Skip to main content

திருப்பாவை-0 7 – பறவை

[%image(20061222-andal_drawing_6.jpg|142|183|)%]

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.


இந்தப் பாட்டில் ஆண்டாள் கீசுகீசு ஒலி எழுப்பும் ஆனைச்சாத்தனை குறிப்பிடுகிறார். இந்த பறவைக்கு பேசும் ஆற்றல் இருப்பதாகவும் கூறுகிறார்.


( இரண்டு வருடம் முன் திருப்பாவை விளக்கம் எழுதிய போது எல்லா புத்தகத்திலும் ஆனைச்சாத்தன் பற்றி எந்த குறிப்பும் எனக்கு கிடைக்கவில்லை. மிகுந்த தேடலுக்குப் பிறகு அது Seven Sisters என்று அழைக்கப்படும் சாம்பல் நிற பறவை என்று தெரியவந்தது. எங்கள் பள்ளிக் கூடத்தில் இந்த பறவையை நிறைய பார்த்திருக்கிறேன். எதைப் பற்றி எழுத வேண்டும் என்றாலும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு எழுத வேண்டும் என்பது சுஜாதா எனக்கு கற்றுத் தந்த பாடம் ).



இன்று திவ்வியப் பிரபந்தத்தில் வரும் சில பறவைகளைப் பற்றி பார்க்கலாம்.


முதலில் குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.


வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே


 ( பெருமாள் திருமொழி, 692, 5.5)


இந்த பாசுரத்தில் குலசேகர ஆழ்வார் தம்மை ஒரு பறவையாக எண்ணிக் கொள்கிறார். இப்போது கற்பனை ஓட்டத்தைப் பாருங்கள்..
அலைகள் வீசும் கடலின் இடையில் ஒரு மரக்கலம் செல்கிறது. அந்த மரக்கலத்தின் மீது ஒரு பெரிய பறவை உட்கார்ந்து இருக்கிறது. அந்தப் பறவை நான்கு திசைகளிலும் பறந்து சென்று பார்த்தும் கரையை காண முடியவில்லை. மீண்டும் அந்த மரக்கலத்தின் மீது சோர்வுடன் வந்து அமர்கிறது. இது போலவே தானும் தவித்துவிட்டு திருமாலின் திருவடிகளை புகலிடமாக அடைந்தேன் என்கிறார்.


அடுத்தது மயில் பற்றி திருமங்கையாழ்வார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.


மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா
அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப
தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து
தஞ்ச மேசில தாபத ரென்று
புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த
புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த
அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற்
கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ


 (பெரியதிருமொழி, 1865, 10.2.8 )


மனத்திற்குப் பிடித்த மண்டோதரி முதலிய, கயல்விழி போன்ற மனைவிகள் இருந்தும்,  செல்வம் போல் அவர்கள் மென்முலைகளை பேணுவதை விட்டுவிட்டு, ராவணன் காட்டிலே மயில் போன்று இருந்த சீதையை கவர்ந்து சிறைவைத்தான். இந்த ராவணன் நெஞ்சிலே அம்பெய்ய வல்ல மன்மதனை ஒத்த ராமனுக்கு நாங்கள் அஞ்சினோம் என்கிறார் திருமங்கையாழ்வார். இந்தப் பாட்டில் "புனம் கொள் மயில்" என்கிறார். இது காட்டு மயில். காட்டில் சிறையெடுத்துச் சென்றதால் சீதைக்கு உவமை கூறுகிறார் திருமங்கையாழ்வார். இன்பம் பயக்கும் கவித்திறம் இவருடையது!.


இதே போல் மயில் உவமைகள் பிரபந்தத்தில் நிறைய வருகிறது.


பெரியாழ்வாரின் மயில் பற்றி ஒரு பாசுரம் பார்க்கலாம்.


குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே.


(பெரியாழ்வார் திருமொழி, 410, 9 )


பெரியாழ்வார் பாசுரத்தில் வரும் காட்சிகளையும் உவமைகளையும் பாருங்கள். மலையின் உச்சியிலே பரவும் மேகம் போல, குளிர்ந்த குணம் உடையவன். குவளைப் பூப் போன்ற பளபளப்பும், ஒலிக்கும் கடல் போன்ற கம்பீரமும். கூட்டமாய் நின்றாடும் மயில் போன்ற அழகான நிறமும் உடையவன். இந்த பெருமாள் இருக்கும் ஊர் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள் - பொதிகை சந்தனக்காடுகளில் நுழைந்து, மணம் கொண்டு, கொடி இடைமகளிரின் சந்தனம் பூசிய முலைகளைத் தழுவி, அவ்வாசனையும் சேர்த்துக் கொண்டும் உலாவப் பெற்ற  மதிலால் சூழ்ந்த திருவரங்கம் என்கிறார். என்ன ஒரு நயம்.


பொதுவாக மகளிரின் நடை அழகிற்கும், மென்மைக்கும் அன்னத்தை உவமையாக கூறுவர். ஆண்டாள் கூறும் ஒரு வித்தியாசமான உவமையை பாருங்கள்.


செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட் கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே.


(நாச்சியார் திருமொழி, 573, 7 )


சங்குகளின் அரசனான பாஞ்சசன்னியமே. அன்று மலர்ந்த செந்தாமரைப் பூவில் தேனைக்குடிக்கும் அன்னம் போல் சிவந்த கண்களையும் கருத்த உடம்பையும் உடைய கண்ணனின் அழகிய கையில் மீதேறி உறங்கும் உன் செல்வம் மிகவும் சிறந்தது என்கிறார். ( பொதுவாக, தேனை வண்டுகள் உண்ணும் என்றுதான் கவிஞர்கள் கூறுவர். ஆனால் ஆண்டாள் நாச்சியார், அன்னப் பறவை தேனைப் பருகுவதாகக் கற்பனை செய்து உவமை கூறியுள்ளார். இது பலரும் காட்டாத உவமை காட்சியாகும். )


இதே போல் கிளி, கொக்கு என்று பல பறவைகள் ஆழ்வார் பாசுரங்களில் உவமையாக கூறப்பட்டுள்ளன. அவைகளை வேறு ஒரு சமயம் பார்க்கலாம். !


 [ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]

Comments

  1. baradwaja patchigal, avaigalin petchukku arthamillai "ANAKSHARA RASAM" thiruppavai vilakkam by geetha press korakpur

    ReplyDelete

Post a Comment