Skip to main content

திருமெய்யம்

"இன்னிக்கு கடைசி நாள் எதாவது நல்லாதா எழுது" என்றது வேதாளம்
"போன மாசம் திருமெய்யம் போனேன் அதை பற்றி எழுதவா ?" என்றான் விக்கிரமாதித்தன்.
"எதையாவது புரியும்படியாக எழுது"
"சரி பார்க்கிறேன்" என்ற விக்கிரமாதித்தன் திருமெய்யம் பற்றி எழுத ஆரம்பித்தான்.


* - *


“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”


(பெரிய திருமொழி, 2016, 11-7-5)என்று திருமங்கையாழ்வார் பாடிய திருமெய்யத்திற்கு திருச்சியிலிருந்து பேருந்தில் சென்றிருந்தேன்.


ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. திருச்சி - புதுகோட்டை - காரைக்குடி சாலையில் புதுகோட்டையிலிருந்து தெற்கே 20கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருமெய்யம் ஒரு கிராமும் கிடையாது, நகரமும் கிடையாது. இது ஒரு சிற்றூராட்சி.


Image hosted by Photobucket.comதிருமெய்யம் என்ற பெயர் திருமெயம் என்று மருவி வழங்கப்படுகின்றது ( டாக்டர் ர.பி.சேதுபிள்ளை, புதுகோட்டை கல்வெட்டுக்கள் எண் 340, காலம் 1256). கோயிலில் உள்ள பெருமாள் பெயர் திருமெய்யன் அதனால் இவ்வூருக்கு திருமெய்யம் என்ற பெயர் வரலாயிற்று. (தனியாகு பெயர் ). திருவரங்கத்தில் எழுதருளியிருக்கும் பெருமாளுக்கோ அவன் எழுந்தருளியுள்ள இடம் அரங்கமாக ஆற்றினிடையில் அமைந்திருந்ததால் இடத்தின் பெயரால் அரங்கன் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. (இடவாகுபெயர்).


திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இங்கு ஒரு காலத்தில் ஒரு வழியாகவே சிவனையும், திருமாலையும் தரிசிக்கும் படியாகத்தான் சந்நிதிகள் அமைந்திருந்தன. ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட சமயச்சச்சரவுகள் காரணமாக தொன்மையான சிறப்புமிக்க பரதநாட்டியத்தின் நுணுக்கங்களைத் தெரியபடுத்தும் திருமெய்யத்துக் கல்வெட்டுக்கள் சிதைத்து அவற்றின் மேலேயே ஹொய்சள நாட்டுத்தளபதி அப்பன்னா சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கிறது. இன்று சந்நிதிகளுக்கு நடுவில் ஒரு மதில் சுவர் நிர்மாணிக்கப்பட்டு சிவன், விஷ்ணு கோயில்கள் தனித்தனியாக விளங்குகிறது.


கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமெய்யம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள். அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.


Image hosted by Photobucket.comகுடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கோயில் சுவற்றில் சூலக் குறிகளால் ஆதிசேஷன் அக்கினி ஜூவாலைகள் அசுரர்களை தாக்குகிறது. ஆராயவேண்டிய சிற்ப்பங்கள். இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.


இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி) காட்சியளிக்கிறார்.


Image hosted by Photobucket.comநூற்றெட்டுத் திருப்பதிகளில் திருவெள்ளரையும், திருமெய்யமும் தீர்த்தங்களால் தனிச் சிறப்புப் பெற்றவைகளாகும். திருவெள்ளரையில் உள்ள ஸ்வஸ்திக் குளம் நான்கு துறைகளுடன் கூடியது குளிப்பவர்கள் பார்க்க முடியாது. திருமெய்யம் சத்திய தீர்த்தத்தின் சிறப்போ தாமரை மலர் தோற்றத்தில் எண்கோண வடிவில் எட்டுத்துறைகளுடன் கூடியதாகும்.


 


கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது. பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது.


Image hosted by Photobucket.comஇவ்வளவு பழமைவாய்ந்த கோயிலுக்கு செல்லும் வழியில் "ஷாருக்கான் ரசிகர் மன்றம்" என்ற பலகை இருப்பது விந்தை. திரும்பி வரும் போது பேருந்தில் சரத்குமார் நான்கு வேடத்தில் நடித்த "நாட்டாமை" படம் பார்த்துக்கொண்டு வந்தேன்(பேருந்தில் இரண்டு டிவி). "நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது" என்று வில்லன் கூறியவுடன் நான் இறங்கும் இடம் வந்தது. சுவாரசியமான படம்தான். நாட்டாமை - NOTஆமை.


படங்கள் உதவி: http://www.pudukkottai.org


* - *
"கேள்விகள் எதாவது உண்டா ? " என்றான் விக்கிரமாதித்தன்
"இன்னிக்கு தப்பிச்சே, கேள்விகள் கிடையாது, ஆனால் கூடிய சிக்கிரம் சந்திப்போம்" என்றது வேதாளம்.


பிகு:
நட்சத்திரபதிவாக தேர்ந்தெடுத்த காசிக்கும்.
டைம் இல்லை என்ற பொய்யை நம்பிய மதிக்கும்,
வேதாளம் போல் முருங்கை மரம் ஏரிய பிளாக்கருக்கும்,
என் கட்டுரைகளை படித்த அனைவருக்கும்,
படித்து தவராமல் '-' வாக்குகள் போட்டு என் தெனாவெட்டை அடக்கிய சிலருக்கும்
என் ஸ்பெஷல் நன்றிகள்.



Old Comments from my previous Blog


திருமயம் என்பது திருமெய்யமா?
சிறுவனாயிருக்கையில் அங்கெல்லாம் போனது நினைவுக்கு வருகிறது. பீரங்கி இன்னும் இருக்கிறதா?


தகவலுக்கு நன்றிகள்


By Thangamani, at Sun Apr 10, 04:21:56 PM IST  


தங்கமணி,
பீரங்கி இன்னும் இருக்கிறது!.


By Desikan, at Sun Apr 10, 04:28:31 PM IST  


Desikan,
Nandri. Evalavo dhoorathil irukkum padal petra thalangalukkum, mangalasaasanam seidha kovilgallukkum poi irukken, aana pala murai thirumeyyathai thaandi oorukku poi irukkenne thavira Thirumeyyam kovilukku sendradhillai. Adutha muraiyaavadhu poga vendum. Padangal arumai. Thanks


By Uma, at Sun Apr 10, 05:14:19 PM IST  


இந்த வாரமும் நன்றாக போனது. ஒரு சுற்று தமிழ்நாட்டினை வலம் வரவேண்டும். எல்லாம் மரமண்டைக்கு தாமதமாக உரைக்கிறது.


By Narain, at Sun Apr 10, 05:47:17 PM IST  


// இன்னிக்கு கடைசி நாள்... //
இனியும் எழுதுவீர்கள்தானே?...
இதைக் கேட்பது வேதாளம் அல்ல :-(


By Wordsworthpoet, at Sun Apr 10, 06:49:03 PM IST  


இதுதான் விக்ரமாதித்தன் சொன்ன கதைகளிளேயே எனக்கு மிகவும் பிடித்தது (கவர்ந்தது வேறு சிலவும்). :-)


தங்கமணி, பீரங்கி பத்திரமாக உள்ளது. மேலே ஏறி நின்று நிழற்பபடம் எல்லாம் எடுத்துக்கொண்டோம்.


By சு. க்ருபா ஷங்கர் , at Mon Apr 11, 01:30:23 AM IST  


அன்புள்ள தேசிகன்,


நல்ல வாரம்!!! நன்றாக இருந்தது! திருமெய்யம் கட்டுரையும், படங்களும் அருமை!


வாழ்த்துக்கள்!! நல்லா இருங்க!!!


என்றும் அன்புடன்,
துளசி.


By துளசி கோபால், at Mon Apr 11, 01:56:34 AM IST  


இந்த வாரம் எழுதியதில் மனதிற்கு மிகவும் பிடித்த பதிவு இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு அமைதி பரவியது. நன்றி தேசிகன்.


பி.கு.: நட்சத்திரம்னு இழுத்துப்போட்டாத்தானா இப்படி எழுதுவீங்க. வாரம் ஓரிரு தடவையாவது இப்படி எழுதுறது???


By மதி கந்தசாமி (Mathy), at Mon Apr 11, 02:55:00 AM IST  


மெய்யமலையானை முன்னமே பார்த்திராக் குறை தீர்த்தீர். நன்றி.
சிவன் கோயிலைப்பற்றியும் சேர்த்திருந்தால் நிறைவாக இருந்திருக்குமே!


By ஜீவா(Jeeva) (#7113738), at Mon Apr 11, 04:13:37 AM IST  


ஜீவா,
நான் போன நேரம் சிவன் கோயிலில் பழுது பார்க்கும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. நான் போட்டிருக்கும் முதல் படம் சிவன் கோயிலின் கோபுரம்.


மதி,
நான் திருமெய்யம், திருவெள்ளரை, திருகுடந்தை ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். மற்றவை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். பார்ப்போம்.
நான் எழுதிய பதிவு எல்லாம் முன்பே எழுதிவைத்திருந்தது, எனக்கு திருப்தி இல்லை என்றால் நான் போட மாட்டேன். நட்சத்திர பதிவுக்கு வேதாளத்தை மட்டும் புதுசா கொண்டுவந்தேன்.


Wordsworthpoet,


வேதாளத்தின் தொல்லை தாங்க முடியவில்லை. விரைவில் வேதாளம்+விக்கிரமாதித்தன் கூட்டணி தொடரும்.


துளசி, க்ருபா ஷங்கர், Narain, Uma, Thangamani


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.


By Desikan, at Mon Apr 11, 11:00:53 AM IST  


இங்கே இன்னும் கொஞ்சம் படங்கள், முக்கியமா கிருபாஷங்கர் சொன்ன பீரங்கி படம். நன்றி பொன்னியின் செல்வன் மடலாடற்குழு.


By Yagna, at Tue Apr 12, 01:43:14 AM IST  


நல்ல பதிவு. இந்த இடங்களுக்கெல்லாம் என்றேனும் ஒரு நாள் போயே தீரவேண்டும். அந்த எண்கோண வடிவில் இருக்கும் சத்ய தீர்த்தக் குளம் பார்க்கவே அருமையாக உள்ளது. நம்மக்கள் பாரம்பரியத்தையும், கலைச்செல்வங்களையும் எந்த அளவிற்குப் பேணிப்பாதுகாக்கிறார்கள் (??) என்பதற்கு இது ஒன்றே நல்ல சாட்சி. :( ம்...
சென்ற வார நட்சத்திரமான உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்க முடியாததில் வருத்தம் :( ஆஸ்டிரிக்ஸ்-ஓபிலிக்ஸைத் தமிழில் கொண்டுவரப்போகிறீர்களா?


By இராதாகிருஷ்ணன், at Tue Apr 12, 04:00:44 AM IST  


யக்ஞா,
படங்கள் அருமை.


இராதாகிருஷ்ணன்,
ஆஸ்டிரிக்ஸை தமிழில் கொண்டுவர என் தமிழ் அறிவும், ஆங்கில அறிவும் கம்மி. தன்னடக்கம் என்று நினைக்காதீர்கள் அது தான் உண்மை.


By Desikan, at Tue Apr 12, 05:12:36 PM IST  


 

Comments