கல்கியில் 1994-95 என்று நினைக்கிறேன், "கிரிமினல்கள் ஜாக்கிரதை" என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. நான் கல்கியில் விரும்பி படித்த தொடர்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு கிரைம் கதை போல் வாரவாரம் சஸ்பென்ஸ் வைத்து எழுதப்பட்டது. இதில் வந்த நபர்கள் நமக்கு மிகவும் பரிட்சயமானவர்கள் அதனால் சுவாரசியம் மேலும் கூடுகிறது.
குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை என்னும் Forensic science பிரிவைத்தான். சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்திய தடய அறிவியல் நிபுணர்களுள் டாக்டர் .பி. சந்திரசேகரன் மிக முக்கியமானவர்.
கல்கி வார இதழில் தொடராக வெளியான அவரது இந்த அனுபவக் குறிப்புகள் தற்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. இதில் தான் காஞ்புரத்தில் முதல் முதலில் சந்தித்த வடகம் பானையில் கானாமல் போன பணம் முதல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட மொட்டை முருகன் வரை எழுதியிருக்கிறார்.
புத்தகத்தில் சந்திரசேகரனிடம் முக்கிய பிரமுகர்கள் சிலர் கேட்ட சுவாரசியமான கேள்விகளை முதலில் தருகிறேன்.
முதலில் எம்.ஜி.ஆர்.
[எந்த ஒரு விஷயத்தை பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி முழு விபரங்களையும் சேகரித்துத் தருவதால்தான் உங்களுக்குச் சேகரன் என்ற பெயரோ என்று தமாஷாக சொன்ன எம்.ஜி.ஆர் தொடர்ந்து , "ஆனால் என்னுடைய வழக்கில் மட்டும் முக்கியமான தகவலை சேகரித்துத் தர மறந்துவிட்டீர்களே சேகரன்" என்றார்.
"இல்லையே... கூடுமானவரை எல்லாத் தகவல்களையும் திரட்டி உதவினேனே" என்றேன் பதற்றதுடன்.
'நான் துப்பாக்கியால் மிக அருகிலிருந்து சுடப்பட்டும், எம்.ஆர். ராதா அண்ணன் தன்னைதானே சுட்டுக் கொண்டபோதும் இருவரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையே; ஏன் ? அதற்கான காரணத்தைக் கண்டறிவவில்லையே சந்திரசேகரன்?" என்றார் எம்.ஜி.ஆர்.
... . . . . . . . எம்.ஜி.ஆர். போன்ற தலைவர் பிழைத்து வந்ததைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் 'அருகிலிருந்து சுடப்பட்டும் ஏன் இறக்கவில்லை? என்ற நோக்கில் ஆராய்ச்சி செய்து வெளியிடுவது நாகரிகமாக இருக்காது என்று நான் கருதினேன். இருந்தாலும் அந்த ரீதியிலும் ஆராய்ச்சி செய்து அதற்கான விடையை வைத்திருந்தேன்.
.... ... . . . .
இவ்வளவு விவரங்களையும் எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். எம்.ஜி.ஆருக்கு இந்த விஞ்ஞானபூர்வமான காரணங்களைக் கேட்டது ஒரே சந்தோஷம். "இந்த உண்மைகளைத் தடய அறிவியல் துறைக்கு பயன்படும்படி வெளியிடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். ]
அடுத்தது ஜெயலலிதா...
[அப்போது மரபனு(DNA) பரிசோதனை ஆராய்ச்சி முற்று பெறாத காலகட்டம். உலகமெங்கும் இது போன்ற கேஸ்களில் ரத்ததைச் சோதித்து கண்டுபிடிக்கும் HLA சோதனைதான் நடைமுறையில் இருந்தது.....
..... HLA சோதனை பற்றி விளக்கும் போது முதல்வர் ஜெயலலிதா ஒரு கேள்வி கேட்டார். "ஒரு கணவனுக்கு 'ஏ' குருப் ரத்தம், மனைவிக்கும் 'ஏ' குருப் என்று வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் HLA சோதனைப்படி குழந்தைக்கு 'ஏ' குரூப்போ அல்லது 'ஓ' குரூப்போ இருக்க வேண்டும்; அடுத்த வீட்டுக் காரனுடன் மனைவிக்கு தொடர்பு வைத்திருப்ப்தாக கணவர் சந்தேகப்படும்பட்சத்தில் அடுத்த வீட்டுக்காரனுக்கும் 'ஏ' குரூப் ரத்தம் இருக்கும்பட்சத்தில் குழந்தைக்கு அப்பா யார் என்று எப்படி நிர்ணயிப்பீர்கள் ?" ]
மேற்குறிய கேள்விகளுக்கு சந்தரசேகரன் என்ன விடையளித்தார் என்பதை புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
ராஜிவ் காந்தி விடுதலைப்புளிகளால் கொல்லப்பட்டதை விவரிக்கும் சந்திரசேகர் ஆர்.டி.எக்ஸ் (RDX) பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறார்.
[ ஆர்.டி.எக்ஸ் என்றால் 'ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் எக்ஸ்ப்லோசிவ்' என்று பொருள். அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததுதான் இந்த வெடிமருந்து. இதன் ரசாயனப் பெயர் சைக்கிளொமைட் என்பதாகும். திடமும் அல்ல திரவமும் அல்ல. சப்பாத்தி மாவை எப்படி தட்டையாக உருண்டையாக நமக்கு தேவைப்பட்டது போல் செய்து கொள்கிறோமோ அது போலவே இந்த ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தையும் தேவைக்கேற்றபடி செய்துக்கொள்ள முடியும். இந்த மருந்தை 40 கி.மீட்டருக்கு நீளமாக வைத்து ஒரு முனையைப் பற்ற வைத்தால் அதே நேரத்தில் மறுமுனையும் எரியும். இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ் நெருப்பைக் 'கடத்தும்' வேகத்தை ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த மருந்தை பற்ற வைக்க 197 டிகிரி வெப்பம் உருவாக்கப்பட வேண்டும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தில் வைக்கப்பட்டிருக்கும் ரவைகள், அது வெடிக்கும் போது ஒரு வினாடிக்குள் 26000 அடி பாயும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட கொடுமையான வெடிமருந்து ஆர்.டி.எக்ஸ்.!.]
"பத்மநாபா கொலை; பாதியில் நின்ற சோதனை" என்ற தலைபில் இவ்வாறு எழுதியுள்ளார்.
[ பத்மநாபா கொலை வழக்கில் தடயங்கள் சோதனைகள் செய்து கொண்டுயிருந்த போது, அன்றைய தமிழக அரசு "தடய சோதனைகள் போதும்.... கிளம்பலாம்" என்று தகவல் வந்தது ...." எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏன் பாதியில் நிறுத்தச் சொல்கிறார்கள் என்று புரியாமல் நான் செகரித்தவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ....
வருந்ததக்க விஷயம் என்னவென்றால் இது சம்பந்தமாக எந்த அறிக்கையும் அரசு எங்களிடம் கேட்கவில்லை என்பது தான்.....
அது தவிர கோர்டிலும் சாட்சி சொல்லவும் அழைக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் எங்களைப் போதுமான அளவு சோதனை செய்ய அனுமதித்திருந்தால் எதிர்காலத்துக்கும் அது பயனுள்ளதாக அமைந்திருக்குமே என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். ...]
மேலும், சுப்பிரமணியம் சுவாமி 'தடா' ரவியுடன் இருக்கும் சந்தேகப் படம், சில்க் ஸ்மிதா மரணம், நடுக்கடலில் தீ, ஆட்டோ சங்கர், அண்ணா அடைந்த அதிர்ச்சி, எல்.ஐ.சி எப்படி எரிந்தது ?, நடராஜர் சிலையை எப்படி மீட்கப்பட்டது என்று பல சுவாரசியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் இருக்கிறது.
கடைசியாக சந்திரசேகரன் இவ்வாறு எழுதுகிறார். ...
[ தடய அறிவியல் துறையில் எனது சேவையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. இந்த துறையில் யாரும் இது போன்ற உயர்ந்த விருதைப் பெற்றதில்லை. விருது பெற்றவுடன் என்னை நேரடியாகப் பாராட்டியவர்கள் மூப்பனாரும், திருநாவுக்கரசு மட்டுமே....ஆனால் சட்டமன்றத்தில் சொல்லி தங்கள் நெருக்கடிகளைச் சமாளித்துக்கொண்ட மற்ற தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து எந்த ஒரு பாராட்டும் இல்லை. தமிழ், தமிழன் என்று பேசுவர்களுக்கு சக தமிழனைப் பாராட்ட் மனம் வரவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு வருகிறது. ....விஞ்ஞானம் வளர வளர கிரிமினல்களும் ஹைடெக் ஆக மாறிவிட்டார்கள். அவர்கள் முகமூடிகளைக் கிழிக்கும் வகையில் என் பணி தொடரும்.]
டாக்டர் சந்திரசேகரனின் அனுபவங்களை எழுத்து வடிவம் தந்திருப்பவர் ப்ரியன், கல்கி இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதி வருபவர்.
["கிரிமினல்கள் ஜாக்கிரதை!", கிழக்கு பதிப்பகம், 126 பக்கங்கள், ரூபாய் 50/=, படிக்க 1 மணி நேரம்]
Old Comments from my previous Blog
very interesting..
//மேற்குறிய கேள்விகளுக்கு சந்தரசேகரன் என்ன விடையளித்தார் என்பதை புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்//
அட பாவி ! :-(
By ரவியா, at Tue Apr 26, 01:27:26 PM IST
சேகரனிடம் தன்னைப்பற்றி கேட்டார், MGR;....... சரி.
கள்ளத்தொடர்பில் குழந்தை பிறப்பது பற்றி ஜெயலலிதா கேட்டது.... யாருக்காக, இது யாருக்காக !
"ஐயோ கொல்றாங்களே" புகழ் tape-ஐ கூட சேகரன் தான் ஆய்ந்தாரா?, தமிழ், தமிழன் என்று பேசுவர்களுக்கு சக தமிழனைப் பாராட்ட மனம் வரவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறாரே.
By Anonymous, at Tue Apr 26, 07:21:41 PM IST
நம்ப ஜெயா கேட்டது கொஞ்சம் வித்தியாசமான கேள்வியாத்தேன் இருக்குது!
By Moorthi, at Wed Apr 27, 09:05:49 AM IST
அன்புள்ள தேசிகன்
உங்கள் BLOG அற்புதம் (வேறு என்ன சொல்ல முடியும்). என் கேள்வி ஒரு சின்ன technical கேள்வி. உங்கள் Blogல் உள்ள படங்களைச் சுற்றி உங்கள் text அமைகிறதே அது எப்படி செய்வது? Templateல் என்ன மாறுதல் செய்ய வேண்டும்? ஒரு sample template (அ) code அனுப்ப முடியுமா? என் மின்னஞ்சல் janasampath@yahoo.com.
மிக்க நன்றி. வேண்டாத கேள்வி என்றோ, என்ன தொந்தரவுடா என்றோ தோன்றினால் மறக்கவும், மன்னிக்கவும்.
நன்றியுடன்
சம்பத் குமார்.
By சம்பத் குமார், at Fri Apr 29, 07:05:10 PM IST
Is there a website that sells this book for international customers?
Nandri,
Bala
By .Net Explorer, at Sat Apr 30, 04:35:58 AM IST
desikan,
ongala pathiyum ethavathu ezhuthi irrukkara?
kicha
By Anonymous, at Mon May 02, 01:54:35 PM IST
சம்பத் குமார்,
உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.
Bala,
try the following.
1.http://www.kamadenu.com
2.http://www.newhorizonmedia.co.in
3.http://www.anyindian.com
By Desikan, at Mon May 02, 03:08:30 PM IST
தேசிகன்
உங்கள் மடல் கிடைத்தது. நான் விரும்பியபடி செய்ய முடிந்த்து.
மிக்க நன்றி
சம்பத் குமார்
By சம்பத் குமார், at Mon May 02, 07:11:50 PM IST
Comments
Post a Comment