Skip to main content

திருப்பாவை-0 6 – சங்கு

[%image(20061221-andal_drawing_5.jpg|172|225|)%]

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


இந்தப் பாட்டில் உவமைகள் இல்லாததால் ஆண்டாள் சொன்ன வெள்ளை சங்கை பற்றி பார்க்கலாம்.



சந்திரன் எப்படி குளிர்ச்சிக்கு உவமையாகக் கூறுவது மரபோ அதே போல் சங்கை வெண்மை நிறத்துக்குக் கூறுவது மரபு. "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று கூறுவர்.பெருமாள் கையில் அலங்கரிக்கும் சங்கு வீரத்தின் வெற்றிக்கு அறிகுறியாக ஒலிக்கப்படும். இந்த சங்கு பற்றி ஆழ்வார்கள் பல பாசுரங்களில் பாடியுள்ளனர்.


இன்றைய திருப்பாவையில் ஆண்டாள் "பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் கோயிலில்
வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? " என்று பெண்களை எழுப்புகிறார்.


திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்ததில்


    அங்கமாறும் வேதநான்கு
    மாகிநின்ற வற்றுளே,
    தங்குகின்ற தன்மையாய்த
    டங்கடல்ப ணத்தலை,
    செங்கண்நாக ணைக்கிடந்த
    செல்வமல்கு சீரினாய்,
    சங்கவண்ண மன்னமேனி
    சார்ங்கபாணி யல்லையே?


(திருச்சந்தவிருத்தம், 766:15)


நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் நிறைந்தவனே. பாற்கடலில் துயில்பவனே. கிருதயுகத்தில் சங்கினின் வெண்மை நிறம் கொண்ட நீ சாரங்கபாணியாய் இராமனாக வந்தாய் என்கிறார்.


திருமங்கையாழ்வாரும் இதே போல் உவமை கூறுகிறார். இந்தப் பாட்டில் வரும் இயற்கையைப் பாருங்கள். நான்கே வரியில் எவ்வளவு விஷயங்களை சொல்லியிருக்கிறார்!


சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே.


(பெரியதிருமொழி, 1530,6.9.3)


பலாச்சுளைகளிலிருந்து தேன்பாயும், வாழை கனிகள் நெருங்கிவிளங்கும்  திருநறையூர் சோலையில் இருப்பவன்; மூவுலகங்களையும் உண்ட திருமால், சங்கை ஒத்த வெண்ணிறமுடைய பலராமனுக்குத் தம்பியாக தோன்றி, கடைந்த தயிரையும் வெண்ணையையும் உண்டான்.இவன் பாதங்களை நெஞ்சே நீ பற்றுக.


அதே போல் சங்குபோல் நிறமுடைய பலராமனின் தம்பியான கண்ணபிரான் என்ற பொருள்பட மற்றொரு பாசுரத்தில் (பெரியதிருமொழி, 1689) கூறுகிறார். ( இன்றும் ஓவியங்களில் கண்ணன் நீல நிறத்திலும் பலராமன் வெண்மை நிறத்திலும் இருப்பதை நீங்கள் பார்க்கலலம். சில கண்ணன் பலராமன் படங்கள் கடைசியில் தந்துள்ளேன்.)


அடுத்த பாசுரத்தில் சங்கு போல் வெண்மை நிறத்தவன் எம்பெருமான் என்கிறார்.


திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா
ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே?


(திருநெடுந்தாண்டகம், 2054, 3  )


எம்பெருமான் திருமேனி மேகம் போல நீலநிறத்தைப் போன்றது. திரேதாயுகத்தில் இவன் நிறம் சிகப்பு; கிருதயுகத்தில் இவன் சங்கு போன்ற வெண்மை நிறத்தவன். இவ்வாறு யுகந்தோறும் இருந்து வழிபாடு செய்தாலொழிய ஒரு வடிவம், ஓர் உருவம் என்று அறிய முடியாது. சிவந்த கண்களுடைய இப்பெருமானை அனைவரும் வர்ணித்துப் பேசினாலும், அவன் காட்டிய வடிவத்தை அடியேன் கண்டது போல, வேறு எவர் காண முடியும்!. என்று பரவசப்படுகிறார் திருமங்கையாழ்வார் ஆழ்வார்.


 [ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]


[ கண்ணன் பலராமன் படங்கள் - [%popup(20061221-kb_1.jpg|200|246|1)%], [%popup(20061221-kb_2.jpg|200|200|2)%], [%popup(20061221-kb_3.jpg|267|200|3)%], [%popup(20061221-kb_4.jpg|200|247|4)%], [%popup(20061221-kb_5.jpg|200|256|5)%], [%popup(20061221-kb_6.jpg|187|200|6)%] ]

Comments