Skip to main content

திருப்பாவை-0 1 – நிலவு

[%image(20061216-andal_drawing_1.jpg|147|225|Andal - 1)%]

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


சூரியனைக் காட்டிலும் கவிஞர்களைப் பெரிதும் கவர்வது சந்திரனே! . அதற்கு காரணம் அது தரும் குளிர்ச்சியே.  நிலவு, மதி, திங்கள், அம்புலி, திசிலன், தண்ணவன் என்று பல பெயர்களில் சந்திரன் கவிதைகளில் உலா வரும். ஆழ்வார் பாசுரங்களில் நிலவு பற்றிய உவமைகள் பல உள்ளன.


குழந்தைகள் பாட்டு, குறுந்தொகை, திருக்குறள், திரைப்படம் என்று நிலவை என்று நிலவை அனுபவிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.நிறைநேர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு ( குறள் 782 )


அறிவுடையார் நட்பு பிறைமதிபோல் வளரும்; அறிவிலார் நட்பு தேய்பிறையாகத் தேய்ந்து போகும் என்று திருவள்ளுவர் சொல்லும் உவமையை என்னவென்று சொல்வது!


இனி ஆண்டாள் பாசுரத்துக்குள் செல்லலாம்.


"முகத்தை திங்களுக்கு உவமை கூறுவது மரபு. ஆனால் ஆண்டாள் இங்கு கண்ணனது திருமுகத்திற்குக் கதிர், மதியம் ஆகிய இரண்டையும் இணைத்து அதற்கு உவமை கூறுகிறாள். புறநிலையோடு, உள்ளுறை பொருளும் தந்து சிறக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கதிர்மதியம் போல்முகத்தான் என்று கூறும்போது, கண்ணனின் முகத்தில் தோன்றும் ஒளிக்குக் கதிரவனையும் குளிர்ச்சிக்குத் திங்களையும் உவமையாகக் கூறுகிறாளா, அல்லது கண்ணனின் கண்களை கதிருக்கும், முகத்தை மதிக்கும் உவமையாகக் கூறுகிறாளா அல்லது கண்ணனின் முகம் அடியார்களுக்கு மதியை போன்று குளிர்ச்சி பொருந்தியதாகவும், பகைவர்களுக்கு அவன் கதிரவனைப் போன்று வெப்பமுடையவனாகவும் இருக்கிறான் என்று கூறுகிறாளா ?


நாச்சியார் திருமொழியில்..


தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ.


( நாச்சியார் திருமொழி, 569, 7-3 )


அழகிய சங்கே!. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ( சரற்காலம் )பெளர்ணமியன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளி விடுவது போல, வட மதுரை அரசன் கண்ணன் திருக்கையில் நீயும் குடி புகுந்து, நீ எனக்கு அவன் வாய்ச்சுவையைக் குறித்துக் கூற வேண்டும் ( கண்ணனை விட்டு அகலாது எப்போதும் இருக்கும் பெருமை மட்டுமா இதற்கு உண்டு, அவன் வாய்ச்சுவை அறிந்த பெருமையும் அதற்குண்டு.


அடுத்த பாசுரத்தில்


சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே.


( நாச்சியார் திருமொழி, 570, 7-4 )


சங்கை சந்திரமண்டலத்திற்கு ஒப்பாகப் பாடுகிறாள். கண்ணன் கையில் உள்ள சங்கு அவன் காதருகில் திகழ்வதால் ரகசியம் பேசுவதுபோல் இருக்கிறது என்கிறாள். இந்த பெருமை இந்திரனுக்குக் கூட கிடைக்காது என்று கூறுகிறாள். இந்தப் பாசுரத்தில் சங்கை சந்திரனுக்கும், காதருகில் விளங்குவது, ரகசியம் பேசுவது போல் உள்ளது என்கிற உவமையும் கூறி நம்மை வியக்க வைக்கிறாள்


பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழும் பெரியாழ்வார், அம்புலி பருவ பாடலாக


சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா.


(பெரியாழ்வார் திருமொழி, 56, 1-5-3 )


என்று சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை என்று இருக்கும். அதை தவிற சந்திரன் களங்கத்தை கொண்டுள்ளது. ஒரு வேளை களங்கம் நீங்கி முழு நிலவாக காட்சி தந்தாலும், அது கண்ணனின் முகத்திற்கு ஈடாகாது என்று கூறுகிறார். ஆனால் கண்ணனின் சிறுபற்களுக்கு பிறைச் சந்திரனை உவமை கூறுகிறார் அந்த பாடல் கீழே...


செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.


( பெரியாழ்வார் திருமொழி  87, 1-8-2 )


கண்ணனின் சிரித்த வாயில் தெரியும் சிறு பற்கள், செவ்வானத்தின் நடுவே கிளையில் பிறைச் சந்திரன் முளைத்துத் தோன்றுவது போல் உள்ளது] என்கிறார் பெரியாழ்வார். அதே போல்


திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.


( பெரியாழ்வார் திருமொழி  95, 1-8-10 )


கண்ணனின் நெற்றியில் இருக்கும் சுட்டியானது, கடலின் நடுவில் தோன்றும் சந்திரனின் பிரதிபிம்பம் போல் உள்ளது என்கிறார்.


குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.


 
( பெரியாழ்வார் திருமொழி  188, 2-7-7 )


சந்திரன் போன்ற முகமுள்ள பெண்களை மயங்கச் செய்வதில் கண்ணன் வல்லவன்  என்று பொருள்பட பெரியாழ்வார் யசோதையின் நிலையிலிருந்து பாடுகிறார்.


ஸ்ரீரங்கம் சென்று தினமும் பெருமாளை சேவிக்க விரும்பியவர் குலசேகர ஆழ்வார்.


    அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை
    அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
    தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்
    திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
    களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்
    கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
    ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
    உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே


( பெருமாள் திருமொழி 652, 1-6)


வண்டு மலரும் தாமரை மேல் உள்ள பிரமனும், சிவனும் இந்திரனும் தேவர்களும் அரம்பையர்களும், தெளிந்த ஞானமுடைய முனிவர்களும் நெருக்கிக் கொண்டு திசையெல்லாம் பூக்களைத் தூவி அரங்கனை வழிபட வருவர். தேன் மலர் சோலைகள் உள்ள ஸ்ரீரங்கத்தில் பாம்பின் மீது கண்வளரும் கடல் நிறப் பெருமானின் தாமரைக் கண்களையும் சந்திரன் போன்ற முகத்தையும் பார்த்து வணங்கி, என் மனம் உருகும் நாள் என்றோ ? என்று ஏங்குகிறார்.


வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே


( பெருமாள் திருமொழி 683, 4-7)


வனத்தை ஆளும் முழுச்சந்திரனைப் போலக் கொற்றக் குடைக்குக் கீழே மன்னர்களுக்கும் மன்னனாகிக் கொண்டாடத் தக்க செல்வத்தை நான் ஒரு பொருளாக எண்ணேன். தேன் உள்ள பூஞ்சோலைத் திருமலையில், ஒரு காட்டாறாகப் பாயும் கருத்தை உடையவன் ஆவேன் என்கிறார். ( சந்திரன் தன்னைப் பார்பவருக்கு பரவசமும் இன்பமும் தருவான். அதே போல் குலசேகர ஆழ்வார் தன் ஆட்சி சந்திரனை போன்று இன்பம் தரும் ஆட்சி என்று கூறிவதாக ரசிக்கலாம் )


இதே போன்று திருமங்கையாழ்வாரும் வெண்கொற்றக் குடை பற்றிக் கூறுகிறார்.


பூணுலா மென்முலைப் பாவைமார்
பொய்யினை மெய்யி தெ ன்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார்
வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.


( பெரிய திருமொழி, 1810, 9-7-3 )


[ நெஞ்சே!, திருவல்லவாழ் என்ற புண்ணியத்தலத்தை வாயால் உச்சரித்தும் நெஞ்சால் பொருந்தியும் பார். ஏனெனில் பரந்த நிலாப் போன்ற வெண்கொற்றக் குடையுடன் மாவலி வேள்விச்சாலை சென்று மூன்று அடி மண் யாசித்த வாமனன் இங்கே எழுந்தருளியுள்ளான். ]


பெரியாழ்வார் கண்ணனின் சிறுபற்களுக்கு பிறைச்சந்திரனை உவமை கூறிவது போலவே திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில்


பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


( பெரியதிருமொழி 1095, 2-5-8 )


[ பெண் வடிவெடுத்து இனிய அமுதத்தை அசுரர்கள் பொறாதவாறு வஞ்சித்தவன்; பிறைமதி போன்ற பற்களுடன், வலிமை கொண்ட நரசிம்மமாக வளர்ந்தவன். நீர்வளம் உள்ள திருமெய்யம் என்னும் மலையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவன். எல்லோராலும் எண்ணப்படும் அளவற்ற புகழ் உடையவன்; ஒளிமிகுந்த தாமரைப் பூப்போன்ற கண்களை உடைய இப்பெருமாளை நான் கடல்மல்லையில் தலசயனத்தில் கண்டேன். ]


பல்லுக்கு பிறைச்சந்திரனை உவமை கூறிய ஆழ்வார் நப்பின்னையின் நெற்றிக்கும் அதே உவமையைக் கூறுகிறார்.


பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.


( பெரியதிருமொழி, 1136, 2-9-9)


நப்பின்னையை அடைய விரும்பிய பெருமான் ஏழுகாளைகளை நெற்றியை உடையவளாதலால் பெருமான் அவளை அடைய விரும்பினான்.


பிறகு அதே உவமையை அசுரர்களின் கோரப்பற்களுக்கு உவமை கூறுகிறார்.


பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே


(பெரியதிருமொழி, 1441, 5-10-4 )


பிறைச்சந்திரனை போன்ற பற்களை உடைய அரக்கர்கள், போரிட வந்தபோது ராமபிரான் அவர்கள் வயிறெரிய உடல்களை நெறுநெறு என்று முறித்து வீசினான். இப்பெருமாளின் நந்திபுர விண்ணகரில் சோலைகளில் பருத்த அடிகளை உடைய மரங்கள் உள்ளன. மயில்களும், குயில்களும் வாழும்; மேகங்கள் உலாவும்; பூக்கள் உதிரும்; வண்டுகள் ரீங்காரம் செய்யும், மனமே! இத்தலத்தை நீ அடைவாயாக என்கிறது பாசுரம்.


கஜேந்திரனின் துயரத்தைப் போக்கினார் நிலவு போன்ற எம்பெருமாள் என்கிறார் திருமங்கையாழ்வார்.


குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்
கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன
நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு
வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே


(பெரியதிருமொழி, 1620, 7-8-5 )


உடற்கட்டும் மதமும் கொண்ட கஜேந்திரன் பொய்கையில் புகுந்ததும், முதலை அதன் காலைப் பிடிக்கவே. துன்புற்ற அது, "சந்திரனை ஒத்த ஒளிச்சுடரே!" என்று இறைவனைக் கூப்பிட்டது. அதன் துயரைப் போக்கிய தூயவன் ஆன நித்திய சூரிகள் தலைவன் திருவழுந்தூரில் எழுந்தருளியதைக் காணுங்கள். இவ்வூரில் ஓடும் காவிரி மலைச் சந்தனம், அகில், பொன், மணி ஆகியவற்றைத் தள்ளிக் கொண்டு மடைகளில் புகுந்து வயல்களில் பாய்ந்து வளம் பெருக்கும்.


இதே போல் பொய்கையாழ்வாரும் தம் திருவந்தாதியில், இதே நிகழ்வைக் கூறும் போது, கஜேந்திரனின் தந்தம் பிறைபோன்றது என்று உவமை கூறுகிறார்.


இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,
அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,
செங்கண்மால் கண்டாய் தெளி.


( முதல் திருவந்தாதி 2110, 29 )


ஏ மனமே! பிறைபோல் வளைந்த தந்தங்களும் அழகிய கண்களும் உடைய கஜேந்திரனின் பெருந்துன்பத்தைப் போக்கி அருள் செய்தவன் செந்தாமரைக் கண்ணனான பெருமான் என்பதை நன்கு அறிந்துகொள்.


பூதத்தாழ்வாரும் தம் திருவந்தாதியில்


ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.


( இரண்டாம் திருவந்தாதி 2254, 73 )


பிறைச்சந்திரன் போன்ற தந்தத்தையும் சிவந்த கண்களையும் உடைய கஜேந்திரனை முதலையிடமிருந்து விடுவித்தருளிய இறைவனுக்கு அடிமை செய்ய அடியேன் உறுதி கொண்டேன்


கடைசியாக நம்மாழ்வார் பாசுரத்தை அனுபவித்து மகிழலாம்.


 


காண்மின்கள் அன்னையர் காள்.என்று
காட்டும் வகையறியேன்,
நாண்மன்னு வெண்திங்கள் கொல்.
நயந்தார்கட்கு நச்சிலைகொல்,
சேண்மன்னு நால்தடந் தோள்
பெருமான்தன் திருநுதலே?,
கோள்மன்னி யாவி யடும்கொடியேன்
உயிர் கோளிழைத்தே.


( திருவாய்மொழி 3633, 7-7-7 )


எம்பெருமானின் நெற்றி அழகும் நான்கு தோள்களின் தோற்றமும் என்னைத் துன்புறுத்துகின்றன. அன்னையர்களே! உங்களிடம் இதை விவரிக்கும் வகை அறியேன். அவன் திருமுகம் அஷ்டமிச் சந்திரன் போல உள்ளது. அல்லது நஞ்சுவடிவில் உள்ள ஓர் இலையோ! அது கொடியோன் ஆவியைக் கொள்ளை இட்டு வருத்துகிறது ]. இதில் அஷ்டமித் திங்கள் என்று ஆழ்வார் ஏன் சொன்னார் என்றல், கண்ணன் அஷ்டமியில் தோன்றியவன். நயமாகத் தன் தாயிடம் அவனைச் சுட்டிக்காட்ட தலைவி கூறும் வார்த்தையாக இதைக் கருதலாம். ஆழ்வார்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.


பயன் பட்ட நூல்கள்:
1. ஆண்டாள் - கே.ஏ. மணவாளன்
2. ஆழ்வார்கள் பாசுரங்களில் உவமைகள் - கலியன் சம்பத்து
3. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - வராகி பிரிண்டர்ஸ்
4. திவ்விய பிரபந்த இலக்கிய வகைகள் - டாக்டர் ம.பெ. சினிவாசன் 


[ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]

Comments

  1. அசந்து , மெய்மறந்து போனோம் ,தேசிகன். ஆழ்வார்களின் அத்தனை கருத்துகளும்,உவமைகளும்,ஆஹா, முழுதாகக் படித்து தேனடைகளாகத்தேக்கிக்கொண்டோம் மனதில். உள்ளங்களுக்கு தெவிட்டாத செல்வம். முழுநிலவாக அத்தனை விளக்கங்களுக்கு எத்தனை நன்றிகள் தகும் என‌அறியோம்.

    ReplyDelete

Post a Comment