Skip to main content

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன்

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன் 

நேற்று சொல்லடைவு புத்தகம் வெளியீடு குறித்து அடியேன் எழுதியிருந்தேன்.  சிலர் கேட்கும் கேள்விகளுக்கு இவை. 

*புத்தகம் என்ன விலை, எப்போது கிடைக்கும் ? அளவு என்ன ? 

புத்தகம் அச்சுக்குச் சென்றுள்ளது, அட்டை, பைண்டிங் போக்குவரத்துச் செலவு போன்றவை தெரிந்த பின் வழக்கம் போலப் புத்தகத்துக்கு ஆகும் செலவை மட்டும் வாங்கிக்கொள்ள எண்ணம். 

மற்ற ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடுகள் போல இருக்கும். புத்தகம் 20.6.2024 அன்று வெளியிடப்படும். அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அனுப்பத் திட்டம். 

*புத்தகம் உள்ளே எப்படி இருக்கும் ? மாதிரி பக்கங்களைப் பகிர முடியுமா ? 

 சில மாதிரி பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன். 





*என்னிடம் பழைய பிரபந்தம் புத்தகம் ஒன்று இருக்கிறது அதற்கு இந்தச் சொல்லடைவைப் பயன்படுத்த முடியுமா ? 

இந்நூலில் குறிப்பிட்டுள்ள பாசுர எண்கள் ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடான ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். உங்களிடம் உள்ள பிரபந்தப் புத்தகம் அந்த எண்களுடன் ஒத்துப் போனால் இதை உபயோகிக்கலாம். 

*இதில் இராமாநுச நூற்றந்தாதி அடங்கியுள்ளதா ? 

பெரிய பெருமாளே அங்கீகரித்த இராமாநுச நூற்றந்தாதியும் இதில் அடக்கம். 

*நல்ல முயற்சி, ஆனால் இந்தப் புத்தகத்தால் எனக்கு என்ன பயன் ? 

நல்ல கேள்வி, ஒரு சொல்லை வைத்து அந்தப் பிரபந்தம் என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதைவிட ஒரு சொல்லுக்குப் பொருள் தேடும் போது சரியான பொருள் கிடைக்க அடியேன் ஓர் உத்தியைக் கையாளுவேன். ஒரு சொல்லை ஓர் ஆழ்வார்கள் எப்படிப்  பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறியும் போது நம்மை அறியாமல் ஓர் ஆச்சரியமான பொருள் அதில் மறைந்து இருக்கும். ஆராய்ச்சியாளர்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று பலருக்கும் இது பயன் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு இல்லை என்ற குறையை நாதமுனிகள் அவதரித்து 1200 வருடங்கள் கழித்து அவர் அவதாரத் தினத்தில் அவதார ஸ்தலத்தில் வெளியிட்டு நிறைவேற்றுகிறோம் என்பது இந்தப் புத்தகத்துக்குகூடுதல் சிறப்பு. 

- சுஜாதா தேசிகன்
8.6.2024

Comments