Skip to main content

சேவடி சில குறிப்புகள்

சேவடி சில குறிப்புகள்



திருப்புல்லாணி ஸ்வாமி சந்தமிகு தமிழ்மறை என்ற புத்தகத்தின் சில பகுதிகளைச்  சில நாட்கள் முன் பகிர்ந்தார். அதில் திருப்பல்லாண்டு தொடக்கத்தில் ‘செவ்வடி’ என்று அச்சடித்துள்ளதுக்கு அருகில் ‘சேவடி’ என்று பால்பாயிண்ட் பேனாவில் எழுதிய குறிப்பைப் பார்த்தேன். 

இதைப்  பாடபேதம் என்பார்கள். ஸ்ரீ.உ.வே AV ரங்காசாரியார் பாடபேதங்களுக்கு 600 பக்கங்களில் தனிப் புத்தகமே போட்டுள்ளார். 

வியாக்கியானத்தில் செவ்வடி என்றும், சேவடி பாடாந்தரம் (சேவிக்கும் போது உபயோகப்படுத்துவது) என்று குறிப்பு உள்ளது. 

செவ்வடி - செவ்விய + அடி அதாவது சிவந்த அடி என்பது உரைகளில் உள்ளது. செவ்விய என்றால் செம்மையான, செம்மை என்ற பொருளிலும் வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். 

சேவடி - செ + அடி - செ என்ற ஒற்றைச் சொல் சிவப்பு என்ற பொருள் தரும் என்று நன்னூல், போன்ற இலக்கண நூல்கள் கூறியிருக்கிறது. 

‘சேவடி’ என்ற சொல் ஆழ்வார்கள் எங்கெல்லாம் உபயோகித்துள்ளார்கள் என்று சொல்லடைவு புத்தகத்தைப் பார்த்த போது 26 இடங்களில் வருகிறது. 

சேவடி (26) :1/4, 47/1, 419/3, 469/2, 583/2, 660/4, 661/4,
709/2, 1146/3, 1179/2, 1193/1, 1267/2, 1577/2, 1743/1,

பரிபாடல் மூன்றாம் பாடலைப் பாடிய ’கடுவன் இளவெயினனார்’ 

ஆரம்பத்தில் இப்படிப் பாடுகிறார் 

மாஅயோயே மாஅயோயே
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே

கரியவனான திருமாலே! கரியவனான திருமாலே!மறுபிறப்பை அழிக்கும் மாசற்ற சிவந்த திருவடிகளையும்,
நீல மணி போன்ற திருமேனியையும் உடைய கரியவனான திருமாலே!

என்கிறார். 

மாயோன் என்பது கருமை நிறத்தவன் என்று பரிமேலழகர் தொல்காப்பியத்தில் இருக்கிறது என்கிறார். பெரியாழ்வார் ’கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட’ என்று வருத்தப்படுகிறார். 

அந்தக் கரிய திருமேனி உடையவனின் மாசற்ற சிவந்த திருவடியால் தான் மறுபிறவியை அழிக்க முடியும் என்கிறார். இதைத் திருவள்ளுவர் 

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. அதனால் தான் ஆண்டாள் ‘இறைவா! நீ தாராய்’ என்று கேட்கிறாள்! 

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? 

நிலையான வீடு பெருமாள் திருவடி தான் என்பதை வள்ளுவர் 

கைக்குழந்தைக்குத் தாய் முலையே தாரகம் என்பது போல ஆழ்வார்களுக்கு மற்ற உறுப்புக்களைக் காட்டிலும் திருவடியே பிரதானம். 

பெரியாழ்வார் பல்லாண்டில் சேவடி என்று ஆரம்பிப்பது போல நம்மாழ்வாரும் ஆரம்பத்தில் திருவடியையே தொழுகிறார். 

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.


உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன்.
அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன்.
தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன்.
எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே.

பெரியாழ்வார் இந்த ‘சேவடி செவ்வி திருக்காப்பை’ என் ’சென்னியின் மேல் பொறித்தாய்’ என்று பொறித்துக்கொள்கிறார். 



ஆண்டாள் ’மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்’ என்ற பாசுரத்தில் ’சீரிய சிங்கம்’ போல ’உன் சீரிய சிங்காசனத்து இருந்து எழுந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு எழுந்தருள வேண்டும்’ என்று கூற பெருமாளும் நான்கு அடி நடக்க, அப்போது அவருடைய சிவந்த பிஞ்சுக் கால்கள் மேலும் சிவக்க ‘நடந்த கால்கள் நொந்தவோ' என்பதைப் போல  ‘ஐயோ இந்த பிஞ்சுக் கால்களை நடக்கச் சொல்லிவிட்டோமே!’ என்று அடுத்தப் பாசுரம் முழுவதையும் அந்த திருவடிக்குப் பல்லாண்டாக  பாடுவது தான் ’அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி’ பாசுரம். 

இந்தக் கட்டுரையை எழுதிய போது திரு கேஷவ் தீட்டிய அந்தப் பிஞ்சு சேவடி நினைவுக்கு வந்தது.  அதையும் ஒரு முறை சேவித்துக்கொள்ளுங்கள். 

- சுஜாதா தேசிகன்
15.6.2024
பொழுது போகாத ஒரு சனிக்கிழமை

ஓவியம் நன்றி: திரு கேஷவ் 

Comments