Skip to main content

GPS – Global Positioning System

"போன பதிவுல எந்த காட்டுக்கு போனப்பா எனக்கும் கொஞ்சம் சொல்லேன்" என்றது வேதாளம்.
"எனக்கு தெரியாதுப்பா என்கிட்ட என்ன GPS சாதனமா இருக்கு" என்றான் விக்கிரமாதித்தன்.
"அது என்னப்பா GPS, அதை பற்றி சொல்லேன்"
"சரி எனக்கு தெரிந்த வரை உனக்கு எளிமையா சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்" என்று விக்கிரமாதித்தன் GPS பற்றி எழுத ஆரம்பித்தான்.


*- * - *


GPS - Global Positioning System.
இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள், வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக உபயோகித்தார்கள்.


இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும்.


[%image(20050818-gps_27satellite.jpg|300|199|GPS Satellite)%]

 


(Photo courtesy U.S. Department of Defense)
(Artist's concept of the GPS satellite constellation )


GPS என்று நாம் கூறுவது பெரும்பாலும் GPS ரிசீவரையே குறிக்கிறது. 27 (அதில் மூன்று ஸ்டெப்னிகள்) செயற்கைகோள்களை கொண்டு அமைக்கபட்டுள்ளது. அமெரிக்க ரானுவத்தால் ராணுவத்திற்கு உருவாக்கப்பட்ட இது தற்போது எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருக்கிறது.


சுமார் 2000 கிலோ எடை உள்ள இச்செயற்கைகோள்கள் பூமியை 12,000 மையில் வேகத்தில் சுற்றுகின்றது. அதாவது பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை வலம் வருகிறது. பூமியில் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தலைக்கு மேல் குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்கள் தெரியும்படி அதை அமைத்திருக்கிறார்கள்.


[%image(20050818-gps_satellite.jpg|248|199|GSP Satellite 1)%]

 


(Photo courtesy U.S. Army A GPS satellite)


GPS ரிசீவர் வேலை என்னவென்றால் இந்த நான்கு செயர்கைகோள்களை எங்கே என்றும் அதன் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிக்கிறது. இந்த உத்திக்கு பெயர் - Trilateration. ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை பார்க்கலாம்.


 


[%image(20050818-chennai_gps1.jpg|300|238|GPS Chennai 1 )%]

நீங்கள் சென்னைக்கு புதிது. ஷாப்பிங் போய் எங்கோ துலைந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் ஒரு சென்னை வாசியிடம்
"சார் நான் எங்கே இருக்கிறேன் ?" என்று கேட்கிறீர்கள்
"கஸ்மாலம், நீ கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸிலிருந்து மூணு கிமீ தூரத்தில இருக்கே" என்று நக்கலாக பதிலலிக்கிறார். ( "A" - கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸை குறிக்கிறது).
இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?. கோடம்பாக்கம் மூன்று கிமீ சுற்றளவில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்காலாம் அல்லவா ?
( பார்க்க நீல நிற குறியீடுகள் )


 


 


 


[%image(20050818-chennai_gps2.jpg|300|238|GPS Chennai 2)%]

பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் கேட்கிறீர்கள்.
"நான் எங்கே இருக்கிறேன் ?" என்று
அவளும் சளைத்தவள் அல்ல,
"ம்ம். இங்கிருந்து தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகம் முன்று கிமீ" என்று பதில் அளிக்கிறாள்.
(B-தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகத்தை குறிக்கிறது).
இப்போது நீங்கள் மேப்பில் இரண்டு வட்டங்களை போடுகிறீர்கள். அதன் intersection இரண்டு இடங்களில் இருப்பதால் இந்த இரண்டு இடங்களில் நிங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்.


 


 


 


[%image(20050818-chennai_gps3.jpg|300|238|GPS Chennai 3)%]

சரி, சென்னைவாசிகளே கொஞ்சம் வில்லங்கமானவர்கள் என்று ஒரு ஆட்டோ டிரைவரிடம்
"இங்கிருந்து மாம்பலம் அயோத்தியா மண்டபம் எவ்வளவு தூரம்பா ?" என்று கேட்கிறீர்கள்.
"3 கிமீ, ஆட்டோவில் குந்து சாமி வீட்டாண்ட விட்டுறேன்" என்று கூறுகிறார்.
(C- அயோத்தியா மண்டபத்தை குறிக்கிறது)


இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். முன்றாம் வட்டத்தை போடுங்கள் அவ்வளவுதான். இந்த மூன்று வட்டங்களும் சேரும் இடம்தான் நீங்கள் இருக்கும் இடம். நீங்கள் தி.நகரில், பனகல் பார்க்கில் இருக்கிறீர்கள்.
( சென்னை மேப் உதவி : http://www.mapsofindia.com/ )


 


 


ஆக நீங்கள் வைத்துள்ள GPS சாதனம் இடத்தை கண்டுபிடிக்க அதற்கு இரண்டு தகவல்கள் தேவை படுகிறது
1. தன் தலைக்கு மேல் குறைந்த பட்சம் மூன்று செயற்கைகோள்கள்
2. சாதனத்திற்கும் செயற்கைகோள்களுக்கும் உள்ள தூரம்.


இந்த இரண்டு தகவல்களுமே செயற்கைகோள்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை அலசி கண்டுபிடிக்கிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் செல்ல கூடியவை (ஒரு வினாடிக்கு 186,000 மையில்கள் செல்லகூடியவை). செயற்கைகோள்கள் Pseudo Random Number என்பதை அனுப்பிக்கொண்டே இருக்கும். நம் கையில் உள்ள GPS சாதனம் தனக்கு வந்து சேரும் தகவல் எவ்வளவு நேரத்தில் வந்தது என்று கணக்கிட்டு செயற்கைகோள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிடும்.


( மேலும் விபரங்களுக்கு Googleலை நாடுங்கள் ).
சரி என் பாரிஸ் அனுபவத்திற்கு வருகிறேன்.


Image hosted by Photobucket.comபாரிஸில் என் அலுவலகத்தில் எனக்கு ஒரு ஹோட்டல் புக் செய்திருந்தார்கள். அது எங்கே என்று எனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. டாக்ஸி டிரைவரிடம் அந்த ஹோட்டல் முகவரி அச்சிடப்பட்ட காகிதத்தை கொடுத்தேன். அவருக்கும் அந்த ஹோட்டல் எங்குள்ளது என்று தெரியவில்லை.


அப்போது காரின் ஸ்டீரியோ பக்கத்தில் ஒரு பட்டனை தட்டினார், ஒரு மிகச் சிறிய கீபோர்ட் வெளியே வந்தது, அதில் அந்த ஹோட்டலின் முகவரியை உள்ளிட்டார். கார் ஸ்டீரியோ மேல் இருக்கும் திரையில் ஒரு மேப் தெரிந்தது. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் சாரி உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், எந்த வழியாக போகவேண்டும் என்று சில நொடியிகளில் வரைபடத்தில் தெரிந்தது. புறப்பிட்ட பின் இந்த வழியாக போனால் இவ்வளவு நேரம் மிச்சமாகும், இடையில் எவ்வளவு சிக்னல்கள், வேகத்தடை என்று பல விஷயங்களை சொன்னது. டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி முன் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் போகும் வேகத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்று கணக்கிட்டு கூறியது.


இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.


தற்போது செல் போனில் GPS போல் ஒன்று வருவதை சிலர் கவனித்திரிபீர்கள். இதற்கு "Cell Display Information" என்று பேர். உங்கள் செல் போன் எந்த டவர் பக்கத்தில் உள்ளது என்று சொல்லு உத்தி. இந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள் என்று சொல்லும்.


போன வாரம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு S13 கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.என் பக்கத்தில் இருந்த பெண்
"சார் my friend is in S2, if you dont mind can you exchange the seat" என்றாள்.
ஒரு பெண்ணிடம் முடியாது என்று எப்படி சொல்வது?
"ok, with pleasure" என்று டிக்கேட்டை வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது என் செல் போனில் "Chennai Central" என்று காட்டியது. S13க்கும், S2க்கும் நடுவில் முதல் வகுப்பு, AC-2Tier, AC-3Tier என்று ஏகப்பட்ட பெட்டிகள். ஒரு வழியாக S2வில் ஏறி உட்கார்ந்து செல் போனை பார்த்தேன் அதில் "Sowkarpet" என்றது. அவ்வளவு தூரம். S1னில் பெங்களூர் என்று காண்பித்தால் கூட ஆச்சிரியபடுவதிற்கில்லை.


"நீ இந்த மாதிரி பெண்களிடம் வழிவது உன் மனைவிக்கு தெரியுமா" என்றது வேதாளம்
விக்கிரமாதித்தன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.Old Comments from my previous Blog


அருமையான பதிவு விக்கிரமாதித்தன்.


உங்களைக் குடையும் வேதாளத்திற்கும் நன்றிகள்.


நான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, பல விஷயங்கள் புதிது மற்றும் எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.


By சுரேஷ் (penathal Suresh), at Wed Apr 06, 09:57:06 AM IST  


Good blog. As long as GPS won't reveal to whom u r talking, We can continue with our jolls. I welcome GPS ;),


By REFLEX, at Wed Apr 06, 10:12:22 AM IST  


வணக்கம் தேசிகன். GPS எதுக்கு பயன்படுத்துறாங்கன்னு ஏதோ தெரியும். எப்படி பயன்படுத்தாருங்கன்னு எனக்குதெரிந்த தமிழில் விளக்கியதற்கு நன்றி.


ஆனா ஒரு டவுட்டு:) உலகெங்கும் அமரிக்காவோட அந்த 27 செயற்கைக்கோள்களைத்தான் பயன்படுத்துகிறார்களா?


இங்கு சிங்கப்பூரில், டாக்ஸி கம்பெனிகள் பயன்படுத்துகின்றன. நான் இருக்கும் யிஷூனில் (அல்லது குறிப்பாக) யிஷீன் ரிங் ரோட்-டில் இருந்து டாக்ஸிக்கு அழைத்தால், நிறுவனத்தில் இருந்த அந்த யிஷின் பகுதியில் (அந்த ரோட்டுப் பக்கம் மட்டுமா -தெரியவில்லை) திரியும் டாக்ஷிக்கு மட்டும் செய்து அனுப்ப, காலியாகத் திரிபவர்கள அழைப்பை ஏற்று 5 அல்லது 10 நிமிடங்களில் வருவதாக தெரிவித்ததை டாக்ஷி எண்ணுடன் நமக்கு உடனே IVRS தெரிவிக்கும்.


அதுபோல் நீங்கள் பாரிசில் பார்த்தது போன்ற காரிலியே அமையப்பெற்ற கருவி இல்லையென்றாலும், அதுபோன்ற வரைபடம் காட்டும் கருவி டாக்ஷியில் பொருத்தப்பட்டு வருகிறாது. போகுமிடம் உள்ளிட்டால் வரைபடம் தெரியும்.


அதுபோக ஒரு நிறுவனம், Palm Pilot ல் செயல்படுவது போன்ற ஒரு மென்பொருள் வெளியிட்டுள்ளார்கள். அதை வாகனத்தில் வைத்துக்கொண்டால், GPS பயன்படுத்தி நீங்கள் பாரிஸில் பார்த்தது போன்ற விஷயம் சாத்தியப்படும்.


மேலும் இங்கு பேருந்துகளில் பயணம் செய்ய ஒருவிதமான Gemplus IC-உடன் கூடிய மின்னட்டை பயன்படுத்துகிறோம் ( EZlink Card). இதுவரை ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் அல்லது ஸ்டேஜ் வரும்போது/கடந்தவுடன் வாகனமோட்டி (இங்குதான் நடத்துநரும் அவரேதானே) அவரருகில் உள்ள ஒரு கருவியில் பொத்தானை அமுக்க வேண்டியிருக்கும். இப்போது பஸ் நிறுத்தம் நெருங்கும் போது உடனடியாக மாறி விடுகிறது. இதுவும் GPSன் உதவியுடந்தான் என்று அறிகிறேன்.


அதுபோக போனில் உள்ள GPS பயன்படுத்தி கடைகள் விளம்பரங்களுக்குப் ப்யன் படுத்துகிறார்கள். அதாவது, நீங்கள் தி.நகர் அல்லது இன்னும் குறிப்பாக ரங்கநாதன் தெரு பக்கம் போகும்போது "சரவணா ஸ்டோர்ஸில் வரலாறு காணாத விலைக்கழிவு" என்ற சேதி உங்கள் கைத்தொலைபேசியில் குறுந்தகவலாக வரும்.


இதுபோல் நிறைய ப்லன்கள் உண்டு. அதை என்னைப்போன்ற பாமரர்களுக்குப் புரியும்படி எடுத்துச்சொன்ன வேதாளத்திற்கு மீண்டும் நன்றி.


அப்புறம் இன்னொன்னு:
அது ஏன் சாமி அந்த சாட்டிலைட் படங்களுக்கு மட்டும் அமெரிக்க நிறுவங்களுக்கு நன்றி, உத்தரவுல்லாம் வாங்கிருக்கிறீங்க. ஆனா நம்ப கோடம்பாக்கம் வரைபடத்துக்கு மட்டும் அப்படி ஏதும் எழுதல. (இங்க சிங்கையில் SingaporeDirectory என்ற நிறுவனத்தின் வரைபடத்தை ஏதோ ஒரு நிறுவனம் அவர்களின் இடத்துக்கு வ்ழி சொல்ல உதவியாக இவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி, நீதிமன்றம் வரை சென்று பல்லாயிரம் வெள்ளி அபராதம் செலுத்தியது சமீபத்தில்:)


என்றென்றும் அன்புடன்,
அன்பு


By அன்பு, at Wed Apr 06, 10:22:58 AM IST  


வேதாளத்துக்கே தெரிஞ்சி போச்சு! தேசிகனோட லீலைகள், அவங்க வீட்ல தெரியாமா இருக்குமா? 'பெண்களூர்'ன்னு, பெங்களூரைப் பற்றி இவர் blogகிய போதே அவங்களுக்கு தெரிஞ்சி.... வாங்கி கட்டிகிட்டு அவஸ்தை பட்டார் பாருங்க! அது தனி கதை... ஐயோ அதையெல்லாம் இங்க Publicல வேற சொல்லிட்டேனா? போச்சுடா?


அது சரி அதைவிடுங்க! இந்த ஆளை தனியா பெங்களூர் விட்ட தப்பா போயிடும்னுதான் அடுத்த வாரத்துல 'அவங்க' இவரோட பெங்களூர் இடம் பெயரப் போவதாக தகவல். சரிதானா? ஆனா இது உண்மைதானான்னு கண்டுபிடிக்க GPS மாதிரி வேற எதாச்சும் இருக்கான்னு யாராவது எழுதுங்களேன்!


தேசிகன்... ஸாரி! GPS படிச்ச மயக்கத்துல... இப்படி போட்டு உடைச்சிட்டேன் உங்க வண்டவாளத்தை!


- சந்திரன்


By நாலாவது கண், at Wed Apr 06, 10:23:03 AM IST  


ஹாங்... reflex சொல்ற விஷய்த்தை மறந்துட்டேனே. இங்க சிங்கப்பூர்ல ஒரு நிறுவனம் - உங்க மகன்/மகள்/கணவர் எங்க இருக்காருன்னு தெரியனுமா....? எங்ககிட்ட வாங்கன்னு, கூவ ஆரம்பிச்சிருக்கு:)


By அன்பு, at Wed Apr 06, 10:25:18 AM IST  


அன்பு,


தகவல்களுக்கு நன்றி. அந்த கொடம்பாக்கம் படத்தை இந்த பதிவிற்காக நான் வரைந்தது, எனக்கே நன்றி எல்லாம் டூ-மச்.


சந்திரன்,


உங்களை உங்களை தனியாக அப்புறம் கவனிக்கிறேன். என்ன ?


By Desikan, at Wed Apr 06, 10:51:27 AM IST  


இன்னா சொல்றீங்க தேசிகன், அந்த மேப்பே... நீங்கள் வரைந்ததா!?


By அன்பு, at Wed Apr 06, 11:30:55 AM IST  


தொழில்நுட்ப விடயங்கள் ..இலகு தமிழில்..


இனி இந்த கட்டுரை இதன் கனதி கருதி பல இடங்களுக்கு பரவும்.


இப்படியே ஒவ்வொருவரும் எழுத ஆரம்பித்தால் தமிழுக்கு பல விடயங்கள் பல தமிழ் சொற்கள் கிடைக்கும்


பாராட்டுக்கள்.


By suratha, at Wed Apr 06, 11:59:35 AM IST  


அன்பு சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
சென்னை மேப் http://www.mapsofindia.com என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. பதிவில் update செய்துவிட்டேன்.


By Desikan, at Wed Apr 06, 12:00:12 PM IST  


தேசிகன்:
இந்தியாவில் 'வாயில் இருக்கிறது வழி' என்பார்கள் ஜிபிஎஸ் எதற்கு? :-)
ஆனால் இதன் பொருள் என்னவெனில் கேட்பவருக்கு எந்த வழி தெரியுமோ! அந்த வழியைச் சொல்லுவார். அது நீங்கள் கேட்கும் இடத்திற்குப் போக வேண்டுமென்ற அவசியமில்லை :-))
எனது பிரெஞ்ச் நண்பி சொல்லுவாள், "இந்தியர்களிடம் உள்ள கெட்ட பழக்கம், வழி கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்வதில்லை' என்று....ஆக..
நல்லா போகுது தேசிகன். எனக்கும் ரொம்பப் பிடிச்ச கதை மாந்தர்கள் வேதாளமும், பட்டி, விக்கிரமாதித்தனும்!


By N.Kannan, at Wed Apr 06, 02:14:17 PM IST  


தேசிகன்,


அதானே பாத்தேன்... நீங்கள் ஓவியரென்று தெரியும், அதற்காக அந்த வரைபடமுமா என்ற வயித்தெரிச்சல்தான்:)


சுரதா/யாராவது,
கனதி என்றால் என்ன?


By அன்பு, at Wed Apr 06, 02:29:42 PM IST  


Careful If ur wife has a GPS receiver with a High Tech satelite video capturing ,then
u have to pay the prize of talking with another lady. :-))


anandham@linuxmail.org


By Anandham, at Wed Apr 06, 02:42:48 PM IST  


அருமையான கட்டுரை தேசிகன். நல்லாயிருந்துச்சு.


By மதி கந்தசாமி (Mathy), at Wed Apr 06, 05:03:35 PM IST  


அன்பு,


//கனதி என்றால் என்ன? //


//இனி இந்த கட்டுரை இதன் கனதி கருதி பல இடங்களுக்கு பரவும்.//


நான், கனதி என்றாலுக்கு - முக்கியத்துவம், பேசப்படும் விஷயத்தின் முக்கியத்துவம் என்று எடுத்துக்கொண்டேன். சுரதாதான் சரியா என்று சொல்ல வேண்டும்.


By மதி கந்தசாமி (Mathy), at Wed Apr 06, 05:05:32 PM IST  


அன்பின் தேசிகனார் அவர்களே!


தங்கள் வேதாளம் வாழ்க! நவீன வேதாளம் செயற்கைகோளில் மேலும் உலவ கடவது. எங்களுக்குää எங்கள் தமிழில் இவைபோன்ற செய்திகள் கிடைக்க வேண்டும்.


வரைபடம் குறித்து விவாதம் வந்ததால் நானும் சற்று தெளிவுபெற விரும்புகிறேன். சமீபத்திய ஒரு கருத்தரங்கில் பென்ட்லே தனது புதிய விரிவாக்கமான கணினி வரைபட மென்பொருளான மைக்ரோஸ்டேஷன் வீ8 (Microstation V8) என்பதை மிக விரிவான பூகோள படங்கள் வரைவதற்காக பயன்படுத்துவதாக கூறினார்கள். செயற்கைகோளிலிருந்து பெறப்படும் டாட்டாக்களையும், முன்பே உள்ளீடப்பட்டிருக்கும் இவைபேன்ற உலக வரைபடத்தையும் பொருத்தி இத்தகைய விந்தைகள் புரியப்படுகின்றனவா? அறிவியல் ஆவியியல் வேகத்தில் செல்கின்றது!


திரைப்படம் ஒன்றில் வரும் வசனத்தைத்தான் சொல்ல தோன்றுகிறது.


“டெக்னாலஜி ஹெஸÊ இம்ப்ரூவுடூ சோ மசÊ”


 


நல் வாழ்த்துகள்!


அன்புடன்
மன்னை மாதேவன்


By மன்னை மாதேவன், at Wed Apr 06, 05:44:22 PM IST  


கனதியின் நேரடிக் கருத்தை பாரம் எனக் கொள்ளலாம்.
இங்கு சுரதா குறிப்பிட்டது கட்டுரையுள் அடங்கியுள்ள விடயம் கனதியானது என்பதே.
அதாவது விடயத்தின் முக்கியத்துவம் பிரயோசனம்.. என்று பல விடயங்களைக் கொள்ளும்.


By Chandravathanaa, at Wed Apr 06, 07:30:28 PM IST  


தேசிகன் நீங்கள் குறிப்பிட்ட GPS கருவி, இப்போது ஜேர்மனியில் புதிதாகத் தயாரிக்கப் படும் அனேகமான எல்லாக் கார்களுக்கும் பொருத்தப் படுகின்றன. இது காருக்கு வெளியில் பின் பக்கம் பொருத்தப் படும். இதனோடு உள்ளே பொருத்தப் படும் Navigation system மூலம் திரையில் நாம் போக வேண்டிய இடங்களைக் கண்டு பிடிக்கலாம்.


By Chandravathanaa, at Wed Apr 06, 07:38:56 PM IST  


Good Post :-)


"....இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள்......."


இந்தியாவில் இருக்கிறது. 5 வருடங்கள் முன்பு டில்லியில் I B சாக்ஸேனா என்கிற இளைஞர் முதலில் "சஞ்சய்" என்கிற பெயரில் இதை அறிமுகப்படுத்தினார். இத்தனைக்கும் இவர் கணினியில் சிறப்பு பயிற்சி எதுவும் பெற்றிருகக்வில்லை. ஆனால் 5 வருடம் முன்பு சமாசாரம் ஆயிற்றே; இப்போது இருக்கிறாரா, பெட்டிக்குள் போய்விட்டாரா என்று தேடியதில் கிடைத்தது இந்த தளம்.


http://www.gisdevelopment.net/application/business/bus0017.htm


டில்லியில் எவ்வளவு பேர் இப்போது உபயோக்கிறார்கள் என்று தெரியவில்லை.


By Aruna, at Wed Apr 06, 08:15:53 PM IST  


Dear Desikan:Profound apologies for comments in English over a beautiful Tamizh blog.I had not only read'Asterix' in 1975,I got them for my sons not only for the story or beauty of cartoon but also the nobility of characters in it.
I am not a Tech buff and most of what u said sound greek and latin to me but I did see a few gadgets here in WalMart handy to use, under the GPS priced about180 to 200$.Ur graphic step by step description on the usefullness of GPS for a man stranded near Liberty Theatre is telling.
All the best. Partha krishna


By kichami, at Wed Apr 06, 09:10:08 PM IST  


Dear Desikan:Profound apologies for comments in English over a beautiful Tamizh blog.I had not only read'Asterix' in 1975,I got them for my sons not only for the story or beauty of cartoon but also the nobility of characters in it.
I am not a Tech buff and most of what u said sound greek and latin to me but I did see a few gadgets here in WalMart handy to use, under the GPS priced about180 to 200$.Ur graphic step by step description on the usefullness of GPS for a man stranded near Liberty Theatre is telling.
All the best. Partha krishna


By kichami, at Wed Apr 06, 09:10:09 PM IST  


Dear Desikan:Profound apologies for comments in English over a beautiful Tamizh blog.I had not only read'Asterix' in 1975,I got them for my sons not only for the story or beauty of cartoon but also the nobility of characters in it.
I am not a Tech buff and most of what u said sound greek and latin to me but I did see a few gadgets here in WalMart handy to use, under the GPS priced about180 to 200$.Ur graphic step by step description on the usefullness of GPS for a man stranded near Liberty Theatre is telling.
All the best. Partha krishna


By kichami, at Wed Apr 06, 09:10:10 PM IST  


நன்றாகவும் எளிதாகவும் விளக்கியுள்ளீர்கள். என் காரில் உள்ள வழிகாட்டியில் இரண்டே முறைகள். ஒன்று நேர்வழி, மர்றொன்று எளிதான வழி. இரண்டில் எளிதான வழியை தேர்ந்தெடுக்கும் போது ஊரெல்லாம் சுற்றி வழிகாட்டும். மேலும் புதிதாக வரும் சாலைகளை சேர்க்க அவ்வப்போது அதைகார் விற்பனையாளரிடம் சென்று புதுப்பிக்க வேண்டும். என் போன்றவர்களுக்கு மிகவும் உதவி.


By தேன் துளி, at Thu Apr 07, 12:43:35 AM IST  


கடந்த வாரயிறுதியில் வந்த Benz கார் விளம்பரப்படி புதிதாக வரும் E-Class /series வண்டிகளில் சிங்கப்பூருக்கேற்ற GPS DVD உபகரணத்துடன் வரப்போகிறது. அதில் டிவிடியும் பார்த்துக்கொள்ளலாம் (அதன் மதிப்பு: S$ 13000+)


By அன்பு, at Mon Apr 11, 04:24:16 PM IST  


//இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்//


ha ha


By raviaa, at Wed Apr 13, 12:34:07 PM IST  


//இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்//


ha ha


By raviaa, at Wed Apr 13, 12:35:53 PM IST  


 

Comments