ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்
( தமிழில் சுஜாதா தேசிகன்)
ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.
ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.
ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு பெருமை, ராமாயணத்தை ராமரே கேட்டார். அன்று முதல் இன்று வரை ராமாயண உபன்யாசம் என்றால் கூட்டம் அலைமோதுகிறது. ராமாயணத்தைச் சொல்லும் போதும் அலுக்காது, கேட்கும் போது அலுக்காது. எழுதும் போதும் அலுக்காது, படிக்கும் போதும் அலுக்காது. இன்றும் அந்த இதிகாசத்தைப் பலர் தங்கள் பாணியில் எழுதிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.
சென்ற வருடம் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ஸ்ரீமத் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அதை ஆடர் செய்தேன். புத்தகம் வீட்டுக்கு வரும் முன்னே துஷ்யந்த் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. ‘நீங்கள் தமிழில் மொழிபெயர்க்க முடியுமா?’ என்றார். புத்தகம் கைக்கு வரவில்லை, படித்துவிட்டுச் சொல்லுகிறேன் என்றேன். சில மாதிரி பக்கங்களை அடியேனுக்கு அனுப்ப அதைச் சுமாராக மொழிபெயர்த்தேன். அப்போது தான் நான் ராமாயணத்தை முழுவதும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று புரிந்துகொண்டு, இது நம்மால் முடியுமா என்று யோசித்த வண்ணம், முகநூலைத் திறந்த போது அனுமார் டைம்லைனில் வந்தார். இனி யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை, எல்லாம் அனுமார் பார்த்துக்கொள்வார் என்று ஒப்புக்கொண்டு இந்த வருட ஆரம்பத்தில் பூர்த்தி செய்தேன்.
ராமாயணத்தை வால்மீகிக்கும் நாரதருக்கும் இடையேயான உரையாடலாக ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் எழுதியிருக்கிறார். இதற்கு உயிரூட்டும் வகையிலும் சிறந்த அணிகலன்களாகவும் புகழ்பெற்ற ஓவியர் கேஷவின் தத்ரூபமான ஓவியங்களும், உபாசனாவின் கலைப் பொருட்களின் கோட்டோவியங்களும் விளங்குகின்றன.
புத்தகத்தின் முதல் தொகுதி வெளிவந்திருக்கிறது. இந்த விஸ்வாவஸு வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன், மனத்துக்கு இனியானைக் குறித்த இந்தச் சிந்தனைக்கு இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தைப் பெற விரும்புகிறவர்களுக்கு அமேசான் இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
சென்ற வாரம் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் முதல் பிரதியை உங்களுக்குத் தர வேண்டும் என்று என்னை அவர் இல்லத்துக்கு அழைத்துக் கொடுத்தார்.(படம்). வாய்ப்பளித்த ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர், ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்துக்கும் ( அவர்களுக்கு இது முதல் தமிழ்ப் புத்தகம்) நன்றி.
இந்த மொழிபெயர்ப்புக்குப் பலர் உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கும், படிக்க போகும் உங்களுக்கும் ‘நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே!’ என்று குலசேகரப் பெருமாள் கூறியது போல சீதாராமனின் பரிபூரண ஆசீர்வாதம் உத்தரவாதம்.
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
-சுஜாதா தேசிகன்
To order at Amazon (Tamil ) - https://www.amazon.in/dp/936569793X
ராம் ராம் 🙏🙂
ReplyDelete