Skip to main content

திருமங்கையாழ்வார்

கார்த்திகையில் கார்த்திகை நாள் அன்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து இன்று தான் முடிக்க முடிந்தது. எவ்வளவு படித்தாலும் திகட்டாத தமிழை திருமங்கையாழ்வார் பாசுரங்களில் பார்க்கலாம். இந்தப் பதிவில் திருமங்கையாழ்வரைப் பற்றி நான் எடுத்துவைத்துள்ள சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்; கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமங்கையாழ்வார் அழகைப் பார்த்துப் பாடிய வடிவழகு சூர்ணிகையும் இடம் பெற்றிருக்கிறது. மற்ற ஆழ்வார்கள் பற்றியும் எழுதலாம் என்று எண்ணமிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.



ஆழ்வார்கள் பன்னிருவருள் கடைக்குட்டி ஆழ்வார் திருமங்கை மன்னன்.


"பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட
நாதனன்பர் தூள்தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர்தோற் றத்தடைவாம் இங்கு"


என்கிறது உபதேச ரத்தின மாலை(4).


இவருக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது - ஆலிநாடான், அருள்மாரி, அரட்ட முக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க் குழலியர்வேல், மங்கை வேந்தன், பரகாலன், கலியன், கலிகன்றி, குறையலூர் வாழ் வேந்தன், இருந்தமிழ் நூற்புலவன்.


இவரை பற்றிய குருபரம்பரை கதை சற்று சுருக்கமாக:


[%image(20061208-thirumangai_azhvar.jpg|300|301|Thirumangai Azhvar)%]

திருவாலித் திருநகரியில் திருக்குறையலூரில் ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் தோன்றியவர். இவரது இயற் பெயர் 'நீலன்'. சோழநாட்டில் குறுநில மன்னராய் விளங்கினார். இவரிடம் 'ஆடல்மா' என்னும் குதிரையும், 'அமரிற் கடமா களியானை' என்னும் யானையும் இருந்தன. குமுதவல்லி என்ற பெண்ணைப் பார்த்து  மணம்முடிக்க ஆசைப்பட்டார்..(மனைவியுடன் இருக்கும் ஒரே ஆழ்வார் இவரே).  குமுதவல்லி "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினாலின்றி நான் உங்களைக் கணவராக ஏற்க மாட்டேன்" என்று கூறினார்.  ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டி, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்த நிலையில் வழிப்பறித்து பொருளீட்டத் தொடங்கினார். அவ்வாறு வழிப்பறிக்க திருமணங்கொல்லையில் திருவரசின் மேலே பதுங்கி இருந்தபோது வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணவாளக் கோலத்தில் திரளோடு வர, அவனை வளைத்துத் துணிமணிகளைக் கவர்ந்து அறுகாழியையும் (அறுகாழி - கால்விரல் மோதிரம், கணையாழி - கைவிரல்மோதிரம்) தம் பற்களாலே கடித்து வாங்கினார். பின்பு தாம் கொள்ளை கொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, "நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம்?" என்று கேட்டார். பெருமாள் இவர்தம் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தைச் சொல்லித் தந்து இவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.


"வாடிவேன் வாடி வருந்தினேன் மனத்தால்,
        பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
கூடினேன் கூடி, இளையவர் தம்மோடு,
    அவர் தரும் கலவியே கருது..." 


 ( பெரிய திருமொழி, 1-1-1 )


என்றபடி இறைநுகர்ச்சியால் விளைந்த இன்பம் உள்ளத்தில் அடங்கிநிற்காமல் சொற்களாகப் பெருக்கெடுத்து, பொங்கிவழிந்து பெரிய திருமொழி(1084), திருக்குறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம்(30), திருஎழுகூற்றிருக்கை(1), சிறிய திருமடல்(40), பெரிய திருமடல்(7) என்று நமக்கு அருளினார்.


வேதத்துக்கு நிகரான நம்மாழ்வாரின் நான்கு நூல்களையும் உணர்ந்துக்கொள்ளத் ஆறங்கமாக (அரணான அங்கமாக) இதை கூறுவார்.


"மாறன் பணிந்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்,
ஆறங்கம் கூற"


உபதேச ரத்தின மாலையில்(பாடல் 9)
நம்மாழ்வாரின் பாசுரங்களில் அவர் பெருமாளிடம் கொண்டுள்ள மிகுதியான அன்பும், அச்சாவதாரத்தில் அவர் கொண்டுள்ள பேரார்வமும் நமக்குத் தெரிகிறது. அதுபோன்றே திருமங்கை மன்னனின் பிரபந்தங்களே, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் காட்டிலும், நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பெரிதும் ஒத்திருப்பதால் அவை ஆறங்கமாக விளங்குகின்றன என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அனுபவிக்கின்றார்.


இதையே வேதாந்த தேசிகன்


அறிவு தரும் பெரிய திருமொழி தப்பாமல்
ஆயிரத்தோடு எண்பத்து நாலுபாட்டும்
குறியதொரு தாண்டகம் நாலைந்து, ஆறைந்தும்
குலாநெடுந்தாண்டகம், ஏழு கூற்றிருக்கை ஒன்றும்
சிறிய மடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும்
சீர் பெரிய மடல் தனில் பாட்டு எழுபத்து எட்டும்


"அறிவு தரும் பெரிய திருமொழி.." என்று  தேசிக பிரபந்தத்தில்  ( பாடல் 379 )  ஆனந்தப்படுகிறார்


"மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன்"


என்று பெருமாளிடம் திருமந்திர உபதேசம் பெற்றதை ஸ்ரீ ராமானுஜர் (பெரிய திருமொழி தனியன் - 2) அனுபவிக்கிறார்.


திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் பலவகை யாப்புகளைக் கையாண்டுள்ளார். பெரிய திருமொழியில் 108 பாடல்களில் 68 பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை, கலி விருத்தத்தில் அமைந்தவை 15; கொச்சகக் கலிப்பாவால் அமைந்தது 18, கலிநிலைத் துறையால் அமைந்தவை 9, ஆசிரியத் துறையால் அமைந்தவை 3, வெண் துறை, வஞ்சி விருத்தம், கலித்தாழிசையில் ஒன்று. திருக்குறுந்தாண்டகம் 20 பாடல்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினால் அமைந்தவை. திருநெடுந்தாண்டகம் 30 பாடல்களும் எண்சீர் ஆசிரிய விருத்தத்தினால் ஆனவை. திருவெழு கூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆகியது. சிறிய/பெரிய திருமடல்கள் கலிவெண்பாவினால் ஆனது).


இவ்வாறு விரைவாகப் பாடும் அகக்கவியாகவும், இனிமை ததும்பப் பாடும் மதுரகவியாகவும், விரிவான அளவில் பாடும் வித்தாரக் கவியாகவும், இரதபந்தம் பாடும் சித்திரக் கவியாகவும் இருப்பதால் "நாலுகவிப் பெருமாள்" என்று அழைக்கப் பெற்றார் என்கிறது திவ்விய சூரிசரிதம் பாடல் 9 .


திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை இந்த பதிவில் ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒலி வடிவில்) உங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


( கீழே உள்ள பாடலை கேட்டுக்கொண்டே படித்தால் சுவை கூடும் )


பாடல் கேட்க : திருமங்கையாழ்வார் வடிவழகு ( MP3 Format )


பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ!
ஏது பெருமை இன்றைக்கென்னென்னில் - ஓதுகிறேன்.
வாய்த்தபுகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்


மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த-வீறுடைய
கார்த்திகையில் காத்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


அணைத்தவேலும் தொழுதகையும்
அழுந்திய திருநாமமும்
ஓமென்றவாயும் உயர்ந்தமூக்கும்
குளிர்ந்தமுகமும் பரந்த விழியும்
பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்டகுழலும் வடிந்தகாதும்
அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்
சரிந்த கழுத்தும் அகன்றமார்பும்
திரண்ட தோளும் நெளித்த முதுகும்
குவித்தயிடையும் அல்லிக்கயிறும்
அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனிமாலையும்
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும்
சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும்
குந்தியிட்ட கணைக்கால்களும் குளிரவைத்த திருவடியும் மலரும்
வாய்த்த திருமணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும்
வாடினேன் வாடி வாழ்வித்தருளிய
நீலக்கலிகன்றி மருவலர்தமுடல்துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே


உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
    உருகவைத்த மனமொழித்திவ் வுலகளந்த நம்பிமேல்
குறையைவைத்த மடலெடுத்த குறையலாளி திருமணங்
    கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்கவன்முனே
    மடியொதுக்கி மனமடக்கி வாய்புதைத்து வொன்னலார்
குறைகுளித்த வேலணைத்து நின்றவிந்த நிலைமையென்
    கண்ணை விட்டகன்றிடாது கலியனாணை யாணையே


காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும் - நீதிபுனை
தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை யொப்பா ரில்லையே


வேலணைத்தமார்பும் விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாளினிணைத்
தண்டையும் வீரக்கழலும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கு மென் கண்


இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர் - இதுவோதான்
வெட்டுங்கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்


 ஆழ்வார், ராமானுஜர் திருவடிகளே சரணம்.


திருமங்கையாழ்வார் பற்றி
சுஜாதா

kannabiran, RAVI SHANKAR (KRS)
எ.அ.பாலா




( கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி சுஜாதா எழுதிய கட்டுரை )


வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது? அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் திருமங்கையாழ்வாரின் இந்தப் ¢பாசுரத்தை பரிந்துரைப்பேன்.


என் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார். இறக்கும் தருவாயில் இந்த ஒரு ¢பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.


திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.


''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமமே''


நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.


நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.


அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.

Comments

  1. திருமங்கை யாள்வார் திருவடிகளே ஸரணம். நல்ல முறையில் ஒரு பதிவு

    ReplyDelete

Post a Comment