Skip to main content

சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது.

 சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது.



திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு இருக்கிறதா என்று தேடிக்கொண்டும், அறிஞர்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தேன். சங்க இலக்கியத்துக்கும், திருக்குறளுக்கும் இருந்தது ஆனால் ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு இல்லை என்பது தெரிந்த அதே சமயம் ஸ்ரீமந் நாதமுனிகளின் 1201 திருநட்சத்திரப் பத்திரிக்கை அடியேன் இல்லம் தேடி வந்தது.

1200 வருடங்களுக்கு முன் நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து நமக்குப் பெற்றுக் கொடுத்த ஆழ்வார்களின் ஈரச் சொற்களுக்குச் சொல்லடைவு இல்லையே, நினைத்தவுடன் நாம் நாதமுனிகளின் திருநட்சத்திரம் அன்று பிறந்த நாள் பரிசாக அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் அவருக்கு இதை சம்பர்பிக்க முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்தேன். இரண்டு நாளில் மொத்த 300 பக்கங்களையும் டைப் செட் செய்து, பிழைகளை நீக்கி, அட்டைப் படம் முதலியவற்றை வடிவமைத்து அச்சுக்கு அனுப்பியது எல்லாம் ஒளிக்கீற்று போல முடிந்ததற்குக் காரணம் நாதமுனிகளின் ஆசிகள் தான்.

இதுவரை நேரில் பார்க்காத நண்பர் பிரசன்னா, ஓட்டுனருடன் காரை அனுப்ப திருவாலி திருநகரிக்கு மன்னர்களுக்கு எல்லாம் மன்னரான திருமங்கை மன்னனைச் சேவிக்கப் புறப்பட்டேன். கிட்டத்தட்டக் கோயில் நடை சாத்தும் சமயம் ஸ்ரீ.உ.வே எம்பார் ராமானுஜம் ஸ்வாமிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். ”வாருங்கள் உங்களுக்காக ஆழ்வார் காத்துக்கொண்டு இருக்கிறார்” என்றார்.

அங்கே கல்யாண ரங்கநாதன் தாயாருடன் காட்சி அளிக்க, சொல்லடைவு புத்தகம் பெருமாள் திருவடிக்குச் சென்றது. பிறகு ஆழ்வார் சந்நிதியில் கலியனின் வடிவழகு நம்மை படுத்தின பாடும் சொல்லி மாளாது. ஆழ்வாரிடமும் சொல்லடைவு புத்தகத்தைத் திருவடியில் வைத்துச் சேவித்து, ஆழ்வார் நெஞ்சில் நம்மாழ்வார் திருவடியில் உடையவருடன் ஆசீர்வதிக்க, போர்வைக்குள் ஒளிந்துகொண்டு இருந்த ’ஆடல்மா’ குதிரையை எம்பார் ஸ்வாமிகள் திறந்து சேவிக்க வைத்து, மாலை பிரசாதங்களை வாங்கிக்கொண்டு ஆழ்வாருக்குப் பிரியா விடை கொடுத்து காட்டுமன்னார் கோயிலுக்குப் புறப்பட்டோம்.

நாங்கள் சென்ற சமயம் பெருமாள், நாதமுனிகள், ஆளவந்தார் திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டு இருந்ததைக் கண்களால் வாரிப் பருகிய பின் புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ உ.வே கருணாகராசார்ய ஸ்வாமிகளும், ஸ்ரீ.உ.வே A.V..ரங்காசாரியார் ( சிதம்பரம்), ஸ்ரீ.உ.வே. வேங்கடாசாரி ஸ்வாமி, மருத்துவர் ஸ்ரீ உ.வே.திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமிகள் வீற்றிருந்த மேடையில் ’கொஞ்சம் கிட்டே வாங்கோ’ என்று வீடியோ ஃபிரேம் உள்ளே அடியேனுக்கும் இடம் கொடுத்து உட்கார வைத்து சொல்லடைவு புத்தகத்தை குறித்து ஆன்றோர்கள் பேசி வெளியிட்டது எல்லாம் காட்டுமன்னார், கலியன், நாதமுனிகளின் கருணை.

அதன் பின் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீமதழகிசிங்கரை சேவித்து புத்தகம் குறித்து விவரித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, இப்புத்தகத்துக்கு முக்கிய காரணமாக இருந்த முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாடி புத்தகத்தின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுத்தேன்.

இந்தப் புத்தகத்துக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று தெரியாமல் சில பிரதிகள் மட்டுமே அச்சடித்தோம். பலர் இதைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு என்று விசாரித்தவண்ணம் இருக்கிறார்கள். ஜூலை 5 ஆம் தேதி வரை ஆர்டர்களை எடுக்கவும், கூடுதல் பிரதிகளை அச்சிடவும் திட்டமிட்டுள்ளோம்.

300 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் தயாரிப்பு, தபால் செலவு உட்பட ரூ400/-

வழக்கம் போல் புத்தகத்தை எப்படிப் பெறுவது என்ற விவரங்களைக் கொடுத்திருக்கிறேன்.

- சுஜாதா தேசிகன்
25.6.2024



Comments