Skip to main content

ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில்

ரயில் பிரயாணத்தின் கதை


எஸ்.வி. ராமகிருஷ்ணன்


எனக்கு விவரம் வந்தபின் அமைந்த முதல் நீண்ட ரயில் பிரயாணம் 1945ஆம் ஆண்டில். அப்போதெல்லாம் ரயில் என்றால் நிஜமாகவே "புகைவண்டி.' அதாவது குப்குப்பென்று புகை விட்டுக் கொண்டு சிறுவர்களின் (ஏன், பெரியவர்களின்கூட) கற்பனையைத் தூண்டிவிடும், நிலக்கரியை எரித்துத் தீயாக்கும் நீராவி வண்டி. மலையாளத்தில் அதன் பெயரே தீவண்டிதான். நமது இலங்கைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அழகுத் தமிழில் அதைப் புகை இரதம் என்று அழைக்கிறார்கள்.


அந்தக் காலத்தில் ரயில் வண்டியில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு என்பது பலருக்கும் எட்டாக்கை . . . அதாவது மிகப்பெரும்பாலானோர்க்கு அப்பாற்பட்டதொரு சங்கதி. வெள்ளைக்கார துரைகளும் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளும் இந்தியர்களில் ஜமீன்தார்களும் அதில் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் வகுப்பு என்பதும் (கடந்த பத்தாண்டுகளில் ஏறக் குறையக் காணாமலேயே போய்விட்ட இன்றைய முதல் வகுப்பின் முந்தைய அவதாரம்) அன்றைய ரூபாய் மதிப்பின்படி மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மற்றும் உயர் மத்திய வகுப்பினரில் சிலருமே அதில் பயணித்தனர்.


மூன்றாவது வகுப்புதான் ஜனதா வகுப்பு. டிக்கெட் இல்லாத பஞ்சை பனாதைகளிலிருந்து மத்திய தர வகுப்பினர் வரை எல்லோராலும் உபயோகிக்கப்பட்டது. இதன் நிலைமை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு மோசமாக இருந்தது. மூன்றாவது வகுப்புப் பெட்டி என்பது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஏறக்கூடியதொரு சங்கப் பலகை. எந்தவிதமான ரிசர்வேஷனும் கிடையாது. உட்கார இடம்கூட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றால் தூங்கும் வசதியைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்று. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்த இந்தோ சைனாவில் ரயில் இதைவிட மோசம் என்று சொன்னார்கள். அங்கே நாலாவது வகுப்பு ஒன்றும் உண்டாம். அதில் ஸீட்டுகளே (பெஞ்சுகள்) கிடையாது, தரையில் உட்கார வேண்டுமாம்.


மூன்றாவது வகுப்பைப் பற்றி இன்னொரு விஷயம். அதில் மின்சார விசிறிகள் கிடையாது என்பது. கோடையில் பயணிகள் பனை ஓலை விசிறிகளைக் கொண்டு வந்து வீசிக்கொள்வார்கள். அதேசமயம் ஒன்று சொல்ல வேண்டும். இன்று போலில்லாமல் பெட்டிகளில் பெரும்பகுதி மரத்தினால் ஆனது. அதனால் இப்போதைய பெட்டிகள்போல் அத்தனை சூடாகவில்லை.


வண்டி கிளம்பும் ஸ்டேஷனில் போர்ட்டர்கள் யார்டில் இருந்து வண்டி வரு முன்பே அதில் ஏறி, சாமான்கள் வைப்பதற்காக மேலே இருக்கும் பலகைமீது ஒரு அழுக்குத் துண்டை விரித்து வைப்பார்கள். சுமார் எட்டணா அல்லது பன்னிரண்டு அணா பேரத்துக்கு அது "ஸ்லீப்பிங் பெர்த்'தாகத் தரப்படும். அந்தப் பலகை மீது 'For Luggage only' என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. ரயிலில் ஏறுவது ஒரு "பிரம்மப் பிரயத்தனம்.' அப்போதெல்லாம் எல்லோரும் ஏகப்பட்ட சாமான்கள் மூட்டை முடிச்சுகளோடுதான் ரயிலேறுவார்கள். இரும்பினால் ஆன டிரங்குப் பெட்டிகள், ஹோல்டால், தண்ணீர்க் கூஜா இத்தியாதி கண்டிப்பாக இருக்கும். தவிர பட்சணக் கூடைகள், அம்மா பெண்ணுக்காகப் பறித்த (வீட்டு மரத்தில் பழுத்த) மாம்பழம் முதலியவும் அவ்வப்போது இருக்கும். ஹோல்டால் என்பது படுக்கை மட்டுமல்லாமல் எல்லா விதமான கண்டா முண்டா சாமான்களையும் திணிக்கக்கூடியது. லக்கேஜ் எடையைக் குறைவாகக் காட்டுவதற்காகக் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை ஹோல்டாலில் புகுத்திவிடுவதும் உண்டு.


ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் வண்டி இப்போதைவிட அதிக நாழிகை நிற்கும். நம்மை ஏற்றிவிட வேண்டியது போர்ட்டரின் பொறுப்பு. எறும்பு தன் எடையைவிட அதிகமான பளுவைத் தூக்குகிறது என்று உயிரியல் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்களே, அதை நமது பழைய காலப் போர்ட்டர்கள் செய்தே காட்டினார்கள்! ரயில் வந்து நின்றவுடன் உள்ளே ஏற்கனவே இருப்பவர்களுக்கும் "வந்தேறி'களுக்கும் ஒரு பெரிய போராட்டம் துவங்கும். ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர் ""ஏன்யா இங்கேயே வந்து விழறீங்க? பின்னால் பெட்டியெல்லாம் காலியாக் கிடக்குது'' என்று ஆசை காட்டுவார். பின்புறப் பெட்டிகளின் நிலைமை அவருக்கு எப்படி ஞானதிருஷ்டியில் புலப்பட்டது என்பது ஒரு மர்மம்.


அந்த யுத்தத்தில் உள்ளே ஏறுபவர்களின் உறுதுணையான போர்ட்டரோ இதை ஒன்றும் லட்சியம் செய்யாமல் ""நீங்க பாட்டுக்கு ஏறுங்க சாமி, சாமானை நான் ஏத்திடறேன்'' என்று சொல்லிவிட்டுச் சாமான்களைக் கூசாமல் ஜன்னல் வழியாய் உள்ளே தள்ளிவிடுவார் (அன்றைய ரயில் பெட்டியில் ஜன்னல் கிடையாது.) உள்ளே அணிவகுத்து நிற்பவர்கள் ""ஐயோ பாவி என் காலிலே போட்டுட்டியே'' என்று கூக்குரலிடுவார்கள். அது எல்லாம் மாய்மாலம் என்று அனுபவ பூர்வமாய்த் தெரிந்து வைத்திருக்கும் போர்ட்டரோ மீதி சாமான்களையும் தள்ளிவிடுவார். அதற்குள் சாமான்களின் உரிமையாளக் குடும்பங்களும் எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே போயிருக்கும். அடுத்த படலம் போர்ட்டருக்குக் கூலி கொடுத்தல். குடும்பஸ்தர் முதலில் பேசிய எட்டணாவைக் கொடுப்பார். உடனே போர்ட்டர் நன்கு மனப்பாடம் செய்யப்பட்ட சில வசனங்களை அவிழ்த்துவிடுவார். ""கஸ்டத்தைப் பார்த்துக் காசு கொடுங்க ஐயா; பிள்ளை குட்டிக்காரன் சாமி. இன்னும் நாலணா போட்டுக் கொடுங்க'' என்ற ரீதியில். கடைசியில், கூட இரண்டணா வாங்கிக்கொண்டு திருப்தியடைவார்.


ரயில் கிளம்பும்வரை பயணிகளின் மத்தியில் "டென்ஷன்' நீடிக்கும். மண்ணின் மைந்தர்கள் வந்தேறிகளுக்கு இடம்விடாமல் தாங்களே ஸீட்டை ஆக்கிரமித்திருப்பார்கள். வேண்டுமென்றே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்வதும் உண்டு. ஆனால் ரயில் நகர்ந்தவுடன் இந்தியா -சீனா மாதிரி உறவுகள் மாறிவிடும். இன்முகம் தலையெடுக்கும். ""நீங்க எங்கே ஸôர் போறேள்?'' ""தம்பிக்கு எந்த ஊரு?'' போன்ற விசாரிப்புகள் சுமுக உறவுக்கு வழி வகுக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் இரண்டு கட்சிக்காரர்களும் ஒன்றாகிவிடுவார்கள். மட்டுமல்லாது புதிதாக ஏற வருபவர்களை விரட்டுவதில் ஒன்றாகச் செயல்படுவார்கள்.


மூன்றாவது வகுப்பில் உள்ளே சாப்பாடு வராது. சாப்பாட்டு நேரத்தில் வரும் ஜங்ஷன்களில் அருமையான சாப்பாடு கிடைக்கும். காண்டீன் வரை போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டிய நேரத்துக்கு வண்டியும் நிற்கும். காண்டீனில் சாப்பாடு மட்டுமல்லாது டிபனும் காப்பியும் உண்டு. வெஜிடேரியன் காண்டீனும் நான்-வெஜிடேரியன் காண்டீனும் பிளாட்பாரத்தின் இருமுனைகளில் வடதுருவம் தென்துருவம்போல் அமைந்திருக்கும். வெஜிடேரியன் காண்டீனில் காப்பிதான் கிடைக்கும். டீ வேண்டுமென்றால் அசைவ காண்டீனுக்கு (அதாவது பிளாட்பாரத்தின் மறுகோடிக்குத்)தான் போக வேண்டும். தேநீர் அசைவமாகக் கருதப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. காண்டீனைத் தவிர, பிளாட்பாரத்தில் தயிர்சாதம், புளியஞ்சாதம் முதலிய பட்டைச் சோறுகள் கிடைக்கும். அநேகமாக பாக்கு மட்டையில் சுற்றி அழகாகப் "பேக்' செய்யப்பட்டிருக்கும். பெட்டியில் உட்கார்ந்தபடியே வாங்கலாம். வெளியே இறங்க முடியாதவர்களும் பெண்களும் இந்த வசதியை உபயோகித்துக் கொண்டனர். அதே சமயம் ஆண் துணையற்ற பெண் பாலர்க்கு இரங்கி ஆண்கள் அவர்களின் கூஜாவைக் கொண்டு போய்க் காப்பி வாங்கி வருவதும் உண்டு.


பிளாட்பாரத்தில் வயிற்றுப் பசியைத் தவிர அறிவுப் பசியைத் தீர்க்கும் சாதனங்களும் விற்கப்பட்டன. ரயில் வந்து நின்றதும் "ஹிந்து பேப்பர், சுதேசமித்திரன், தினமணி, இந்து நேசன், சந்திரோதயம்' என்று ஒப்பித்தவாறு பையன்கள் ஜன்னல்தோறும் முற்றுகையிட்டுப் பத்திரிகை விற்பார்கள். இதில் "இந்துநேசன்' லக்ஷ்மிகாந்தன் கொலைக்குப் பிறகு நின்று போயிற்று.


கடைசி நிமிஷத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடிப்பவர்களுக்கு டிக்கெட் வாங்க நேரமில்லையென்றால் கார்டினிடம் (Guard) ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ரயிலில் தொற்றிக்கொள்ளலாம். பின்னால் டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரயாணியிடம் வந்து கட்டணத்தை வசூலித்துக் கொண்டு காகித ரூபத்தில் (அட்டை அல்ல) டிக்கெட் கொடுத்துவிட்டுப் போவார். அதற்காகக் கூடுதல் சார்ஜ் ஒன்றும் கிடையாது. டிக்கெட் இல்லாமல் பயணித்து மாட்டிக்கொண்டால் கடைசி ஜங்ஷனிலிருந்து இரட்டைக் கட்டணம் செலுத்தினால் போதும். டிக்கெட் இல்லாமல் பயணிப்பதில் நிபுணர்கள் உண்டு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் அவர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.


அதற்குள் வண்டி நின்றால் அவர்கள் ஓசைப்படாமல் நழுவுவார்கள். இல்லாவிடில் கழிப் பறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்துவதும் உண்டு. அந்தக் காலத்துப் பிரயாணிகளுக்கு இரக்க சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன். யாரும் இன்ஸ்பெக்டரிடம் அவர்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். இத்தனைக்கும் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரயாணிகளே.


அன்றைய புகைவண்டிப் பிரயாணத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் ரயில் பிச்சைக்காரர்கள். அதில் பாடுவோர், பாடாதோர் என்ற இருவகை உண்டு. பாடுவோரில் சிலர் தங்கள் காதில் கையை வைத்து அழுத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து நாதம் எழுப்புவர். அவர்களே தங்கள் பாட்டைக் கேட்க விருப்பம் இன்றி காதைப் பொத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றும். நெருப்புப் பெட்டியே தாள வாத்திய மாகப் பயன்படும். இன்னொருவரின் துணை கொண்டு வரும் குருட்டுப் பிச்சைக்காரர்களும் சகஜமான காட்சி. அவர்கள் எல்லோருக்கும் பிச்சை தாராளமாகவே கிடைத்தது. இவர்களைக் குறித்த ஒரு விசேஷமான சங்கதி என்னவெனில் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் என்ன டிக்கெட் செக்கிங் இருந்தாலும் இவர்களில் எவரும் ஒருபோதும் டிக்கெட் வாங்கியதாக வரலாறு இல்லை என்பது. இவர்கள் பின்னால் நடந்து ஒரு புண்ணியமும் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் பிச்சைக்காரர்களைத் "தண்ணீர் தெளித்து' விட்டிருந்தார்கள் என்று எண்ணுகிறேன்.


கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன என்னுடைய முதல் ரயில் பிரயாணத்தின் ஒரு காட்சி என் மனதில் விரிகிறது. அப்போது நான் மதுரையிலிருந்து தென்காசிக்கு மூன்றாம் வகுப்பில் போய்க்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்ற ரயில் கிளம்பும் தருணத்தில், பாமரள் ("குடிமகள்' மாதிரி, "பாமரனி'ன் பெண்பால்) போலத் தென்பட்ட ஒரு குடுகுடு கிழவி ஏறி ""இந்த வண்டி விருதுபட்டி போகுமா'' என்று கேட்டாள் சிலர் ""போகாது, போகாது, இறங்கு'' என்று பதறினார்கள். நல்லவேளையாக அதைக் கேட்ட ஒருவர் மட்டும் ""போகும் பாட்டி, உள்ளே வா'' என்று அவளை ஏற்றிக்கொண்டார். ""நீ விருதுபட்டி என்று சொன்னால் இப்போதெல்லாம் யாருக்குப் புரியும்? விருதுநகர் என்று சொல்லு'' என்று அறிவுரையும் வழங்கினார். முதலில் விருதுபட்டியாக இருந்ததுதான் பின்னால் ஸ்டைலாக விருதுநகர் என்று மாறினது அப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. "விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்குவது' எங்கிருந்து வந்தது என்பதும் புரிந்தது. சனியனைப் பற்றிய கதைதான் தெரியவில்லை. இது நடந்தது 1945இல். அப்பொழுதே விருதுபட்டி என்ற பெயர் அறுகிப் போய்விட்டிருந்தது போலும், சில வயதான பட்டிக்காட்டுப் பெண்பிள்ளைகளிடம் தவிர!


ரயிலைப் பற்றிய இந்தச் சித்திரம் 1945-1955 என்ற கால கட்டத்தியது. அதன் பிறகு பெரிய பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இருக்கை வசதி, படுக்கும் வசதி என்று மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குத் தொடர்ந்து யோகம் அடித்தது. அதுவரையில் கீழ் வகுப்புப் பயணிகள் அதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதற்குக் கொஞ்ச காலம் முன்னால், யாருடைய பர்ஸ÷க்கும் எட்டாமல் பெரும்பாலும் காலியாகவே ஓடிக்கொண்டிருந்த பழைய முதல் வகுப்பு எடுக்கப்பட்டு இரண்டாவது வகுப்புக்கு முதல் வகுப்பு என்ற நாமகரணமும் நடைபெற்றது. கூடவே பல வருடங்கள் (யுத்த காலத்திலிருந்து) காணாமற்போய் அண்மையில் திரும்பி வந்திருந்த மத்திய வகுப்பு (இண்டர் கிளாஸ்) இரண்டாம் வகுப்பென்ற பெயரைத் தட்டிக்கொண்டது. இந்த வகுப்புப் பெட்டிகளில் குஷன் தைக்கப்பட்ட ஸீட்டுகள் இருக்கும். பிரயாணிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் உட்காரும் வசதி உறுதிப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் ரிசர்வேஷன் அடியோடு இல்லாத நிலையில் இது ஒரு கூடுதல் அனுகூலந்தான். ஆனால் தூங்கும் பெர்த் வசதி கிடையாது. பாத்ரூம்கள் மூன்றாம் வகுப்பைவிட இன்னும் வசதியுடனும் சுத்தமாகவும் இருக்கும். பிரயாணிகளின் தரமும் ஓரளவு உசத்தியாக இருக்கும். ஆனால் கட்டணம் கணிசமாக அதிகம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து உயர் வகுப்பினர்கூடப் பகல் நேரப் பயணங்களுக்கு மட்டுமே இதைப் பெரும்பாலும் உபயோகித்தனர்.


அடுத்து வந்த ஆண்டுகளில் மூன்றாம் வகுப்பில் தூங்கும் வசதி (ஸ்லீப்பர்)யும் உட்காரும் வசதியும் (ஸீட் ரிசர்வேஷன்) பெருகவே, உட்கார மட்டும் வசதி கொண்ட இந்தப் புதிய இரண்டாம் வகுப்பை நாடுவார் இல்லாமற் போக, அதுவும் ஒருவழியாக நீக்கப்பட்டு மூன்றாம் வகுப்பிற்கே அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இன்னும் நீடிக்கிறது.


பின்னுரை
குளிப்பதற்கு வசதி படைத்த பாத்ரூம்களும் குடி தண்ணீர் வசதியும் கொண்டு மின் விசிறிகள் நிறைந்து ஆர்டர் பண்ணினால் சாப்பாடும் வரும் இன்றைய ஸ்லீப்பர்களைப் பார்த்தால் இவைதான் முந்தைய யுகத்தின் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளா என்று வியப்பாக இருக்கிறது. வேறு எதில் நடந்ததோ இல்லையோ, இந்த விஷயத்தில் மட்டுமாவது சுதந்திர இந்தியாவில் ஒரு காலத்தில் மாக்களாக நடத்தப்பட்ட சாமானியர்கள் மக்களாக உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.இரயில் பயணங்களில்


அசோகமித்திரன் - (எஸ்.வி. ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து)


ஆகஸ்ட் 2004இல் மதுரை சென்றுவிட்டு வந்தேன். மிகவும் வசதியான இரயில் வண்டி, வசதியான படுக்கை, நெரிசலேயில்லாத சூழ்நிலை, மிகக் குறைந்த சப்தமெழுப்பும் தொழில்முறை நுட்பம், குறித்த காலத்தில் வண்டி போய்க்கொண்டிருப்பது - எல்லாமே தூக்கம் வராமல் செய்தன. எஸ்.வி. ராமகிருஷ்ணன் ஒரு பத்து வருட இந்திய இரயில் வரலாறைக் கூறியிருந்தார். அவர் கூறியது ஒவ்வொன்றும் மிகையில்லாத உண்மை என்று நான் கூற முடியும். நான் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்பே, அதாவது 1935ýருந்தே இந்திய இரயிலுக்கு அடிமைப்பட்டுவிட்டேன்.


அன்றைய இரயில் கால அட்டவணையைப் பார்த் தால் சில நிலையங்களுக்குப் பக்கத்தில் R என்றும் W என்றும் அல்லது RW என்றும் இருக்கும். எங்கள் குடும்பம் இரயில் குடும்பமாதலால் அந்த ஆங்கில எழுத்துக்களின் பொருள் தெரியும். R என்றால் அந்த நிலையங்களில் சிற்றுண்டி கிடைக்கும். W என்பது தண்ணீர் நிரப்பும் நிலையங்கள். பயணிகள் பெட்டிக்குத் தண்ணீர் கிடைக்காது போனாலும் இஞ்ஜின் தண்ணீர் குடிக்கும். இப்போது அதெல்லாம் கிடையாது.


பயணத்தின்போது R நிலையம் வந்தால் ஒரு பாத் திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரே சமாளிக்கும் சிற்றுண்டிச்சாலைக்குப் போய் காபி வாங்கிக்கொண்டு வரவேண்டும். எங்கள் பயணம் முந்தைய இரவு சிகந்தராபாத்தில் தொடங்கி பெறுவாடா (இன்றைய விஜயவாடா) நிலையத்தில் இரயில் மாறி சூளூர்ப்பேட்டை என்ற நிலையத்திற்கு வந்தடையும்போது அடுத்த நாள் மாலை நான்கு அல்லது நான்கரையாகும். இப்போது அந்த நிலையம் தெலுங்குப்படுத்தப்பட்டு சூளூர்ப்பேட்டா என்றாகிவிட்டது. அந்தச் சிறு நிலையத்தின் சைவ சிற்றுண்டிச் சாலையை நடத்தியவர் என் பள்ளி நண்பன்/விளையாட்டுத் தோழன்/எதிரி சந்தானத்தின் உறவினர். காபி மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் சிறு பையனாக இருந்து சுடச்சுடக் காபி நிறைந்த சொம்பைப் பத்திரமாக அம்மாவிடம் கொண்டு வந்து கொடுப்பது மிகத் தீவிரமான அனுபவம். ரிசர்வேஷன் கிடையாது, எல்லாரும் படுக்கை, டிபன்காரியர், கூஜா, இரும்பு டிரங்கு சகிதம் பயணம் செய்தாக வேண்டும். தோளுயரப் பையன், பெண்ணாக இருந்தாலும் வயது இரண்டரைதான் என்று சாதிக்கும் மக்கள், டிக்கெட்டே இல்லாமல் பயணம் செய்யும் பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள் - இவ்வளவு தடை களையும் மீறிக் காபி வாங்கி வருவது பெருமையாக இருக்கும். அதுவும் சந்தானத்தின் மாமா அல்லது சித்தப்பா கொடுத்த காபி. ரயிலே மொத்தம் ஏழெட்டுப் பெட்டிகளோடு முடிந்துவிடும். ஆதலால் எந்தப் பெட்டியின் கதவு உங்கள் எதிரில் இருக்கிறதோ அதில் ஏறியே தீர்ந்தாக வேண்டும். வண்டியில் ஏற்கெனவே உள்ளவர்கள் ஏறுபவர்களைப் பரம விரோதியாகப் பார்ப்பார்கள். ஏறுபவர்களுக்குப் பெட்டியில் இருப்பவர்கள் மனதில் ஈரமே இல்லாத அரக்கர்களாகத் தோன்றுவார்கள். உண்மையில் இரயில் எந்த நிலையத்தில் நின்றாலும் ஒவ்வொரு கதவருகிலும் தேவாசுரப் போர் நிகழும்.


பெஜ்வாடா - சென்னைக்கிடையேதான் அபூர்வ இசை மேதைகள் அவர்களுடைய மேதைமையைத் திட்டமிட்ட பிரதிபலன் இல்லாது பயணிகளுக்கு அளிப்பார்கள். ஆர்மோனியம்தான் அவர்கள் கையில் எப்படியெல்லாம் செயல்படும்? அந்த நாளில் சினிமா சங்கீதமே ஆர்மோனியத்தால்தான் உருவானது என் றால் அது பொய்யாகாது. சைகல், பங்கஜ்மல்ýக், கே. சி. டே, கண்ணன் பாலாவிýருந்து அன்றைய தமிழ் -தெலுங்கு சினிமா நடிகர்களின் பாடல்கள் வரை அந்த ஆர்மோனியத்தில் விசேஷ ரசாயனமாக உருவாகும். ஒரு தமிழ்க் கட்டுரையில் ராண்டார் கை என்ற தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் ஒரு பாட்டைக் குறிப்பிட்டு “அந்த நாளில் இந்தப் பாட்டைப் பாடாத பிச்சைக்காரரே கிடையாது” என்றார். அந்தப் பாட்டின் முதல் வரி: ஐயா சிறு பெண் ஏழையென்பால் மன மிரங்காதா?


இன்று இரயில் பயணத்தின்போது ஏதோ போட்டோ எடுக்கப் போவதற்குப் போல உடை உடுத்திக்கொண்டு போகிறார்கள். அந்த நாளில் அது சாத்தியமில்லை. இரயில் பயணம் என்றாலே கரி, அழுக்கு. ஆதலால் இரயிலுக்குப் போட்டுக்கொள்வது என்று ஒரு பழைய சட்டை அல்லது பாவாடை தாவணி அல்லது புடவைதான் பொறுக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த “ஐயா சிறு பெண்” பாட்டைப் பயணிகள் பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.


ஒரு ஜீவனுள்ள கதை அல்லது கட்டுரை உடனே படிப்போரை நினைவில் ஆழ்த்தி அவர்களுடைய அனுபவங்களையும் எழுத்தாளருடையதுடன் பொருத் திக்கொள்ளச் செய்யும். எஸ்.வி. ராமகிருஷ்ணனின் கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு.


நன்றி: உயிர்மைOld Comments from my previous Blog


Dear Desikan,


There is no way that this book, 'adhu andha kaalam' would
ever make it to Malaysia.
How do I order that book to have it sent to me?


Regards


JayBee


By Anonymous, at Wed Feb 16, 03:06:03 PM IST  


Dear Jaybee,


You can get the book at the following address:


உயிர்மை
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை - 600 018
Fax : 91- 44 -24993448
Cell : 9444366704
e-mail : uyirmmai@gmail.com


By Desikan, at Wed Feb 16, 03:07:28 PM IST  


very impressive reading desikan.. thanks for bringing this to us.


By Chakra Sampath, at Wed Feb 16, 09:39:20 PM IST  


தேசிகன்


உங்கள் வலைப்பதிவில் அது அந்தக் காலம் நூல் குறித்த ஒரு விரிவான அறிமுகத்தை தந்ததற்கு மிகவும் நன்றி. தமிழில் வரும் முக்கியமான நூல்களை இவ்வாறு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இன்று அச்சு ஊடகங்களில் மிகவும் அருகிவிட்டது.


அது அந்தக்காலம் பற்றி குறிப்பட்ட கவிஞர் எம்.யுவன் 'நாம் 'அந்தக் காலத்தில்' பிறந்திராத போதும் ஏன் அது ஒரு கடுமையான nostalogia வை கிளப்புகிறது என்று தெரியவில்லை' எனக் குறிப்பிட்டார். உண்மையில் nostalogia என்பது மீள் நினைவின் ஏக்கம் மட்டும் மட்டுமல்ல..அது நம் மனதில் வேறொரு தளத்தில் பரிமாணத்தில் இயங்குவதாகத் தோன்றுகிறது.


மனுஷ்ய புத்திரன்


By manushya puthiran, at Fri Feb 18, 10:09:04 AM IST  


மனுஷ்ய புத்திரன்,


நன்றி. புத்தகம் வாங்க விரும்புவோர், பின்னூட்டப்பகுதியில் முகவரியை கொடுத்தால் அனுப்பிவைக்க முடியுமா ?


By Desikan, at Fri Feb 18, 10:21:32 AM IST  


தாராளமாக அனுப்பலாம். இந்தையாவில் உள்ளவர்கள் உங்கள் வலைபதிவிலோ அல்லது uyirmmai@yahoo.co.in என்ற முகவரிக்கோ நூல்தேவை எனக் குறிப்பிட்டு முகவரியுடன் எழுதினால் VPPயில் அனுப்பலாம். உயிர்மை முகவரிக்கு மணியார்டர், செக், டிடி அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். அயலில் இருக்கும் நண்பர்கள் நூல் பெறும் முறையை அறிய மின்னஞ்சல் அனுப்புங்கள்.


By manushya puthiran, at Fri Feb 18, 11:02:19 AM IST  


athuantha kalam gave me nostalgic memories because ive readdescriptions similar to thisin novels like thillana mohanambal by thiru kothamangalam subbu.and insome b&w movieswhere chandra babu tries very hard to get a plce for himself by using various tactics!


By Anonymous, at Sun Feb 20, 11:21:03 PM IST  


Desikan,
Very good post creating awareness about a book that needs to be read. 'Nostalgia' always touches the gentle chord in every human being :-)


By enRenRum-anbudan.BALA, at Tue Feb 22, 12:03:53 AM IST  

Comments

  1. [...] ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில் February 15, 2005 By Desikan Leave a Comment [...]

    ReplyDelete

Post a Comment