வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் இந்தப் பாட்டில் உவமை எதையும் சொல்லவில்லை. ஆனால் நெய்யைப் பற்றி பேசியுள்ளார். இந்த பதிவில் நெய்யைப் பற்றி சொல்லலாம் என்று எண்ணம்.
( திவ்யப் பிரபந்தத்தில் நெய் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன அவைகளில் சிலவற்றை உங்களுக்கு இங்கே தந்துள்ளேன் )
பாலில் இருந்து தயிரும், தயிரைக் கடையும் போது வெண்ணையும் கிடைக்கிறது. வெண்ணையை உருக்கினால் நெய் ஆகிறது. இது ஆழ்வார்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதில் வியப்பில்லை. ஆனால் அதை நம்மாழ்வார் எவ்வாறு தன் பாடலில் அழகாக உபயோகித்துள்ளார் என்று பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது!
பிறந்த மாயா. பாரதம்
பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
உன்னை எங்கே காண்கேனே?
( திருவாய்மொழி, 3724, 8-5-10 )
வியக்க வைக்கும் மாயனே! பாரதப் போரைச் செய்வித்தவனே! காற்று, நெருப்பு, தண்ணீர், விண், மண் ஆகியவற்றை, கறந்த பாலில் மறைந்துள்ள நெய் போல எல்லாவற்றின் உள்ளேயும் மறைந்து அவற்றை இயக்கும் மாயம் செய்பவனே என்கிறார் நம்மாழ்வார். இதைவிட எளிமையாக அந்தர்யாமித்துவத்தை யாரும் விளக்க முடியாது.
இதே கருத்தை திருமங்கையாழ்வாரும் சொல்லுகிறார்.
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்
பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை
வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை
மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
(பெரியதிருமொழி, 1646, 7.10.9 )
இசையாகவும், இசைத் தன்மையாகவும் உள்ள எம்பெருமான் பாலில் மறைந்துள்ள நெய் போன்றவன். வானவன்; ஒளிமேனியானவன்; வேள்வியானவன்; ஒளிவிளக்கானவன்; பூமியைப் போல் எல்லோருக்கும் ஆதாரமாய் மலைபோல் நிலையானவன். அலை நீர் போல் கலந்து பரிமாறுபவன். ஞானத்தைத் தருபவன். அந்தணர்கள் கண்களான இவனை என் கண்கள் ஆர, நான் திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேன்.
கண்ணனை முலைப்பால் உண்ண அழைக்கிறாள் யசோதை.
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
வடிதயிரும் நறு வெண்ணையும்
இத்தனையும் பெற்றறியேன்
எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய்
ஏதும் செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல் செய்து
மூக்குறிஞ்சி முலையுணாயே!
(பெரியாழ்வார் திருமொழி, 129 )
எம்பிரானே! நீ குழந்தையாகப் பிறந்த பிறகு, நான் உருக்கி வைத்த நெய்யும், காய்ச்சின பாலும் தோய்த்த தயிரும் மணம் வீசும் வெண்ணை அதையெல்லாம் தரவில்லை என்று கோபப்படாதே(கதம்படாய்). முத்துப் போன்ற பற்களால் சிரித்தபடி, உன் மூக்கை உறிஞ்சிக் கொண்டு என் முலைப்பால் சாப்பிடு.
உடல் நலம் குன்றி இருக்கும்போது பெரியாழ்வாரின் 'நெய்க்குடத்தை' என்று துவங்கும் பத்துப் பாசுரங்களையும் பாடினால் எந்த நோயும் குணமாகிறது என்ற நம்பிக்கை இன்றும் இருக்கிறது. உருக்கமான பாடல்கள் இவை. நேரடியாக வியாதிகளை அழைத்து எச்சரிக்கிறார்:
நெய்க்குடத்தைப் பற்றியேறும்
எறும்புகள் போல நிறைந்து எங்கும்
கைக்கொடு நிற்கின்ற நோய்காள்
காலம் பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடு
பண்டன்று பட்டினம் காப்பு
(பெரியாழ்வார் திருமொழி, 443 )
நெய்க்குடத்தில் ஏறும் எறும்புகள் போல் என்னைக் கைப்பற்றிக் கொண்ட நோய்களே பிழைத்து ஓடிச் செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தம் பாம்பணையோடு குடிவந்து விட்டான். முன்போல இல்லை இந்த உடல். பட்டினம் காவலுடையது. பத்திரமானது.
பெரியாழ்வார் பல்லாண்டு பாடும் போதும் நெய்யை உபயோகித்துள்ளார்.
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
( திருப்பல்லாண்டு பெரியாழ்வார், 8 )
இந்தப் பாட்டில், நெய்யுடன் அன்போடு இடப்படும் உணவு வகைகளையும், பிரியாமல் கூடவே இருந்து தொண்டு செய்யும் வாய்ப்பையும், வெற்றிலைப் பாக்கையும், கழுத்தாரமும், காதிற்குக் குண்டலத்தையும் உடம்பிலே பூசிக் கொள்ளச் சந்தனத்தையும் தந்து என்னை ஆட்கொண்டான். அவன் பாம்புக்குப் பகைவனாக இருக்கும் கருடனைத் தன்கொடியாகக் கொண்ட எம்பெருமானுக்கு திருபல்லாண்டு பாடுகிறேன்.
ஆண்டாள் "கூடாரை வெல்லும்.." என்னும் திருப்பாவையில் "முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்" என்று சொல்லுகிறார்.
நம்மாழ்வார் இந்தப் பாசுரத்தில் உபயோகப்படுத்தும் நெய் கொஞ்சம் வித்தியாசமானது.
உண்டா யுலகேழ் முன்னமே,
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர்க் காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ? மாயோனே
( திருவாய்மொழி 2950, 1.5.8 )
இந்தப் பாடலைப் பாருங்கள் - உன் மாயச் செயலால் ஏழுலகங்களையும் உண்டு பின் வெளிக் கொண்டுவந்தாய். சிறுமனித உடலை விரும்பிக் கண்ணனாக வந்தாய். வெண்ணை திருடி உண்டாய். எதற்காக அந்த நெய்யை உண்டாய் ? மண்ணை வயிற்றில் வைத்த காலத்தில் சோகை நோயை ஏற்படுத்திவிடும் என்பதற்காகவா ? அம்மண் கரைவதற்கு நெய் மருந்தாகுமா ?
( இன்றும் சில மருந்துகளை நாம் நெய்யில் குழைத்துத் தருகிறோம் )
நெய்யில் விளக்கேற்றிப் பார்க்கிறார்கள் முதலாழ்வார்கள்.
முதல் திருவந்தாதியில் பொய்கையாழார்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி, ( 2082 ) )
உலகத்தை அகலாக்கி, கடலை நெய்யாக வார்த்து கதிரவனை திரியாக்கி பிரம்மாண்டமாக விளக்கேற்றிப் பார்க்கிறார் பொய்கையாழ்வார்.
இரண்டாம் திருவந்தாதியில் பூதத்தாழ்வார்:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
(இரண்டாம் திருவந்தாதி, ( 2182) )
அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாகவும், இனிய மனத்தை திரியாகவும், ஆத்மாவைச் சுடர்விடும் விளக்காகவும் ஏற்றி மகிழ்கிறார்.
இந்த இரண்டு பாடல்களிலும் ஆழமான ஸ்ரீவைஷ்ணவக் கருத்து பொதிந்துள்ளது. பெருமாளை தரிசிக்க இரண்டு வித விளக்குகள் ஏற்ற வேண்டும் - தத்துவம், ஞானம். நாமும் இந்த விளக்குகளை ஏற்றினால்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
(மூன்றாம் திருவந்தாதி, ( 2282) )
என்று மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார் ( மற்றும் முதலாழ்வார்கள் ) கண்ட நாராயணனை காணலாம்.
Comments
Post a Comment