Skip to main content

திருப்பாவை-0 3 – வண்டு

[%image(20061218-andal_drawing_2.jpg|150|220|Andal-2)%]

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்
நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


இரண்டாம் பாடல் போல் இந்த பாட்டிலும் உவமை இல்லை.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிடும் பாசுரங்கள் அதிகம். இந்தப்


பதிவில் ஆழ்வார்கள் பார்த்த வண்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.



வண்டிற்கு பிரமரம், தும்பி என்னும் பெயர்களும் உண்டு. "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்ற திருப்பாவையில் ஆண்டாள் அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும் என்கிறாள். அதே வண்டை நாச்சியார் திருமொழியில் பாருங்கள்.


    வெளிய சங்கொன் றுடையானைப்
    பீதக வாடை யுடையானை,
    அளிநன் குடைய திருமாலை
    ஆழி யானைக் கண்டீரே?-
    களிவண் டெங்கும் கலந்தாற்போல்
    கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
    மிளிர நின்று விளையாட
    விருந்தா வனத்தே கண்டோ மே


(நாச்சியார் திருமொழி, 644, 8 )


வெளுத்த சங்கும், அருள் தரும் சக்கரமும் உடையவனாய், பீதாம்பரம் அணிந்த திருமாலைக் கண்டீரோ ? தேனைக் குடித்துக் களிப்புடன் வண்டுகள் திசைகள் எங்கும் பரவியது போல் மணம் மிக்க அழகிய மயிர்க்கற்றைகள் தோள்கள் மேல் விளையாடும் படியாகக் கண்ணன் இருந்ததை கண்டோம் என்று பாடுகிறாள்.


வேறு ஒரு பாட்டில் உலங்கு என்ற ஒரு வகை பூச்சியினத்தைப் பற்றி சொல்கிறார். ( உலங்கு என்பது கொசுக்களில் ஒரு வகை. கொசுகு, கொதுகு, நுளம்பு என்றும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு). ஆண்டாள் இந்த மிகச்சிறிய பூச்சியினத்தையும் உவமையாக கூறுகிறார்.


 


    சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
    தண்முகில்காள், மாவலியை
    நிலங்கொண்டான் வேங்கடத்தே
    நிரந்தேறிப் பொழிவீர்காள்,
    உலங்குண்ட விளங்கனிபோல்
    உள்மெலியப் புகுந்து,என்னை
    நலங்கொண்ட நாரணற்கென்
    நடலைநோய் செப்புமினே.


(நாச்சியார் திருமொழி, 582, 6 )


நீரைக் கொண்டு மேலே விளங்குகிற மேகங்களே மஹாபலியிடம் நிலத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டவன் இருக்கும் திருமலையில் மீதேறிப் பறந்து மழை பொழிபவர்களே!. நான் உலங்கு உண்ட விளாம்பழம் போல் உள்மெலியும்படி என்னுள்ளே புகுந்து என் பெண்மையை உண்டு நலியச் செய்தான். விளாம்பழத்திற்கு ஒரு வகை கொசுவால் நோய் வருகிறது என்று கூறுவதை உணர்ந்து, அவரின் நுண்ணிய அறிவை வியப்பதா ? அல்லது அந்த கொசு விளாம்பழத்தில் மொய்த்தவுடன் அப்பழத்தில் சாறெல்லாம் வற்றிவிடுவதை, நாராயணன் இவள் நினைவில் புகுந்து, பெண்மையை உண்டு நலியச் செய்தான் என்ற உவமையை வியப்பதா ?


திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் வரும் பாசுரம் -


தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்
தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த
அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது
நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.


(திருநெடுந்தாண்டகம், 2077, 26 )


சோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே!. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, "ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்" என்று சொல் என்கிறார்.


பெரிய திருமொழியில் வண்டை உருவகமாக "வண்டார் கொண்டல்" என்று சொல்கிறார்


வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .
வேங்கடமே . எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்திக் கேனே


(பெரிய திருமொழி, 1388(5.5.1) )


அச்சம் அறியாத என் மகள், வாய்விட்டு, 'திருவேங்கடமே' என்று பல தடவை புலம்புகிறாள். இவள் உறக்கத்தை மறந்தாள். வண்டையும் மேகத்தையும் ஒத்த திருமேனியன், என் பெண்ணிடத்தே செய்தவற்றை நான் எப்படி சிந்திப்பேன் ?


பெரியாழ்வார் திருமொழியில் தலைமயிருக்கு வண்டை உவமையாக கூறுகிறார்.


செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ.


( பெரியாழ்வார் திருமொழி(அச்சோப்பருவம்), 98, 8 )


கருண்ட உன் தலைமயிர் பவளவாய் உதட்டின் மீது விழுவது, செந்தாமரை பூவில் வண்டுகள் தேன்குடிக்க மொய்பது போல் உள்ளது. சங்கு, வில் வாள், தண்டு, சக்கரம் ஆகியன ஏந்திய அழகிய கைகளாலே என்னை ஆரத்தழுமாறு வந்து அணைத்துக்கொள் என்கிறார் பெரியாழ்வார்.


கடைசியாக பெரியாழ்வார் சொல்லும் இந்த காட்சியை பாருங்கள்


    திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
    செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
    சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
    ஊதுகின்றகுழலோசைவழியே
    மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
    மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
    இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
    எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.


(பெரியாழ்வார், 283, 9 )


இந்தப் பாட்டில் பெரியாழ்வார் கண்ணன் மேக நிறத்தை போல் இருப்பவன். செந்தாமரைப் பூவைச் சூழும் வண்டினம் போல் அவன் முகத்தில் இருண்ட முன் மயிர் விழுந்து தொங்கியது. மான் கூட்டங்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், அறிவிழந்து மேய்ச்சலை மறந்தன. வாயில் கவ்விய புல், கடைவாய் வழியே விழ, அசையாமல் சுவர் ஓவியம் போலச் செயலற்று நின்றன என்கிறார். என்ன ஒரு picturization பார்த்தீர்களா !


[ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]

Comments