ஸ்ரீமத் நாதமுனிகள்
ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருப்பதே என் அப்பா சொல்லித் தான் தெரியும். ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் கடைகளுக்கு நடுவே ஒரு சந்தில் இருக்கும். சின்ன வயதில் ஒரு நாள் அதைத் தேடிச் சென்று சேவித்துவிட்டு வந்தேன்.
பிறகு ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் அவர் பேரனான ஆளவந்தாருடன் சேவித்துவிட்டு அங்கேயே ஒரு முழு நாளை சில வருடங்களுக்கு முன் கழித்தேன்.
பதம் பிரித்த பிரபந்தம் முதல் பதிப்பின் போது அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியார்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.(அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார்) ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும்.
ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர். அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்த பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள்.
நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்குச் சென்று அங்கு விசாரித்ததில் அந்த பிரபந்தம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாவார் சீடரான பராங்குச தாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பிரபந்தத்தை உபதேசம் பெற்று அதைப் பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களையும் தந்தருளினார் என்கிறது குருபரம்பரை.
கங்கைகொண்ட சோழபுரம் பக்கம் நாதமுனிகள் ஆசாரியன் திருவடிகள் அடைந்த இடமும் சின்ன கதையும் இருக்கிறது.
ஒரு நாள் நாதமுனிகள் வீட்டுக்கு வில்லுடன் இருவரும் ஒரு பெண்பிள்ளையும் குரங்குடன் வந்து அவர் மகளிடம் நாதமுனிகள் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் அப்பா கோயிலுக்குச் சென்றிருப்பதாக சொல்ல, வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். திரும்பிய நாதமுனிகள் மகள் சொன்னதைக் கேட்டு சக்கரவர்த்தி திருமகனான ராம, லக்ஷ்மணர், சீதையும் அனுமாரும் தான் தன்னைப் பார்க்க வந்தவர்கள் என்று நம்பி அவர்களைத் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவர்களைத் தேடிக்கொண்டு சோழபுரம் வரை சென்றார். அவர் சென்ற வழியில் பூச்சரம் ஒன்றைக் கண்டார், அதைக் கண்டவர் "இது சீதையுடைய பூச்சரம்" என்று சொல்லியவாறு சென்றார். அந்த இடம் தற்போது "பூவிழுந்த நல்லூர்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்ற பின் குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருப்பதைக் கண்டார். அந்த இடம் தற்போது "குறுங்குடி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்றவர் வழியில் சென்றவர்களைப் பார்த்து அடையாளங்களைச் சொல்லி "அவர்களைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவர்களும் "ஆம் கண்டோம்" என்று சொல்லியுள்ளார்கள். அந்த இடமே தற்போது "கண்ட மங்களம்" என்ற ஊர். அவர்களை எங்குத் தேடியும் பார்க்கமுடியாமல் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து பரமபதித்தார். அந்த இடம்தான் தற்போது "திருவரசு" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "சொர்க்கப்பள்ளம்" என்று பெயர்.
ஸ்ரீமத் நாதமுனிகள் ஆசாரியர்களில் மட்டும் முதல்வர் இல்லை அரையரிலும் அவரே முதல்வர். அவர் தான் திவ்யபிரபந்தங்களை ’theatre experience'சாக தேவகானமாக எமக்கு கொடுத்தாவர்.
நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டுதெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் ( ஏன் எல்லா ஊரிகளிலும் ) நாதமுனிகள் உத்தரவு கொடுத்த பின் தான் அரையர் சேவை ஆரம்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். தற்போது ஸ்ரீரங்கத்தில் அந்த நடைமுறை இருக்கிறதா என்று தெரியாது. இல்லை என்று நினைக்கிறேன்.
ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்திலும் விற்பன்னர். யோகத்தில் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். அவருக்கு இரண்டு சீடர்கள் குருகைகாவலப்பன் மற்றும் உய்யக்கொண்டார்.
நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாருக்கும் கற்றுக் கொடுக்க பிரியப்பட்ட போது உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார். அதாவது ஒருவர் வீட்டில் யாரோ இறந்து கிடக்கும்போது அங்கே யாரும் ( திருமணம் போல ) மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற பொருளில். இதன் உள் அர்த்தம், உலகில் பல மக்கள் சம்சாரத்தில் சுக துக்கங்களில் உழன்று கிடக்க நாம் மட்டும் selfishஆக பகவானை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா ? என்பது பொருள். திவ்யபிரபந்தமே அவர்களைப் பகவானிடம் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றது என்று அவர் மூலமாக ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீராமானுஜர் வழியாக இன்று ஐபேட் வரை படிப்பதற்கு அவர்களே காரணம். அவர்கள் நமக்குக் கொடுத்த பொக்கிஷம். நாம் இன்று நன்றியுடன் அவர்களை நினைத்துக்கொள்ளுவோம்.
இன்று ஆனி அனுஷம், ஸ்ரீமத் நாதமுனிகள் 1201வது திருநட்சத்திரம் அன்று ராமானுஜ தேசிக முனிகள் டரஸ்ட் திவ்யப் பிரபந்தத்துக்கு ‘சொல்லடைவு’ புத்தகத்தை நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் திருமங்கை ஆழ்வார் ஆசீர்வாதத்துடன் வெளியிடுவதில் மிகுந்த பெருமையும் மகிச்சியும் கொள்கிறது.
-சுஜாதா தேசிகன்
20.6.2024
படம்: ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தாருடன் - காட்டுமன்னார் கோயில்
Pls direct me to purchase the books presented in Nadhamuni sannidhi
ReplyDeleteAdiyen I need all the 3 books presented in that Nadamuni sannidhi function. Kindly direct me how to get the books. My contact no 70134 27672
ReplyDelete