தமில் வாழ்க!
‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!’ என்ற புதுக்கவிதை வரிகள் ‘சுஜாதா’வால் பிரபலமாகி, பின்னாளில் புத்தகத் தலைப்பாகவே மாறியது. ஆங்கில மொழிக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது – தமிழ் ஒரு ‘பெண்’. அதனாலோ என்னவோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையே இதற்கும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் அவியல் செய்யப் போதுமான தலைப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் கையில் முதலில் எடுப்பது தமிழைத்தான். தமிழுக்கு புடவை கட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை, சுடிதார் போட்டு இந்து எதிர்ப்பு அல்லது மும்மொழிக் கொள்கை என எதையாவது உளறிவிட்டு, கடைசியில் ‘தமில் வாழ்க’ என்று முடித்தால் போதும் – திராவிட சித்தாந்தவாதி என்று சுலபமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்! இப்படிப் பல காலமாக அரசியல்வாதிகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்துகொண்டிருக்கிறாள். சொல்ல மறந்துவிட்டேனே, அவ்வப்போது திடீரென்று கருப்பு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு தமிழ் அல்லாத எழுத்துக்களை அழிக்கும் 'அரும்பணி' இருக்கவே இருக்கிறது.
இவற்றையெல்லாம் செய்து, தமிழகத்தில் தமிழ் வளர்ந்துவிட்டதா? தமிழகத்தில் தமிழ் வளரவே இல்லை என்று சொல்ல மாட்டேன் (வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று பேத்தலாகப் பேசவும் மாட்டேன்). மாறாக, தமிழை விரட்டியடித்து மழுங்கடித்துவிட்டார்கள் என்பேன்.
நான் படித்த காலத்தில் என் பள்ளியில் தமிழில் பேசினால் முட்டி போட வைத்துவிடுவார்கள். தமிழ் வகுப்பில் மட்டுமே தமிழில் பேச வேண்டும். எனக்கு வாய்த்த நல்ல தமிழ் வாத்தியார் திரு. தர்மநாதன், பாரதியாரே நேரில் வந்து சொல்லிக்கொடுப்பது போல பாடம் எடுப்பார். ஆனால் அவர் நீடிக்கவில்லை. வேறு ஒரு ‘மிஸ்’ வந்து எனக்குத் தமிழ்ப் பாடமே பிடிக்காமல் செய்துவிட, நான் தமிழை ‘மிஸ்’ செய்தேன். அதன்பிறகு நான் தமிழைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டேன். எப்போதோ செய்த புண்ணியம், சுஜாதாவின் மூலம் அந்தத் தமிழ்த்தாய் எனக்கு ஒரு ‘மிஸ்டு கால்’ கொடுத்து, என்னை மீண்டும் தமிழ் படிக்கக் கற்றுக்கொடுத்தாள். தமிழ்நாட்டில், எல்லா ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திருவரங்க மண்ணில் பிறந்த எனக்குத் தமிழ் இப்படித்தான் கைவந்தது. அதன்பிறகு நான் இந்த மாதிரிக் கட்டுரைகள் எழுதுவதெல்லாம் ஒரு விபத்துதான். ‘சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ’ என்று நம்மாழ்வார் சொல்லுவதைப் போல, என்னைப் போன்ற (பல) எழுத்தாளர்கள் விபத்தில் உருவானவர்கள்தான். சுஜாதாவே சமஸ்கிருத ஆசிரியர் மீது உள்ள பயம் காரணமாகத்தான் தமிழ் கற்றார் என்று எழுதியிருக்கிறார்.
பிளஸ் டூவில் யாரும் தமிழ் எடுத்துக்கொள்வதில்லை (மார்க் கிடைக்காது). இன்று பி.ஏ, எம்.ஏ தமிழ் ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் உ.வே. சாமிநாதையராக இருக்க வேண்டும் அல்லது படிப்பு எதுவும் வராமல் ஏதோ ஒரு பட்டத்திற்காக அதில் சேர்ந்திருக்க வேண்டும். (கொஞ்சம் சுமாராகப் படிப்பவர் என்றால் அவர் நிச்சயம் ஆங்கில இலக்கியம் எடுத்திருப்பார்). இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பலர் தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுதுபவர்களே தவிர, தமிழை ஒரு பாடமாகக் கல்லூரியில் எடுத்துப் படித்தவர்கள் அல்ல.
நான் பிறக்கும் முன்பே தமிழ்த் துறை ஒரு ‘Leftover’ துறையாகவே இருந்திருக்கிறது. திரு பா. செயப்பிரகாசம் அவர்கள் ‘ஈரத்தமிழ் பேசும் குரல்’ என்ற புத்தகத் தொகுப்பில் இவ்வாறு எழுதுகிறார்: “முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான மோகம் தமிழிலக்கியத்தின் பால் உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும் தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டார் வழக்கில் சொல்வதாயின், ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு 'மவுசு' கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது. எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள். ஆனால் அவரும் திரு. ம.பெ. சீனிவாசனும் தமிழ் படிக்க வேண்டும் என்றே தமிழ் வகுப்பில் சேர்ந்தவர்கள்.” இது நான் பிறக்கும் முன்பு இருந்த காலகட்டம்.
இன்றைய JEE, NEET இரைச்சல்களுக்கு இடையே கல்லூரியில் இந்தத் தமிழ் வகுப்புகள் எல்லாம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தமிழாசிரியர்களுக்கு மற்ற துறைகளுக்கு இணையான ஊதியம் கொடுக்கிறார்களா என்பதும் கேள்விக்குறிதான்.
ஆங்கில நாளிதழுக்கு ஒரு கட்டுரை எழுதினால் இத்தனை வார்த்தைகள் என்று கணக்கு பார்த்து ஊதியம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் எழுத்தாளர்கள் எல்லோரும் ராயல்டி கேட்டுச் சலித்துப்போய், அவர்களே பதிப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.
எம்.ஏ தமிழ் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? படித்து முடித்த பிறகு அதே கல்லூரியிலோ அல்லது அருகிலுள்ள கல்லூரியிலோ தமிழாசிரியராகச் சேரலாம்; இல்லையென்றால் விடுமுறை தினப் பட்டிமன்றங்கள் இருக்கவே இருக்கின்றன.
ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயத்தில் ராமானுஜர் தனக்குப் பின் ‘அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர்களைக்’ கொண்டு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். அந்தச் சிம்மாசனாதிபதிகளின் முக்கியமான ஒரு தகுதி – திருவாய்மொழி ஒழுங்காகத் தெரிந்திருக்க வேண்டும்; அதற்கு அவர்கள் தமிழை நன்றாகக் கற்றிருக்க வேண்டும். நஞ்சீயர் போன்றவர்கள் கன்னட தேசத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தாலும், அவர்களின் தமிழ்ப் புலமை நம்மை வியக்க வைக்கிறது.
புதிய அரசுக்கு சில கோரிக்கைகள்:
1/ தமிழ் பாடங்களை, குறிப்பாக இலக்கணப் பாடங்களைச் சுலபமாகப் புரியும் வண்ணம் மாற்றி எழுதுங்கள்.
2/ பள்ளிகளில் தமிழை ஒரு முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணத்தைக் குறையுங்கள். (அரசு மூன்றாவது, நான்காவது குழந்தைக்கு ஊக்கத்தொகை தருவது போல).
3/ தமிழாசிரியர்களுக்குத் தகுந்த ஊக்கத்தையும், கூடுதல் ஊக்கத்தொகையையும் வழங்குங்கள். பள்ளி கல்லூரிகளில் அவர்களுக்கே தமிழ்த்தாய் வாழ்த்துப் போல முன்னுரிமை அளியுங்கள்.
4/ உண்மையைச் சொன்னால் இன்று தமிழ் படித்தவர்கள் தான் அசல் 'மைனாரிட்டி', எனவே அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் ஏதேனும் கொடுங்கள்.கல்லூரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா போல, ‘தமிழ்க் கோட்டா’ என்று ஒன்றை உருவாக்குங்கள்.
5/ தமிழ் ஆசிரியர்கள் நல்லவர்கள், தயவுசெய்து அவர்களை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.
6/ அரசு நூலக ஆர்டர்களில் (Library Orders) நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி இங்கு எல்லோருக்கும் தெரியும், ஆனால் யாரும் பேசமாட்டார்கள். தயவுசெய்து அரசியல் கலக்காமல், தகுதியான நல்ல தமிழாசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து நூல்களைத் தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏன் அந்த குறிப்பிட்ட நூலைத் தேர்ந்தெடுத்தோம்?’ என்பதற்கான காரணத்தைப் பொதுவெளியில் வெளிப்படையாக (Transparent-ஆக) அறிவியுங்கள்.
7/ தமிழ் தொன்மையான மொழி; அதனால் தமிழ் சினிமாவிற்குத் தமிழ்ப் பெயர்கள் வைத்தால் வரிச்சலுகை என்பதெல்லாம் ‘What bro, it's very wrong bro’ வகை.
8/ ‘தமிழ் எங்கள் மூச்சு, பேச்சு எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று மேடைகளில் வாயால் கொசுமருந்துப் புகை அடிக்காதீர்கள்.
9/ ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல, தமிழ் படித்தால் வெறும் மேடைப்பேச்சுக்கு மட்டும்தான் உதவும் என்ற தவறான எண்ணத்தை இளந்தலைமுறையினரிடம் உருவாக்காதீர்கள்.
10/ கடைசியாக, மந்திரிசபையில் ஒரு தமிழாசிரியரை நியமியுங்கள் அல்லது தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒரு நல்ல தமிழாசிரியரை OSD-யாக நியமியுங்கள். (அவருக்கு ஜோதிடம் தெரிந்திருந்தாலும் பரவாயில்லை).
-சுஜாதா தேசிகன்
18.5.2026
Comments
Post a Comment