோள்களை உடையவளான பெரிய பிராட்டியுடன் எழுந்தருளியிருப்பவனே!. கருத்த நிறம் உடையவனே, மழைபோல் குளிர்ந்து ஒளிரும் வண்ணமுடையவனே!. சாந்தோக்கியம், பிருகதாரணியம், தைத்திரீயம், ஸாமவேதம் ஆகியவைகளில் வல்லவனே. திருவழுந்தூரில் மேல் திசையில் எழுந்தருளிய திருமாலே உன் திருவடிகளை அன்றி அடியேன் வேறு புகலிடம் அறியேன்.
நம்மாழ்வார் மழை நீரை கண்ணீரோடு ஒப்பிடுகிறார்
குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்f
பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு
அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும்
அத்தி சையுற்று நோக்கியே.
( திருவாய் மொழி, 3499, 6.5.5 )
குழையும் மென்மையான ஒளி கூடிய முகமும் உடையவள் ; இவளைத் தொலைவில்லி மங்கலத்துக்குக் கொண்டு அவன் இருப்பைக் காட்டினீர்கள். மீளாத சபலம் உடைய இவள் பெருமானின் சுய ஒளி வீசும் தாமரைக் கண்களின் அழகில் ஈடுபட்டாள். அவன் வடிவழகு கண்டதிலிருந்து மழை நீர் போலக் கண்ணீர் வடிக்கிறாள். தேவபிரான் இருக்கும் திசையையே பார்க்கிறாள்.
நம்மாழ்வாரின் இந்தப் பாட்டை பாருங்கள்.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.
( திருவாய்மொழி, 4.1.6, 3236 )
உலகம் தொடங்கி இன்றுவரை வாழ்ந்தவர் ஒருவருமில்லை. எல்லோருடைய வாழ்வும் மழைநீரில் தோன்றும் குமிழி போல நிலையற்றது.அதனால் நிலையான பேறுபெற எம்பெருமானுக்கு அடியவராவதே வழி என்று நம்மாழ்வார் நம் உடம்பு நிலையற்றது என்று நான்கே வரிகளில் ஒரு உவமை கூறி நம் மனதில் பதிய வைக்கிறார். (ஸ்ரீவைஷ்ணவ அடிப்படை கருத்து இது )
மின்னல்
மழை பெய்கின்ற போது, மின்னல் மின்னுவது இயல்பு. ஆழ்வார்கள் பாசுரங்களில் எங்கும் மின்னல்கள்தான். சில மின்னல்கள் மின்னுவதை பார்க்கலாம்.
மின்னல் ஒரு கீற்று போன்றது, பார்பவர்களுக்கு மின்சாரம் போல உணர்ச்சி வருகிறது!. அதனால் பெரியாழ்வார் பெண்ணின் இடையை மின்னல் என்கிறார்!
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடிகேசா. முலையுணாயே
(பெரியாழ்வார் திருமொழி, 133 6. )
மின்னல் போன்ற நுட்பமான இடையையும் வண்டுகள் உட்கார்ந்து இனிய ரீங்காரம் செய்யும் பரந்த கூந்தலையும் உடைய பெண்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூரிலே எழுந்தருளியியவனே உன்னை காண்பவர்கள் "இவனைப் பெற்றவள் என்ன நோன்பு நோற்றாளோ?" என்று புகழ்வதைக் கேட்கும்படி செய்த காதல் மகனே(இருடிகேசா), பால் அருந்தவா. என்கிறார்.
அதே போல் பெரியாழ்வார் திருமொழி 324ல் "மின்போல் நுண்ணிடையாள்" என்று கூறுகிறார்.
குலசேகராழ்வார் ஊர்வசிக்கும் மேனகைக்கும் மின்னலை உவமை கூறுகிறார்.
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே
(682, 4.6 )
மின்னல் போல் நுண் இடையுடைய ஊர்வசி, மேனகையின் ஆடல் பாடலை நான் விரும்பவில்லை. "தென்னதென்ன" என்று வண்டுகள் பாடும் வேங்கடமலையில் ஒப்பற்ற மலைச்சிகரமாக ஆகும் தவத்தை உடையவனாக ஆவேன் என்கிறார்.
மின்னலை பெண்கள் இடைக்கு சொல்லும் பாசுரங்கள் ஏராளமாக உள்ளன.
பேயாழ்வார் மின்னலைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
(மூன்றாம் திருவந்தாதி, 2338, 57 )
இருண்ட கார்மேகத்தின் நடுவே விளங்கும் மின்னல் போலத் திருமாலின் மார்பில் திருமகள் பெருமையுடன் வாழ்கிறாள். நெஞ்சமே!, கருடன் மேல் அமரும் கரிய திருமாலின் திருவடிகளே ஞானத்துக்கு மேம்பட்ட பக்திக்கு உகந்தது என்று தெரிந்துக்கொள்.
இடி
மின்னலை உவமை கூறிய ஆழ்வார்கள் இடியையும் உவமையாக கூறுகிறார்கள். ஆண்டாள் இந்த திருப்பாவையில் சங்கின் ஒலியை இடிக்கு உவமை கூறுகிறார். ( முதலில் மின்னல் பின்பு இடியை உவமை கூறுகிறார் என்பதை கவனிக்கவும் )
முதலில் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றை பார்க்கலாம்.
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ
புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.
(பெரியதிருமொழி, 1784 9.4.7 )
இந்த பாசுரத்தில் இடிபோல் கனைக்கும் குரலுடைய கருத்த காளையின் மணி ஓசை தீயை விட கொடியதாய் என்னை துன்புறுத்துகிறது. அழகு மணிமாடங்களுடைய திருப்புல்லாணியைத் தொழுதேன். பாவியான என் மேல் கடலின் அலைகளும் கொடிய நெருப்பையே வீசுகின்றன என்று தலைவனை பிரிந்த நாயகி தன்னை சுற்றியுள்ள பொருள்கள் தனக்கு தனிமைத் துன்பத்தை தருகின்றன என்று வருந்துகிறாள்.
மற்றொரு பாசுரத்தில்
துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
(பெரியதிருமொழி 960, 1.2.3 )
நுண்ணிய இடையையும், கரிய கூந்தலையும் உடைய நப்பின்னையை அடைய, இடியென முழங்கிய ஏழு எருதுகளை அடக்கிய கண்ண பெருமான் வாழும் இடம் திருப்பிரிது. இந்த இடத்தில் அழகிய பாறைகளின் மீது மணம்மிகு வேங்கைமலர்ப் படுக்கையில், ஆண் யானை தன் பெண் யானையுடன் படுத்துறங்கும். வண்டுகள் ரீங்காரம் செய்து இசைபாடும். . மனமே நீ அந்த இடத்தை(இந்த திவ்வியதேசம் திருப்பிரிதி) அடைவாயாக.
Comments
Post a Comment