Skip to main content

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !



உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான். 

 ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது
  இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
 மாழை மான் மட நோக்கி உன் தோழி
  உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து
 தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
   சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
 ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன் 
  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே!

குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்கு’ என்று அவனைப் பேசவிடாமல் செய்வதற்கு முன்பு சீதை பிராட்டி அவனை ’மாழை மான் மட நோக்கி’ குகனுக்கு அருள் புரிய, ஸ்ரீராமர் என் தம்பி உனக்கும் தம்பி என்று சொல்லாமல், உம்பி எம்பி (உன் தம்பி என் தம்பி) என்று அவன் தகுதிக்குக் கீழே இறங்கிவிட்டார்.  

‘ர்’ என்ற மெய்யெழுத்துடன் எப்போதும் இன்னொரு மெய்யெழுத்து துணையாக வருவது (உதாரணம் பேர்த்து, தீர்ப்பு ) போல எப்போதும் ஸ்ரீராம’ர்’ என்ற மெய் பொருள், நம் மெய்க்கு என்றும் துணை புரிகிறார். ( மெய் - உண்மை, உடல் ). இதற்குச் சில உதாரணங்கள் சொல்லுகிறேன். 

 ஸ்ரீராமர் ஏன் ராவணனைக் கொன்றார் ? என்பதற்குப் பதில் ‘சீதையைத் தூக்கிக்கொண்டு போனான்’ என்போம். ஆனால் உண்மையான காரணம் அனுமாருக்கு ராவணன் செய்த அபசாரம் தான். உங்களுக்குத் தெரிந்த வாலில் நெருப்பு வைத்த கதை தான். ஆனால் அதற்கு முன் அனுமாரின் வால் பற்றி  ’வால்’மீகி இப்படிச் சிறப்பித்துக் கூறுகிறார். 
 
அனுமார் சுந்திரகாண்டத்தில் கடலைத் தாண்டிச் சீதையைத் தேடிச் செல்கிறார். அங்கே பல இடங்களில் தேடிய பிறகு ராவணனுடைய அந்தப்புரத்துக்கு வருகிறார்.  அங்கே பல பெண்கள் இருக்கிறார்கள். 
 திவ்வியாலங்காரத்துடன் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். முத்துக்களாலும் நவமணிகளாலும் மிக அழகான அந்தப்  பெண்ணைப் பார்த்து அவள் தான் சீதையாக இருக்க வேண்டும் என்று நினைத்து,  சந்தோஷம் தாங்காமல் குதித்து, ஓடி, ஆடித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தி வானர சேஷ்சைகளை எல்லாம் செய்து, தன் தோளைத் தட்டி தானே தட்டிக்கொடுத்து,  வாலை எடுத்து முத்தமிட்டு ஆனந்தமடைந்தார் என்கிறார் வால்மீகி. 

பிறகு அனுமார் ராவணனின் அரண்மனையில் ஸ்ரீராமரின் பராக்கிரமத்தை வர்ணித்து அவரைச் சரணடைவதே உனக்கு நல்லது என்று உபதேசிக்க அனுமாரைக் கொல்லும்படி ராவணன் கட்டளையிடுகிறான். 
ராக்ஷசர்கள் அனுமானின் வாலில் நெருப்பு வைக்க, வாலில் நெருப்பு எரிந்துகொண்டு இருக்க, ஆனால் அனுமாருக்கு அது குளிர்ச்சியாக இருந்தது. 

அனுமார் எந்த வாலை முத்தம் கொடுத்தாரோ அதே வாலின் நுனியில் ஒரு முடிமீது நெருப்பு பட்டதால் ஸ்ரீராமருக்குக் கோபம் வந்து இராவணனை அழித்தார். 

இதைப் படிக்கும் நீங்கள் நிச்சயம் கன்வின்ஸ் ஆகியிருக்க மாட்டீர்கள் ஏன் என்றால் மனைவியைத் தூக்கிக்கொண்டு சென்றவனை யார் தான் விட்டுவைப்பார்கள் என்ற எண்ணம் தான். ஸ்ரீராமர் சீதை தூக்கிக்கொண்டு சென்றதால் தான் ராவணனை அழித்தார் என்று திடமாக நம்புகிறோம்.  ஸ்ரீராமரை நம்மைப் போல ஒரு மனிதனாக எண்ணுவதால் இப்படி நினைக்கிறோம். 

ஸ்ரீராமர் சுயநலம் இல்லாதவர் என்று காட்ட இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம். 

யுத்த காண்டம் சுக்ரீவன் ஸ்ரீராமர் மீது இருந்த பிரேமையினால் ராமரின் உத்தரவு இல்லாமல் ராவணனிடம் சண்டையிட்டு, பிறகு இவனுடன் யுத்தம் செய்வது உசிதமல்லவென்று எண்ணி ஸ்ரீராமர் பக்கம் வந்து நின்றார்.
ஸ்ரீராமர் சுக்ரீவனைப் பார்த்து “நண்பா என்னுடன் ஆலோசிக்காமல் இப்படிப்பட்ட துணிவான காரியத்தை நீ செய்யலாமா ? உணக்கு இது துணிவான காரியமாக இருக்கலாம் ஆனால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கருதிக் கவலைப்பட்டேன்” என்று மேலும் ஸ்ரீராமர் சுக்ரீவனைப் பார்த்து இப்படிச் சொல்லுகிறார் (இதை வாசகர்கள் நிதானமாகப் படிக்க வேண்டுகிறேன்)

“ராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஏன் உன் உடம்பிலிருந்து ஒரு ரோமம் கீழே விழுந்தாலும் சீதையாவது, பரதனாவது, லக்ஷ்மணனாவது, சத்துருக்கனனாவது என் தேகம் கூட எனக்குத் தேவையில்லை” என்கிறார்.  
 பசு ஒன்று ஏற்கனவே பிறந்த கன்றுகளை விட்டுப் புதிதாகப் பிறந்த கன்றிடத்தில் எப்படி மிகுந்த பிரேமையுடன் இருக்குமோ அது போலக் கொஞ்சக் காலமே தெரிந்த ஒரு குரங்கை(சுக்ரீவனை) விசேஷ நண்பனாகக் கருதி எக்காலத்திலும் பிரியாத பிராட்டி, தம்பிகள் ஏன் என் உயிரே முக்கியமில்லை என்கிறார் ராமர்.  

ஸ்ரீராமர் சுக்ரீவனை முதலில் பார்க்கும்போது  ”என் வார்த்தை சத்தியம், அந்தச் சத்தியத்தின் மீது சத்தியம் செய்கிறேன் நான் உனக்கு நண்பனாக உதவி செய்கிறேன்” என்று சொன்னதை வாசகர்கள் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். 

பக்தர்களைக் காக்கும் விஷயத்தில் பெருமாள் எவ்வளவு தூரத்துக்குச் செல்வார் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.  சுயநலம் எதுவும் இல்லாத நட்பு இது.  

ஸ்ரீமத் பாகவதத்தில் என் பக்தர்களைக் காட்டிலும் வைகுண்டம் பெரிசு இல்லை, என் சதுர்புஜ ரூபம் எனக்குப் பெரிசு இல்லை ஏன் என் லக்ஷ்மியும் பெரிசு இல்லை என்கிறார்.  கண்ணன் உத்தவரைப்  பார்த்து எனக்குப் பிரம்மா பெரிசு இல்லை, ருத்திரன் பெரிசு இல்லை, பலராமனும் பெரிசு இல்லை, ருக்மிணியும் பெரிசு இல்லை என்கிறார். 

எந்த அவதாரமாக இருந்தாலும் பெருமாளின் சுபாவம் மாறுவதில்லை என்பது தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. 

பெருமாள் பக்தர்களுக்காக வைகுந்தம் வேண்டாம், பிராட்டியும் வேண்டாம் என்பதைப்  போல நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் பெருமாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. அந்த டிரண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அனுமார். 

ஸ்ரீராமாவதாம் முடிந்து வைகுந்தத்துக்குப் புல் பூண்டு எல்லாவற்றுக்கும் மோட்சம் கொடுத்துக் கிளம்பும் போது அனுமான் ''வைகுண்டத்தில் ராமாயண உபன்யாசம் இல்லை அதனால் எனக்கு வைகுந்தம் தேவை இல்லை இங்கேயே இருக்கிறேன்” என்றார். 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 
 இச்சுவை தவிர, யான் போய் இந்திர லோகம் ஆளும்
 அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!
 என்று இவரும் இங்கேயே இருக்கிறேன் என்கிறார். 

 சொட்டை நம்பி சரமத் திசையில் இருக்கும் சமயம் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் “தேவரீர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர் ?” என்று கேட்க அதற்குச் 
 சொட்டை நம்பி “அடியேனுக்கு ஆளவந்தார் சம்பந்தம் அதனால் பரமபதத்தில் நிச்சயம் இடம் உண்டு ஆனால் அங்கே சென்றவுடன் பரமபதந்தனை வணங்குவேன், அவர் திருமுகம் நம்பெருமாளின் திருமுகம் மாதிரி குளிர்ந்து இல்லை என்றால், ‘தொப்பென்று கீழே குதித்துவிடுவேன்’ ஆனால் பரமபதம் சென்றால் மீண்டும் இங்கே வர முடியாது என்று வேதம் சொல்லுகிறது. அதை மீற வேண்டியிருக்கிறதே “ என்றாராம். 

ஸ்வாமி தேசிகன் காஞ்சி தேவராஜப் பெருமானே! நீ எனக்குள் இருக்கிறாய். ஒரு தாய் எப்படிக் குழந்தையின் மலஜலத்தைக் கண்டு வெறுக்காமல் சுத்தம் செய்வாளோ அது போல நீ எனக்குள் இருக்கிறாய். உன்னை விடுத்து எனக்கு வைகுந்தம் கொடுத்தாலும் வேண்டாம் என்கிறார். 

ஆருயிர் நண்பன் என்போம் அதற்கு எடுத்துக்காட்டு ஸ்ரீராமரும் நம் ஆசாரியர்கள் மட்டுமே. 

 சம்ஸ்க்ருதத்தில் ராமன் என்றால் மனதை இன்புறச் செய்பவன் என்று பொருள். அதையே ஆண்டாள் ஈரத்தமிழில் ’மனத்துக்கு இனியான்’ என்கிறாள்.  திருமங்கை ஆழ்வார் மெய் மறந்து,  ‘சிந்தனைக்கு இனியான்’ என்கிறார்.  
 ’கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ?’  என்று ராமனைக் கற்பதே நமது சிலபஸ் என்கிறார் நம்மாழ்வார். ராம நாமத்தை ஜபிப்பதே நமது டைம் பாஸாக இருக்கட்டும். 

 - சுஜாதா தேசிகன் 
6.4.2025
இனிய ராம நவமி நல்வாழ்த்துகள்
ஓவியம் : அமுதன் தேசிகன் 

Comments

  1. ஓவியமும் பதிவும் அருமை. அமுதனுக்கு ஓவியம் இப்பொழுது நன்றாகவே வருகிறது.

    ReplyDelete

Post a Comment