Wednesday, November 14, 2007

இங்க் பேனா

[%image(20071114-fountain_pen.jpg|91|81|null)%]

தீபாவளிக்கு சென்னைக்குச் சென்ற போது பட்டாசுச் சத்தத்தின் மத்தியில் விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.


நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.


"இங்க் பென் இருக்கா?"


ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.


"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"


"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"


வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? *) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.


நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!


சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.


நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்தரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.


[%image(20071114-CamelFountionPenInks.jpg|103|100|Camlin)%]

திருச்சி கண்டோன்மெண்ட் கோர்ட்டில் மரத்தடித் தாத்தா, தடியாகக் கட்டை பேனா விற்பார். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகபடுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளாவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.


பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.


[%image(20071114-bril_ink_pot.jpg|100|87|Bril)%]

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோக படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்விஸ் செய்ய வேண்டும்.
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிரண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.


[%image(20071114-fountain_pen_nip.jpg|149|83|Nip)%]

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப் பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.


கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.


பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.


கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப் பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.


 


[%image(20071114-ink_drop_in_paper.jpg|125|125|Drop of Ink)%]

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பிசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பிஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.


இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.


கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாயல்ட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.


இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.


என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது. அடுத்த சில நாள்களில் காணாமல் போனது. எனக்கு என் பக்கத்துவீட்டு நண்பன் மேல் தான் சந்தேகமாக இருந்தது. ஆனால் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு பின் அவர்கள் வேறு வீட்டுக்கு காலிசெய்து கொண்டு போனார்கள். ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து ஜன்னல் வழியாக அவர்களின் பூட்டிய வீட்டுக்குள் போனது, சுவர் ஏறிக் குதித்து உள்ளே போனபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த பித்தளை பேனா உள்ளே இருந்தது.


இன்று அந்தப் பேனா என்னிடம் பத்திரமாக இருக்கிறது; ஆனால் இங்க் பேனாவை தொலைத்துவிட்டோம். 


* ஒரு பாட்டில் பிரில் இங்க் விலை 12/= ரூபாய்.

Wednesday, August 22, 2007

சீனி கம்

'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற  பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன்.கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, பக்கத்தில் உள்ள பழக்கடையில் கால் கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி சப்பிட்ட பின் ஸ்பினாச் சாப்பிட்ட பாப்பாய் போல் ஆனேன்.


டாக்டரிடம் கேட்டதற்கு கடுகு சைஸ் மாத்திரையை பாதியாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். திரும்பவும் சில பரிசோதனைகளில் சர்க்கரை அளவு சென்சக்ஸ் போல ஏறும், இறங்கும்; ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாக்டர் தொடர்ந்து மாத்திரையை எடுத்துக் கொள்ளச் சொன்னார். சில சமயம் அந்த வெடவெடப்பு இருக்கும்; சாக்லேட் சாப்பிட்டால் சரியாகிவிடும். மாத்திரை செய்யும் ஜாலம் என்று உள் மனம் சொன்னது. !
 டாக்டரிடம் இந்த மாத்திரையில் ஏதோ பிரச்சனை என்று சொன்னதற்கு, அவர் தொடர்ந்து அதே மாத்திரையையே சாப்பிடச் சொன்னார்.


போன மாதம், மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் ஒரு டெஸ்ட் கொடுத்தேன். அதில் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தது. பிறகு ஒரு வாரம் கழித்து மாத்திரை எடுத்துக்கொண்டு டெஸ்ட் எடுத்தேன், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. இந்த முறை டாக்டரை மாற்றிவிட்டேன்.


இரண்டு வகை மாத்திரைகள் உண்டு. டால்பிடமைடு, பிகுவனைடு, டயநில், க்ளைநேஸ் போன்றவை முதல் வகையும் ஃபென்ஃபர்மின் மெட்ஃபார்மின் போன்றவை இரண்டாவது வகையும் ஆகும். முதல் வகை, பாதிக்கப்பட்ட இன்சுலின் சுரப்புக்குப் புத்துயிர் கொடுக்கும். இன்சுலின் வாங்கிகளை அதிகரிக்கும். இரண்டாவது வகை, உடலில் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கும். இருக்கிற சர்க்கரையை அதிகம் பயன்படுத்த உதவும்.  பசியைக் குறைக்கும். இப்போது,  இரண்டாவது வகை மாத்திரையினால் எல்லாம் நார்மலாக இருக்கிறது. நார்மலாக இருந்தாலும், வீட்டுக்கு வருபவர்கள் டிப்ஸ் கொடுப்பதை மட்டும் நிறுத்துவதில்லை.


மருந்துகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வது நலம். நண்பர் சொன்னர் இந்த மருந்து நல்லது என்று எடுத்துக்கொண்டால் ரொம்ப ரிஸ்க்.


"வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய் எல்லாம் கலந்து எம்டி ஸ்டமக்கில் ஒரு கப் ஜூஸ் குடிங்க.


"பூசணிக்காய் சாப்பிட்டால் நல்லது என்று சில மாதம் முன் பேப்பரில் படித்தேன்" ( வெள்ளை பூசணிக்காயா ? அல்லது ஹாலோவின் பூசணியா ?)


"அருகம் புல் ஜூஸ் குடிங்க, பிள்ளையார் கூட அது தான் சாப்பிடுகிறார்".


"அரிசிக்குப் பதிலா சப்பாத்தி ட்ரை பண்ணுங்க".


"வெந்தயம் சாப்பிடுங்க சார், நல்ல எஃபெக்ட் இருக்கும்"


வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர், வெந்தயத்தில் உள்ள 'டரைகோ நெலின்' என்னும் வேதிப்பொருளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி ஓரளவு உண்டு. வெந்தயத்திலுள்ள நார்ச் சத்து உணவிலுள்ள சர்க்கரை இரத்தத்தில் கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கான மாத்திரை ஒன்று சப்பிட்டால், இரத்தச் சக்கரை எந்த அளவு குறையும!
  அதே அளவுக்கு குறைய வேண்டுமானால் 4, 5 கிலோ வெந்தயம் சாப்பிட வேண்டும். வெந்தயம் வாங்கி ஏழையாய்ப் போக விருப்பமில்லை.  ஆனால் காலையில் கொஞ்சம் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது.
 
காபி, டீக்கு சர்க்கரை சேர்க்காமல், இனிப்பு வகைகளை சாப்பிடாமல் இருந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் உடம்பில் சர்க்கரை சேர்ந்துவிடுகிறது. அப்படியா என்று கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்..


நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது ரத்தத்தில் கலக்கும் போது, குளூக்கோஸாக மாற்றப் படுகிறது. இந்த குளூக்கோஸ் நம் உடம்புக்குப் பயன்படக் கூடிய சக்தியாக மாற வேண்டுமெனில் அதற்கு இன்சுலின் வேண்டும். இரத்தத்தில் வருகிற குளூக்கோஸின் அளவும் அதை சக்தியாக மாற்றிப் பயன்படுத்தத் தேவையான இந்த இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை டிவியில் படம் பார்த்துக் கொண்டு, சினிமா கிசுகிசுக்களை படித்துக்கொண்டு இருக்கலாம். இல்லை என்றால், அதிக குளுக்கோஸ் உள்ளே வரும்போதோ உடம்பில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலோ சக்தியாக மாற்றப்பட்டாத குளூக்கோஸ் சிறுநீரகத்துக்குச் செல்கிறது, பிரச்சனை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது!.


அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பாக் -


'ஜே ஜில் க்ரைஸ்ட்' என்பவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? முதன் முதலில் சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவர். ஒருமுறை 'உச்சா' போய்க் கொண்டிருந்தவர், அப்போது அங்கே போய்கொண்டிருந்த எறும்புகள் எல்லாம் அபவுட் டர்ன் செய்து இவரின் சிறுநீரை மொய்க்க தொடங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அதே நினைவாக இருந்தவர், தூக்கத்திலிருந்து எழுந்து திரும்பவும் சிறுநீர் கழித்தார், இந்த முறை டம்பளரில் பிடித்துக் குடித்துப் பார்த்தார். நன்னாரி சர்பத் போல் இருந்தது. சிறுநீர் வழியாக குளூக்கோஸ் வெளியேறுகிறதென்று கண்டுபிடித்தார். இது கண்டுபிடிக்கபட்டது 1800களில்.
 
ஆக,  குளூக்கோஸ் சிறுநீரகத்துக்கு செல்லும் போது, சிறுநீரகம் குளூக்கோஸை வடிகட்டும் எக்ஸ்ட்ரா வேலை செய்யத் தொடங்குகிறது. நாளடைவில் சிறுநீரகம் 'அட போப்பா'  எனக்குக் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா என்று வேலை எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் வெளியேற்றுகிறது. இதில் நம் உடலுக்குத் தேவையான தண்ணீர், தாதுக்கள் எல்லாம் வெளியேறுகிறது. டயாபடிஸ் என்பதற்கு அதிகம் சிறுநீர் வெளியேறுதல் என்று அர்த்தம். இதனால் தான் இதை நீரழிவு என்றும் சொல்கிறார்கள். ஆக சிறுநீர் நன்றாக போய்க்கொண்டே இருந்தாலும் அது சிறுநீரகப் பாதிப்பு தான். ஆனால் மழைகாலங்களில், ஏஸி அரையில், பரிட்சை நேரத்தில், மனைவி டோஸ் விடும் போது உச்சா போவது எல்லாம் ஹார்மோனைத் தூண்டி சிறுநீரைச் சுரக்க செய்வன.


அரிசிச் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் தான் சப்பாத்தியிலும் இருக்கிறது. ஆனால் சப்பாத்தியில் நார்ச் சத்து இருக்கிறது. எதைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எவ்வளவு, எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். கேழ்வரகு, கம்பு கஞ்சியாகக் குடிக்காமல், அதை தோசை போல சாப்பிட வேண்டும். அதாவது உடனே இவை ஜீரணம் ஆக கூடாது, மெதுவாக நமக்கு எனர்ஜியைக் கொடுக்க வேண்டும்.!


 சர்க்கரை வியாதி உள்ளர்கள் சிறுநீர்ப் பரிசோதனையின் போது குளுக்கோஸ் இல்லை என்றால் சந்தோஷப்படாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டு வேலைகள், படியில் ஏறி இறங்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகள் செய்து, அளவாகச் சாப்பிட்டால் நல்லது. அப்பா, கடைசியா மெசேஜ் சொல்லிவிட்டேன்!


( கட்டுரையின் சில பகுதிகள்(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்) உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ற புத்தகத்தில் இருக்கிறது )

Wednesday, August 15, 2007

PAN

நிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன்.[%image(20070815-pancard_s.jpg|216|144|PAN CARD)%]

நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில்
PAN NO: _____________
என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே!' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன்.


வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, "ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது?" என்றேன்.


"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார்.


காண்பித்தேன்.


பார்த்துவிட்டு, "அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க" என்றார்.


சென்றேன்.


ஆனால் யாரும் இல்லை. ஃபேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. ஃபேன் ஓடுவதால் நிச்சயம் யாராவது வருவார்கள் என்று கொஞ்சம் நேரம் காத்துக் கிடந்தேன். யாரும் வரவில்லை. அடுத்த சில அறைகள் தள்ளி ஒருவர் இருந்தார், அவரிடம் "ஒரு வருடம் ஆகியும்... " டைலாக் சொன்னேன். நேராகப் போனால், வரவேற்பாளர் இருப்பார், அவரிடம் கேளுங்கள் என்றார். பரமபதத்தில் பாம்பின் தலைவழியாக ஆரம்பித்த இடத்திற்கே வருவது போல் திரும்பவும் வந்தேன்.


"சார், அங்க யாரும் இல்லை"


"அங்கேயே வெயிட் பண்ணுங்க, வருவாங்க!"


"இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்..."


"வருமான வரி தாக்கல் செய்ற இடத்தில போய் கேட்டுப் பாருங்க" என்றார்.


அங்கே சென்ற போது, ஆடித் தள்ளுபடி கூட்டம் போல் அலைமோதியது, 'சரல்', 'பார்ம் 2 F' போன்ற குரல்களுக்கு இடையில் "சார், நான் பான் கார்ட் அப்ளை செஞ்சு ஒரு வருடம்... " என்றவுடன் "சார், இங்கே வந்து அதை கேட்காதீங்க, பாருங்க அடுத்த பில்டிங்ல இருப்பாங்க, போய் அங்கே கேளுங்க" என்றார்.


"நான் அங்கிருந்து தான் சார் வரேன், அங்கே யாரும் இல்லை..."


என்ன தோன்றியதோ, யாரோ ஒரு பியூனைக் கூப்பிட்டு என் விணப்பத்தை பார்க்கச் சொன்னார்.


அரை மணி கழித்து, அந்த பியூன் என் பிரசித்தி பெற்ற நிரந்திர கணக்கு எண்ணை(PAN number) எழுதி தந்தார். "இன்னும் ஒரு மாசத்தில வந்துடும் சார், எல்லா அப்பளிக்கேஷனையும் கிளியர் செய்துகிட்டு இருக்கோம்," என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அந்த வருடத்திய தனி நபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து முடித்தேன்.


திரும்பவும் ஆபிஸ் பிரஷர் காரணமாக அப்படியே விட்டுவிட்டேன்.  அடுத்த வருடம் 'பார்ம்-16' படிவத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது, அட இரண்டு வருஷம் ஆகியும் இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை என்று. பான் எண் தான் தெரியுமே என்று அந்த வருடமும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அடுத்தவருடம் திரும்பவும் வருமானவரி அலுவலகத்திற்கு சென்று 'பான் கார்ட்' வரவில்லை என்று எழுதிக் கொடுத்தேன்.


பிறந்த நாள் போல், வருடத்திற்கு ஒரு முறை ஜூலை மாதம் இது நினைவிற்கு வரும். இப்படியே வருடங்கள் ஓடின.


2006ல் டிமேட்(DMAT) கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் நிரந்திர கணக்கு எண்(PAN Card) அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு புது விதியை கொண்டுவந்திருந்தார்கள். அதனால் என் டிமேட் கணக்கு முடக்கபட்டது. இந்த முறை வருவானவரி அலுவலகத்திற்குச் சென்ற போது, பான் அட்டையைக் கொடுக்கும் பொறுப்பை  UTISL, NSDL, Karvy போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டோம், அவர்களிடம் போய் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.


அடுத்து UTI யிடம் சென்று ஒரு புது விண்ணப்பம் கொடுத்தேன். கொடுத்து சில மாதங்கள் ஆன பின் என்ன ஆச்சு என்று விசாரித்த போது, "வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம்!" என்றார்கள். ஆன்லைனில் உங்கள் விண்ணப்பதின் நிலவரம் தெரியும் என்றார்கள். என் விண்ணப்ப எண்ணை கொடுத்து பார்த்ததில் "Your PAN application is with the Income Tax Department. We shall intimate you once the Income Tax Department processes your application"  என்று பகலிலும், இரவிலும் வந்தது.


இப்படி ஒரு வருடம் ஓடியது.


அதற்குள் நான் பெங்களூர் வந்துவிட்டேன். என் அலுவலகத்தில் சக பணியாளரின் மனைவி, வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்வதால் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.
"உங்க ஃபைல் சென்னை அலுவலகத்தில் இருக்கிறது, அது பெங்களூர் வரவேண்டும், பார்க்கலாம்" என்றார்.
திரும்பவும் விண்ணபிக்க சொன்னார்.


திரும்பவும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(பழைய போட்டோவை காட்டிலும் இதில் வயசாகியிருந்தது), அட்ரஸ் ஃபுரூப் எல்லாம் கொடுத்தேன். கொடுத்து இரண்டு மாதத்திற்குப் பிறகு எனக்கு ஒரு லெட்டர் வந்தது.


அதில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மயக்கம் வந்தது.


"உங்கள் அப்பா பெயர் 'KR Narayanan' என்று போட்டிருக்கிறீர்கள், ஆனால் எங்களிடம் உள்ள டேட்டா பேஸில் வெறும் 'Narayanan' என்று தான் இருக்கிறது எது சரி ? எங்களுக்குத் தெரிவிக்கவும்" என்று கேட்டிருந்தார்கள். திரும்பவும் லெட்டர், ஃபுரூப் .. எல்லாம் அனுப்பிவிட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று வந்தேன். 15 நாளில் பிரசித்திபெற்ற அந்த பான் கார்டு வந்தது. அதில் என் போட்டோ கூட இருந்தது.


கட்டுரை முடியவில்லை. இன்னும் இரண்டு வரிகள் இருக்கின்றன.


போன மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்த போது வருமானவரி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில் இன்னொரு பான் கார்டு!. அதிலும் என் படம் இருந்தது.


இந்த மாசம் திரும்பவும் ஸ்ரீரங்கம் போகிறேன்

Thursday, August 9, 2007

சென்னை விசிட்

இந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன்.


1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்ரீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால்,  டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும்.  பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான்.பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள்.  வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது.  TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே.


அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன்.


இன்று யூனிகோட் வந்த பிறகு  மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூகிளில் தேடி, ஈ-கலப்பையைக் கொண்டு வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் சில பத்திரிகைகள் விடாப்பிடியாக பழைய ஃபாண்டையே உபயோகப்'படுத்தி'க் கொண்டிருக்கிறார்கள். பழைய அரசியல் 'லாபியிங்' பாதிப்பு தான் இதற்குக் காரணம். பத்திரிகைகளைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.


எனக்கு 13 வருடங்களுக்கு முன் தமிழ் அடித்த போது ஏற்பட்ட அதே த்ரில்லை, பட்டறையில் சில மாணவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பார்த்தேன். அட தமிழில் டைப் அடிக்க முடிகிறதே என்ற பூரிப்பு கண்களில் தெரிந்தது. உடனே என் பெயர், முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள். "டவுட் இருந்தால் பெங்களூருக்கு ஃபோன் செய்கிறேன் சார்!" என்றார்கள்.


எனக்கு தோன்றியது இது தான் - பதிவர்கள் சிலர் ஒரு கல்லூரி, பள்ளி என்று சென்று இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று செயல் முறை விளக்கமாக காண்பிக்கலாம். இன்னும் ரீச் நன்றாக இருக்கும். அதே மாதிரி பெரிய நிறுவனங்களுக்கும் எடுத்துச் சென்றால் விதவிதமான களங்களில், தளங்களில், மற்றும் வேறுபட்ட தொழில்சார்ந்த பதிவர்கள் நமக்குக் கிடைப்பார்கள். இது முக்கியம் என்று தோன்றியது. 


பட்டறையில் பழைய நண்பர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேட்ட கேள்விகள்..


"என்ன சார் புதுசா தாடி?"


"ரீசண்டா என்ன கோவில் போனீர்கள்?"


"ஏன் சார் இப்ப எல்லாம் முன்பு போல வேதாளம் வருவதில்லை?"


"...அப்புறம் நீங்க தான் இட்லிவடையா?"


- * - * -


ஆசிப் மீரான் பட்டறைக்கு வந்தது எனக்குத் தெரியாது, நான் அவரைப் பார்த்ததில்லை. ஆசிப் மீரானை சக வலைப்பதிவர் என்ற முறையில் தெரியும். ஆசிப் மீரான் அப்பா பிரபல கிரிக்கெட் வர்ணையாளர் அப்துல்ஜாபர் மகன். "இப்போது கவாஸ்கர் மட்டையைத் துக்கி அடிக்க, பந்து பவுண்டரி நோக்கிப் போகிறது, அங்கே மிக திறமையாகப் பந்தை நிறுத்துகிறார்..." என்ற பேச்சை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியா!. ஸ்கூல் படிக்கும் போது, சின்ன டிரான்சிஸ்டரை எடுத்துச் சென்று, ஒரு வகுப்பிற்கும் அடுத்த வகுப்பிற்கும் இடையே ஆசிரியர் வரும் இடைவேளையில் இந்த வர்ணனையைக் கேட்போம். அப்போது எல்லாம் இந்தியா ஜெயிக்கும்.


சமிபத்தில் ஆசிப் மீரான் அன்பான மனைவியை இழந்திருந்தார். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றும், ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சில மணி நேரத்தில் அவருக்கு தொடர்ந்து, மூன்று முறை ஸ்டிரோக் வந்து இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விபட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


ஆசிப் மீரானின் இல்லத்திற்குச் சென்றேன். முதலில் இவரை எப்படி சந்திக்கப் போகிறோம், என்ன பேசபோகிறோம் என்று மிகவும் குழம்பிப் போனேன். போகும் போதே முதலில் என்ன பேசலாம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.


நான் அவர் இல்லம் சென்ற சமயம் என்னை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தார். பொதுவாக எப்படி இருக்கீங்க என்று ஆரம்பித்து... பேசிக் கொண்டிருந்தோம். நான் போன சமயம் இரண்டு குழந்தைகள் (மகன் 7வது படிக்கிறான், மகள் 5வது படிக்கிறாள்)  டிவியில் Pogo பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு அம்மா இல்லாத பாதிப்பு முழுவதும் தெரியவில்லை.


இவ்வளவு நடந்த போதும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை ஆசிப். எப்படி இவர்களை அம்மா இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் வளர்ப்பது என்று என்னிடம் அவர் திட்டங்களைப் பற்றி பேசினார்.  நான் கொஞ்சம் அசந்து போனேன். இவ்வளவு சின்ன வயசில் என்ன ஒரு முதிர்ச்சி, தன்னபிக்கை. ஆசிப் மீரான் போன்ற அப்பா கிடைப்பதற்கு எந்த குழந்தையும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


போகும் போது, வாசல் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். 2001ல் வந்த அமீரகம் ஆண்டுவிழா மலருக்கு நான் அவருக்கு ஹரன்பிரசன்னா மூலம் அனுப்பிய லைன் டிராயிங்குக்கு நன்றி கூறினார். எனக்கு நிஜமாகவே கண்களில் கண்ணீர் வந்தது.


பின்சேர்க்கை:  மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!! ஆசிப் மீரான் பதிவு.

Thursday, June 21, 2007

ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

[%image(20070621-Sujatha_Desikan.jpg|200|150|Me and Sujatha)%]

ஏப்ரல் மாதம் சுஜாதாவை சந்தித்த போது


"தேசிகன் ஒரு முறை ஸ்ரீரங்கம் போகணும்? என்னை அழைத்துக்கொண்டு போக முடியுமா ?" என்றார். 


இரண்டு வாரம் முன் இந்த பயணம் நிறைவேறியது.
அதை பற்றி சுஜாதா ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கிறார். ( அதை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி )பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன்.


லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை.


வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீரங்கம் கோயிலை எப்போதோ இழந்துவிட்டேன் என்பது மறு ஊர்ஜித-மாயிற்று.


டிரஸ்டி திருமதி கிரிஜா மோகன் உதவியுடன், அதிக சிரமமில்லாமல் அரங்கனை வணங்க முடிந்தது. அர்ச்சகர்கள் வரவேற்றனர். நல்ல-வேளை... ‘‘சிவாஜி கதை என்ன?" என்று கேட்கவில்லை. ‘‘வாங்கோ! உங்களுக்காக இன்னிக்கு வைரமுடி சேவை. அதிர்ஷ்டம் பாருங்கோ!" இலவச அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்-கொண்டு, வெளியே வந்தேன். ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலதேசிகன் என்னைப் பத்திரமாக அழைத்துச் செல்ல, பெருமாள் தாயார் மட்டும் சேவித்துவிட்டு, ஆசுவாசத்துக்கு தாயார் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உட்கார்ந்து-கொண்டேன்.


சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்-பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார்.


மண்டபத்தில், சின்ன வயசில் இங்கே தேவதாசிகள் தீபம் கொண்டு-வருவதைப் பார்த்திருக்கிறேன். அழகழ காக ஆபரணங்களுடன் நிற்பார்கள். 1954 வரை இந்தப் பழக்கம் இருந் திருக்கிறது. இப்போது சொன்னாலே உதைப்பார்கள்.


வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப் பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி 111, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்.
சுஜாதாவுடன் பல்லவனில் திரும்பி வரும் போது, அவருடன் 5 மணி நேரம் பேசிக்கொண்டு வந்தது ஒரு இனிய அனுபவம். சினிமா, இலக்கியம், அரசியல், பழைய நினைவுகள் என்று பல்வேறு விஷயங்களை குறித்து பேச முடிந்தது.


1. தசாவதாரத்தின் கதை என்ன ? கமல் ஏற்று நடிக்கும் வேடங்கள் யாவை ?


2. சிவாஜி படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன ?  ரஜினி அந்த படத்தை பார்த்துவிட்டு உங்களிடம் என்ன சொன்னார் ? நீங்க ரஜினியிடம் என்ன சொன்னீர்கள் ?


3. அடுத்த சங்கர் படம் என்ன ? அதன் கதை என்ன ? யார் நடிக்க போகிறார்கள் ?


4. சிறுவயதில் நீங்கள் வளரும் போது, உங்கள் அப்பா உங்களுடன் இல்லாததை பற்றி எப்பவாவது நினைத்து வருந்தியதுண்டா ?


5. காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எப்போது எழுத போகிறீர்கள் ?
( ரொம்ப வற்புறுத்தி இரண்டாம் பாகம் எழுத சொல்லியிருக்கிறேன். அதற்காக முதல் பாகத்தை ஒரு முறை படித்து அவருக்கு குறிப்பு அனுப்ப உள்ளேன். அப்படியே சோழர்கால புத்தகங்கள் சிலவற்றையும் தேட வேண்டும் )


6. நாலாயிர திவ்ய ப்ரபந்ததற்கு சிலப்பதிகாரம், புறநானுறு போல் எளிய உரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்


7. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ?


பயணம் முடிந்த பின்,
"தேசிகன் இந்த டிரிப்புக்கு எவ்வளவு தர வேண்டும்?" என்றார்
"சிவாஜி படத்தின் பிரிவியூ டிக்கேட் ஒன்று!"  என்றேன்
( சிவாஜி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடி நான் அவருடன் இந்த படத்தை பார்த்தேன் )


ஸ்ரீரங்கம் மாறிவிட்டது என்று கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. போன வாரம் எனக்கு திரு.மணவாளனின் அறிமுகம் கிடைத்தது( என் தம்பி மூலமாக). அவர் எனக்கு சில பழைய ஸ்ரீரங்கம், திருச்சி படங்களை அனுப்பிவைத்தார். பார்த்துவிட்டு பெருமூச்சு விடுவதற்கு அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே தந்திருக்கிறேன்.


[%popup(20070621-srirangam1.jpg|712|429|ஸ்ரீரங்கம்)%]
[%popup(20070621-RockFortView1.jpg|712|430|மலைக்கோட்டை)%]


( இந்த் படங்கள் எடுத்த வருடம் 1850 -1860 ! )

Friday, May 25, 2007

பார்பர் ஷாப்பில் வேதாளம்

மொட்டை தலையுடன் வேதாளம் வந்தது.
"என்ன திருப்பதியா ?" என்றான் விக்கிரமாத்தித்தன்.
"அதை ஏன் கேட்கற, நேத்திக்கு 'ஹெட் போனில் கேட்கவும்' னு ஒரு ஈ-மெயில் வந்தது.  சரி என்ன பெரிசா இருக்க போகிறது என்று...கேட்டேன்,  இப்படி ஆயிடுத்து"
"என்ன!?" என்றான் விக்கிராமாதித்தன்.
வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு ஹெட் போனை மாட்டிவிட்டு, கண்ணை மூடிக்கோ" என்றது.
விக்கிரமாதித்தன் கேட்க ஆரம்பித்தான் புன்னைகையுடன்..
.
நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஹெட் போனில் கேட்டு பாருங்கள்.
மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியில் கேட்கவும்.
இங்கே முயன்று பாருங்கள்


இந்த மாதிரி ஒலிப்பதிவுக்கு  Binaural Recording என்று பெயர். டம்மி தலையை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை செய்கிறார்கள். மேல் விவரங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கிறது.


முதல் முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.

Thursday, May 3, 2007

சீட்டு மாளிகை – நைலான் கயிறு


சுஜாதாவின் முதல் தொடர்கதை நைலான் கயிறு. குமுதம் 1968, ஆகஸ்ட் மாதம் 141ம் பக்கத்தில் வெளிவந்தது. இதற்கு சுஜாதா வைத்த பெயர் - சீட்டு மாளிகை. ரா.கி.ரங்கராஜன் அதில் முதல் அத்தியாயத்திலிருந்து 'நைலான் கயிறு' என்பதைத் தேர்ந்தெடுத்தார். ( நைலான் கயிறு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் - சீட்டு மாளிகை). 14 வாரம் தொடர்கதையாக வந்தது.

Uவாய் வளைந்து, **** என்று பூப்போட்ட சட்டை, ________ இந்த கோட்டின் அகலத்துக்கு மீசை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுநந்தாவின் டைரி என்று பல புதுமைகள் முதல் அத்தியாயத்திலேயே அடங்கும். "யாருப்பா இது?" என்று தமிழ் வாசகர்களை சட்டென்று நிமிர்த்திப் பேசவைத்தது.

இரண்டு தலைமுறையினரைப் பாதித்து, இன்றும் நைலான் கயிறு பற்றி அவரைப் பார்ப்பவர்கள் கேட்பதற்கு இது தான் காரணம்.   தமிழ் நடையில் ஒரு புது முயற்சி இந்தத் தொடர்கதையில் துவங்கியது என்று சொல்லாலாம். ( இந்த தொடர்கதை கன்னடத்திலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது, ஒரு படக்கதையாக கூட மாற்றப்பட்டது, திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது.)

இந்தக் கதையை சுஜாதா அவர்கள் எழுதும் போது நான் பிறக்கவில்லை.

நான் காலேஜ் படிக்கும் போது, தென்னூர் பஸ்டாண்டில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த போது, ரோடில் பழைய புத்தகங்களைப் பரப்பி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். எல்லாம் அழுக்குப் படிந்த பழுப்பு நிறப் புத்தகங்கள்.

அந்தப் புத்தகக் குவியலில் ஒரு பழைய குமுதம் இதழ் தணித்து தெரிந்தது. தெரிந்ததற்குக் காரணம் பெருமாள் படம் இல்லை, கவர்ச்சிப் படம் ( அல்லது குமுதம் அட்டை படம் ) என்ன என்று கையில் எடுத்து உள்ளே பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம் ஆனால் ஆச்சரியம். ஏமாற்றத்துக்குக் காரணம், கவர்ச்சி உள்ளே தொடரவில்லை. ஆச்சரியத்துக்கு காரணம் - சுஜாதா எழுதிய நைலான் கயிறு குமுதம் இதழிலிருந்து யாரோ அழகாக சேகரித்து தைத்த புத்தகம் அது!

"என்ன தம்பி புத்தகம் வேணுமா ?"

"எவ்வளவு?"

"காமிங்க" என்று என்னிடமிருந்த புத்தகத்தை வாங்கி. 'முற்றும்" வரை இருக்கு தம்பி "இரண்டு ரூபாய்" தாங்க என்றார்.

"நான் 10 ரூபாய் கொடுத்து அதை வாங்கி வந்தேன்.

40 வருடம் கழித்து, இன்றும் பல தொகுப்புகளாக நைலான் கயிறு வந்துவிட்டது. ராணி முத்து, சத்தியா பாக்கேட் நாவல், குமரி பதிப்பகம், விசா பதிப்பகம்(எட்டாவது பதிப்பு) என்று, ஆனால் யாருமே அதைச் சரியாகப் பதிப்பதில்லை. சிலர் முதல் அத்தியாயத்தில் சில பாராவை முழுங்கி விடுவார்கள். DTP இல்லாத அந்தக் காலத்தில் செய்த புதுமைகளை, DTP உள்ள இந்தக் காலத்தில் அதை எடிட் செய்துவிடுவார்கள்.

இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு முதல் தொடர்கதையிலிருந்து சில பகுதிகள், படங்கள்.
Friday, April 20, 2007

ராமானுஜலு

ஸ்ரீஉடையவர் சன்னதி - ஓவியம் தேசிகன்

சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு திரும்பியதும், சித்திரை மாதம், ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன். ராஜகோபுரத்தைச் சுற்றியுள்ள கடைகள், மாடுகள், நெட்டிலிங்க இலைமேல் வைத்துக் கொய்யா பழம் விற்கும் கிழவி, மத்தியான வேகாத வெயிலில் சமயபுரம் பஸ்ஸிலிருந்து இறங்கும் சந்தனம் தடவிய மொட்டைத் தலை 'கோவிந்தா'க் கூட்டம் என்று எதுவுமே மாறவில்லை.


'மைசூர் போண்டா ரெடி!'யைக் கடந்து சென்றால், 'ரங்கா ரங்கா' கோபுரத்திற்கு முன் 'ரின் சோப் உபயோகியுங்கள்!' பனியன் போட்டுக் கொண்டு ஒருவர் பரோட்டா மாவுடன் மல்யுத்தம் செய்து கொண்டுடிருந்தார். அவரிடம் அடிவாங்காமல் கடந்தால், ரெங்கவாசல் கடைகள் ஜொலிப்பில் நூறு வாட் என்றது.

ரங்க வாசல் கடையில் தொங்கிய குஞ்சலத்தை பார்த்த ஒரு வெள்ளைக்காரர்..

"வாட்டிஸ் திஸ்?"

"குஞ்சலம் சார், ஹெட் டெக்கரேஷன்"

"ஹொவ் மச்"

"ஃபிப்டீன் ரூப்பீஸ் சார்"

பணம் கொடுத்து, குஞ்சலத்தை வாங்கித் தலையில் வைத்துப் பார்த்துக் கொள்பவரைக் கடந்து வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. எதிர்ப் பக்கம் நீலநிறத்தில் 'ஸ்ரீ உடையவர் சன்னதி' போன மழையில் வழிந்திருக்கிறது. உடையவர் சன்னதியைத் திறந்த போது மணி நாலரையிருக்கும். உள்ளே சென்றவுடன் மங்கலான வெளிச்சத்தில், வவ்வால் புழுக்கை நெடியுடன், சுவற்றில் ஆழ்வார்கள் கோஷ்டி, ராமானுஜர் வாழ்க்கைச் சரித்திரம், தாடி வைத்துக் கொண்டு கூரத்தாழ்வார் என்று ஓவியங்களிடையே தூது செல்லும் வவ்வால்கள்.  ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது மூலையில் ஒரு அழுக்கு மூட்டையைப் பார்த்தேன். லேசாக அசைந்தது. உற்றுப் பார்த்தேன். கூனிக் குறுகி ஒருவர் உட்கார்ந்திருந்தார். கிட்டே சென்றேன். பவ்யமாக என்னை வணங்கிச் சிரித்தார் அந்தப் பெரியவர்.

"கோஷ்டி முடிஞ்சாவுட்டுத்தான் தான் தீர்த்தம். மூலவரை படம் எடுக்கப்புடாது. மத்ததை தாராளமா எடுத்துக்கொங்கோ!" என்று பின்னாலிருந்து அர்ச்சகர் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

என் தோளில் தொங்கிய எஸ்.எல்.ஆர் கேமாராவை பார்த்துக்கொண்டே..

"அமெரிக்காவா ? ஃசாப்ட்வேரா? என் தம்பி பையன் ஒருத்தன் 'சிஸ்சி'யில கோர்ஸ் முடிச்சுட்டு இருக்கான்.. "

"மாமா நான் இந்த ஊர்தான்"

"அப்படியா? இப்போ எங்கே இருக்கேள் ?"

"சென்னைல"

"அப்படியா" என்றவர் மூலையில் இருந்த கிழவரைப் பார்த்தார்.

"உன்ன நான் வெளிலதானே இருக்கச் சென்னேன் ? கோஷ்டி முடிசாவுட்டு வா, போ போ!"

கிழவர் ஒன்றும் செல்லாமல் தன் கைத்தடியுடன் வெளியே சென்றார்.

"இவாளோட ரொம்ப கஷ்டமா இருக்கு சார், எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. பேசாம அன்னதானம் போடற இடத்தில போய் இருக்க வேண்டியதுதானே.. இங்கே வந்து கழுத்தறுக்கறா.."

அதற்குள் கோஷ்டி இரண்டு வரிசையாக உட்கார்ந்து கொண்டு "பல்லாண்டு பல்லாண்டு..." என்று சேவிக்க ஆரம்பித்த போது நான் அந்தக் கிழவரைப் பார்க்க வெளியே போனேன்.

உடையவர் சன்னதி வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வெளிச்சத்தில் பார்க்க கருப்பாக, இரண்டு மாத தாடியுடன், குடுமி வைத்திருந்தார். நெற்றி, தோள்பட்டையில், நெஞ்சில், வடகலையா தென்கலையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி பெரிய நாமம். இவ்வளவு நாமம் போட்டுக் கொண்டிருந்தவர் பூணுல் போடாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கையில் அழுக்காக இருந்த மஞ்சள் பை 'தைலா சில்க்ஸ்' என்றது.  நான் அவர் பக்கத்தில் சென்றவுடன் என்னை மீண்டும் பவ்யமாக வணங்கிச் சிரித்த போது பற்களை எண்ணுவது சுலபமாக இருந்தது.

"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?"

என்று கோஷ்டி திருப்பள்ளியெழுச்சி சேவித்துக் கொண்டிருந்தார்கள்.

"எந்த ஊர்?" என்றேன்.

சிரித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டார். நான் அவர் திரும்பும் வரை காத்திருந்து மீண்டும்...

"உங்களுக்கு எந்த ஊர்?"

'என்ன?' என்பதைப் போல் பார்த்தார்.

"எந்த ஊர்?" தூரத்தில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.

"ஜீயபுரம்.."

"ஓ, எங்களுக்கு கொடியாலம்" அவர் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஆனால் புன்னைகைத்தார்.

"செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்..."

அப்போது பையிலிருந்த பிளாஸ்டிக் கவரிலிருந்து ஒரு போட்டோவை எடுத்துக் காட்டினார். கருப்பு வெள்ளை படத்தில் டர்பன், கோட், வாக்கிங் ஸ்டிக், பெரிய நாமத்துடன் ஒருவர் இருந்தார்.

"யார் இவர் ?"

"இவர்தான் என் தோப்பனார். சங்குகோவிந்தசாமி நாயுடு. தமிழ், சமிஸ்கிருதத்தில் நல்ல புலமை.  நான் ஃபர்ஸ்டு ஃபாரம் வரைக்கும்தான் படிச்சேன். தோப்பனர் வழியா நெறைய கத்துண்டேன். என் தோப்பனார். 'விஷ்ணு பதாதி கொஸாந்த', 'தேசிகனின் தாயாசதக'த்துக்கெல்லாம் உரை எழுதியிருக்கார்."

"நான் இதெல்லாம் கேள்விப்பட்டதில்லை. என் அப்பாவுக்குத் தான் வைஷ்ணவத்தில ரொம்ப ஈடுபாடு." 

"தோப்பானார் வரலையா ?"

"இல்ல, மூணு வருஷம் முன்னாடி.. போயிட்டார்!"

"வைஷ்ணவன் இறப்பதில்லை. முதலேது, முடிவேது" என்றார்.

"புரியலை..."

"ஸ்ரீவைஷணவன் யார்?"

எனக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. "விஷ்ணுவை வழிபடுபவர் .." என்றேன்.

புன்முறுவல் செய்து, "உண்மையான ஸ்ரீவைஷணவன் யார்?"

எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அதற்குள் கோஷ்டி முடிந்து, கூட்டம் உள்ளே ராமாநுஜரை சேவிக்கச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் இந்த பெரியவர் பக்கம் வராமல் ஒதுங்கியே உள்ளே போனார்கள்.

"வாங்கோ உள்ளே தீர்த்தம் தரா .." என்று கிழவரையும் என்னுடன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

".... தானான திருமேனி. எட்டு நூற்றி என்பத்தி ஏழு வருஷம் முன் வாழ்ந்தவர். எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யக்காரர்.. என்று திருநாமங்கள்  பரமபதம் அடைந்ததும் ரங்கநாதர் தன்னுடைய வசந்தமண்டபத்தையே அளித்தான். ..." என்று அர்ச்சகர் சொல்லிக்கொண்டே கிழவரைத் தவிர எல்லோருக்கும் தீர்த்தம் தந்தார். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கிழவர் ஒன்றும் சொல்லவில்லை. பெருமாளை சேவித்து விட்டு வெளியே உள்ள திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். கிட்டே போய் நானும் உட்கார்ந்து கொண்டேன்.

என்னைப் பார்த்துப் புன்னைத்தார்.

"உங்க வீடு எங்கே இருக்கு ?"

 "இந்த மண்டபம் தான் என் வீடு"

பர்ஸை திறந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டு தன் மஞ்சள் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

"சரி நான் கிளம்புறேன், தாயார் சன்னதிக்குப் போகனும்" என்று கிளம்பினேன்.

திரும்பவும் அதே புன்னைகை. ஒரு பத்து அடி நடந்த பின் கிழவரின் பெயரைக் கேட்க மறந்து விட்டேனே என்று திரும்பவும் வந்து, "உங்க பேர் என்ன ?" என்றேன்.

"ராமானுஜலு"

Tuesday, April 10, 2007

வினோத அனுபவங்கள்

'வியர்டு' என்ற சொல்லுக்கு தமிழில் 'வினோதமான' என்ற வார்த்தை, கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. உங்களிடம் உள்ள வினோத குணம் பற்றி எழுதுங்கள் என்றார்கள். என்னுடைய கிறுக்குத் தனங்களைப் பற்றி என்னை விட என் மனைவிக்குத் தான் அதிகம் தெரியும். கோடை விடுமுறைக்குச் சென்றிருப்பதால் வந்தவுடன் எழுதச் சொல்லுகிறேன். இந்தப் பதிவில், எனக்கு நடந்த சில வினோத அனுபவங்களைச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அரை டஜன் முதல் தவணையாக.இன்றைய பயணம் நேற்றைய டிக்கெட்
பெங்களூர் வந்த பிறகு வாரா வாரம் சென்னை செல்வது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு வாரம் போகவில்லை என்றால் கூட ரயில்வேயிலிருந்து "ஏன் சார் இந்த வாரம் உடம்பு கிடம்பு சரியில்லையா?" என்று கேட்பார்கள். சுமார் 8 மாதம் முன் நடந்த இந்த அனுபவத்திற்கு என் மாமனாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். பெங்களூர் வந்திருந்த மாமனார் 'மாப்பிளைக்கு எதாவது உபகாரம் செய்யலாம் என்று சென்னை செல்ல மைசூர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்துகொடுத்தார். மைசூர் எக்ஸ்பிரஸ் பற்றி சில குறிப்புகள் -  'பெங்களூர் சிட்டி' ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ( மெஜஸ்டிக் ) ராத்திரி 11:45க்குப் புறப்படுகிறது. கண்டோன்மெண்ட் 12:00, கே.ஆர்.புரம் 12:10 என்று ( சரியான சமயத்தில் கிளம்பினால்) வரும்.


என் மாமனார் நான் எப்போதும் கே.ஆர்.புரத்தில் தான் ஏறுவேன் என்று எனக்கு கே.ஆர்.புரத்திலிருந்து ஏறும்படி டிக்கேட் வாங்கியிருந்தார். அந்த வாரம் ரயில் ஏறியதும், எங்கள் சீட்டில் ஒருவர் கால் நீட்டி படுத்துக்கொண்டிருந்தார். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி, இது எங்களுடைய  இடம் என்றோம். அப்படியா என்று எங்கள் டிக்கெட்டைப் பார்த்தார். பிறகு அவர் டிக்கெட்டைக் காண்பித்தார். இரண்டும் ஒரே நம்பர். அதற்குள் எங்கள் பேச்சு எல்லோரையும் எழுப்பியது. டிக்கெட் பரிசோதனை செய்பவரும் (TTE/TTR என்றும் தமிழில் அழைக்கலாம்.) வந்து சேர்ந்தார். என்ன குழப்பம் என்று இரண்டு டிக்கேட்டையும் வாங்கிப் பார்த்தார். பிறகு தான் புரிந்தது, கே.ஆர்.புரத்திலிருந்து 12:10க்குப் புறப்படுவதால் அடுத்த நாள் டேட் போட்டு டிக்கெட் வாங்க வேண்டும். அதாவது எங்களிடம் இருந்தது நேற்றைய டிக்கேட்!.


என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்குள் டிக்கெட் பரிசோதிப்பவர், அடுத்த ஸ்டேஷன் வைட் ஃபில்ட் அதில் இறங்கிவிடுங்கள் என்றார். நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். வண்டி வைட்ஃபீல்ட் ஸ்டேஷனைக் கடந்து சென்று கொண்டிருந்தது.


டிக்கேட் பரிசோதிப்பவர் என்னிடம் வந்து "என்ன செய்யலாம் என்று இருக்கிறீர்கள் ?" என்றார்.


"நீங்கள் தான் சொல்லவேண்டும்.." என்றேன்.


"சரி, என் பின்னாடி வாருங்கள்!" என்று அழைத்து சென்றார். ஒரு பெட்டியில் சில காலி இடங்கள் இருந்தன. அந்தக் காலி இடங்களைக் காண்பித்து இங்கே படுத்துக் கொள்ளுங்கள் என்றார்.


காலை சென்னை வந்த போது, "என்ன நன்றாக தூங்கினீர்களா ?" என்று கேட்டுவிட்டுச் சென்றார்.


பாஸ்போர்ட்
அலுவலகத்தில் கொஞ்சம் நாள்  'டெக்னிகல் மார்கெட்டிங்' செய்து கொண்டிருந்தேன். ஐரோப்பா முழுக்க நன்றாகச் சுற்றினேன். அப்படிச் சுற்றிய ஒரு சமயம், ரயிலில் ஃபிரான்ஸிலிருந்து பெல்ஜியம் வந்துகொண்டிருந்தேன்.( ஃபிளைட் போர் அடித்ததால் ரயிலில் வந்தேன்.) நான் வந்த ரயில் பெட்டியில் என்னையும் சேர்த்து 5 பேர் தான் இருந்தார்கள். அதில் ஒரு காதல் ஜோடியை குளிர் பாடாய்ப்படுத்தியது. அதை பார்த்த எனக்கு குளிர் ஜுரம் வந்தது. அதை பற்றி எழுதப் போவதில்லைல் பயப்படாதீர்கள். நான் ஒரு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன்.  ப்ரஸ்ஸல்ஸ் செண்ட்ரல் ஸ்டேஷன் வந்த போது மணி இரவு 11:30. நான் அடுத்த இரண்டாவது ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. ரயில் பெட்டியில் இருந்தவர்கள் எல்லோரும் இறங்கிவிட்டார்கள். அப்போது என் ஜன்னல் கதவை யாரோ ஒருவன் வேகமாகத் தட்டினான். நான் சைகையில் "என்ன? " என்பது போலக் கேட்டேன். அவன் விடுவதாக இல்லை, திரும்பவும் தட்டினான். நான் அவனைக் கவனிக்காமல் இருப்பது போல் இருந்தேன். ஆனால் அவன் விடுவதாக இல்லை, இன்னும் வேகமாகத் தட்டினான். திரும்பவும் அவனைப் பார்த்த போது, ஏதோ கெட்ட சைகை காண்பித்துக் கொண்டிருந்தான். நான் அவனை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வேறு பக்கமாக இன்னொருவன் வந்து என் லெப்டாப் பையை எடுத்துகொண்டு ஓடிவிட்டான். 'ஆர்கனைஸ்ட் கிரைம்' என்பதற்கு அர்த்தம் புரிந்தது. அவனைத் துரத்திக்கொண்டு ஓட ரயில் கிளம்பிவிட்டது. நான் எதையோ பிடித்து எழுந்தேனோ, அல்லது அழுத்தினேனோ சரியாக நினைவில்லை,  டிரெயின் நின்றது. டிக்கேட் பரிசோதிப்பவர் வந்து, என்ன லேப்டாப் போயிவிட்டதா ? என்று கேட்டார் ? ஆமாம். என்றேன். "தினமும் நடப்பது தான்!" என்று சொல்லிக்கொண்டு நடையைக் கட்டினார். ரயில் கிளம்பியது.


அந்த லெப்டாப் பையில் 1000 டாலர், என் ஹோட்டல் ரூம் சாவி, முகவரிகள்,  மற்றும் முக்கியமாக பாஸ்போர்ட் இருந்தது.


அடுத்த நாள் போலீஸ், இந்திய தூதரகம் என்று அலைந்து. எமர்ஜன்ஸி சர்டிபிகேட் வாங்கி இந்தியா வந்து சேர்ந்தேன். அடுத்த முறை சென்ற போது ஒன்பது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்கொண்டு போனேன். ஏன் என்றால் பாஸ்போர்ட் தொலைந்தால் இந்தியத் தூதரகத்தில் கேட்பார்கள்.


பாண்டவர்களை முழுங்கிய கிணறு
அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்த சமயம். சம்மர் வெக்கேஷனுக்கு வருடா வடுடம் ஹைதிராபாத் செல்லுவது வழக்கம். எங்கள் அம்மா வழிப் பாட்டி, தாத்தா இருந்தார்கள். பத்து வீடு தள்ளி ஒரு சிவன் கோயில், கோயிலை ஒட்டி வில்வமரம், அதுக்கு பக்கத்தில் கோயில் குருக்கள் வீடு இருந்தது. அவருக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். எல்லோரும் எனக்கு ரொம்ப சீனியர். அவர்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் அந்தக் கிணற்றில் ஒரு பாத்திரமோ வாளியோ விழுந்துவிட்டது. அவர்கள் வீட்டில் இது அடிக்கடி நடக்கும் சம்பவம் தான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அப்படி விழும் போது, இந்த ஐந்து பேரில் யாராவது ஒருவர் கிணற்றில் இறங்கி அதை எடுத்து வருவார்.  அன்றும் அதே போல் ஒருவன் இறங்கினான், ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் வேளியே வரவில்லை. என்ன என்று பார்க்க அடுத்தவனும்  இறங்க அவனும் மேலே வரவில்லை, இப்படியே அண்ணன், தம்பி என்று ஐந்து பேரும் உள்ளே போக யாரும் வெளியே வரவில்லை. தீயனைப்புப் படையினர் வந்து எல்லா பிரேதங்களையும் வெளியே எடுத்தனர். அதில் ஒருவன் உயிர் பிழைத்துக் கொண்டான் ஆனால் அவனுக்கும் கொஞ்ச நாளில் மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. கிணற்றினுள் உள்ள விஷவாய்வு தாக்கி எல்லோரும் இறந்தார்கள் என்று அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது. சிலர் கோயிலில் இருக்கும் சிவனுக்கு ஏதோ கோபம் என்று பேசிக்கொண்டார்கள்.


ஜீன்ஸுடன் ஏள பண்ணிய ஸ்ரீராமானுஜர்
இது நடந்து ஐந்து வருடங்கள் இருக்கும். திருச்சி போயிருந்த சமயம், உறையூர் நாச்சியார் கோயிலுக்குப் போயிருந்தேன். பெருமாளை சேவித்துவிட்டு வரும் போது, அங்கே உற்சவம் நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் மனைவியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பல்லக்கில் ஸ்ரீராமானுஜரை ஏளப் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த மனைவியிடம் எனக்கும் ஒரு நாள் ஏளப் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவி, "முதல்ல கோயிலுக்கு ஜீன்ஸ் எல்லாம் போடாம வாங்க!" என்றார். அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் நேரத்தில் புறப்பாடு ஆரம்பித்தது. முன்னாடி வலது, இடது பக்கம் இரண்டு இரண்டு பேர் இருந்தார்கள். தீடீர் என்று முன்னால் இருப்பவர்  என்னை அழைத்தார், அவர் பக்கத்தில் சென்றேன். அவருக்கு பதில் என்னை ஏளப் பண்ணச் சொன்னார். நிச்சயம் நான் என் மனைவியிடம் பேசியதை அவர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் முகம் மலர்ந்து ஏற்றுக்கொண்டேன். புறப்பாடு முடித்துவிட்டு எனக்கு ஸ்பெஷல் மரியாதை, பிரசாதம் வேறு. ஜீன்ஸ் போட்டுக்கொண்டு ஏளப் பண்ணிய ஒரே நபர் நான் தான் என்று நினைக்கிறேன்.


அருணாச்சலம் போல செலவு செய்யுங்க
10 வருடம் முன் இருந்த இணையம் வேறு இன்று இருக்கும் இணையம் வேறு. ரயில் முன் பதிவு, வங்கிக்கு போகாமல் டிடி, உங்கள் நண்பரின் அகௌண்ட்டுக்குப் பணம் பரிவர்த்த்தனை, டெலிபோன் பில்,  கிரேடிட் கார்ட் கட்டணம் எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே செய்யலாம். அப்படி ஒரு சமயம் கிரேடிட் கார்ட் கட்டணம் கட்டும் போது ஒரு வினோதமான அனுபவம் நடந்தது. எனக்கு கிரேடிட் கார்ட் பில் 10,026 ரூபாய் வந்தது. அன்று என் ரிஷப ராசிக்கு 'கவனம் தேவை' என்று போட்டிருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பேன். 10,026 க்கு பதில் நடுவில் எக்ஸ்டிராவாக ஒரு சைபர் சேர்த்துக் கட்டிவிட்டேன். அதாவது 10,026 பதில் 1,00.026!. பத்தாயிரத்துக்கு பதில் ஒரு லட்சம்!. உடனே கிரேடிட் கார்டில் போட்டிருக்கும் நம்பரை தொலைபேசியில் அழைத்தேன். அவர்கள் உங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியை நாடுங்கள் என்றார்கள். அவர்களை அழைத்தால் நீங்கள் கிரேடிட் கார்ட் டிவிஷனை அணுகுங்கள் என்றார்கள். இத்தனைக்கும் இரண்டும் சிட்டி பேங்க். கொஞ்சம் டெலிபோனில் போராடியபின் இன்னும் 24 மணி நேரத்தில் என் வங்கிக்குத் திரும்ப வந்துவிடும் என்றார்கள். 24 மணி நேரம், 240 மணி நேரம் ஆகியும் அது நடைபெறவில்லை. திரும்பவும் அழைத்தால், அவர்கள் "தப்பு உங்களுடையது தான், அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் அல்லது, மீதிப் பணத்திற்கு அருணாச்சலத்தில் ரஜினி செலவு செய்வது போல எதாவது செலவு செய்யுங்கள்!" என்றார்கள். ஒரு மாதம் ஆகியும் பணம் வந்த பாடு இல்லை. கடைசியாகக் காட்டமாக ஒரு கடிதம் எழுதிய பின் தான் திரும்ப வந்தது.


நான் வரும் முன் வீட்டுக்கு வந்த பர்ஸ்
காலேஜ் படிக்கும் போது, தில்லைநகரில் இருக்கும் 'சிப்பி' தியேட்டரில் ஆங்கில படம் திரையிடுவார்கள். வெள்ளிக்கிழமை புது படம் திரைக்கு வரும். காலேஜ் 'கட்' அடித்துவிட்டு 'மாட்னி' காட்சிக்குச் செல்வது வழக்கம். ஒரு முறை 'டை ஹார்ட்' ( Die Hard) என்று நினைக்கிறேன், பாத்துவிட்டு வீட்டுக்கு வந்த போது, அப்பா "எங்கடா போயிட்டு வர ?" என்றார். திடீர் என்று கேட்டதால் பொய் சொல்ல வரவில்லை. மாட்னி ஷோ என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். "உன் பர்ஸ் எங்கே?'" என்றார். பேண்ட் பாக்கெட்டில் தேடிப் பார்த்தேன். அங்கு இல்லை. முழித்தேன். இதோ இங்கே இருக்கு பார் என்று கொடுத்தார். தியேட்டரில் என் பாக்கெட்டிலிருந்து நழுவியதை என் பக்கத்து சீட்டுக்காரரோ பின் சீட்டுக்காரரோ அதில் இருக்கும் அட்ரஸைப் பார்த்துவிட்டு என் வீட்டுக்கு நான் வரும் முன்னே வந்து கொடுத்துள்ளார். அப்பா தொடர்ந்தார் "இனிமே மாட்னி போகாதே, நைட் ஷோ போ, நானும் வரேன்!" என்றார்.

Friday, March 16, 2007

குட்டீஸ் புதிர்

வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது.
"இது என்ன படம் ?"
"இதுவா ? இது ஒரு விதமான புதிர்"
"குழந்தைத்தனமா இருக்கு?"
"ஆமாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். இதில் நிறைய மிருகங்கள் பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடி பார்க்கலாம்"
"விக்கிரமாதித்தன் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான்"
"இரு, செஸ் போர்டில் ராஜா எப்படி நகரும்?"
"ஒவ்வொரு கட்டமாக"
"அதே போல நகர்ந்து பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 75, 65, 56 கட்டங்களை கடந்தால் வரும் மிருகத்தின் பெயர் - 'DOG'. அதேபோல்  33, 43, 35, 45, 54, 63, 62, 70 & 71 கடந்தால் 'PORCUIPINE' வரும். சரி மத்த மிருகங்களின் பெயர்களை கண்டுபிடி" என்று வேதாளம் அவசரமாக எங்கோ போனது.


[%popup(20070316-animalpuzzle.jpg|446|289|குட்டீஸ் புதிர்)%]


விக்கிரமாதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். நீங்களும் விக்கிரமாதித்தனுக்கு உதவலாம்...   

Tuesday, March 13, 2007

Old is Gold

'Old is Gold' என்பார்கள், மத்த விஷயங்களில் எப்படியோ ஆனால் புத்தக விஷயத்தில் அது நிஜம்.
திரு. ராகவன் ( சென்னை ) அவர்கள், என் பதிவுகளை விரும்பி படிப்பவர். இன்று வரை நான் நேரில் சந்தித்தது கிடையாது.


"சார், உங்களுக்கு ஒரு பழைய புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அனுப்பப்போகிறேன், அனுப்பவா ? " என்றார்.
"தாராளமாக"
போன மாதம் ஒரு நாள் அவர் மனைவி புஷ்பா ராகவன் ( பொடிடப்பா நினைவிருக்கா ?) பெங்களூர் வந்த போது, அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். புத்தகம் பெயர்: நாலாயிர திவ்யப்ரபந்தம்


அன்புள்ள தேசிகனுக்கு ,
சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடன் வாழ திருமலையப்பன் அருள்புரியட்டும்
அன்புடன்... என்று கையெழுத்து போட்ட அந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள்


31.5.1943 பழனியில் ரூ 1.4.0கு வாங்கியது என்று திரு ராகவனின் அப்பா கையெழுத்து.


சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை சென்னை
தனிப்பிரதி விலை ரூ1.12.0, மூன்று பிரதிகள் ரூ 5


ஆழ்வார்கள் வைபவத்தில் ஆரம்பித்து, நாலாயிர திவ்யப்ரபந்தம், இயல்சாத்து, சாத்துமறை, திவ்வியதேசப் பிரபாவம், நூற்றெட்டு திருப்பதிகள் எண், திவ்வியபிரபந்தத்தில் கூறப்படும் பெயர், இக்காலத்தில் வழக்கத்தில் உள்ள பெயர், இருக்குமிடம், போகும் ரயில் வழி, பெருமாள், தாயார் பெயர், விமானம், தீர்த்தம் பெயர், மங்களா சாசனம் செய்த ஆழ்வார் பெயர், பாடல் எண், மற்றும் சில குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


அடுத்து யாப்பு இசைக்குறிப்பட்டவணை. இதில் எந்தெந்த பாட்டு எந்தெந்த யாப்பு வகை என்ற குறிப்பு


பாடபேதங்களின் அட்டவணை -இதில் பழைய ஏட்டுப்பிரதிகளுக்கும் அச்சில் உள்ள பாடல்களுக்கும் உள்ள சின்ன சின்ன வித்தியாசங்களில் தொகுப்பு.


பாட்டு முதற்குறிப்பகராதி


துணை நூல் அட்டவணையில்(Biblography) உள்ள புத்தகங்கள் எல்லாம் 157 வருடம் பழமை வாய்ந்தவை. அதாவது, பெரும்பாலான புத்தகங்கள் 1850ல் வெளிவந்தவை. இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.


இது புத்தகத்தை திரு ராகவனே திருப்பி கேட்டால் கூட கொடுப்பதற்கு யோசிப்பேன் !

Monday, February 19, 2007

வேதாள உலகம்


இந்த முறை வேதாளம் வித்தியாசமாக வந்திருக்கிறது. ஆமாம், நீங்களும் வேதாளத்துடன் பயணம் செய்ய இருக்கிறீர்கள். ஜாக்கிரதை. இது மாயச் சுழல், விடை தெரிந்தால் தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும். உங்களுக்கு கடைசி வாய்ப்பு. சீக்கிரம் கிளம்புங்க. இப்போதே நீங்கள் மற்ற உபயோகமான வலைப்பதிவைப் படிக்க போகலாம். சரி 1, 2, 3 எண்ணுகிறேன், 
அதற்குள் கிளம்பிவிடுங்கள். 


1, 2, 3,... 


என்ன இன்னுமா இருக்கிறீர்கள். பிறகு உங்க இஷ்டம், நான் என்ன செய்ய முடியும்? 


ஆல் தி பெஸ்ட்!!
[ விடைகளை கொடுக்க வேண்டிய வழிமுறைகள் - If the answer is a word, give it in english -lowercase. If it is a fraction, give it with a 0 before the decimal point eg., .1 is wrong, give it as 0.1 ]

Monday, February 5, 2007

திருமழிசையாழ்வார்

[%image(20070204-thirumazhisai1.jpg|167|242|Thirumazisai)%]

நேற்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.


முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து" என்கிறார் ஒளவையார்.)
இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும், திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.


இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்றும், பக்திசாரர், மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார். [சில சமயம் திருமழிசை ஆழ்வாரை, திருமழிசைப் பிரான் என்றும் சொல்லுவதுண்டு. இறைவனுக்குரிய 'பிரான்' என்ற பெயரை இவர் ஏற்று, ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாகக் (ஆராவமுதாழ்வார் என்று) கூறுவர். ]


திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணிகண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.


இவரது சீடனான கணிகண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான், தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன், இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.


இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப்பாடல்கள்:


கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.


என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி


கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.


என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.


அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது,  வளர்த்த தாயின் பாலையும் மறுத்து, தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை


எந்தையே வினையேன், தந்த இந்தத்
     தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
     அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்


என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.


[%image(20070204-thirumazhisai2.jpg|165|247|Thirumazisai)%]

முதல் ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் கிபி 6 நூற்றாண்டு என்பதால், அவர்களின் பாடல்களில் காணாத அளவுக்கு மாற்று சமயங்களைக் கண்டிக்கும் இயல்பு, திருமழிசை ஆழ்வார் பாடல்களில் காணப்பெறுவதால், அவர்கள் காலத்துக்குப் பின்னரும் திருமழிசை ஆழ்வார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து. இவர் காலம் கிபி 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் முன்னும் என்று கூறுவர் ( திரு. பு.ரா. புருஷேத்தம நாயுடு )


மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். ( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )


மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்


என்று வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.


நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், முதலாயிரத்தில், "திருச்சந்த விருத்தம்" இவருடையது. 120 பாசுரங்கள் கொண்டது. இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்துள்ளது.


இயற்பா என்ற பிரிவில் அமைந்த 'நான்முகன் திருவந்தாதி' என்ற பிரபந்தங்கள் 96 பாசுரங்களைக் கொண்டது.
இவை வெண்பா என்னும் யாப்பினால் ஆனது.


வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்
மெய்ம்மிகுந்த திருச்சந்த  விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்


எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.


"ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல்
கொண்மின் நீர்தேர்ந்து"


என்று தொடங்கி,


"இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை"

என்று திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.


மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும் இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார். இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!


[ மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் 1)  திருஅரங்கம் 2) திருஅல்லிக்கேணி
3) திருஅன்பில் 4) திருஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திருஎவ்வுள் (திருவள்ளுர்) 6)திருகஇத்தலம் (கபிஸ்த்தலம்)7) திருக்குடந்தை (கும்பகோணம்)8) திருக்குறுங்குடி
9) திருக்கோட்டியூர்10) திருத்துவாரபதி (த்வாரகா)11) திருக்கூடல்12) திருப்பரமபதம் 13) திருப்பாடகம் 14)  திருப்பாற்கடல்15) திருவடமதுரை (மதுரா)16) திருவெகா (காஞ்சிபுரம் அருகில்) 17) திருவேங்கடம் ]


****
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா


 

Friday, February 2, 2007

பதம் பிரித்த பிரபந்தம்

போன வாரம் எழுத்தாளர் சுஜாதாவை பார்த்த போது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகத்தை இருப்பதை கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்த போது அது - "நாலாயிர திவ்யப் பிரபந்தம்". வெளியிட்டவர்கள் தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை. ( இரண்டு பாகங்கள் விலை 225/= ).


இந்த புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட புத்தகத்தை திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன்). பதிப்பாசிரியர்கள்: எழுத்தாளர்கள் 'சுபா'.


பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு.


சிறப்பு பிகு: தென்கலை, வடகலை இரண்டு திருமண், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் தனியன்கள் அடங்கிய முதல் பிரபந்த புத்தகம் இது :-)


இந்த வாரம் கல்கியில் சுஜாதா எழுதிய பகுதி கிழே தந்துள்ளேன்.


கிடைக்குமிடம் :


37, Canal Bank Road, Kasturaba Nagar, Adyar, Chennai 600 020
Phone: 044-2441 4441, 94446 59779


 


  ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள்.


இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே
லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக
டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய
மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே.


தலைகால் புரியவில்லையல்லவா? இதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் என்ன பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள்
திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே


(வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்)


இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி திருவேங்கட மலைக்குச் செல்லும் மேகங்களை தூது போகச் சொல்கிறாள். அவை 'போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை' என்று மறுத்துவிட, 'என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்' என்கிறாள்.


இப்படி ஒரு அழகான ரத்தினத்தை பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.


தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம். 'இசைமின்கடூது' என்பதை 'இசைமின்கள்தூது' என்றும், 'மணிகடிசைமின்மிளிரு'-மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல். எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால் 'என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்' என்று கேட்கிறாள்.


இந்த நாட்களில் திருப்பதிக்கு செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே சொல்வோம்!

Thursday, January 25, 2007

பரமபத சோபானம்

[%image(20070125-paramapadam.jpg|329|400|paramapadam)%]

ஒரு நாள் விஜயமாக திருச்சி சென்றிருந்தேன். வைகுண்ட ஏகாதசி முடிந்து ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கம்மியாக இருந்தது. ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். ( விலை 7/= ). சின்ன வயசில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். அந்தக் காலத்தில் டிவியின் தாக்கம் அதிகம் கிடையாது; அதனால் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி கடைசியில் தாயமாகப் போட்டு போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் தொடரும்.தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன. பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரியும்படி, நல்ல குணங்களான தருமம், நீதி, நேர்மை, சத்தியம் மற்றும் அநீதி, தீமை இவற்றால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டும். சற்று உற்றுக் கவனித்தால் (எவ்வளவு பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியாது ) இதில், தாவரங்கள், விலங்குகள், மனிதன், எனப் பரிணாம வளர்ச்சி, மனிதன் தேவனாக உயரும் நிலை, பிறகு துன்பமில்லாத சுவர்க்கம். இவைகளை அடைய பாம்புகள் நமக்குத் தடையாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் சுவர்க்கம் போகிறோம் என்பது தான் விளையாட்டு. கடைசியில் சில தெலுங்கு எழுத்துக்கள் இருக்கும், சுவர்க்கம் போவதற்குள் தெரிந்தால் நல்லது !


சோபானம் என்றால் என்ன ? விடை பாம்பின் வால் அடியில்


* * *


திருச்சிக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை; அதனால் KPN பஸ்சில் சென்றேன். நன்றாக கவனித்தால், இரண்டு சீட்டுக்கு நடுவில் கைவைத்துக்கொள்ள ஒரு கட்டை வைத்திருக்கிறார்கள். நான் போன சமயம் குண்டாக ஒருவர் அந்தக் கட்டையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். நான், இருந்த கொஞ்சம் இடத்தில் கையை வைத்தால், தள்ளிவிட்டார். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நடந்தது. பிறகு எனக்கு போர் அடித்து, தூங்கிவிட்டேன். ஆக்கிரமிப்பு என்பது முகாலயர்கள் முதல் தற்போது வரை இருக்கிறது. பலசாலி வெற்றி பெருகிறார். தோற்றவன் பிளாக் எழுதுகிறான்!.


***


சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகம். அதனால் நாதஸ்வரம் தவில் கோஷ்டி பக்கத்தில் தான் உட்கார இடம் கிடைத்தது. கீரவாணி, கல்யாணி எது வாசித்தாலும் மேடையில் வாத்தியார் கையசைத்தால் கெட்டி மேளம் வாசித்துவிட்டு தாளம் தப்பாமல் தொடர வேண்டும். இந்த நாதஸ்வர கோஷ்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்கள். அடிக்கடி 'கெட்டி மேளம்' வாசித்தார்கள். எனக்கு ஏன் என்று புரியவில்லை. தாலி கட்டிய பின் மணமேடைக்கு சென்ற மணமக்களிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு இறங்கிய போது திரும்பவும் 'கெட்டி மேளம்' சத்தம் கேட்டது. வாத்தியார் அக்குளைச் சொரிந்துகொண்டிருந்தார். கெட்டி மேளத்தின் ரகசியம் இது தான்.


சோபானம் என்றால் நிறைய விளக்கங்கள் இருக்கு.


☞ சோபானம் என்றால் படிக்கட்டு என்று பொருள். சோபானவகை என்றால் பாரம்பரியம் என்று பொருள்.


☞ சோபானம் என்றால் பராக்கிரமம் என்றும் பொருள். கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நல்லவைகளைப் புகட்டுவதற்காகப் புர்ரகதா போன்ற இசைக் கதை நிகழ்ச்சிகள் பிரபலமாயின. விளையாட்டு மூலம் சிறுவர்கள் மனத்தில் நல்லவைகளை வித்திடுவதற்கு பரமபத சோபான படம் பயன்படுத்தப்பட்டது. இதனை நாயக்க மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்தனர். வெள்ளைத் துணியைக் கடுக்காய் ஊறப் போட்ட தண்ணீரில் நனைத்து, அதில் கலம்பாரி முறையில் சித்திரம் தீட்டிப் பயன்படுத்தப் பட்டதாம். அதற்கு பின்னால் காதிதம் உருவான பிறகு துணியில் வரையப்பட்ட படங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன.


☞ பரமபதசோபானம் - வேதாந்ததேசிகர் இயற்றியதும் திரு மாலின் பரமபதத்தை அடைவதற்குரிய மார்க்கத்தைப் படிப்படியாய் அறிவிப்பதுமான தமிழ்ப்பிரபந்தம்.

Wednesday, January 17, 2007

காலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007)


புத்தகக் (கண்)காட்சிக்கு பொங்கல் அன்று சென்னை சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு, கூட்டம் அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நான் போன சமயம் அப்படியில்லை; நுழைவு சீட்டு வாங்குவதற்கே க்யூ இருந்தது.
முதலில் விகடன் பிரசுரம் இருந்தது. தீபாவளி பட்டாசு கடை போல் கூட்டம் அலை மோதியது. எனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வருவதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அதிகம் விற்பனையானவை - கற்றதும், பெற்றதும், மதன் ஜோக்ஸ், ஓ-பக்கங்கள். பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 4000/= முன் பதிவு செய்தால் 1999 என்று தூள் பறந்தது. விகடனில் மொத்தம் 113 தலைப்புகள் இருக்கின்றன.அடுத்தது கிழக்கு பதிப்பகம் வந்தேன். ஏகப்பட்ட தலைப்புகள், எல்லோரும் எப்போதும் போல் கிழக்கு யுனிஃபார்ம் போட்டுக்கொண்டு வரவேற்றார்கள். ஹாய் மதன், துப்பறியும் சாம்பு ( முழு தொகுப்பு, படங்கள் ரொம்ப சுமார், பழைய படங்களில் சாம்புவிற்கு இருக்கும் மூக்கு இந்த புத்தகத்தில் இளைத்திருக்கிறது, அட்டைப்படத்தில் சாம்பு ஓட்டும் பைக் TN-06-DS-007 ரெஜிஸ்டரேஷன்!. முன்னுரையில் சீக்கிரம் தேவனின் படக்கதை வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அலையன்ஸ் பதிப்பித்த புத்தகத்திலும் இதையே தான் சொல்லியிருந்தார்கள். பத்ரி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது), உடல் மண்ணுக்கு ( Line of fire ) என்று அடுக்கியிருந்தார்கள். வாங்கிய புத்தகத்திற்கு ஒரு (நல்லி ஜவுளிக் கடை போல்) பை கொடுக்கிறார்கள். வாங்கிய எல்லா புத்தகங்களையும் அதில் தான் போட்டுக்கொண்டு வந்தேன். பத்ரி எப்போதும் கல்லாபெட்டியில் ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்துள்ளார் "ராசியான டப்பாவா ?"கிழக்கு பதிப்பகம் பையை வைத்துக்கொண்டு காலச்சுவடு ஸ்டாலுக்கு வந்தேன். நுழையும் போது ஒருவர் ஓடி வந்து ( சிகரேட் பெர்ஃப்யூம் போட்டுக் கொண்டிருந்தார்.)


"சார் இங்கே ஒன்லி இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள் தான்!" என்றார்.


"அப்படியா.." என்று ஸ்மைல் செய்து விட்டு உள்ளே போனேன். பின்னாடியே சிகரெட் பெர்ஃப்யூம் தொடர்ந்ததால் சீக்கிரம் அந்த ஸ்டாலை விட்டு நக்கீரன் ஸ்டாலுக்கு போனேன்.நக்கீரன் ஸ்டாலில், ஒருவர் மூலிகைப் புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கினார். வயது 50க்கு மேல் இருந்த ஒருவர் டாக்டர் நாராயண ரெட்டியின் "எது சுகம்" என்பதைப் படித்துக்கொண்டிருந்தார். போன முறை, 'இந்து மதம் எங்கே போகிறது?' அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய புத்தகம் இந்த முறை கெட்டி அட்டையில் வந்திருக்கிறது. இரண்டாம் பாகமும் வந்திருக்கிறது. நக்கீரன் ஸ்டாலில் எல்லோரையும் கவர்வது அங்கு வைத்திருக்கும் மக்கள் களம் போஸ்டர்.


அடுத்தது என்னைக் கவர்ந்தது பாரதி புத்தகாலயம் - 5, 10, 15, 20 25 ரூபாய்க்கு புத்தகங்கள் கிடைக்குமா ? கிடைக்கும். தவக்களையும் சுண்டைக்காயும், ஈ-யக்கா மாப்பிளை தேடிய கதை என்று சிறுவர்களுக்கு அழகான புத்தகங்கள். மலர் அல்ஜீப்ரா ( இரா. நடராசன் 25/=), எதிர்பாராத கண்டுபிடிப்புகள் ( பட் பட் பட்டாசு, நுண் அலை அடுப்பு, அனஸ்தீசியா, டெஃப்லான், உடையாத கண்ணாடி, ஸ்டெதஸ்கோப்... ) என்ற புத்தகம் 10 ரூபாய். ( ஒரு காப்பி 10 ரூபாய் ). கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன்( 78 பக்கம் , 25/=).அடுத்து அலையன்ஸ் பதிப்பகம் - நக்கீரன் ஸ்டாலில் இந்து மதம் எங்கே போகிறது என்பதை வாங்கியவர் இங்கு வந்து சோ எழுதிய "ஹிந்து மஹா சமுத்திரம்" (முதல் பாகம்) வாங்கினார். ஹிந்து மதம் அடுத்த ஸ்டாலுக்குச் சென்றது. அவரை தொடர்ந்து நானும் போனேன்.


பச்சை அட்டை அடுக்கியிருக்கும் வர்த்தமானன் பதிப்பகம். "சித்தர் பாடல்கள்" மூலமும் உரையும் இரண்டு பாகங்கள் . என்ன எழுதியிருக்கிறது என்று திறந்து பார்த்தால்


எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம்அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே


பிரபஞ்சம் முழுதுமாகப் பரவியுள்ள கடவுள் எங்கள் உடலில் புகுந்த பின், அக்கடவுளைக் கூறு போட்டு வேற்றுமை செய்பவர் கருத்திற்கு ஏற்ப இருப்பதில்லை. எல்லா உடம்பிலும் ஒரே கடவுளே புகுந்துள்ளார். அதை உணராது எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று சமய வேறுபாடு செய்வது சரியாகுமா ? சமயவாதிகள்தாம் வேறுபட்டிருக்கிறார்களே தவிர கடவுள் ஒன்றுதான்! என்றது!.அடுத்தது படங்கள், போஸ்டர், சிடிக்கள் என்று அடுக்கியிருக்கும் "பரமஹம்ச ஸ்ரீநித்யானந்தர்" ஸ்டாலுக்குப் போகும் போது "கூட்டத்தில் யாராவது டாக்டர் இருந்தால் அலுவலகத்துக்கு வரவும் என்று அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. (அரங்கினுள் காற்றோட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் ஒருவர் மூர்ச்சையாகியிருந்தார் என்று சொன்னார்கள்) ஸ்டால் உள்ளே, 'கதவைத் திற காற்று வரும்' என்ற புத்தகம் இருந்தது.அடுத்தது பாவை பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் பக்கம் போன என்னை வலுக்கட்டயமாக உள்ளே அழைத்து கல்கியின் படைப்புக்களைப் பாருங்கள் என்றார்.
 
"பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் சேர்த்து 500/= தான் சார்!"


"என் கிட்டே எல்லாம் இருக்கே!"


"பரவாயில்லை சார் யாருக்காவது கிஃப்ட் செய்யுங்கள்.." என்றார்.அடுத்த ஸ்டால், "தமிழிலேயே சாட் செய்யுங்கள்" என்றது. மெதுவாக நழுவும் போது, உள்ளே இருக்கும் நவபாஷாண முருகன் சிலை என்னைக் கவர்ந்தது. உள்ளே போய் என்ன ஏது என்று விசாரித்து வந்தேன். தமிழ் சிடிக்கள் நடுவே முருகன் சிலை, முருகன் நிஜமாகவே தமிழ்க் கடவுள் தான்.


 


குழந்தைகள் "POGO" டீவியில் விரும்பிப் பார்க்கும் MAD நிகழ்ச்சியின் புத்தகமும் வந்திருக்கிறது.


உமா பதிப்பகம் ஆறு காண்டங்கள் - ஏழு தொகுதிகளில் கம்ப ராமாயணம் மூலமும் உரையும் ( உரையாசிரியர் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்) போட்டிருக்கிறார்கள். விலை 2500/=அடுத்த ஸ்டாலில் என்னைக் கவர்ந்தது அங்கு வைக்கப்பட்டிருக்கும் "தமிழ் கடிகாரம்". அங்கு இருந்தவரிடம், "இந்தக் கடிகாரம் எவ்வளவு?" என்றேன்


"சார், 135 ஒன்லி!" என்றார்.


அதற்குள் 100 மீட்டர் ரேஸ் ஓடியது போல் களைத்துப் போனதால் நேராக கேண்டீன் போனேன். பாதிக் கூட்டம் இங்கு தான் இருக்கிறது. இந்த முறை "ஃபுட் கோர்ட்" முறையில் இருந்தது. அறுசுவை இல்லாதது ஆறுதலாக இருந்தது. ஒரு டோக்கன் வாங்கினால், பஞ்சு மிட்டாய், பேல்பூரி, மினி மீல்ஸ், நான், புலாவ், கார்ன், பாப்கார்ன் என்று எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.சாப்பிட்டு விட்டு உயிர்மை ஸ்டாலுக்குச் சென்றேன். நான் அங்கு இருந்த போது இரண்டு மூன்று பேர், "சார், 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' வந்துவிட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாளைக்கு வரும் என்று அலுக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


உயிர்மை ஸ்டாலுக்குப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் தொடர்கிறது... " என்ற ஸ்டாலில் போய்ப் பார்த்தால் "அனுஷா வெங்கடேஷ்"  பொன்னியின் செல்வனுக்கு பாகம் பாகமாக sequel எழுதியிருக்கிறார்கள். பெயர் காவிரி மைந்தன். கொஞ்சம் பயந்துபோய் அடுத்த ஸ்டாலுக்கு நகர்ந்தேன்.காந்தி புத்தகங்கள் அடுக்கியிருந்தது. யாருமே இல்லாததால் ஸ்டாலில் இருந்தவர் நிதானமாக டிபன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். காந்தி படம் பக்கத்தில் "இது யாரப்பா ?" என்றது ஒரு குழந்தை. இது "காந்தி தாத்தா" என்று சொல்லிவிட்டு அப்பா அடுத்த ஸ்டாலில் உள்ள  நியூமராலஜி புத்தகத்தைப் பார்க்கப் போய்விட்டார்.கிழக்கு பதிப்பகம் Prodigy என்று தனி ஸ்டால் அமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் ஆர்வமாக கலர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த ஒரு குழந்தை எனக்கு பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்க மேலே இருந்த பலூன் ஒன்றைப் பறித்துத் தந்தார் ஒருவர்.குமுதம் ஸ்டாலில் ஈ-ஓட்டிக்கொண்டிருந்தார்கள். "சார் எதாவது புது புத்தகம் வந்திருக்கிறதா ?" என்றேன்.


"நான் எல்லாப் புத்தகங்களையும் படிக்கவில்லை, அதனால் எனக்கு எல்லாமே புதுசு!" என்று ஜோக் கடித்தார். வேறு வழியில்லாமல் சிரித்துவிட்டு வந்தேன்.


எனி இந்தியன் ஸ்டாலில் ஜெயமோகன் புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகக் கையெழுத்து போட்டு கொடுத்து, என்னை  போட்டோ எடுத்தார். ஹரன் பிரசன்னா. நன்றி.பழனியப்பா பிரதர்ஸ், "மதராசபட்டினம் சென்னை 1600-1947 - இது ஒரு மாநகரத்தின் கதை" வெளியிட்டுள்ளார்கள். சென்னப்பட்டினம் காரர்கள் வாங்குவார்கள் என்று விட்டுவிட்டேன். ( விலை 275/= )


சுட்டி விகடனின் அறிவியல் விளையாட்டு அரங்கத்தில் கூட்டம் அலைமோதியது. வெளியே வந்த நான் என் பைக்கை எங்கே வைத்தேன் என்று தேடத் தொடங்கினேன்...


சில சிறந்த பட்டியல்...


சிறந்த படம் காமிக்கும் ஸ்டால் - நக்கீரன், சுட்டி விகடன்.
சிறந்த 'விலை'ப்பட்டியல் - கிழக்கு பதிப்பகம்.
கூட்டமான ஸ்டால் - விகடன்
ஈ-ஓட்டும் ஸ்டால் - குமுதம்
மாறாத ஸ்டால் - The Hindu
சிறந்த குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள்  - கிழக்கு, பாரதி புத்தகாலயம்.
சிறந்த புராணம் ஸ்டால் - பிரேமா பிரசுரம்.
எல்லா ஸ்டாலிலும் கிடைக்கும் புத்தகம் - ஃபிரியாக அவர்களுடைய விலைப்பட்டியல், மலிவு விலையில் கல்கியின் பொன்னியின் செல்வன்
எங்கும் நிறைந்திருநதவர்கள் - சுவாமி சுகபோதானந்தா, சுகி சிவம்,
சிறந்த புதுவரவு ஸ்டால் - ஆதி 'த' சாம்ராஜ் வெள்ளைக்கார சாமியார் ஸ்டால், எல்லோருக்கும் வெள்ளைகார பெண்மணியின் ஸ்மைல் இலவசம்.  
எல்லோரும் செலவழித்த ஸ்டால் - கேண்டீன்


புத்தகக் கண்காட்சி ஆல்பம் பார்க்க


போன முறை சென்ற அனுபவம் இங்கே

Wednesday, January 10, 2007

கணையாழி கடைசிப் பக்கங்கள்

[%image(20070110-kanayali cover.JPG|221|339|kanayazhi cover)%]

இந்த வருடம் தொகுத்த புத்தகம் இது. சுஜாதாவின் முன்னுரை மற்றும் என்னுடைய சிறு குறிப்பு.


சுஜாதா முன்னுரை


கடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதை சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவிலாத வாத்சல்யமும் நிறையப்  பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத் தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு இதழ்களை கொடுத்துதவிய அன்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்த தொகுப்பை வெளியிட மனுஷ்ய புத்திரன் பிறந்து வரவேண்டி யிருந்திருக்கிறது. ஆம், மனுஷ்ய புத்திரன் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் கணையாழியில் எழுத ஆரம்பித்துவிட்டேன். இன்றும் மற்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.


சுஜாதா
சென்னை 
டிசம்பர் 2006


முதல் பக்கம்
இது 1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை உள்ள கணையாழியின் கடைசிப் பக்கங்களின் தொகுப்பு.


முதல் கணையாழி இதழ் 1965  ஜூலை மாதத்தில் புது டெல்லியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் சுஜாதா அவர்கள் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரில் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். நீர்க்குமிழிகள், பெட்டி, கடைசிப் பக்கம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். ‘கடைசிப் பக்கம்’ நிலைத்துவிட்டது.


கணையாழி 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது, கிடைத்த அனுபவம் சுவாரசியமானது. திரும்பவும் சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை முழுவதும் படித்த எனக்கு அவர் எல்லை எது என்று தீர்மானிக்க முடிவதில்லை. கணையாழியில் ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி யிருக்கிறார். நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், என்று எந்த ஒரு எழுத்தாளரிடமும் இல்லாத 'broad spectrum’  இவரிடம் இருக்கிறது.


நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உள்ள இதழ்களிலிருந்து இந்தத் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றபோது சிறிது அஞ்சினேன். பழைய புத்தகங்களின் வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட உயிர் எழுத்துகள் என்று இந்தத் தொகுப்பை உருவாக்கிய அனுபவம் வித்தியாசமானது. இந்தத் தொகுப்பு முழுமை பெற உதவியவர்கள் இருவர்.


ஒருவர், புதுக்கோட்டை ‘ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.’ வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வீட்டையே நூலகமாக்கியுள்ளார் இவர். தன்னிடம் உள்ள கணையாழி இதழ்களைப் படியெடுத்து அனுப்பி வைத்து உதவினார். 


மற்றவர், ‘நேசமுடன்’ ஆர். வெங்கடேஷ். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து அவரிடம் உள்ள இதழ்களை எல்லாம் என்னிடம் கொடுத்துதவினார்.
இவர்களுக்கு என் நன்றிகள்.


அன்புடன்
தேசிகன்


இந்த வருடம் வரும் மற்ற சுஜாதா புத்தகங்கள்


[%popup(20070110-401 cover.JPG|440|679|401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)%]
[%popup(20070110-silvia cover.JPG|428|653|சில்வியா )%]
[%popup(20070110-katavul cover.JPG|428|653|கடவுள் ( ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறாரா ?, வணக்கம் இறைவா தொகுப்பு, ஆ! என்ன ஆச்சரியம் ))%]


[%popup(20070110-innum sila cover.JPG|428|653|இன்னும் சில சிந்தனைகள் - அம்பலம் கட்டுரைகள்)%]