Skip to main content

திருப்பாவை-0 5 – பஞ்சு

[%image(20061220-andal_drawing_4.jpg|123|182|Andal5)%]

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.


தூசு என்றால் பஞ்சு என்று பொருள். இந்தப் பாட்டில் ஆண்டாள் நமக்கு ஒரு ரகசியத்தை சொல்லுகிறார்.நாம் மனசு சுத்தமாய், கண்ணனை வணங்கினால்,  நாம் அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தாலும் அதை தீயில் இட்ட பஞ்சு போல் போக்கிக் கொள்ள முடியும் என்கிறார்.



பெரியாழ்வார் பஞ்சை கண்ணனின் திருவடிகளுக்கு உவமை கூறுகிறார்.


கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே.


(பெரியார்வார் திருமொழி, 131, 4 )


கம்சனால் உன்னைக் கொல்ல அனுப்பிய சகடாசுரன் கண்ணனை அழிக்க வந்தபோது, கண்ணன் தன் பஞ்சுபோன்ற திருவடிகளால் உதைத்தப் போது, உன் திருவடிகளுக்கு துன்பம் உண்டாகுமே என்று பயந்தேன். எல்லா இடையர்களின் பயத்தை விடவும் என் பயம் மிகவும் அதிகம். ஐயோ ! வஞ்சனை செய்த கஞ்சனை(கம்சனை) நீ உன் வஞ்சனையாலே தப்பிக்க முடியாதபடி அகப்படுத்திக் கொன்றாய். இப்போது முலைப்பால் அருந்தவா என்கிறாள் யசோதை.


திருமங்கையாழ்வார் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்


கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்,
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்,
செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே


(பெரியதிருமொழி, 1319, 4.8.2 )


பஞ்சைப்போல் மென்மையான பாதம் கொண்டவள் "கஞ்சன் ஏவிய சினம் கொண்ட யானையைக் கொன்றவனே" ; "பூதனை உயிரையுண்ட வல்லவன்"; நன்மைப் பேச்சுடைய அந்தணர் வாழும் திருநாங்கூரில் உள்ளவனே" என்று பலவாறாகப் பாடுகிறாள்


மேலும் பெரிய திருமொழியில் ( 1595, 7.5.8 )  "பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள்" என்று தேரழுந்தூரில் உள்ள பெண்களின் பாதங்கள் பஞ்சுபோன்று மென்மையாக இருக்கும் என்கிறார்.


இந்த பாசுரத்தைப் பாருங்கள்


அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள்.
ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற
பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில்
என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ .
என்செய்கே னென்செய் கேனோ .


 (பெரிய திருமொழி, 1917, 10.7.10 )


இதில் வடமதுரையில் கண்ணனுடன் இருக்கும் ஊர் குழந்தைகளின் கால்கள் பஞ்சு போல இருக்கிறது என்கிறார்.


கடைசியாக இந்த பாசுரத்தில் இலவம் பஞ்சு பற்றி சொல்லியிருக்கிறார்.


காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை,
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்
கோயில்,
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,
சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே


(பெரியதிருமொழி, 1343, 4.10.6)


அழகிய வில் ஏந்திய ராமன், கடல் போன்ற அரக்கர் படையைச் சாடி, கடிய அம்புகளை விட்டான். காற்றிலே பூளைப்பூ (இலவம் பஞ்சு) சிதைவதைப் போல, அவர்கள் அழிந்தனர் என்கிறார். என்ன ஒரு கற்பனை !


 [ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]

Comments