Skip to main content

ஏஞ்சல் அனாமிகா


தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்கள் வாழும் இலங்கையில் சுனாமியால் எல்லோருக்குமே பாதிப்புதான். பாதிப்புகள் என்னென்ன, இறந்தவர்கள் எத்தனை பேர் என அரசால் இன்னமும் முறையாக கணக்கெடுக்க முடியாத அளவுக்கு பிரச்னை. பாதிக்கப்பட்டதில் பாதி பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசுத்தரப்பு, புலிகள்தரப்பு என ஒவ்வொருவரும் வேறுவேறு விதமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
உண்மையில் அங்கு நடந்தது என்ன?சுனாமி பாதிப்புகளுக்கு நேரடி சாட்சியாக இருந்த பேராசிரியர் பாலசுகுமாரை சந்தித்துப் பேசினோம். பாலசுகுமார் மட்டக்களப்பில் இருக்கும் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கலைகலாசார பீடத்தின் தலைவராக இருக் கிறார். பிரபல எழுத்தாளரும், இலங்கை நாடக அரங்கில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவருமான அவர் சொந்த வேலையாக தமிழகம் வந்திருந்த போதுதான் சந்தித்தோம்.


சுனாமிக்கு சாட்சியாக இருந்தது மட்டுமின்றி, அதில் சொந்த இழப்புகளையும் சந்தித்தவர் பாலசுகுமார். தன் ஒரே செல்ல மகளை சுனாமிக்கு இழந்தவர். மனைவி பிரமீளா செத்துப்பிழைத்தவர்.


அந்தக் கொடூரமான நிமிடங்களைப் பற்றி இப்போது பேசும்போதும் கலங்குகிறார்.


‘‘அன்றைக்கு எங்களோட மகள் ஏஞ்சல் அனாமிகா வுக்கு பிறந்தநாள். ஞாயிற்றுக்கிழமை வேறு. அவளது பிறந்த நாள் பற்றிய சந்தோஷப் பேச்சுக்களுடன் சர்ச்சுக்கு போனோம். என் மனைவி வழிபடும் சர்ச், மட்டக்களப்பு வாவியில் சீலாமுனை என்ற பகுதியில் இருக்கிறது. ஒருபுறம் கடல்... இன்னொருபுறம் கழிமுக ஓடை என்று ரம்மியமாக இருக்கும் முகத்துவார பகுதி அது. மட்டக்களப்புக்கு வெளிநாடுகளிலிருந்து யார் வந்தாலும் நாங்கள் கூட்டிச்சென்று காட்டுவது இந்த அழகைதான்!
Ôதிருக்கோயில்Ô என்ற இடத்தில் உள்ள முருகன் ஆலயம்... சீலாமுனை சர்ச்...ஒரு புறம் சர்ச், அதன் எதிரே கண்ணகி கோயில், இன்னொரு பக்கம் காயத்ரி கோயில், அதை ஒட்டி தாமரைகள் பூத்திருக்கும் அழகான குளக்கரை என எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் இருந்தபோதுதான் கடற்கோள் என்று சொல்லப்படுகிற அந்த பேரலை வந்தது. சர்ச்சுக்குள் இருந்த எங்களையும், கண்ணகி கோயிலில் இருந்தவர்களையும், காயத்ரி கோயிலில் தியானத்தில் ஆழ்ந்திருந்த மற்றவர்களையும் மொத்தமாக தூக்கிச் சென்றது. அதில் எங்கள் மகளையும் பறிகொடுத்து விட்டோம்’’ என்ற பாலசுகுமார் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இலங்கையின் பாதிப்புகளை அடுக்கினார்.


‘‘இலங்கையில் இருபது வருட உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய அழிவை விட இந்த ஐந்து நிமிடத்தில் நேரிட்ட இழப்பு மிக அதிகம். இங்கு பெரும்பாலான இடங்களில் கடலைவிட கரை மேடாக இருக்கிறது. ஆனால், எங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடலும், தரையும் சமமாக இருக்கும். சில இடங்களில் கரையைவிட கடல் உயரமாக இருக்கும். இதனால் அலை, சீற்றத்தோடு சில இடங்களில் ஒரு மைல் தூரம் வரை உள்ளே வந்து சீரழித்தது.


வாகறை, விருகல் போன்ற கடற்கரை தமிழ்க் கிராமங்கள் பலவற்றில் யுத்தத்தால் சேதமடைந்திருந்த வீடுகளை தொண்டு நிறுவனங்கள் சீர்செய்து கொடுத்து, பாத்திர பண்டங்களை யும் கொடுத்து பாதிப்பிலிருந்து அவர்கள் இப்போதுதான் மீண்டு வந்தார்கள். அந்த வீடுகளும், உடைமைகளும் சுனாமியால் கடலுக்கு போய்விட்டன. உண்மையைச் சொல்லப்போனால், இறந்தது எத்தனை பேர் என்று யாருக்குமே தெரியாது. அரசு முப்பதாயிரம் வரை கணக்கு சொல்கிறது. முறைப்படி சடலத்தை அரசு மருத்துவ மனைகளுக்கு எடுத்து வந்து மரண விசாரணை நடத்தி அடக்கம் செய்யப்பட்டவர்களின் கணக்கு மட்டும்தான் அது! பல கிராமங்கள் முட்டு முழுதாக அழிந்துவிட்டன. சடலங்களை வைத்திருக்க பயந்து பல கிராமங்களில் எந்தவித கணக்கிலும் வராமல் மொத்தம் மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள்.எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3800 பேர்தான் செத்துப் போயிருப்பதாக


அரசு கணக்கு சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தொண்டு நிறுவனங்களிடம் விசாரித்துப் பார்த்தால் உண்மையான இறப்பு இதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து நாவலடி என்ற தமிழ்க் கிராமத்தில் இருந்தவர்கள் ஆறாயிரம் பேர். சுனாமிக்கு பிறகு அங்கு மிச்சமிருப் பவர்கள் ஐந்நூறு பேர்தான்! ஒட்டு மொத்த இலங்கையில் செத்துப் போனது, ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள். ஒரு மாதம் கழித்துக் கூட தங்கள் சொந்தங்கள் இருக் கிறார்களா, இறந்துவிட்டார்களா என்பது தெரியாமல் பலரும் பரிதவித்த படியே இருக்கிறார்கள். எல்லோருமே ஏராளமான சொந்தங்களை பறிகொடுத்து விட்டு நிற்கும்போது யாரை யார் தேற்றுவது?


இலங்கையிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டது தமிழர்களும், முஸ்லிம் களும் அதிகமாக வாழும் கிழக்குதான்! திரிகோணமலையிலிருந்து, திருக்கோயில் வரை உள்ள இந்தப் பகுதியில்தான் இலங்கையின் மூன்றில் ஒருபகுதி கடற்கரை இருக்கிறது. இந்தப் பகுதிகளில் குடியிருப்புகள் நெருக்கமாக வேறு இருக்கும். அதனால் சேதங்களும், உயிரிழப்புகளும் அதிகமாகி விட்டன.


வாழைச்சேனையில் இருக்கும் பாசிக்குடா, உலக பிரசித்தமானஇடம். நான்கு கிலோமீட்டர்தூரத்துக்கு கடல் ஆழமின்றி இருக்கும். இடுப்பளவு தண்ணீரில் அவ்வளவுதூரம் கடலுக்குள் நடந்தே போகலாம். எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருகிறவர்களுக்கு நாங்கள் பெருமையாக காண்பித்த பாசிக்குடா இப்போது இல்லை. அது ஆழமான, ஆபத்தான கடலாகி விட்டது.


சிங்களப் பகுதியில் அம்பாந்தோட்டை மார்க்கெட் ரொம்ப பிரசித்தம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வாரச்சந்தை மாதிரி கூடும் இந்தக் கடற்கரையோர மார்க்கெட்டில் அன்றைக்கு இரண்டாயிரம் பேர் இருந்தார்கள். அலை வந்து ஐந்து நிமிடங்கள் கழித்து வடிந்தபோது, அங்கு யாருமே மிஞ்சவில்லை. இயற்கை, கடவுளை மிஞ்சின சக்தி என்று அந்த நாளில்தான் எங்களுக்கு தெரிந்தது. எந்தக் கடவுளாலும் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை.திருக்கோயில் என்ற இடத்தில் ஆயிரத்து ஐந்நூறு வருஷ பழமையான முருகன்
சுனாமியால் சேதம்...


கோயில் இருக்கிறது.கோயிலைச் சுற்றி ஏராளமான வீடுகள், ஏராளமான தமிழர்கள் என எப்போதும் கலகலப்பாக இருக்கும்! இப்போது கோயில் மட்டும்தான் அங்கு இருக்கிறது. கோமாரியில் பழமையான மெத்தடிஸ்ட் சர்ச்சும், கிறிஸ்தவ வீதியும் இருந்தது. இப்போது சர்ச் மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது.


அந்த நிமிடத்தில் எல்லோரும் பாதிக்கப்பட்டு ஏங்கியிருந்தபோது உடனடியாக உதவிக்கு வந்தவர்கள் சிங்களர்கள்தான். கொழும்பு, பொலனருவா என பல இடங்களிலிருந்து வந்து அவர்கள் உதவினார்கள்ÕÕ என்று நீளமாகச் சொன்ன பாலசுகுமார், ÔÔஇந்தத் துயரத்திலிருந்து இலங்கை மீள இருபத்தைந்து,முப்பது வருஷங்களாவது பிடிக்கும். அதற்கு நடுவே போரைப்பற்றியாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால், இந்த சோகமான சூழலிலும் தேவையில்லாமல்அந்த முரண்பாடுகளைத்தான்சிலர் பெரிதுபடுத்துகிறார்கள்’’ என்று முடித்தபோது கண்கள் பனித்திருந்தன!


‘‘அணில் இருக்கிறது... அவள் இல்லை!’’
ஏஞ்சல் அனாமிகா


பாலசுகுமாரின் பதினான்கு வயது ஏஞ்சல் அனாமிகா, அநியாயத்துக்கு திறமைசாலியாக இருந்திருக்கிறாள். சிசிலியா பெண்கள் உயர்நிலை பாடசாலையில் பத்தாம் வகுப்பு படித்த அவள் படிப்பிலும் படுசுட்டி. கவிதை, சித்திரம், பரதநாட்டியம், பியானோ நடிப்பு என்று சகலமும் தெரிந்து வைத்திருந்தவள். இலங்கையின் புகழ் பெற்ற நாடக ஆசான் மௌனகுருவிடம் ஈழத்துக் கூத்தும் கற்றிருக்கிறாள்.


ÔÔவிஞ்ஞானக் கதைகள் அவளுக்கு பிடிக்கும். சுஜாதா எழுதிய விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகம், அவள் இறந்தபிறகும் கெட்டியாக அவள் கையில் இருந்தது. அவளது படைப்புகளை, ‘தேவதை கிறுக்கல்கள்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டு அவளது நினைவில் வாழ விரும்புகிறோம்.


எங்கள் சொந்தங்கள் பலர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர். நாங்கள் சொந்த மண்ணில் மகளை வளர்க்க ஆசைப்பட்டோம். வளர்ந்த பிறகு அவளுடைய விருப்பத்தைக் கேட்டு, கனடா போகலாம் என்றிருந்தோம். ஒருநாள் கனடாவிலிருக்கும் உறவுக்காரரின் பெண்ணோடு அவள் போனில் பேசிக்கொண்டு இருந்தாள். அப்போது, ‘மாலையில் நான் தோட்டத்தில் அணிலோடு விளையாடுவேன்’ என்று இவள் சொல்ல... கனடாவிலிருக்கும் பெண், ‘அணில் என்றால் என்ன?’ என்று கேட்டாள். அதை சொன்ன ஏஞ்சல், ‘நானும் கனடா போனா, அணிலை மறந்துடுவேனே’ என்றாள். இப்போதும் அணில் இருக்கிறது... அவள்தான் இல்லை’’ என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னார் பாலசுகுமார்.


இறப்பைப் பற்றி அந்தக் குட்டிதேவதை எழுதி வைத்திருந்த கவிதையை நம்மிடம் காட்டினார் பாலசுகுமார். அது நம்மை சிலிர்க்க வைத்தது&


‘நாம் எங்கிருந்து வந்தோம்இறந்தபின் எங்கே போவோம்
பிறந்த ஞாபகம் ஏன் நிலைப்பதில்லை
பிறகு நடப்பதையும் ஏன் உணரவில்லை
எப்படி இறப்போம் - அது
எப்போது நடக்கும்?’


செய்தி,படம் உதவி - ஜூனியர் விகடன்


பி.கு: சனிக்கிழமை சுஜாதாவுடன் அம்பல அரட்டையில் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது சுஜாதா சொன்னது - "அடுத்த புத்தகத்தை ஏஞ்சல் அனாமிகாவிற்கு Dedicate செய்ய விரும்புகிறேன்"Old Comments from my previous blog


very poignant post(article) without usual gimmicks of J.V.


Good job... Desi !


By ரவியா, at Mon Feb 07, 06:32:40 PM IST  


Threatening.. Nature can do
things that man cannot.
angel anamika becomes angel
herself. I haven't read
such an explanation abt
tsunami.Everywhere we can hear
of earthquakes, floods,
excessive snow fall, high degree
of temperature rise. It's all
b'coz of us.


Let's face the effects of
our mistakes.


By Anandham, at Wed Mar 30, 12:13:06 PM IST  

Comments