Skip to main content

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்




சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது.

'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது.  ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, ஆழ்வார் பாடல்களைப் புரிந்துகொள்ள உரைகள் இருக்கிறதா ? காரணம், பெரியவாச்சான் போன்றவர்களை நாட விரும்பாமல் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வேண்டும் என்பது தான். பெரியவாச்சானின் உரைகளைப் படிக்க ஆழமான அறிவும், பொறுமையும், வடமொழி, தமிழ் மற்றும் பிற திராவிட மொழிச் சொற்களையும் கலந்துகட்டி எழுதிய மணிப்பிரவாளம் நடையைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் சில இடங்களில் குறிப்பு மட்டுமே இருக்கும். அதைப் புரிந்துகொள்ளப் பல புத்தகங்களைத் தேட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக  ஆசை வேண்டும். ஆசை உடையோருக்கு எல்லாம் இன்றைய செயற்கை நுண்ணறிவு நிச்சயம் உதவும். புரிந்துகொள்ள முடியாத பகுதிகளைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கொடுத்தால் நமக்கு எளிதில் புரிந்துகொள்ள உதவும் வகையில், தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அதைத் தந்துவிடும். அந்தத் தகவலை எழுத்துக்கு அப்பாற்பட்டு அதன் அர்த்தத்தின் முக்கியத்துவத்தையோ, அல்லது உணர்வுப்பூர்வமாகவோ அல்லது வரிகளுக்கு இடையில் உள்ள அர்த்தத்தை அறிந்துகொள்வதோ உங்கள் சாமர்த்தியம். 

இன்றைய இன்ஸ்டாக்களுக்கு எல்லாவற்றையும் உடனே சிரமம் இல்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசரத்தைப் பார்க்கிறேன். அவர்களுக்கு உடனே சின்ன காப்ஸ்யூல் வடிவில் ரிலீஸ் தேவைப்படுகிறது. இவர்களுக்கு நிச்சயம் இந்தச் செயற்கை நுண்ணறிவு உதவும். 

உதாரணமாக வால்மீகி ராமாயணத்தில் யுத்தக் காண்டம் , சர்க்கம் இருபத்தொன்று, முதல் பதினான்கு ஸ்லோகங்களைச் செயற்கை நுண்ணறிவுக்குப் புகட்டி எனக்கு இதில் சொல்ல வந்த விஷயங்களை நூறு வார்த்தைகளில் சொல் என்றேன். சில நொடிகளில் தொண்ணூறு வார்த்தைகளில் எனக்கு இப்பகுதி கிடைத்தது ( எதையும் மாற்றாமல் தந்திருக்கிறேன்)

”இராமன், கடலின் அருகில் தருப்பைப் புல்லால் ஆன படுக்கையை அமைத்து, கிழக்கு நோக்கிப் படுத்தார். எதிரிகளை வெல்லும் வலிமை கொண்ட அவருடைய வலது கையைத் தலையணையாக வைத்தார். அந்தக் கை முன்பு விலை உயர்ந்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, பணிப்பெண்களால் மென்மையாக வருடிவிடப்பட்டிருந்தது, நறுமணப் புகையூட்டப்பட்டு சந்தனம் பூசப்பட்டிருந்தது, சீதையின் கரங்களால் அழகு பெற்றிருந்தது, போரில் எதிரிகளைத் தடுத்திருந்தது. வில்லின் நாண் உரசிய தழும்பு இடது கையில் இருந்தது. பல பசுக்களை தானம் செய்த அந்தக் கையைத் தலையணையாக வைத்து, கடலைக் கடக்க வேண்டும் அல்லது உயிர் விட வேண்டும் என்று தீர்மானித்தார். மூன்று இரவுகள் அவர் மன உறுதியுடன் காத்திருந்தார். அறம் அறிந்த இராமன் கடலை வழிபட்டபோதும், கடலரசன் தோன்றவில்லை. இதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனிடம், நல்லவர்களின் பொறுமையை மற்றவர்கள் பலவீனமாக நினைப்பதைப் பற்றிப் பேசினார்.”

இப்படி ஒவ்வொரு சர்க்கமாகக் கொடுத்து ராமாயணப் புத்தகமே எழுதிவிடலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு, உதாரணமாக, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் தன் ஆசாரியனும், தந்தையுமான பெரியாழ்வாரைக் குறித்து ”மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்” என்கிறாள். 

இதைப் படிக்கும் போது 'மெய்ம்மை பெரு வார்த்தை’ என்பது நமக்குப் புரியாமல், கூகுளை நாடுகிறோம். அது எங்கோ தேடி ‘சரம ஸ்லோகம்’ என்கிறது. உடனே ‘சரம ஸ்லோகத்தை’ விட்டுசித்தர் என்ற பெரியாழ்வார் செவி வழியாகக் கேட்டு இருப்பர் என்ற பொருளில் புரிந்துகொள்கிறோம். இதன் உண்மையான பொருள் சரம ஸ்லோக அர்த்தங்களை விட்டுசித்தர் என்ற என் தந்தை செவி வழியாகக் கேட்டு ’அதன்படி’ இருந்திருப்பார் என்பது. கணினி போன்ற சமாசாரங்கள், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தகவல்களைப் படிப்பதற்கும் நாம் தகவல்களைப் படிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான். 

அதனால் ’வாசித்தல்’ என்பது பல்வேறு வடிவங்களில் பொருள்கொள்வதையும் தகவல்களைப் பெறுவதையும் உள்ளடக்கியது. அதனால் செயற்கை நுண்ணறிவு புத்தகம் வாசிப்பதை அழித்துவிடும் என்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக நமக்கு வாசிப்புடன் ஒருங்கிணைந்து மேலும் வாசிப்பு அனுபவத்தைப் பல்வகைப்பட்ட தகவல்களுடன் உருவாக்கித்தரும் நண்பனாக இருக்கப் போகிறது. கணினி தட்டச்சு வந்த போது புத்தகத்தில் எழுதும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றார்கள், ஆனால் எழுதுவது நிற்கவில்லை. மாறாகப் பலரும் பல விஷயங்களை எழுதத் தொடங்கிப் பல லட்சம் புத்தகங்கள் இன்று சந்தையில் கிடைக்கிறது. . 

செயற்கை நுண்ணறிவால் வாசிப்பு மறைந்து போவதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து தனிப்பட்ட அனுபவமாக மாறும் என்பது இந்த பூமர் மாமாவின் எதிர்பார்ப்பு. 

-சுஜாதா தேசிகன்
26.04.2025
சாதாரண சனிக்கிழமை

Comments