திவ்யப் பிரபந்ததுக்கு முதல் சொல்லடைவு !
சென்ற வாரம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு குறித்து எழுதியது நினைவிருக்கலாம்.
சில நாள்கள் முன் காட்டுமன்னார் கோயிலிலிருந்து ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் திருஅவதார மஹோத்ஸவ பத்திரிகை வந்த போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் சொல்லடைவு புத்தகத்தைத் தயாரித்து அதை ஸ்ரீமந் நாதமுனிகளின் அவதார தினத்தில் வருக்கு சமர்பித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று அடியேனுக்கு உடனே தோன்றியது.
சென்ற வாரயிறுதியில் புத்தகம், அட்டைப் படம் முதலியவற்றைத் தயாரித்து, மருத்துவர் ஸ்ரீ உ.வே.திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமியிடம் அணிந்துரை வேண்டும் என்று கேட்டவுடன் அன்புடன் உடனே அளித்து, 20ஆம் தேதி அன்று ஸ்ரீ உ.வே கருணாகராசார்ய ஸ்வாமிகளும், ஸ்ரீ.உ.வே A.V..ரங்காசாரியார் ( சிதம்பரம்) 'நாதமுனிகள் காட்டிய நல்வழி புத்தகத்தை’ நாதமுனிகள் சந்நிதியில் வெளியிட உள்ளார்கள், அத்துடன் உங்கள் திவ்யப் பிரபந்த சொல்லடைவு புத்தகத்தையும் சேர்த்து வெளியிடலாமே என்ற போது, ’போதும்’ என்று கை நீட்டினாலும் மடத்தில் கைமேல் அக்கார அடிசில் சாதிப்பது போல இருந்தது.
புத்தகம் நேற்று அச்சுக்குச் சென்றுவிட்டது. வரும் 20ஆம் தேதி, திவ்யப் பிரபந்தத்தை நமக்குக் காட்டிக்கொடுத்த நாதமுனிகளின் அவதார ஸ்தலத்தில் அவருடைய அவதாரத் தினத்தில் திவ்யப் பிரபந்தத்துக்கு முதல் முறையாகச் சொல்லடைவு ஆழ்வார், ஆசாரியன் வழிகாட்டுதலுடன் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
காட்டுமன்னார் கோயில் அருகில் திருவாலி-திருநகரி இருக்கிறது, ’இவ்வளவு தூரம் வந்துவிட்டு, என்னுடைய படத்தை வேறு அட்டையில் போட்டுவிட்டு என்னைச் சந்திக்காமல் செல்லலாமா?’ என்று திருமங்கை மன்னன் கோபித்துக்கொள்வார் அதனால் ஆழ்வாரையும் சேவித்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிவரத் திட்டம்.
புத்தகம் குறித்த சில விஷயங்கள் - மொத்தப் பக்கங்கள்: 298, மிகக் குறைந்த பிரதிகளே அச்சடிக்க திட்டம். புத்தகம் வேண்டும் என்று விருப்பப்பட்டால் rdmctrust@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
அடியேன்
- சுஜாதா தேசிகன்
7.6.2024
Comments
Post a Comment