சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களைத் தேடி வாங்கினேன். அப்படி வாங்கிய புத்தகங்களில் "அது அந்தக் காலம்" என்ற புத்தமும் ஒன்று.
நான்கு மாதம் என்று நினைக்கிறேன். உயிர்மையில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் "ரயில் பிரயாணத்தின் கதை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். மிகவும் நல்ல கட்டுரை. அடுத்த மாதம் அசோகமித்திரன் "இரயில் பயணங்களில்" என்று அதைத் தெடர்ந்து எழுதினார். இது ஒரு போனஸாக அமைந்தது.
நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள் கிடைக்குமா என்று விசாரித்ததில், இவரின் கட்டுரை தொகுப்பு ஜனவரியில் வரவிருப்பதாகச் சொன்னார்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் பற்றி ...
எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்க ஆனையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆனணயாராக ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு "அது அந்த காலம்"
இவர் எழுதிய கட்டுரைகள் - ஓம்சக்தி, துக்ளக், தினமணி, கணையாழி, உயிர்மை, போன்ற தொப்புள் சமாச்சாரம் இல்லாத பத்திரிக்கைகளில் வந்தவை.
புத்தகத்தில் 1940கள் காலத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்தில் நான் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. பல வரலாற்றுச் செய்திகள், மிகைப்படுத்தப்படாமல் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். இந்தப் புத்தகத்தை படித்த போது ஒரு வயதானவர் தன் அனுபவத்தை எனக்குச் சொல்லதாகவே எனக்குத் தோன்றியது.
[ ... அப்போது மிக சிலரே கார் வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுக்கு ரேஷன் முறையில் கொஞ்சம் பெட்ரோல் கொடுத்த அரசாங்கம், பேருந்துகளுக்கு அடியோடு மறுத்துவிட்டது. விளைவு, எல்லா பஸ்களும் அடுப்புக் கரியில் ஓடின. பஸ்களுக்கு பின் ஒரு 'டிராம்' இணைக்கப்பட்டிருக்கும். அதில் கரியை கொட்டி, வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் குமுட்டி அடுப்பு போல பற்ற வைப்பார்கள்....]
சில விஷயம் நாம் கேள்விப்படாதது
[... கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து சிதையில் கஸ்தூரிபாவின் இரண்டு கண்ணாடி வளையல்கள் மட்டும் முழுதாகவும் நிறம் மாறாமலும் இருப்பதைக் கண்டு ஓடோடி வந்து காந்திஜியிடம் சொன்னார். அதை நம்ப மறுத்த மகாத்மாவிடம் நேரில் வந்து பார்க்குமாறு மன்றாடினார். காந்திஜி போய்ப் பார்க்கையில் அவ்வாறே கிடக்கக் கண்டார். கஸ்தூரிபா ஒரு சிறந்த பதிவிரதையாதலால் இப்படி நடத்திருக்கிறது என்று கருதிய காந்திஜி அவற்றை எடுத்துப் பத்திரமாகப் போற்றி வைத்துக்கொண்டார்...]
காலம் எப்படி மாறியுள்ளது என்று இதைப் படித்தால் புரியும்
[ ... பல நகரங்களும் சிற்றூர்களும் நதிக்கரையிலேயே அமைந்திருந்தன அதில் சென்னையும் அடக்கம். சென்ற நூற்றாண்டில், தான் தினந்தோறும் கூவம் ஆற்றில் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போனதாகப் பச்சையப்ப முதலியார் எழுதிவைத்திருக்கிறார். ஆனால் இக்கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கூவம் முழுச் சாக்கடையாகவே மாறிவிட்டிருக்கிறது. நல்ல வேளையாக இந்தக் கதி காவேரி, தாமிரவருணி, அமராவதி போன்ற நதிகளுக்கு வந்த்திருக்கவில்லை...]
தண்ணீர் பற்றி அவர் எழுதியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது
[... வீட்டுக் கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரைத் தையரியமாக அப்படியே குடிக்கலாம். ஆற்று நீராக இருந்தால் காய்ச்சிக் குடிப்பது நல்லது என்று சொன்னார்கள். கோடைகாலத்தில் ஆற்றில் நீர் மட்டம் குறைந்த போதும் ஊரில், டைப்பாய்டு வியாதிகள் பரவிய சமயங்களில் சுகாதார இலாகாவினர் இதை வலியுறுத்தினார்கள்......மாடும் மனிதனும் குளிப்பதும், துணி துவைப்பதும் அன்றைய அசுத்தங்கள்....அறுகள் இந்தச் சின்ன அழுக்குகளை ஜீரணம் செய்துகொள்ள முடிந்தது...இன்றைய நதிகள், வரலாற்றில் காணாத இன்றைய ராட்சஸ ஆலைகளின் கழிவுகளால் வந்த அஜீர்ணத்தால் துடித்துக்கொண்டிருக்கின்றன.... சுவையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள இடங்கள் சிலவற்றில் இன்னொரு தண்ணீர் சப்பளை இருந்தது. அது எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரின் உபயம். ...சிறு சிறு ஸ்டேஷன்களில் குப்பம்வாழ் ஏழைமக்கள் சட்டிபானைகளோடு தண்ணீருக்கு வந்து நிற்பார்கள். என்ஜின் டிரைவர்கள் கரிசனத்தோடு இவர்களுக்கு என்ஜின் பாய்லரில் கொதித்த வெண்ணீரைத் தாராளமாக வழங்குவார்கள்....]
சில தகவல்கள் ஓ அப்படியா என்று வியக்க வைக்கிறது.
[...நெல் குத்தினால் வரும் அரிசி மனிதனுக்கு உணவென்றால், தவிடு மாட்டுக்கு முக்கியமான உணவு. முன்றாவதாக வரும் உமிக்கும் உபயோகம் உண்டு. உமியைக் குவித்து அதில் ஒரு தணலை வைத்துவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் கனன்று உமி முழுவதும் உமிக்கரியாகிவிடும். அதுதான் குடும்பத்தினர் எல்லோருக்கும் வருடாந்திர உபயோகத்துக்கான பல் பொடி. அதை அப்படியேயோ அல்லது சிறுது உப்பு லவங்கம், சேர்த்தோ உபயோகிப்பார்கள். கரிக்கு(Carbon) ஈறுகளை உறுத்தாமலும் எனாமலைச் சிதைக்காமலும் அழுக்குகள் அனைத்தையும் இழுத்துக் கொள்ள கூடிய சக்தி உள்ளதால் பிரஷ் தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட இந்த உண்மை பன்னாட்டுப் பற்பசைக் கம்பெனிகளின் விளம்பரப் பிரச்சார வெள்ள்த்திற்கு முன்பு இன்று பின்வாங்கி விட்டது....]
பிராமனர் விட்டு 'பத்து' பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
[... "பத்து" என்ற ஒரு ஆசாரம் சில வகுப்பினரிடையே, குறிப்பாகப் பிராமணர் வீடுகளில் அனுசரிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் கொட்டு போய்விடக் கூடிய பதார்த்தங்கள் அவ்வளவும் பத்து. உதாரணமாக, முறுக்கு பத்து இல்லை. ஆனால் சாதம், சாம்பார், இட்லி முதலியன பத்து. அவற்றையோ, அவை வைக்கப்படிருக்கும் பாத்திரங்களையோ தொட்டால் கையை அலம்பிக்கொள்ள வேண்டும். இதனால் எல்லாம் அனவாசியமாகப் பெண்களுக்கு வேளை கூடிற்று...இன்று உடற்பயிற்சி இல்லாமல் உடம்பு வலி வருவது போல், அதற்கு நேர்மாறான காரணங்களால் உடம்பு வலி வந்து அவஸ்தைப் பட்டனர் அன்றைய இல்லத்தரசிகள்...]
நாற்பதுகளில் சினிமா, குடும்ப டாக்டர், அடுப்பங்கரை, கலாச்சாரம், போட்டோ, பேனா, கல்யாணங்கள் என்று பல விஷயங்கள் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரலாறு புள்ளிவிபரங்கள் இல்லாமல் அன்றைய வாழ்கையும், மனிதர்களை பற்றியது. இந்த ஆண்டு வந்த மிக முக்கியமான நூலாக இதைக் கருதலாம்.
அசோகமித்திரன் முன்னுரையில் குறிப்பிடுவது போல் .."இந்த நூலுக்கு ஒரு பெயர் மற்றும் பொருளகராதி தயாரித்தால் அது பல பக்கங்களுக்குப் போகும்..." அது புத்தகத்தைவிட பெரிதாக இருக்கும்.
"அது அந்தக் காலம்", எஸ்.வி.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம். 119 பக்கங்கள், 60/= ருபாய். படிக்க முன்று, மணி முப்பது நிமிடம் ( நடுவில் இரண்டு காப்பி, நான்கு தொலைபேசி அழைப்பு )
பிகு: நாளை ராமகிருஷ்ணன் "ரயில் பிரயாணத்தின் கதை" மற்றும் அசோகமித்திரன் எழுதிய "இரயில் பயணங்களில்" கட்டுரைகள் ஆகியவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்.
Old Comments from my previous blog
விலை பரவாயில்லை தேசிகன் அவர்களே. நிச்சயம் படித்துப் பார்க்கவேண்டும்!
By Moorthi, at Mon Feb 14, 07:28:48 PM IST
நன்றி தேசிகன் புத்தக அறிமுகத்திற்கு ! அலைஓசை படித்ததிலிருந்து அக்கால கட்டத்தை மையமாக கொண்ட நாவல்கள் படிக்க வேண்டும் என்று ஆசை..இந்தியா வரும்போது நிச்சயம் வாங்க வேண்டும்.
By ரவியா, at Mon Feb 14, 07:48:28 PM IST
:) Desi. Cute Informative trivias seems to be the mantra of the book..... must make a good reading. but the best line is....
படிக்க முன்று, மணி முப்பது நிமிடம் ( நடுவில் இரண்டு காப்பி, நான்கு தொலைபேசி அழைப்பு )
Typical Desi style... :-)
---Latha
[...] அது அந்தக் காலம் February 14, 2005 By Desikan Leave a Comment [...]
ReplyDelete