Friday, December 15, 2006

இந்த மார்கழி..

[%image(20061215-thirupavai_1.jpg|284|203|thirupavai)%]

இரண்டு வருடங்கள் முன்(2004) மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவைக்கு (தமிழிலும், ஆங்கிலத்திலும் ) ஒரு படத்துடன் எளிய விளக்கமும் தந்தது நினைவிருக்கலாம். இந்த வருடம் திருப்பாவையில் வரும் உவமைகளை எழுதலாம் என்று இருக்கிறேன். அப்படியே மற்ற ஆழ்வார்களையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க ஆசை. ( தினமும் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அதனால் மார்கழி முடிந்தும் இந்தப் பதிவுகள் தொடரும். )


கவிதைகள் சிறக்கப் பெரிதும் உதவுவது உவமை. "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா!"  போன்ற வரிகள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால் உவமை என்ன என்று உங்களுக்கு விளக்கப் போவதில்ல. உவமைகள் பதினாறு வகைப்படும் - கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிடுகிறேன்.


உவமையின் மூலமாக ஒரு கருத்தை எளிதில் விளக்க முடியும்; பசுமரத்தாணி போல மக்கள் மனதில் பதியவைக்க முடியும் என்பதை ஆழ்வார்கள் நன்கறிவார்கள். உவமை நயத்தோடு பல கருத்துகளை பாசுரங்களின் வாயிலாக விளக்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வார் கூறும் உவமையைப் பார்க்கலாம்.


"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்...."


என்று கூறும் போது, தன்னை நோயாளியாகவும், பெருமாளை மருத்துவராகவும் உவமைப்படுத்துகிறார். பொருள் விளக்கத்திற்காக குழந்தைகளுக்குச் சொல்லப்படுகின்ற கதைகளைக் கூட 'உவமானக் கதைகள்' என்று தான் கூறுகிறோம். உவமையின் தோற்றம் மிகப் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சுட்டிக் காட்டிப் பேசுவதென்பது மனிதன் மூலமாக மொழி தோன்றிய காலத்துக்கு முன்பே தோன்றியதாகும் என்றும் கூறுகிறார்கள்.


"ஒரு கவிஞன் உவமை கூறும் பொழுது, அவன் உள்ளத்தில் எந்தவொன்று மிகுந்திருக்கிறதோ அந்த அடிப்படையில் அவன் உவமைகள் அமையும். ஒரு கவிஞன் பயன்படுத்திய உவமைகளையெல்லாம் ஒன்றாய்த் தொகுத்துப் பார்த்தால் அவனுடைய மனத்தில் எந்த ஒன்று அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை அறிய முடியும்" ( அ.ச.ஞானசம்பந்தன், சேக்கிழார் தந்த செல்வம், பக்கம் 59 ).


அந்த வகையில் ஆண்டாள் உள்ளத்தின் உணர்ச்சிகள், வெள்ளமாகப் பாசுரங்களில் வெளிப்பட்டன. வேதம் அனைத்திற்கும் வித்தாக ஆண்டாள் திருப்பாவையைக் கொடுத்துள்ளார்.


பெருமாளை அடையும் வழியை அறிந்த ஆண்டாள் அவ்வழி அறியாதவர்களுக்கு, தன் திருப்பாவையில் வழி கூறுவதால் இந்நூல் ஆற்றுப்படை என்ற இலக்கணத்தைச் சாரும் என்பர். மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்தவளாக- அதாவது ஆண்டாள் மலையென்றால் மற்றவர்கள் தூசி என்று பெரியவாச்சான் பிள்ளை ஆண்டாளின் பெருமையைக் கூறியுள்ளார்.


சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் "இனி இப்பாட்டு செல்வப்பாட்டு ( Richest Poetry ) என்று சொல்லத்தரும் கீர்த்தி வாய்ந்தது என்றும் இயம்பலாம். காரணம் இப்பாட்டில் சிறந்த சொற்கள் சிறந்த இடங்களில் சிறந்த வகையில் அடுக்கப் பெற்றுள்ளன என்று குறிப்பிடலாம். ( Best words, in the best place, in the best order ) சொல்லாட்சிச் சிறப்பும் ( diction ) இப்பாடலில் நிரம்பவுண்டு.  சுருங்கச் சொல்லின் முன்னார்க் குறிப்பிட்டவாறு மாணுயர் தோற்றத்தை அடியில் அடக்கிக் காட்டும் திறல் வாய்ந்த பெற்றித்தாய பாட்டு இதுவெனலாம்"


ஆழ்வார்கள் தமிழ் மிளர எதுகை, மோனை நயங்களுடன், உவமைகளையும் இயற்கைக் காட்சிகளையும், வானளாவிய தம் கற்பனைத் திறத்துடன் இணைத்துப் பாடியுள்ளார்கள்.


 அவைகளை சுவைக்கலாம் வாருங்கள்.

No comments:

Post a Comment