உங்கள் ஓட்டு யாருக்கு ?
தமிழகத்தில் நாற்பது தொகுதிக்குத் தேர்தல் என்பதை மறந்து, கோவையில் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரின் தேர்தலாகி கோவை இன்று பேசும் பொருளாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் அங்கே போட்டியிட்டால் கூட இந்த மாதிரி ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக அடித்துச் சொல்லுகிறார் அண்ணாமலை. அவருடைய அந்த நம்பிக்கையைக் கோவை மக்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.
கோவை மக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரதிநிதியாகவிட்டார்கள். நாளைய தமிழகம் நன்றாக விடிய இந்தியாவோ கோவையை எதிர்நோக்கியுள்ளார்கள்.
கோவையில் பாஜக என்ன நிகழ்த்துகிறதோ அதே தான் தமிழகம் முழுக்க 2026ல் புரட்சியாக வெடிக்கப் போகிறது. அந்த மாற்றத்தின் அலை கோவையிலிருந்து உருவாகக் காத்துக்கொண்டு இருக்கிறது.
கோவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைக் கேட்டு ஓட்டுப் போட்டாலே போதும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடுவார்.
சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் ஒரு ”ஆட்டோ ஓட்டுநரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?” என்ற கேள்விக்கு
”பணம் கொடுப்பவருக்கு”
”பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் தப்பில்லையா ?”
“எங்கே போனாலும் லஞ்சமாகப் பணம் கேட்கிறார்கள். நான் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதில் என்ன தப்பு” என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பதில் சொல்லுகிறார்.
இது தான் இன்றைய தமிழகம் என்ற தமிழ்நாடு.
இது மாற வேண்டும் என்றால் ஓட்டுப் போடும் முன் உங்கள் மனசாட்சியை ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு ஓட்டுப் போடுங்கள்.
முடியவில்லை என்றால் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மாலையாகப் அணிந்துகொண்டு இருக்கும் இந்த ஸ்ரீராமர் படத்தை நன்றாகப் பார்த்துவிட்டு ஓட்டுப் போடுங்கள்.
ஜெய் ஸ்ரீராம்.
- சுஜாதா தேசிகன்
17.04.2024
Comments
Post a Comment